மனம் மகிழுங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மனம் மகிழுங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 மே, 2011

மனம் மகிழுங்கள் - 41 : குறையற்ற மனம் - அளவற்ற மகிழ்வு

நாம் என்ன செய்தாலும் அதில் மகிழ்வடைகிறோமா; மனம் மகிழ்வடைகிறதா என்பது முக்கியம். அந்தச் செயல் தப்புச் செயலாய் இருக்கக்கூடாது என்பது அதைவிட முக்கியம். “ஜட்ஜய்யா! கொலை செய்வது மகிழ்வளித்தது; அதனால் கழுத்தை அறுத்தேன்” என்றால் நீதிபதி கழுத்திற்குத் தீர்ப்பு எழுதி விடுவார்.

ஒருவர் உத்தியோகம் செய்கிறார்; ஆனால் அதில் அவருக்கு அறவே விருப்பமில்லை; அவருக்குச் சம்பந்தமில்லாத வேலை. இன்னொருவர் - அவரது தகுதிக்கேற்ற ஊதியமில்லை; விருப்பத்திற்கேற்ப ஓய்வோ விடுமுறையோ கிடைப்பதில்லை. மனம் லயிக்கும் கலை, விளையாட்டு எதையும் கற்க இயலவில்லை; மனதிற்குப் பிடித்த காரியம் எதுவும் செய்ய முடியவில்லை; இல்லை... முடியவில்லை... என்று ஏகப்பட்ட ‘லை’ களுடன் ஒவ்வொருவருக்கும் தனிமை; மன அழுத்தம்; விரக்தி.

ஒருவர் இத்தகைய பரிதாபகர நிலைக்கு ஆட்பட்டுவிடுவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன.

பட்டியல்!

அவர் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் பட்டியல்!

அரசாங்கத்தின்மீது குறை; மனைவி மீது குறை; தம் குழந்தைகளின் மீது குறை; நாள் நட்சத்திரத்தின் மீது குறை; முதலாளி மீது குறை; பொருளாதாரம், தம் துரதிருஷ்டம், குறைவான கல்வித் தகுதி, மாமன், மச்சான், மாமனார் என்று குறை... குறை... கூடை நிறையக் குறை.


குறைகளில் நியாயம் இருக்கலாம்; அநியாயத்திற்கு அபத்தக் களஞ்சியமாக இருக்கலாம். அதன் அலசல் இங்கு கருப்பொருளன்று.

இந்தக் குறைகளெல்லாம் சேர்ந்து சேர்ந்து அவரது மனதில் ஒரு தீர்மானம் ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம். ‘குறைகள் என் வாழ்க்கையில் வற்றாத ஊற்று என்றாகிவிட்டது. எனவே நான் வாழ்க்கையில் துயருற்றுக் கிடக்க எனக்குப் போதுமான நியாயம் இருக்கிறது...’ என்று விரக்தி! கன்னத்தில் கை!

தப்பு! இது பெரும் தப்பு! நமது எண்ணத்திற்கு ஏற்பவே வாழ்க்கை அமைகிறது. செயலுக்கு ஏற்பவே முடிவு அமைகிறது.

முழ நீளத்திற்கோ, சென்னையின் நூறடி ரோடு அகலத்திற்கோ உங்களிடம் குறைகளின் பட்டியல் இருக்கலாம். அவை வெற்று லிஸ்ட்! இணைய விரும்பும் கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் இருக்க, தன்னிஷ்டத்திற்குத் தயாரித்துக் கொள்ளும் வேட்பாளர் பட்டியல் போல் அது உபயோகமற்ற பட்டியல். நீங்கள் விரும்பியவாறு உங்களால் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இயலாவிட்டால், விரும்பிய செயல் புரிய இயலவிலலை என்றால், எத்தகைய சாக்குப்போக்குச் சொல்லியும் பயனில்லை.

ஏன்?

தலையைச் சுற்றிப் பாருங்கள்; அல்லது ஊரைச் சுற்றிப் பாருங்கள். நொடிதோறும் எத்தனை பேர் எத்தனை சவால்களை வென்று கொண்டிருக்கிறார்கள்?

கல்வித் தகுதி இல்லாதவர் கூடச் சாதனையின் விலாசத்தைச் சுமந்து கொண்டு திரிகிறார்.

‘உலகப் பொருளாதாரமே சுணங்கிக் கிடக்கிறதாம்; அதனால் நான் இன்று வேலைக்குப் போக மாட்டேன்’ என்றெல்லாம் மனைவியிடம் வம்பு பண்ணாமல் சிரமப்பட்டு உழைத்துச் சம்பாதிப்பவர் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

ஏகப்பட்ட பிள்ளை குட்டிகளுடன் இருப்பவர் உற்சாகமாய் இருக்கிறார்;

மனைவியுடன் சண்டைக் கோழியாய் வாழ்ந்தவர் ஒரு சந்தர்ப்பத்தில் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டு அணுதினமும் காதல் என்று இல்லறத்தை மகிழ்வாய் மாற்றிக் கொண்டுவிட்டார்.

தெருவுக்குத் தெரு இப்படி நிறைய உதாரணங்கள் காணலாம்.

இவர்களெல்லோரும் நமக்கு என்ன உணர்த்துகிறார்கள்? வாழ்க்கையில் அவர்கள் அவர்களுக்கான தேவைகளைச் சாதிக்க நினைத்தார்கள். அதைச் சாதிப்பது முக்கியம் என்று தங்களது மனவோட்டத்தை ஒருமுகப்படுத்திக் கொண்டார்கள். அதில் லயித்துச் செயல்பட்டார்கள். அவ்வளவுதான்!

சூழ்நிலைகளையும் மக்களையும் நாம் குறை சொல்லிக் கொண்டேயிருந்தால் நமது மனோபாவம் மாறிவிடும் அதற்கேற்ப நமது மன மகிழ்வின் விகிதாச்சாரம் நேரெதிராய் அமைந்துவிடும். எந்த அளவு குறையோ அந்த அளவிற்கு மன மகிழ்வு குறையும்.

நமக்கு வாழ்க்கை என்பது ஒரு முறையே. அந்த ஒரேயொரு வாய்ப்பில் ‘என்னால் ஏன் மன மகிழ்வுடன் இருக்க முடியவிலலை’ என்று குறைகளின் பட்டியலைப் பக்கம் பக்கமாய் எழுத ஆரம்பித்தால், விஷயம் ஒன்று மட்டுமே!

நீங்கள் மன மகிழ்வடைய முயலவில்லை.

அதையெல்லாம் ஓரமாய் ஒதுக்கிவிட்டு மகிழ்வுடன் வாழ்வதற்கான வழிவகைகளைத் தேடினால் போதும். உங்கள் மனம் தயாராகிவிடும். கொஞ்சம் முயன்று பாருங்கள். “அட! மனம் மகிழத் தயார்” என்பதை உணர்வீர்கள்.

Thanks to : www.inneram.com

திங்கள், 2 மே, 2011

மனம் மகிழுங்கள் -40- கேளுங்கள் ராசாவே!


நாம் விரும்புவதை அடைய வேண்டுமானால் கேட்க வேண்டுமாம். ‘கேட்டுப் பெறு’ என்கிறார்கள்.

‘என்ன கேட்க வேண்டும்; எதைக் கேட்க வேண்டும்’ என்கிறீர்களா?

நம்மிடம் பொதுவாய் ஒரு குணம் உண்டு. யாரிடமும் எதையும் கேட்கக் கூச்சம். கூர்ந்து ஆராய்ந்து, கூறு போட்டு அதைத் தயக்கம், பயம் என்று விதவிதமாகவும் சொல்லலாம்.

அதே நேரத்தில் நேர் எதிர்மாறாய், எங்கெல்லாம் கேட்கக்கூடாதோ அங்கெல்லாம் கூச்சம் மறந்து போகும்!

லஞ்சம், கமிஷன், டொனேஷன், எதற்கெடுத்தாலும் இலவசம் இத்தியாதி. இதையெல்லாம் பார்த்து ‘ஆமாமாம், இந்த நாடே உருப்படாது’ என்று சலித்துக் கொள்பவர்கள் பெண் வீட்டில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு, டௌரி, சீர், செனத்தி, கார், நகை, நட்டு, லொசுக்கு என்று கேட்க வெட்கப்படுவதில்லை.

வேடிக்கையாய் இல்லை?

கேட்டுப் பெறுதல் நம் உலக வாழ்வின் செயல்பாடுகளுக்கு, சாதனைகளுக்கு அவசியம். ஆனால் அதை முறையாய்ப் பின்பற்றாமல் போவதில் நிகழ்கிறது பிழை.

வாழ்க்கையில் நாம் வேண்டுவதெல்லாம் நடப்பதில்லை என்று பலரும் அங்கலாய்க்கிறோம்; நம்பிக்கை இழக்கிறோம். ஆனால் நமக்குத் தேவையான உதவிகளை உரிமைகளை கேட்டுப்பெற ஏன் மறுக்கிறோம்; தயங்குகிறோம்?

"பிறருக்கு உதவுவது எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் எனக்கு ஏதாவது வேண்டுமென்றால்தான் பிறரிடம் கேட்கப் பிடிக்காது" ஏன் அப்படி?

நம் மனமறிந்து தாமாய் அனைவரும் நமக்கு உதவ வேண்டும் என்றால் அது சாத்தியத்திற்கு அப்பாற்பட்டது. கடைக்கு மளிகை வாங்கச் சென்று ஓரமாய்க் கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தால், "ஸார் முகத்தைப் பார்த்தால் அவருக்கு ஒரு கிலோ சர்க்கரை தேவை போலிருக்கிறது" என்று கடைக்காரர் நமக்குத் தேவையான பொருள்களைக் கட்டிக் கொடுத்துவிடுவாரா என்ன?

நமக்கு வேண்டியதை நாம் கேட்டுப்பெறுவதில் தப்பே இல்லை. அதற்குரிய நியாயங்கள் பல உள்ளன.

கேட்டுப்பெறுவது சுயமரியாதை மட்டுமன்று; சுயமதிப்பும் கூட. புருவம் உயர்கிறதோ? நாம் உரிமையுடன் பிறரிடம் உதவி கேட்கும்போது நம் மனதிலும் நாம் யாரிடம் கேட்கிறோமோ அவர்களின் மனதிலும் பரஸ்பரம் உரிமையும் சலுகையும் ஏற்படுவதைக் கவனித்திருக்கிறீர்களா? குட்மார்னிங் சொல்லிவிட்டுக் கடந்து செல்லும் பக்கத்து வீட்டுக்காரரிடம், "பாத்ரூம் கெய்ஸர் ரெண்டு நாளா வேலை செய்யலை. எனக்குத் தெரிஞசதெல்லாம் செஞ்சு பாத்துட்டேன். புரியலை" என்று சொன்னால், ஒன்று அவருக்குத் தெரிந்த ரிப்பேர் செய்வார்; அல்லது அவருக்குத் தெரிந்த மெக்கானிக், ஃபோன் நம்பர் என்று வீட்டிற்குச்சென்று எடுத்து வந்து தருவார். அதை விடுத்து ‘அந்த ஆள் போட்டிருக்கிற சட்டை எனக்குப் பிடிக்கலே. அவரிடம் சென்று உதவி கேட்பதாவது’ என்று நினைத்தால்?

தேவையான உதவிகளை வேண்டிப் பெறுவது அதற்கு நாம் தகுதியுடையவர்களே என்ற நம்பிக்கையை உங்களது மனதில் அது ஏற்படுத்துகிறது.

கேட்டுப் பெறுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. நீங்கள் பிறரிடம் உங்களது தேவைகளைத் தெரிவிக்காதபோது அவர்கள் அதை அறியாமல் போகக்கூடும். அல்லது தாமாகவே அறிந்திருந்தாலும் மறந்து போய் உங்களைத் தவிர்த்துவிடக் கூடும். விளைவு? உங்களது மனதில் ஏமாற்றம். உங்கள் மனதிலுள்ளதை நீங்கள் வெளிப்படுத்தாதபோது வயிற்றுக்குள் ஏதோ ஓர் அசௌகரியம் ஏற்பட்டுப்போய் அதன் தாக்கம் பிறகு மனதில் வந்து தங்கும்.

கேட்டுப் பெறுவது என்பது உங்களது மனதில் உள்ளதை நீங்கள் முறையுடன் வெளிப்படுத்தும் முதல் செயல். இறைவனிடம் கையேந்திக் கேட்டால்தானே பிரார்த்தனை! மனதிலுள்ளதை அறியும் இறைவனே "கேள் கொடுக்கிறேன்" என்று சொல்லும்போது மனிதர்களிடம் நம் மனதிலுள்ளதைக் கேட்கத்தானே வேண்டும்? உங்களின் முதலாளி, குடும்பம், நண்பர்கள் என்று யாரிடம் உங்களுக்கு என்னத் தேவையோ நீங்கள் அதை வெளிப்படுத்த வேண்டும். வேண்டுமானால் "இன்னிக்குப் பூரியும் தக்காளித் தொக்கும் செய்து கொடேன்" என்று மனைவியிடம் கேட்டுப் பாருங்கள். பெருமையுடன் சமைத்துப் பரிமாறுவார். கோபமாய்த் திட்டு வந்து விழுந்தால் அது வேறு பிரச்சினை.

‘நீங்கள் உதவிகள் கேட்டுப் பெறும்போது உங்களுக்கு உதவுபவர் மனதில் அது ஓர் அலாதி மகிழ்வைத் தருகிறது. அதனால் கேட்காமல் இருப்பது உங்களது சுயநலம்’ என்று திட்டுகிறார் ஓர் உளவியலாளர். ‘நீங்கள் மட்டும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறீர்கள்; அதனால் மனம் மகிழ்கிறீர்கள். எனில் அந்த வாய்ப்பைப் பிறருக்கும் அளித்து அவர்களும் மனம் மகிழ நீங்கள் உதவ வேண்டாமா?’ என்கிறார்.

யதார்த்த உலகில் மக்கள் பிறருக்கு உதவவே விரும்புகிறார்கள். உங்களுக்குத் தேவை என்று ஒன்று ஏற்படுவது தெரிந்தால் உதவுவது அவர்களுக்குப் பெருமை அளிக்கிறது. நீஙகள் உங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்து விட்டீர்கள், இப்பொழுது உங்களுக்குத் தோள் கொடுக்க ஆள் தேவை என்றால் ஓடிவந்து உதவவே அவர்களுக்கு விருப்பம் ஏற்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் சிலர் உதவி புரிவதற்கு வாய்ப்புக் கிடைக்காதா என்று பரபரப்பாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படித் தாமே முன்வந்து பிறருக்கு உதவுவதால் அது அவர்களுடைய காரியத்தில் மூக்கை நுழைப்பதாக ஆகிவிடுமோ என்ற தயக்கம் பலருக்கும் இருக்கிறது.

கர்ப்பிணிப் பெண்களைக் காணும்போது மக்களிடம் ஏற்படும் மாறுதல்களைக் கவனித்திருக்கிறீர்களா?

ஒருவர் அடித்துப் பிடித்து பஸ்ஸில் ஏறி ஸீ்ட் பிடித்திருப்பார். அப்பொழுது கூட்ட நெரிசலில் அமர இடம் இல்லாமல் நிற்கும் கர்ப்பிணியைக் கண்டால் அவரது நல்லுள்ளம் விழிப்படைந்து உடனே எழுந்து, "நீ உக்காந்துக்கோம்மா". பிரதியுபகாரமற்ற அந்த உதவி அவருக்குப் பெருமை.

மீட்டருக்குச் சூடு வைத்துக் கொதிக்கக் கொதிக்க ஓடும் ஆட்டோக்களின் முதுகில் பார்த்தால் "பிரசவத்திற்கு இலவசம்".

தொழிலோ, திருமணமோ, கார் வாங்க வேண்டுமோ, வேலை தேட வேண்டுமோ, என்ன காரியமோ - சிலர் தாங்கள் நினைத்ததை நினைத்தபடியே வெற்றிகரமாய் அடைவதைக் காணலாம். அதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, அவர்கள் தங்களுக்கு வேண்டியதை யாரிடம் எப்படிக் கேட்டுப் பெறவேண்டும் என்று அறிந்து வைத்திருப்பதே!

தேவைப்படும் உதவிகளைப் பிறரிடம் கேட்பதில் கௌரவக் குறைச்சல் இல்லை என்பதை உணர வேண்டும். இன்று பைக் ரிப்பேர் எனில் அலுவலகம் செல்ல நண்பர்களிடம் ‘லிஃப்ட்’ கேட்கிறோமில்லையா?

ஆனால் முக்கியமான ஒன்று! கேட்டுப் பெறுவதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

கேட்கக் கூடாதது யாசகம், கையூட்டு, வரதட்சணை, இலவசம் போன்றவை. ‘பெண்களிடம் வயது’ என்று வால்தனமாய்க் குறும்பர் யாரேனும் பின்னூட்டம் இடலாம். எதற்கெடுத்தாலும் பிறரைத் தொணதொணத்து ஏதாவது கிடைக்குமா என்று பிறாண்டுவது என்பதெல்லாம் கேட்டுப் பெறுவதல்ல. மக்கள் அதை விரும்புவதில்லை. பிறகு உங்களைப் பார்த்தாலே ஓட்டப் பந்தயம் ஆரம்பித்து விடுவார்கள்.

மனமறிந்து தானாய் எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைத்தால் அது சொற்பமாய் யதேச்சையாய் நடக்கலாம்; எப்பொழுதுமே நடக்காது.

எனவே, தேவைகளை, உதவிகளை, உரிமைகளைக் கேட்டுப் பெறுங்கள். ‘வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்.’

Thanks to :www.inneram.com

திங்கள், 18 ஏப்ரல், 2011

மனம் மகிழுங்கள்- 39 - விடாமுயற்சி!

மிழில் ஒரு பழமொழி உண்டு; கேள்விபட்டிருப்பீர்கள்; "அடிக்க அடிக்க அம்மியும் நகரும்."

அதை ஏன் போட்டு அடித்துக் கொண்டிருக்க வேண்டும்? துணைக்கு ஒருவரை அழைத்து நகர்த்தி வைத்துவிட்டுப் போனாலென்ன? இங்கு தூக்கி வைப்பதன்று பிரச்சினை. விடாமுயற்சி! அதுதான் பேச்சு இங்கு!

விடாமுயற்சி என்றால் என்ன? அது வேறொன்றுமில்லை; ‘சாதனையின் ஆணிவேர்!‘

ஒருவருக்கு ஏகப்பட்ட திறமைகள் இருக்கலாம். ஆனால் அவை மட்டுமே அவரை சாதனையாளராக உருவாக்குவதில்லை. உலகில் திறமையாளர்களுக்கா பஞ்சம்? சொந்தத்தில், உங்கள் தெருவில், எதிர் வீட்டில், பக்கத்து வீட்டில் என்று எத்தனையோ திறமையாளர்கள் இருக்கலாம். அந்த அவர்கள் அத்தனைப்பேரும் சாதிக்கிறார்களா? இல்லையே!

ஒருவர் சிறந்த அறிவாளியாக இருக்கலாம். ஆனால் அது மட்டுமே அவரது சாதனைக்கு உதவாது. அன்று புலவர்கள் பலர் தங்களது அறிவை மன்னனைப் புகழ்ந்து பாடப் பயன்படுத்தினார்கள் என்றால் இன்று அரசியல் தலைவரை. ......

என்ன பிரயோசனம்?

ஒருவர் கல்வியில் சிறந்து விளங்கலாம். ஒரு முழ நீளத்திற்கு அவரது பெயருக்குப் பின்னால் அவர் படித்துப் பெற்ற பட்டங்கள் ஒட்டிக் கொண்டிருக்கலாம். அத்தனைக் கல்வியாளர்களும் சாதனையாளர்களா? சொல்லப்போனால் மாணவருக்குக் கற்றுத்தரும் ஆசிரியரே கல்வியறிவில் சிறப்பானவர் தாமே? அவர், ‘ஏணி, தோணி, வாத்தியார்...’ என்று அப்படியேதானே இருக்கிறார்?

குறிப்பிட்ட சாதனை என்ற ஒன்றைப் புரிய வேண்டுமெனில், இலட்சியமொன்றை அடைய வேண்டுமெனில், தேவை விடாமுயற்சி. தகுதிகளும் திறமைகளும் எண்ணற்ற வகையில் அமையப் பெற்றிருந்தாலும் விடாமல் முயற்சி செய்தால் தவிர எந்தக் காரியமும் முதல் முயற்சியிலேயே வெற்றி அடைவதில்லை.

உலகின் சாதனையாளர்கள் இந்த இரகசியத்தை நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள். ருசியான சமையலுக்கு உப்பு, காரம் போல விடாமுயற்சி தமது இலட்சியத்திற்கு முக்கியமான ஓர் ஆக்கக்கூறு என்று உணர்ந்து கொள்கிறார்கள்.

‘அதெல்லாம் ச்சும்மா’, ‘எனது அறிவும் திறமையுமே சாதனையை எனது வீட்டிற்கு இட்டு வந்து என் தோளில் ஆளுயர மாலையைப் போtடச்செய்யும்’ என்று நம்புபவர்கள் வாழ்க்கையில் அசுவாரசியமாகிப் போகிறார்கள்.

மேற்படிப்பு, தொழில், ஆராய்ச்சி என்று ஏதோ ஒரு புதிய திட்டம் உங்களுக்குத் தோன்றுகிறது. அல்லது ஏதோ ஓர் ஏடாகூட சிந்தனை தோன்றி, குதிரை ஏற்றம் கற்றேத் தீருவது என்று முடிவெடுக்கிறீர்கள். அந்த ஆர்வத்தில், உற்சாகத்தில் பரபரவென அதற்கான முதற்கட்ட ஆயத்தம் செய்தாகிவிட்டது. அடுத்த கட்டமாய் அந்தத் திட்டத்தைச் செயல்படுத்தவும் ஆரம்பித்து விடுகிறீர்கள். அதுவரை எல்லாம் ஓக்கே!

அடுத்து அந்தச் செயலின் ‘ப்ராக்டிக்கலான இன்னல்கள்’ முகத்தில் வந்து அறையும். பிரச்சினைகள், சவால்கள், என்று ஒன்று மாற்றி ஒன்று உங்களை ஆக்கிரமிக்கும்.

குதிரையில் ஏறி அமர்ந்தால் அது கார் ஸீட் போல் சொகுசாய் இருக்காது என்பது ஒருபுறமிருக்க, “ஹை ஹை” என்றால் அந்த ஜந்துவோ உங்களைக் கீழே தள்ளிவிட்டுத்தான் மறுவேலை என்று அடம்பிடிக்கும்.

அடக்கி, ஆண்டு, விடாது அயராது பயிற்சி எடுத்து முடித்தபிறகே ஒருவழியாய்க் குதிரை ஏற்றம் பிடிபடும். அதற்குள் பாதி அல்லது முக்கால்வாசி இளைத்திருப்பீர்கள்.

உலகிலுள்ள ஒவ்வொருவரிடமும் இப்படி ஏதாவது ஓர் ஆவல், முயற்சி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதில் பெரும்பாலானவர்கள், ‘விட்டதடா ஆசை’ என்று பாதியிலேயே ‘ஜகா’ வாங்கிவிடுகிறார்கள். அதுதான் சோகம். மீதமுள்ள மிகச் சிலர் மட்டுமே தாங்கள் நினைத்ததை விடாது முயன்று, சாதித்து முடிக்கிறார்கள்.

‘விடாது முயற்சி செய்’ என்று எழுதுவதும் வாசிப்பதும் எளிது. ஆனால் நாம் நினைத்ததை அடைய எதிர் கொள்ளும் சோதனைகளும் பிரச்சினைகளும் இருக்கின்றனவே, அவை எப்பொழுதுமே இலேசானதாக அமைவதில்லை. இலட்சியத்திற்கு, திட்டத்திற்கு ஏற்ப அவற்றின் வீரியமும் பரிமாணமும் பெரிசாகவே இருக்கும். தாண்ட வேண்டும்! அதையெல்லாம் ‘விட்டேனா பார்’ என்று எதிர்கொண்டு தாண்ட வேண்டும்.

எந்த நாடாக இருந்தாலும் சரி, எந்த ஊராக இருந்தாலும் சரி, அங்கெல்லாம் உள்ள எந்த ஒரு சாதனையாளரையும் எடுத்துக் கொண்டு அவரது வாழ்க்கை வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். அடிநாதமாய் விடாமுயற்சி என்பது பரவி ஊடுருவி இருப்பதைக் காணலாம்.

சொல்லப்போனால் அத்தகைய வரலாற்றைப் படிக்கவே நீங்களும் விரும்புவீர்கள். சாதிக்காமல் தோற்றுப் போனவர்களின் வரலாறு என்ன ஆவலை உங்கள் மனதில் ஏற்படுத்தும்?

ஆனால் -

விடாமுயற்சிக்கும் வீண் பிடிவாதத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும்! இல்லையென்றால் பலன் எதிர்மறை!

ஆற்றைக் கடக்கப் படகில் சென்று கொண்டிருக்கும்போது படகில் ஓட்டை விழுந்துவிட்டால், "ம்ஹும்! அதெல்லாம் முடியாது; நான் குதிக்க மாட்டேன்" என்று சொன்னால்?

நீங்கள் வெறுக்கும் உத்தியோகத்தில் விடாப்பிடியாய் ஒட்டிக் கொண்டிருப்பதைவிட நல்லதொரு வாய்ப்பு அமையும்போது மாறிக் கொள்வதே சாமர்த்தியம். சில சமயங்களில் சில விஷயங்களைக் கை கழுவுவதே வெற்றிக்கு வழி வகுக்கும்.

அதை சரியாக உணர்ந்து கொண்டு விடாமுயற்சியுடன் இலட்சியத்தைப் பின் தொடர்ந்தால் - மன மகிழ்வே!

Thanks to :www.inneram.com

செவ்வாய், 12 ஏப்ரல், 2011

மனம் மகிழுங்கள் - 38 திருப்புமுனை!

ம் அனைவருக்கும் ஏதோ ஒரு தருணத்தில் அது நிகழ்ந்திருக்கும். மந்தமாகவே சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை; தினமும் ஒரே மாதிரி எழுந்து, பல் துலக்கி, காப்பி குடித்து, குளித்து, உண்டு, அலுவலகம் சென்று திரும்பி, மீண்டும் வீடு, உணவு, டிவியில் அடாசு ஸீரியல் என்று இப்படி மெத்தனமாய்க் காலம் நகர்ந்து கொண்டிருக்கும்போது திடீரென வாழ்வில் ஒரு திருப்பம் - உங்கள் பாதையை மாற்றியமைக்கும் திருப்பம் - அமைந்திருக்கும்.

எங்காவது கேட்டிருப்பீர்கள் அல்லது படித்திருப்பீர்கள். மிகப் பெரிய தொழிலதிபர் ஒருவர் கூறியிருப்பார், "இனிமேல் என் வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைத்திருந்தேன். மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு சொந்த ஊருக்குச் செல்ல டிக்கெட் வாங்க நினைத்திருந்தேன். அப்பொழுதுதான்..."

திரையுலகைச் சார்ந்த பல பிரபலங்களிடமும் இத்தகைய பேட்டிகளைக் காணலாம்.

பெரிசோ சிறிசோ நிகழும். என் வாழ்க்கையில் நிகழ்ந்திருக்கிறது. சற்று யோசித்துப் பார்த்தால் உங்களது வாழ்க்கையிலும் இப்படியொன்று நிகழ்ந்திருக்கலாம். இல்லையென்றால் சற்றுப் பொறுங்கள்; நாளை, நாளை மறுநாள் நிகழ்ந்துவிடும்.

வாழ்க்கையின் இலட்சியத்தை எட்டும் பயணத்தில் ‘திருப்புமுனை’ அறிவது அவசியம். நம் கண்ணுக்குத் தெரியாத விதி அது. அது நிகழும்போது ஒருவரது வாழ்க்கையையே மாற்றி விடுகிறது. ஆனால் இதில் சூட்சமம் என்னவென்றால் அவர் அத்தகைய தருணம்வரை மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு போராடி வந்திருக்க வேண்டும். பாதியிலேயே அவர் கையைத் தூக்கிவிட்டால் அரைக் கிணறுதான்.

இறைவன் நம் கர்மத்திற்கு ஏற்பவே பலன் அளிக்கிறான். மனிதன் தனது குறிக்கோளை அடைய மெனக்கெடும்போது அந்த மெனக்கெடல் நிசந்தானா என்று இறைவனின் சோதனை அமையும். சோதித்து, சோதித்து மனிதனின் ஊக்கமும் விடாமுயற்சியும் தளராது தொடர்ந்து கொண்டிருந்தால் சடாரென அத்திருப்புமுனை அவன் பாதையின் எதிரே வந்துவிடுகிறது.

அதுவரை இருள் படர்ந்து சோகமயமாய்க் காட்சியளித்த உலகம் ஒரு நொடியில் வண்ணமயமாய் மாறிவிடும். "எல்லாமே சங்கடமாகவும் பிரச்சினையாகவும் இருக்கிறது. காரியங்கள் எவையும் கைகூட மறுக்கின்றன. எதைத் தொட்டாலும் துலங்கமாட்டேன் என்கிறது.." என்பதான நிலையில் இருந்தால் அதன் அர்த்தம் "இதோ வரப்போகிறது அது... வெற்றி அந்த முனையில் காத்திருக்கிறது" என்று நம்புங்கள் என்கிறார்கள் உளவியலாளர்கள். அதை மனிதன் உணர ஆரம்பித்துவிட்டால் சோகங்கள் இலேசாகிவிடும். மனம் மகிழ்வுடன் முயற்சியைத் தொடரும்; அசராது.

கடினமான பாதையைக் கடந்தால்தான் திருப்புமுனை!

படாதபாடு படுத்தும் இன்னல்களெல்லாம் நம் இலட்சியத்தை அடையத் தேவையான சுமைகள்!

என்று மனம் உணர ஆரம்பித்து விட்டால் நாம் துவண்டு விடாமல் தாக்குப்பிடிக்க அவை உதவும்;

எனவே எவ்வளவுக்கு எவ்வளவு பிரச்சினைகளோ அந்தளவிற்கு நீங்கள் பெருமைப்படலாம், காரியம் கைகூடப் போகிறதென்று.

சரி, திருப்புமுனை வந்தாச்சு! "இனி எல்லாம் வசந்தமே" என்று சுபம் போட்டுவிடலாமா? அது அப்படியன்று.

நாம் மாறினால் மட்டுமே நம் உலகம் மாறும். தானாய் எல்லாம் மாறும் என்று நினைத்து அமர்ந்திருந்தால் அது பொய். பழைய பொய். மாயமாய் வானிலிருந்து ஓர் ஒளி வந்து நம் வாழ்க்கையின் கும்மிருட்டிற்குத் தோரண விளக்கு அமைத்துவிடாது!

"வாழ்க்கையில் நொடித்துப் போயுள்ளேன். நான் மீண்டு எழ வேண்டுமானால் எனக்கு 20 இலட்ச ரூபாய் முதல் இருந்தால்போதும்; தொழில் செய்து முன்னேறி விடுவேன்" என்று ஒருவர் கூறுகிறார். அன்றிரவு அவரில்லத்தில் கூரையைப் பிய்த்துக் கொண்டு ஒரு மூட்டை விழுகிறது; திறந்துப் பார்த்தால் 20 இலட்ச ரூபாய் பணம்.

அடுத்து அவர் நிலை மாற வேண்டுமென்றால் என்ன செய்யவேண்டும்? அவர் சொன்னதைப் போல் அதைக் கொண்டு தொழில் புரிய வேண்டும். அதை விடுத்து அதிர்ஷ்டம்தான் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்ட ஆரம்பித்துவிட்டதே, இனி என்ன தொழில் வேண்டிக்கிடக்கு என்று சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் பணத்தை மட்டும் செலவு செய்ய ஆரம்பித்தால்?

மூட்டை மட்டுமே மிஞ்சும். சுருட்டி முகத்தைத் துடைத்துக் கொள்ளலாம்.

நம்மை மாற்றிக் கொள்ள நாம் மனதினுள்ளே உறுதி பூண்டு அதைச் செயலில் காட்டினாலொழிய வாழ்க்கையில் என்ன திருப்புமுனை ஏற்பட்டாலும் அது நம் நிலையை மாற்ற உதவாது.

இதற்குச் சுருக்குவழி, குறுக்குவழி, ‘சைடு’ வழி என்று எதுவும் கிடையாது. நாம் நம்மை மாற்றிக்கொண்டு செயலில் இறங்க வேண்டும்.

உடனே ஒருவர் இப்படிக் கேட்கலாம். "நான் என்னதான் தலைகீழாக நின்றாலும் எனது விதியில் தோல்வி என்று எழுதி வைக்கப்பட்டிருந்தால் அதுதானே வந்துவிடியும். பிறகு நான் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்; மெனக்கெட வேண்டும்?"

இருக்கலாம். ஆனால் செயல் உங்களது வாழ்க்கையின் கடமை. உங்கள் விதி பணி செய்து கிடப்பதே! அதுதான் மன நிறைவு தரும்; மன மகிழ்வு தரும்.


Thanks to :www.inneram.com

புதன், 30 மார்ச், 2011

மனம் மகிழுங்கள் - 37முயற்சி திருவினையாக்கும்!

சுறுசுறுப்பிற்கு எப்பொழுதுமே எறும்பை உதாரணமாகச் சொல்வோம். எறும்பு படு சுறுசுறுப்புதான். எதில் சுறுசுறுப்பு? தனக்கெனச் செய்து கொள்ள வேண்டிய வேலைகளில்! அதேபோல் புழு, பூச்சி, மிருகங்கள் என்று உலகிலுள்ள ஜீவராசிகள் அனைத்துமே ஏதோ ஒரு வேலையில் ஈடுபட்டவாறுதான் உள்ளன. சுறுசுறுப்போ, மெத்தனமோ ஏதோ ஒரு வேலை; அல்லது காரியம் - கூடு கட்டுதல், பசிக்கு இரை தேடுதல், தன் ஜோடியிடம் காதல், தேவைப்பட்டால் நீரில் 'சளக்'கென்று ஒரு குளியல். யாரும் சொல்லாமல், கட்டளையிடாமல், வற்புறுத்தாமல் தங்கள் வேலையைச் செய்து கொண்டே இருக்கின்றன. பிறகு நிம்மதியான உறக்கம்.

இதிலுள்ள அடிப்படைத் தத்துவம் நமக்கு முக்கியமானது. அது, ‘மகிழ்வாய் இருக்க வேண்டுமெனில் முயற்சியெடுத்துக் காரியமாற்றும் மனப்பக்குவம்.’

ஒரு காரியம் செய்ய வேண்டியிருக்கிறது. ‘அதற்கு மெனக்கெடணுமே’, ‘முயற்சி எடுக்கணுமே’ என்று தள்ளிப்போட்டால், செய்யத் தவறினால் என்னவாகும்? காரியம் ஆகாது. தவிர அது நம்மைப் பாதிக்கும்.

எளிமையான உதாரணம் ஒன்று: ஓரிரு நாட்களாய்க் காய்ச்சல். சுக்குக் கஷாயம், கை வைத்தியம் எதிலும் சரியாகவில்லை. என்ன செய்வது? எழுந்து சட்டையை மாட்டிக் கொண்டு, பை நிறையப் பணத்தை அடைத்துக் கொண்டு டாக்டரிடமும், அவருக்கே அவருக்கான பார்மஸிக்கும் செல்ல வேண்டும். அதெல்லாம் பிடிக்கவில்லை என்று தள்ளிப்போட்டாலோ, போக மறுத்தாலோ நிலைமை சீராகி விடுமோ? ஆகாது. பிரச்சினை நம்மை மேலும் பாதிக்கும்.

தேர்வு எழுத படிக்க வேண்டும். படகு ஓட்ட துடுப்புப் போட்டால்தான் நகரும்.

உடனே ‘மோட்டார் போட்?’ என்று வம்பு செய்யாதீர்கள். அதற்குப் பெட்ரோல் பங்க் சென்று டீசல் வாங்கி வைத்திருக்க வேண்டும். நீரை அள்ளி ஊற்றினாலெல்லாம் வேலைக்காவாது.

ஆக, எந்தவொரு காரியத்திற்கும் ஏதோ ஒருவகையிலான முயற்சி முக்கியம். அந்த முயற்சி சிறக்க நமது மனோபாவம் முக்கியம்.

ஒரு முயற்சி என்று இறங்கும்போது காரியம் நடைபெறுகிறது என்பது ஒரு விஷயம். அதனூடே மற்றும் சில நிகழ்கின்றன. முயற்சி நம்மைச் சோதிக்கும்; நம் திறனை நாம் பரீட்சித்துப் பார்க்க உதவும்; நமக்குப் பாடம் கற்பிக்கும்.

எப்படி என்கிறீர்களா? இல்லறம் என்றொரு முயற்சியில் இறங்குகிறீர்களில்லையா? இப்பொழுது யோசித்துப் பாருங்கள்.

எனவே ஒரு முயற்சியில் இறங்கும்போது அதை அனுபவிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு காரியத்தைச் செய்து முடிக்கவேண்டும் என்பதற்காக மட்டும் ஒரு முயற்சியில் இறங்கினால் அதில் மகிழ்விருக்காது. தவிர அம்முயற்சி ஏதேனும் காரணத்தால் கைகூடவில்லையெனில் மனம் சோர்ந்து போய்விடும்.

ஒரு விற்பனையாளன் தனது தொழில் நிமித்தமாய்ப் பலதரப்பட்ட மக்களைச் சந்திக்க முடிகிறது; பேச முடிகிறது; பழக முடிகிறது. மக்களைச் சந்தித்துப் பேசிப் பழகுவதால் ஏற்படும் அனுபவத்தை உணர்ந்து அவன் மகிழ்வுடன் தன் பணியைப் புரியும்போது அவனது மனம் உற்சாகமடைகிறது. அதனால் ஒரு நாள் குறிப்பிட்ட அளவிலான விற்பனை இல்லாது போனாலும் அவனது மனம் அதீதச் சோர்வடையாது; ஏமாற்றம் அடையாது.

ஈடுபடுவது எந்தக் காரியமாக இருந்தாலும் அதை அனுபவித்து உணர்ந்து மகிழ்வுடன் செய்யும்போது அந்த வேலையின் முடிவு இரண்டாம் பட்சமாகி ஏற்படும் திருப்தியும் மகிழ்வும் இருக்கிறதே அது முக்கியமானதாகிவிடுகிறது. இதைப் பொதுவாய் ஆங்கிலத்தில் job satisfaction என்போம். மனத்திருப்தியற்று ஒரு வேலையில் ஈடுபட்டால் அதில் லட்சலட்சமாய்ச் சம்பாதித்தாலும் மகிழ்வு தொலைந்து காணாமல் போய்விடும்.

"பணம்; பணம்" என்று நிற்காமல் கொள்ளாமல் ஓடிக்கொண்டே இருக்கிறோமே அது சொத்தைத் தரும். சுகத்தைத் தரும். மகிழ்வைத் தருமோ?

ஒரு செயலின் முடிவை மட்டுமே எண்ணி அளவுக்கதிகமாக அதில் கவனம் செலுத்தினால் நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து விடுவோம். எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனை மட்டுமே மனதில் ஓடி ஓடி, செய்து கொண்டிருக்கும் காரியத்தை, அந்த நிமிடத்தை, அந்த நொடியை உணர்ந்து மகிழ மறந்துவிடுவோம். ஏனெனில் மகிழ்வு என்பது ஏதோ ஓர் இடத்தில் ஏதோ ஒரு குறிப்பிட்ட தருணத்தில் என்று நமக்காகக் காத்திருப்பதில்லை.

எனவே முயற்சியின் இறுதியில் ஏற்படப் போகும் முடிவை நினைத்துப் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் ஈடுபடும் முயற்சியை உணர்ந்து மகிழக் கற்றுக் கொண்டால் செய்யும் காரியம் தானாகவே இன்பமானதாக ஆகிவிடும்.

வாரம் முழுதும் மனைவி உங்களுக்குச் சமைத்துப் போடுகிறார். ஒரு ஞாயிற்றுக்கிழமை நீங்கள் அவருக்கு இன்ப அதிர்ச்சி தர முடிவு செய்கிறீர்கள். அவர் உறக்கத்திலிருந்து எழுவதற்கு முன் நீங்கள் எழுந்து, தலைக்குக் குளித்து, அடுக்களைக்குச் சென்று காலையுணவு சமைக்கிறீர்கள். சமையல் அனுபவம் இல்லாத நீங்கள் அன்று அபூர்வமாய் ஈடுபடும் முயற்சியில் அந்த அனுபவத்தை உணர்ந்து, மகிழ்ந்து லயிப்புடன் செய்ய முனைந்து பாருங்கள். அது மிகப்பெரும் மன மகிழ்வை உங்கள் மனதில் ஏற்படுத்தும்.

அதன்பின் உங்கள் மனைவி எழுந்துவந்து அந்த உணவைச் சாப்பிட்டுவிட்டுப் பாராட்டினால் அது போனஸ். இல்லையென்றால் பெரிய பிரச்சினையில்லை. நீஙகள் அதிகம் மனவருத்தம் அடையப் போவதில்லை. ஏனெனில் உங்கள் மனதில் அன்றைய சமையல் பணியை, அந்தப் புது முயற்சியை ரசிப்பதற்கு மனதைத் தயார்படுத்திவிட்டீர்கள். அதுவே உங்கள் மனதில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

மனத் திருப்திக்காக ஒரு காரியம் புரியும்போது, அதில் ஈடுபடும்போது, அம்முயற்சி தானே நல்ல முடிவை தேடித்தரும். முயற்சி திருவினையாக்கும் என்பது இயற்கையின் விதி. ஆயினும் ஏதேனும் காரணத்தால் முடிவுகள் தாமதமானாலோ, அல்லது நீங்கள் நினைத்ததைப்போல் காரியம் அமையவில்லை என்றாலோ, அது உங்கள மன அமைதியைக் குலைக்காது. காரியத்தில் உள்ளார்ந்து ஈடுபட்ட திருப்தி மனதில் பரவியிருக்க, முடிவு வரும்போது வரட்டும் என்று அடுத்த முயற்சியில் இறங்கிவிடுவீர்கள்.

எல்லாம் சரி! ஒரு காரியத்தை விரும்பி திருப்திகரமாகப் புரிவது எப்படி? அதை நீங்கள் மனதில் ஒரு தீர்மானமாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டியதுதான். வேறு வழியில்லை.

ஒரு சிந்தனையாளர் கூறினார், "மன மகிழ்வின் இரகசியம் என்ன விரும்புகிறோமோ அதைச் செய்வதில் இல்லை; எதைச் செய்ய நேரிடுகிறதோ அதை விரும்புவதில் உள்ளது."

னம் மகிழ, தொடருவோம்...

Thanks to : www.inneram.com

திங்கள், 28 மார்ச், 2011

மனம் மகிழுங்கள் -36 - ஈடுபாடு

ஆங்கிலத்தில் commitment என்றொரு சொல் உண்டு. ஒரு செயலைப் பொறுப்பாய் மேற்கொள்ளுதல் என்று தமிழில் சொல்லலாம். வாழ்க்கையில் இது முக்கியம். எந்த செயல் புரிய முனைந்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் பொறுப்பாய் நிறைவேற்றி முடிக்கும் மனோபாவம் வேண்டும். மனமிருந்தால் செய்வேன்; இல்லையெனில் 'என் வழி தனி வழி' என்றெல்லாம் ஒரு செயலில் இறங்கினால் அது இரண்டுங்கெட்டான் வழி.

ஈடுபாட்டுடன் செய்யப்படும் செயல்களே மன நிறைவளிக்கும்; மகிழ்வைத் தரும்.

திருமணம் புரிந்து கொள்கிறோம். எனக்கு மூடிருந்தால் கணவனுக்குரிய/மனைவிக்குரிய பொறுப்புகளை கவனிப்பேன்; மற்ற நேரத்தில் 'Please Do Not Disturb' என்று போர்டு மாட்டிக் கொள்ள முடியுமா? பிறகு குடும்பம் என்னாவது?

ஒருவர் எந்தப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாமல் - commit ஆகாமல் - தயங்கித் தயங்கி நின்றால் எந்தச் செயலையும் அவரால் சாதிக்க முடியாது. ‘செய்யலாமா வேண்டாமா’ என்ற மனோபாவத்துடனேயே இருந்து கொண்டிருந்தால் உலகம் அவரை ‘ஸீரியஸாக’ எடுத்துக் கொள்ளாது.

“இந்தக் காரியத்தில் நான் இறங்கப் போகிறேன்; என்ன ஆனாலும் சரி செய்து முடிக்கப் போகிறேன்” என்று களத்தில் இறங்கிப் பாருங்கள். அதன்பிறகு நடைபெறுவது மாயம். மனதில் ஏற்படும் திடமான அந்த உறுதிமொழி நீங்கள் மேற்கொள்ளும் காரியத்தில் உங்களை முழு மனதுடன் ஈடுபட வைக்கும். பின்னர் எதிர்படும் தடங்கல்கள், பிரச்சனைகள் போன்றவற்றையெல்லாம் மனம் எதிர்கொள்ளும் விதமே தனி.

ஏனெனில் -

“எப்படியும் இந்த ஒலிம்பிக்ஸில் நான் தங்கப்பதக்கம் வாங்கியே தீருவேன்” என்று ஒருவர் முடிவெடுத்துவிட்டால், அதற்கடுத்து அவரது செயல்பாடுகளெல்லாம் அதற்கான முயற்சிகள், பயிற்சிகள் என்று அவ்ர் சுவாசிப்பது அந்தத் தீர்மானமாகவே ஆகிவிடுகிறது. அதையே, “இந்த முறை தங்கப்பதக்கம் வாங்க முயல்வேன்” என்று சொல்லிப் பாருங்கள். மனம் தோல்விக்குப் பாதித் தயார்!

இரண்டு வாக்கியங்களையும் உச்சரித்துப் பார்த்தால் மன அதிர்விலேயே வித்தியாசம் தெரியும்.

இவ்விதி, அலுவலாகட்டும் தொழிலாகட்டும் தாம்பத்யமாகட்டும் அனைத்திற்கும் பொது.

ஆக, எந்த ஒரு காரியத்திற்கும் அதைப் பொறுப்பாய் மேற்கொண்டு முடிக்கும் ஈடுபாடு அவசியம். அது இன்றிக் குடும்பம் இல்லை; தொழில் இல்லை; அரசாங்கம் இல்லை.

சரி! இது அமைந்துவிட்டால் எல்லாமே இன்ப மயமா?

பொறுப்பான ஈடுபாடு மட்டுமே வெற்றியை அளிக்கும்; காரியம் சித்தியடைய உதவும் என்று நம்பினால் தப்பு.

ஏன் அப்படி?

சோதனை என்பதைப் பற்றி ஒருமுறை பார்த்தோம். சோதனைகள் வாழ்க்கையின் அங்கம். இப்புவியானது நீரால், ஆக்ஸிஜனால் மட்டும் நிரம்பியிருக்கவில்லை. பிரச்சினைகளும் சோதனைகளும் அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் வியாபித்து நிறைந்திருப்பதே இப்புவி. அவற்றையெல்லாம் எதிர்கொள்ள வேண்டும்; கடக்க வேண்டும்.

மூச்சிரைக்க ஓடி எப்படியாவது வெற்றிக் கோட்டை நோக்கி மூக்கை நீட்டிவிட commitment எனப்படும் பொறுப்பான ஈடுபாடு இன்றியமையாதது. அப்படி இல்லையெனில் ‘ஆளை விடப்பா’ என்று தப்பித்து ஓடிவிடவே மனம் விரும்பும்.

எப்படியும் உடல் எடையைக் குறைத்தே தீருவது என்று முடிவெடுத்து ஈடுபாட்டுடன் உணவுக் கட்டுப்பாட்டுத் திட்டத்தில் இருந்து கொண்டிருப்பீர்கள். “இன்னுமா டயட் முடியலை. இந்த ஒருமுறை மட்டும் சாப்பிடு; ஒன்றும் ஆகிவிடாது” என்று நண்பரொருவர் உங்களது நாசியருகே அசல் நெய்யில் செய்த பால்கோவாவைக் கொண்டுவந்து நீட்டுவார். மகா சோதனையான அந்தச் சில நிமிடங்களை நாக்கை, நாசியை, விரலை கண்ணை மூடிக்கொண்டு கடந்து விட்டீர்கள் என்றால் போதும். ஆனால் எப்போதும் வாழ்க்கையில் சோதனைகளும் பிரச்சினைகளும் இந்தளவு எளிமையாய் அமைவதில்லை.

கொசுறாய் ஒரு நல்லது நடக்கும். யதார்த்தத்தில் மக்களிடம் ஒரு குணம் உண்டு. மெச்சத் தகுந்ததை மெச்சுவது.

கடும் மனப் போரட்டத்திற்குப் பின் பால்கோவாவை நிராகரித்தீர்களில்லையா, அதைக் கண்டு அந்த நண்பர் உங்கள் மனவுறுதியை மெச்சத் தயங்கப் போவதில்லை. அதற்கு நேர்மாறாய் அவர் நடந்து கொண்டால் அவரது நட்பை நீங்கள் மறுபரிசீலனை செய்யவேண்டியிருக்கும் என்பது வேறு விஷயம்.

மனைவி தன் கணவனை நேரெதிரில் என்ன வேண்டுமானாலும் பேசியிருக்கலாம். “சமைச்சு எல்லாம் தயாராத்தானே இருக்கு, எடுத்து வெச்சு சாப்பிடக்கூடவா தெரியாது.” ஆனால் நீங்கள் நினைத்தே பார்த்திருக்க மாட்டீர்கள்; உங்களது முதுகுக்குப் பின் “என்ன லேட்டானாலும் சரி; நான் பரிமாறாமல் அவர் சாப்பிட்டதே இலலை. அவருக்கு எல்லாமே நான் செஞ்சாத்தான் நடக்கும்.”

கூடுதல் குறைவு இருக்கலாம். மக்கள் மெச்சத் தகுந்ததை மெச்சவே செய்வார்கள்.

அடுத்து -

பொறுப்பாய் ஈடுபாட்டுடன் செயல்படுவேன் என்பதற்கு அர்த்தம் அனைத்துப் பணிகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதோ, யார் எது கேட்டாலும் முடியாது என்று வாக்களிப்பதோ அன்று. அதெல்லாம் சில நாள், சில மாதம், அதிகம் போனால் ஓரிரு ஆண்டுகள் தாங்கும். அதன்பிறகு மனமும் உடலும் சோர்ந்து உங்களது காரியங்களை செய்து கொள்வதற்கே மனம் சுரத்தற்றுப் போகும்.

என்னென்ன காரியங்களில் பங்கெடுக்க முடியும், என்ன செயல்களெல்லாம் உங்களுக்குச் சாத்தியம் என்று தேர்ந்தேடுத்து என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைத் திட்டமிட்டு அவற்றிற்கான பொறுப்பை மேற்கொள்வதே சிறந்தது. இல்லையெனில் மிஞ்சுவது தலைவலி மட்டுமே.

எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுமுன் தீர யோசியுங்கள். அதைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் பொறுப்பேற்றுக் கொண்டு முழு மனதுடன் ஈடுபட்டு நிறைவேற்றுங்கள்.

தினமும் பள்ளிக்கூடம் சென்றால்தான் கல்லூரி, பட்டம் என்று வெளியேற முடியும். மழைக்கு மட்டுமே ஒதுங்கினால்
மட்டுமே ஜலதோஷத்திலிருந்து தப்பலாம்.

னம் மகிழ, தொடருவோம்...

Thanks to : www.inneram.com

செவ்வாய், 22 மார்ச், 2011

மனம் மகிழுங்கள் -35- இடரார்ந்த வாழ்க்கை!

முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோமே...... குழந்தைகள் எந்தவொரு செயலுக்கும் எதைப்பற்றியும் யோசிப்பதில்லை; தோன்றிவிட்டதா, செய்து முடிக்க வேண்டும். கட்டிலிலிருந்து குதிப்பது, படிக்கட்டுக் கைப்பிடிச் சுவரில் வழுக்கிக் கொண்டே வருவது, மரத்திலுள்ள மாங்காய் மீது கல்லெறிகிறேன் என்று யார் மண்டையையாவது உடைப்பது, எத்தனைமுறை அதட்டியிருந்தாலும் திருட்டுத்தனமாய்ச் செங்கல் தூள் உண்பது - இன்னதுதானென்று வரையறுத்துச் சொல்ல முடியாத செயல்கள்.

என் நண்பர் ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்டமுறை செல்ஃபோனை மாற்றியதாக நினைவு. என்ன என்று கேட்டதற்கு, "என் மகன் டாய்லெட்டில் ஃபோனை போட்டுவிடுகிறான்" என்றார் சிரித்துக் கொண்டே. அவர் மகனுக்கு ஃபோனை ஃப்ளஷ் செய்து பார்ப்பது பிடித்தமான விளையாட்டு போலிருக்கிறது.

பிள்ளைகளின் செயலின் தன்மைக்கேற்ப வால்தனம்; லூட்டி; ரௌடித்தனம் என்று பெரியவர்கள் நாம் வகைப்படுத்திக் கொள்கிறோம் பக்கத்துவீட்டுப் பிள்ளையென்றால் ரௌடித்தனம், நம் பிள்ளையென்றால் வால்தனம் என்பது நம் சண்டித்தனம். அது வேறு விஷயம்.

வாழ்க்கையில் நம் குறிக்கோளை எட்டுவதற்கு இடர்களைக் கடக்க வேண்டியது தவிர்க்க முடியாதது. இடரற்ற வாழ்க்கை என்பதே இல்லை. இந்த இடர்களோ எப்பொழுதுமே நம் மன மகிழ்வைக் குறிவைப்பவை. இனிமையான இடர் என்று ஏதாவது உள்ளதா என்ன? "அப்பாடா! இன்றைக்கு லாரி ஸ்ட்ரைக்! சரக்கு அனுப்ப வேண்டிய தொல்லையும் இல்லை; இன்று தொழில் நடத்தவேண்டிய ரோதனையும் இல்லை" என்று எந்த முதலாளி சிரிக்கப் போகிறார்?

எல்லாமே கஷ்டம், அசௌகரியம், உளைச்சல், அலைச்சல இத்தியாதி. "நான் எந்தவொரு இடரையும் ஏற்க முடியாது. நான் நினைத்தது அப்படியே நடக்க வேண்டும்" என்று யாராவது நினைத்தால் என்னவாகும்? ஒன்றும் ஆகாது. அவர் நினைத்த குறிக்கோள் ‘வேலைக்காவாது’. இப்புவியின் விதியானது ‘இடருக்குப் பிறகே வெகுமதி’.

குழந்தைகள் ஒரு செயல் புரிய அதுசார்ந்த இடர், துன்பம், அபாயம் எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை. குழந்தைகளாய் இருக்கும்போது நினைத்ததை அடைய எந்தவித இடரையும் யோசிக்காமல் கொள்ளாமல் எதிர்கொள்ளும். நாம் வளர வளர மாறிப்போகிறோம். இடித்துக் கொள்வோம், விழுந்து விடுவோம் என்றெல்லாம் தயங்காமல் தட்டுத் தடுமாறி நடை பழகிக்கொள்ளவில்லை? ஆனால் பெரியவர்களாக ஆனதும் அடுத்த அடி எடுத்துவைக்க யோசிக்கிறோம். எச்சரிக்கையும் பாதுகாப்புணர்வும் மிகவும் மேலோங்கிவிடுகிறது. கையில் ரிமோட்டைத் தூக்கி வைத்துக் கொண்டு சானல் மாற்றிச் சானல் பார்த்து ரசித்துவிட்டு நமது வாழ்க்கை அப்படியே எழுதிவைத்த திரைக்காட்சி போல் ஒரே சீராய் ஓடவேண்டும் என்று விரும்புகிறோம்.

இங்கு இடர்கள் என்றால் என்ன என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். வலியச் சென்று துன்பத்தை விலைக்கு வாங்குவதன்று இடர். வயதிற்கேற்ற பக்குவமும் எச்சரிக்கையும் இயற்கை. அனாவசியங்களை விட்டு, துர்ச்செயல்களை விட்டு, ஆபத்தான காரியங்களை விட்டு ஒதுங்கப் பாதுகாப்புணர்வு அவசியம், முக்கியம்.

"என்ன பெரிய இடர், ஆபத்து! ஒருகை பார்க்கிறேன்" என்று வாகனங்கள் பறக்கும் சாலையின் நட்டநடுவே சென்று நின்றுகொண்டால் என்னாவது? உயிர் பாக்கியிருந்தால் உடம்பில் கையோ காலோ மீந்திருக்கிறதா என்று பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.

கட்டடத்தில் தீப்பற்றிக் கொள்கிறது; தீ கடுமையாய்ப் பரவிக் கிடக்க வாசல் வழியாக வெளியேற வாய்ப்பில்லை; அப்பொழுது இரண்டாவது மாடியில் இருப்பவர் என்ன செய்வார்? கைகால் உடைந்துவிடும் என்றெல்லாம் தயங்கப் போவதில்லை. கண்ணை மூடிக்கொண்டு குதித்து விடுவார். இங்கு உயிர் முக்கியம். எனவே ஆபத்தைக் கடக்க உள்ள ஒரு வாய்ப்பைப் பயன்படுத்தியே ஆகவேண்டும். அதற்காக லிஃப்ட் இயங்கவில்லை என்பதற்காக மாடியிலிருந்து குதித்தால்?

சில சாதனைகளுக்காக, குறிக்கோளுக்காக, முன்னேற்றத்திற்காக மேற்கொள்ள வேண்டிய செயல்களுக்கு இடர்கள் ஏற்படுமே என்று பயந்து, சுணங்கிப் போகாமல், செயலற்றவராய் இல்லாமல் செய்ய வேண்டிய செயல்களை, செய்து முடிக்க வேண்டும். முழுக்க முழுக்கப் பாதுகாப்பும் அபாயமற்ற நிலையும் கவலையற்ற வாழ்வும் என்பதெல்லாம் எவரொருவருக்கும் இவ்வுலகில் அமைந்திருக்கவில்லை என்பதை உணர்ந்து நாம் இடர்களை எதிர்கொள்ள வேண்டும்.

உழைப்புக்கேற்ற பலன். அதைப்போல் துன்பம் சுமந்து, இடர்களை எதிர்கொண்டு செயலாற்றி முடிக்கும்போது கிடைக்கிறதே நிறைவு அது பலன். மகிழ்வளிக்கும் பலன்.

லாபம் ஈட்ட வேண்டும் என்றுதான் தொழில் தொடங்குகிறோம். நட்டமும் ஏற்படலாம். அதற்காக நட்டம் ஏற்பட்டால் என்ன செய்வது என்று நான் தொழிலே செய்வதில்லை என்று ஒருவர் சொன்னால் என்ன நினைப்பீர்கள்?

தொழிலில் ஏற்படும் இடர்களை எதிர்கொண்டால் தானே லாபம். கட்டிலில் இழுத்துப் போர்த்திப் படுத்துக் கொண்டால் பணியாற்றும் ஊழியர்களா லாபம் ஈட்டி நம் காலடியில் வைத்துவிட்டுச் செல்வார்கள்?

வாழ்க்கையை இரண்டுவிதமாக வாழலாம். பிறந்து விட்டோம், வாழ்ந்து கிடப்போம் என்பது ஒருவகை. அடுத்தது ஓர் உன்னதக் குறிக்கோளுடன் உண்மையிலேயே வாழ்வது.

‘தேமே’ என்று வாழ்வதில் சுவையுமில்லை, மகிழ்வுமில்லை. அது அஃறிணை வாழ்க்கை.

பின்னதில் இடர் உண்டு; துன்பம் உண்டு; துயர் உண்டு.

தோல்வி அடைபவர்களைவிட, சாதனை புரிபவர்கள்தாம் அதிகம் இடர்களை எதிர்கொள்கிறார்கள். அதிகப்படியாய் இன்னல்களை எதிர்கொள்பவரால்தான் அதிகமான சாதனைகள் புரிய முடிகிறது.

ஒருவர் வரலாற்றில் இடம்பெறுவது அவர் புரிந்த சாதனையினால்தானே தவிர அவர் அதுவரை பட்ட துன்பத்தினால் அன்று. முந்தைய அத்தியாயத்தில் பார்த்தது போல், எடிசனை நாம் அறிந்து கொள்வது அவர் கண்டுபிடித்த லைட் பல்பிற்காகத்தானே தவிர அவர் ஆயிரம்முறை அடைந்த தோல்விகளினால் அல்ல.

மொத்தத்தில்,

தெருவைக் கடப்பதிலிருந்து, இல்வாழ்க்கை அமைத்துக் கொள்வதிலிருந்து, ஹோட்டலில் பூரி கிழங்கு உண்பதிலிருந்து - அனைத்திலும் இடருண்டு; ஆபத்துண்டு. அதையெல்லாம் எதிர்கொண்டு வாழ்ந்து நமது இலட்சியத்தையோ குறிக்கோளையோ அடைவதில்தான் சாதனை உள்ளது; மனதிற்கு நிறைவான மகிழ்வும் உள்ளது.

னம் மகிழ, தொடருவோம்...

Thanks to :inneram.com

வியாழன், 17 மார்ச், 2011

மனம் மகிழுங்கள்! - 34 - பாடங்களாகும் தவறுகள்!

இரண்டாம் உலகப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த நேரம். பரிசோதனைச் சாலையில் மும்முரமாய் சோதனையில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானியை அவருடைய ஜெர்மானிய ராணுவ அதிகாரிகள் ஒருநாள் கூப்பிட்டு அனுப்பினார்கள். அப்பொழுது அவர் ராக்கெட் தயாரிக்கும் முயற்சியில் இருந்தார். அவருக்கு ஏகப்பட்ட அவகாசம் கொடுத்திருந்தும் ராக்கெட் எதையும் அவர் கண்ணில் காட்டுவதாய் இல்லை. சட்புட்டென்று ஏதாவது கண்டுபிடித்துக் கொடுத்தால் லண்டன் நகரில் போட்டுத் தீபாவளி கொண்டாடலாம் என்று துடித்துக் கொண்டிருந்தார்கள் ஜெர்மானிய ராணுவத்தினர்.

"என்னய்யா ஆச்சு?" விசாரித்தார்கள்.

"இதுவரை 65,121 தவறுகள் செய்திருக்கிறேன்; கண்டுபிடித்துவிடுவேன்" என்றார்.

அந்தப் பதில் அவர்களுக்குச் சகிக்கவில்லை.

"நீ கண்டுபிடித்து முடிக்க இன்னும் எத்தனைத் தவறுகள் செய்ய வேண்டியிருக்கும்?"

"ம்ம்ம்... எப்படியும் மேற்கொண்டு ஓர் ஐயாயிரம் தவறுகள் நிகழலாம்."

அவர் ராக்கெட் விஞ்ஞானி வெர்னர் வான் ப்ரௌன் (Wernher von Braun). ஜெர்மனியைச் சேர்ந்தவர். பிறகு கூறினார், "65,000 தவறுகள் செய்தால்தான் ஒரு ராக்கெட் கண்டுபிடிக்கும் தகுதியே உருவாகிறது. இப்பொழுதுதான் அந்தத் தகுதி எனக்குக் கிடைத்துள்ளது. ரஷ்யா இதுவரை 30,000 தவறுகள் மட்டுமே செய்துள்ளது. அமெரிக்கா ஒரு தவறும செய்யவில்லை. தெரிந்து கொள்ளுங்கள்."

அன்றுவரை ராக்கெட் தொழில்நுட்பத்தில் ரஷ்யா பாதியளவு மட்டுமே முன்னேறியிருந்தது; அமெரிக்கா அத்துறையில் அப்பொழுது ஒன்றுமேயில்லை.

அவர் பேச்சு பொய்யாகவில்லை. இறுதியில் வெற்றிகரமாய் அவர் ஏவுகணையைக் கண்டுபிடித்துக் கொடுக்க அதை வைத்துக்கொண்டு ஜெர்மனி கெட்ட ஆட்டம் போட்டது. எதிரி நாடுகளைக் கதிகலங்க அடித்தனர்; ஒருவழியாய் உலகப் போர் முடிவுக்கு வர, பார்த்தார் வெர்னர்; ரஷ்யர்களிடம் மாட்டிக் கொண்டு வதைபடுவதைவிட அமெரிக்கா பரவாயில்லை என்று அமெரிக்கப் படையினரிடம் சரணடைந்தார். அவரைப் பத்திரமாகப் பொத்தித் தன் ஊருக்கு அழைத்து வந்த அமெரிக்கா அவரது அறிவுக்கு வேண்டிய தீனியைப் போடவே முதன்முதலில் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி வைக்க நாஸா உருவாக்கிய ராக்கெட்டிற்கு இவரது அறிவும் உழைப்பும் அடிப்படையாயின. பணம் தவிர ஏகப்பட்ட விருதெல்லாம் சம்பாதித்துக் கொண்டு 1977-ல் தமது 65ஆவது வயதில் இறந்து போனார் விஞ்ஞானி வெர்னர்.

எதற்கு இந்தக் கதை? அதில் அடிநாதமாய் நமக்குத் தகவல் பொதிந்துள்ளது.

"நாம் இழைக்கும் தவறுகள் நமக்கு ஆசான்."

நமது ஒவ்வொரு தவறும் நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுத் தராமல் விடுவதில்லை. "தோல்வி வெற்றியின் முதல் படி" என்பது அதனால்தான்.

தாமஸ் ஆல்வா எடிசன் கதையும் நமக்கெல்லாம் தெரியும். ஏகப்பட்ட முறை அவரது முயற்சி தோல்வி அடைந்து ஒருவழியாய் அவர் பல்ப் கண்டுபிடித்து முடித்ததும் "லைட் எரியும் பல்பை எப்படித் தயாரிக்கக்கூடாது என்பதை நான் ஆயிரக்கணக்கான வழிகளில் கற்றுக் கொண்டேன்" என அவர் கூறியது மிகப் பிரபலமானது.

வெற்றியாளர்கள் தவறிழைத்தால் கற்கிறார்கள். அடுத்தமுறை தவறு நிகழ்ந்தால் அடுத்த முறையும் கற்கிறார்கள். அதற்கு அடுத்த முறை தவறினால்? அப்பொழுதும் விடுவதில்லை, கற்கிறார்கள். இப்படி ஒவ்வொரு தவறிலும் விடாமல் கற்றுக் கொண்டே இருக்கிறார்களா, அதனால் வெற்றியடைகிறார்கள்.

தோல்வியாளர்கள் ஒவ்வொரு தவறையும் பெரிதாக எடுத்து அலட்டிக் கொண்டு மாய்ந்து போகிறார்கள். அத்தோல்வி அந்நிகழ்வில் உணர்த்தும் மறுபக்கத்தைக் காணத் தவறிவிடுகிறார்கள். தவறுகளைக் குற்றமாய்க் கருதிக் கூனிக் குறுகிப் போகிறார்கள்.

பார்க்கப்போனால் வெற்றியைவிடத் தோல்விகளே நாம் அதிகம் கற்றுக்கொள்ள உதவுகின்றன. தோல்வி ஏற்பட்டால் மட்டுமே ஒரு கண்ணுக்கு அழுதுவிட்டு, மூக்கைச் சிந்தித் துடைத்துவிட்டு, யோசிக்கிறோம்; சுய ஆராய்ச்சி செய்து கொள்கிறோம்; புதிய திட்டமொன்றைத் தீட்டி எடுத்துக்கொண்டு அடுத்த முயற்சிக்குப் புத்துணர்வுடன் எழுந்து நிற்கிறோம். வெற்றி என்றால், மகிழ்ச்சியில் கத்திவிட்டு, கொண்டாடிவிட்டு மறந்து விடுகிறோம்.

அதற்காக இந்தத் தர்க்கத்தைப் பள்ளி, கல்லூரிப் படிப்பில் உபயோகிக்காதீர்கள். ஆண்டுதோறும் தேறாமல் தவறிப்போய் ஒரே வகுப்பில ‘டேரா’ போட்டால் அது வேறு பிரச்சினை; வீட்டில் கிடைப்பது வேறு பட்டம்.

மனிதர்களாகிய நாம் தவறிழைக்கக் கூடியவர்களே என்பதை முதலில் உணர்ந்து கொள்வது நல்லது. நமது காரியம் தவறிப்போகும் போது தட்டி விட்டுக் கொண்டு எழுந்து தவறைத் தாண்டிச் சற்று எட்டிப் பார்க்கக் கற்றுக் கொள்ள வேண்டும். தவறுகளெல்லாம் உண்மையில் தவறுகளல்ல; பாடம் என்பது புரியும். அது என்ன கற்றுத் தருகிறது என்பதைப் புரிந்து கொண்டால் அடுத்த முறை அந்தத் தவறு நிகழாது. இறுதியில் காரியம் கைகூடும்.

தவறே செய்யாமல் வாழ வேண்டும் என்றால் முடியுமா? எக்காரியமும் செய்யாமல் நல்லதொரு திண்ணையாகப் பார்த்துத் ‘தேமே’ என்று உட்கார்ந்திருந்தால் மட்டுமே சாத்தியம்.

தோல்வியும் தவறுகளும் அவமானமல்ல! எதையும் முயன்று பார்க்காமல் அமைதியாக இருப்பதுதான் அவமானம்.

தவறுகளை அவமானம் எனக் கருதும்போது மனம் உடைந்து போகிறது. அப்படியல்லாமல் பாடம் கற்க முயன்றால்?

ஏற்படுவது சுறுசுறுப்பும் மகிழ்வும்.

Thanks to :www.inneram.com

புதன், 16 மார்ச், 2011

மனம் மகிழுங்கள்! - 33 - பிரச்சினைகளும் வரமே

"பொழுது விடிஞ்சு பொழுதுபோனா நாள்தோறும் ஏதாவது பிரச்சனை!"


இப்படி, அல்லது இதைப் போன்று ஒரு வசனம் - நமக்கெல்லாம் மிகவும் பரிச்சயம். தெருவில் வண்டி தள்ளி காய்கறி வியாபாரம் செய்பவரிலிருந்து மிகப் பெரும் தொழிலதிபர்வரை அவரவர் செல்வாக்கு, வசதிக்கேற்பப் பிரச்சினை, பிரச்சினை.

உலகில் யாருக்கு இல்லை பிரச்சினை?


"இதையெல்லாம் விட்டுத் தள்ளிட்டு எங்காவது கண்காணாத ஓர் ஊருக்கு ஓடிப்போய், அக்கடான்னு கிடக்கலாம்னு தோணுது" விரக்தியின் உச்சத்தில் இப்படியானதொரு சலிப்பும் சகஜமே.

என்ன செய்வது? பிரச்சினைதான்! பிக்கல் பிடுங்கல்தான்! தெளிவான வானம், அமைதியான கடல், தூய்மையான மணல் என்று உலகின் ஏதாவது மூலையில் அரவமற்றுக் கிடக்கும் கடற்கரையில் துண்டுவிரித்து, கண்ணில் கூலிங்க்ளாஸ் மாட்டிக் கொண்டு கண்மூடிப் படுத்துக்கொள்ள மனம் விம்மி விம்மி ஏங்கிக் கிடக்கிறது!

சரி, ஏதோ குருட்டாம் போக்கில் அப்படியொரு வாய்ப்பு அமைந்து கடற்கரை மணலில் ‘மக்க, மல்லாக்க’ப் படுத்துக் கொள்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். எத்தனை நாள் அல்லது வாரம் அல்லது மாதம் அப்படிக் கிடக்க முடியும்? யாரால் அப்படிச் சும்மாவே இருக்க முடியும்? எருமை மாடு? ம்ஹும்! அதுவும்கூட சிறிது நேரத்திற்குப்பின் எழுந்து ஆட்டோக்காரன் வசவையெல்லாம் சட்டை செய்யாமல் தெருவில் நடக்க ஆரம்பித்துவிடும். யோசித்துப் பாருங்கள். அவ்விதம் கால் நீட்டிப் படுத்துக்கொண்டு, எதுவுமே செய்யாமல் காலின் கட்டைவிரலையே மூன்றேகால் மாதம் பார்த்துக் கொண்டிருந்தபின் என்னவாகும்? போரடிக்கும். யாரையாவது கடித்துத் தின்றுவிடலாம் போலிருக்கும். ஏன் அப்படி?

மனிதன் அப்படித்தான். நம்முடைய வடிவமைப்பின் அம்சம் அது. நம் டிஎன்ஏ கூறுகளில் அது ப்ரோகிராம் செய்யப்பட்டுள்ளது. பிரச்சினையைத் தீர்ப்பது, புதுப் பிரச்சினையைத் தேடுவது, குழப்பிக் கொள்வது, அதைத் தீர்ப்பது, ஏதாவது கண்டுபிடிப்பது என்பது நம் ‘கூடப் பிறந்த குணம்’.


பிரசசினைகள் இந்தப் பிரபஞ்சத்தின் ஓர் அங்கம். அவை நம்மைத் தார்குச்சியால் குத்துவதைப்போல் குத்திக் குத்தி ஓட்டிக்கொண்டிருக்க, தினந்தோறும் நாம் ஏதாவது கற்றுக்கொண்டே இருக்கிறோம். இல்லையென்றால் இதுவரை மனிதன் கண்டுபிடித்தவை என்பதை ஒரு கைவிரல்களுக்குள் அடக்கிவிடலாம்.

விரல்கள் என்றதும் மனிதன் கண்டுபிடித்த முதலாவது சமையல்கலை கதையொன்று நினைவுக்கு வருகிறது.

ஆதிமனிதன் காடுகளில் கிடைக்கும் பழங்களையும் கிழங்குகளையும், அதற்குத் தொட்டுக் கொள்ள எலி, முயல் போன்ற சிறு பிராணிகளையும் பச்சையாகவே உண்டு காலம் தள்ளியிருக்கிறான்.

ஒருநாள் காட்டில் தீப்பிடித்துக் கொண்டு மரங்கள் நன்றாக கொழுந்துவிட்டு எரிந்திருக்கின்றன. அதில் சில மிருகங்கள் ‘சுட்ட கறி’யாகிவிட்டன. சூடு ஆறாத ஒரு மிருகத்தில் போய் நம்ம ஆதிகால உறவினர் கையை வைக்க, மிருக மாமிசம் கையில் பச்சக்கென்று ஒட்டியிருக்கிறது. சூடு தாங்காமல் ‘ஆ’ என்று கத்தி கைவிரல்களை வாயில் வைக்க ...

கையை எடுத்துவிட்டு ‘ஆகா!’ என்று கத்தியிருக்கிறான். முன்னர் உண்டது போலன்றி இப்பொழுது மாமிசம் தனி ருசி. தீயில் வெந்த ஒரு கிழங்கை எடுத்துக் கடித்துப் பார்க்க ... ‘அடடே! இது புது ருசி!’

இப்படியாக விரல்களின் சூட்டுக்கான பிரச்சினையில் மாமிசங்களையும் கிழங்குகளையும் "சுட்டுத் தின்னும்" சமையல் கலை பிறந்ததென்கிறது ஒரு கதை.

முதலில் தெரியாமல் தவறுகள் செய்வோம்; பிறகு தெரிந்து செய்வோம். பிறகு நமக்கே அலுத்துப்போய்ப் பாடங்களைக் கற்றுக் கொண்டு, கொஞ்சமாய்த் திருந்தி "அடுத்தது என்ன?" என்று தேடுவோம். விரும்பியோ விரும்பாமலோ அனுபவஸ்தனாகி விடுவோம்.

கல்லாகவோ, மரமாகவோ, எருமை மாடாகவோ இருந்தால் பிரச்சினையே இல்லாதிருக்கலாம். ஆனால் யாருக்கு எருமை மாடாக மாற ஆசையிருக்கும்?

தோசைக்கல், மசாலா தோசை சமைத்துத் தராது, வேண்டுமானால் அந்தக் கல்லில் நாம் கல்தோசை சுடலாம்!

மரம் மந்திரியாகாது, லஞ்சம் வாங்காது.

மனிதன் இப்புவியில் வாழவும் முன்னேறவும் அவனுக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டாய இணைப்பு - பிரச்சினை!

அன்பு, பாசம், காதல், மகிழ்வு, சோகம், நடப்பது, காலில் விழுவது, அப்படியே காலை வாருவது போன்ற நம் இயற்கைத் தன்மைகளுடன் பிரச்சினையும் நம் தன்மை. அதாவது, பிரச்சினைகள் மனிதனுக்கு வரம். நம்ப முடியவில்லையா?

கண்ணை மூடிக்கொள்ளுங்கள்; நன்றாக மூச்சை உள்ளிழுத்து நிறுத்தி வெளியிடுங்கள். ஆச்சா? இப்பொழுது கண்ணைத் திறந்து சுற்றுமுற்றும் பாருங்கள். ‘எப்பவுமே லேட்டாய் வந்து தொலையும் பஸ்ஸில்’ ஆரம்பித்து எத்தனைக் கண்டுபிடிப்புகள்? கால் செருப்பில் ஆரம்பித்து, கட்டைவிரல்ரேகை தேய எஸ்எம்எஸ் அனுப்பும் உபகரணம் என்று எத்தனை எத்தனை? எல்லாமே ஏதோ ஒருவனின் பிரச்சினைக்குத் தீர்வாய் முளைத்தவை. அது நல்லதா கெட்டதா, உபயோகமா இல்லையா என்பது இக்கட்டுரையின் பிரச்சினையில்லை. பிரச்சனை! அதை மனிதன் எதிர்கொண்டது; அதற்கொரு நிவாரணம் கண்டுபிடித்தது - அதுதான் இங்குப் பேச்சு.

ஒவ்வொரு பிரச்சினையும் நாம் புதிதாய் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள வைக்கும் ஆசான். நமக்கு அவை சவால்களைச் சமர்ப்பிக்கின்றன. நாம் சமாளிக்கிறோம், கற்கிறோம்; கண்டுபிடிக்கிறோம்.

குழந்தையாய் இருக்கும்போதே இது ஆரம்பித்துவிடுகிறது. எதையாவது பிடித்து இழுப்பது, கடிப்பது, ஆசையாய்த் தூக்கி நம்மைச் செல்லம் கொஞ்சும் மாமா மடியில் ‘உச்சா’ போய்விட்டுச் சிரிப்பது, என்று ஏதாவது சவால் வேண்டும். குழந்தையொன்று அப்படி எதுவுமே செய்யாமல் சப்பாத்திக்குப் பிசைந்து வைத்த மாவைப்போல் அமைதியாய் குந்தியிருந்தால் நிச்சயம் பெற்றோர் ஏகப்பட்ட கவலையுடன் அக்குழந்தையை தூக்கிக் கொண்டு டாக்டரிடம் ஓடுவார்கள்.

சற்று வளர்ந்துவிட்டால், ஆட்டம், ஓட்டம், மரத்திலிருந்து தலை கீழாகத் தொங்குவது என்று வால்தனம். திட்டும் வசவும் விழும் அடியும் - அதையெல்லாம் ஒரு பொருட்டாய்க் கருதாது துடைத்தெறிந்துவிட்டு மறுநாள் மீண்டும் அதே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்!

இப்படி நம்முடைய பால்யப் பருவத்தில் பற்பல சவால்களுடன் வளரும் நாம், பெரியவர்களானதும் பிரச்சினைகளை அதே வீரியத்துடன் எதிர்கொள்ளத் திணருகிறோம்; சில சமயம் பேனையே பெரியவண்டைப்போல் நாமே ஊதிப் பெரிதாக்கி, அதை நினைத்து நம்மையறியாமல் அஞ்சுகிறோம்.

ஆனால் நம் குழந்தைகளிடம் என்ன எதிர்பார்க்கிறோம்?

ஐந்து வயதே நிரம்பிய நம் குழந்தையை டாக்டராக்கிவிட வேண்டும், என்ஜினீயராக்கிவிட வேண்டும் என்று தலையணை அளவு தடிமனான புத்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டு பாடம் சொல்லித் தருகிறோம்! 18 x 18 எவ்வளவு சொல்லு பார்ப்போம் என்று அதட்டல் வேறு. தம் பிள்ளைக்கு ஃபர்ஸ்ட் ராங்க் தவிர வேறு எதுவும சரிவராது என்று 45 மாணவர்கள் உள்ள அந்த வகுப்பின் அத்தனைப் பெற்றோருக்கும் பேராசை.

எப்படி சாத்தியம்?

இப்படி நம் பிள்ளை ஒரு சாதனையாளன்/சாதனைச்செல்வி ஆகியே தீர வேண்டும் என்று அந்தப் பிள்ளையின் சக்திக்கு மீறிய பிரச்சினைகளைப் புகுத்தும் நாம், காபி மிஷினின் பட்டனைத் தட்டினால் கப்பில் கொட்டும் காப்பிபோல் வலிக்காமல் கொள்ளாமல் நம் வாழ்க்கையானது நகர வேண்டும் என்று விரும்புகிறோம்.

பிரச்சினையானது குடும்பத்தில் இருக்கலாம், அலுவலகத்தில் இருக்கலாம். சக ஊழியரிடம், அண்டை வீட்டுக்காரனிடம் இருக்கலாம். பொருளாதாரம், உடல் நலம், டூட்டி முடித்து இரவில் வீடு திரும்பும்போது அழிச்சாட்டியமாய்த் துரத்தும் தெரு நாய் என்று விதவிதமாய், கலர் கலராய் இருக்கலாம். அதையெல்லாம் எப்படி நாம் உள்வாங்கி எதிர்கொள்கிறோம் என்பது நம் அனுபவத்தை நிர்ணயிக்கிறது. அது நம் பக்குவத்தை வளர்க்கிறது.

பக்குவப்பட்டுவிட்ட மனம் மகிழ்வைத் தொலைக்காது!

Thanks to : www.inneram.com

செவ்வாய், 15 மார்ச், 2011

மனம் மகிழுங்கள்-32 - குறையெல்லாம் குறையல்ல

- நூருத்தீன்

கி.மு. நான்காம் நூற்றாண்டில் பண்டைய கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகரில் டெமாஸ்தெனஸ் (Demosthenes) என்றொரு அரசியல்வாதி இருந்தார். அலெக்ஸாண்டரின் ஆளுமைக்கு எதிராகப் புரட்சியெல்லாம் முயன்று பார்த்தவர். இவரிடம் திறமை ஒன்று இருந்தது - ஆளை அசத்தும் பேச்சு.

சரி, அதற்கு என்ன இப்போ?

அவர் சிறுவனாய் இருந்தபோது அவரிடம் ஒரு குறை இருந்தது. திக்கித் திக்கித்தான் பேசுவார். வாக்கியங்களைத் தடையின்றி முழுமையாய்ப் பேச அவரால் முடியாது. அந்தக் காலத்தில் எந்த ENT ஸ்பெஷலிஸ்ட்டைப் போய்ப் பார்ப்பது? எனவே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. வாயில் சிறு, சிறு கூழாங்கற்களை அடைத்துக் கொண்டு கிரேக்க மொழியில் ‘அணில், ஆடு, இலை’ என்று பேசிப் பழக ஆரம்பித்தார் டெமாஸ்தெனஸ். அசரவில்லை; சோர்ந்து போகவில்லை; தினந்தோறும் கடுமையான பயிற்சி. சாப்பிடும்போது மட்டும் கல் நீக்கிச் சோறு சாப்பிடுவாரோ என்னவோ, விடாத பயிற்சி. முடிவு? வாய்மேல் பலன் கிடைத்தது. இவர் ஒரு மிகச் சிறந்த சொற்பொழிவாளராக, பேச்சாளராக மாறிப்போனார். இன்றும் வரலாற்றுப் புத்தகங்களில் அந்தச் சிறப்புத் தகுதியுடனேயே குறித்து வைக்கப்பட்டுள்ளார்.

நம் எல்லோரிடமும் குறையுண்டு. அது உடல் குறையாக இருக்கலாம். மனதில் இருக்கலாம்; செயலில் இருக்கலாம்; சிந்தனையில் இருக்கலாம். ஏதோ ஒன்று, ஒன்றுக்கு மேற்பட்டு என்பது மட்டும் நிச்சயம். ஆனால் அந்தக் குறை நம் இலட்சியத்தை, குறிக்கோளை, மன மகிழ்வை எவ்விதத்திலும் தடுத்துவிடக் கூடாது; அப்படித் தடுப்பதுதான் உண்மையான குறை.

இறைச் சக்திக்கு அப்பாற்பட்டு, நம்முடைய இலக்கை நாம் அடைந்துவிடாமல் தடுக்கக்கூடிய ஒன்று இருக்குமெனில் அது ‘என்னால் முடியாது’ என்ற நம் எண்ணம் மட்டுமே! அதனால்தான் ‘என்னால் முடியும் தம்பி’ என்று நம்பிக்கையுடன் செயலாற்றுபவர்களெல்லாம் சாதிக்கிறார்கள். ‘என்னத்த செஞ்சு, என்னத்த சாதிச்சு’ என்று அலுத்துக் கொள்பவர்கள் மட்டும் ‘என்னத்த கண்ணய்யா’ ஆகிவிட வேண்டியதுதான்.

‘நான் தேர்வில் ஃபெயிலாகவே போகிறேன், நம்பிக்கையே இல்லை’ என்று ஒரு மாணவன் நினைத்தால் அவனது மனது அவனை வெற்றிக்குத் தயாராக்கப் போவதில்லை. பசை தடவி ஒட்டிய போஸ்டராக அவனது மனமெங்கும் அவநம்பிக்கை மட்டுமே பரவி ஒட்டிக்கொள்ளும். படிக்க, கற்றுக்கொள்ள என்று எந்த முயற்சியும் எடுக்கவிடாமல் அவனைச் சோர்ந்து போகச் செய்து, அவனது தீர்க்கதரிசனம் மெய்ப்படச் செய்யும்.

‘எனக்குத்தான் அப்பவே தெரியுமே’ என்று மதிப்பெண் பட்டியலைப் பார்த்து மனம் கெக்கலிக்கும்.

அதே மற்றொருவர், ‘எனக்கு என் இலட்சியம் முக்கியம். நிச்சயம் அதில் எனக்கு வெற்றி கிடைக்கும்’ என்று திடமாக நம்பிவிட்டால் அதற்காக அவரை அவரது மனது தயாராக்கிவிடும். ‘என்ன செய்யவேண்டுமானாலும் சரியே. நீண்ட நேரம் உழைக்கணுமா, கண் விழிக்கணுமா, எல்லாத்துக்கும் தயார்’ என்று கைமுறுக்கி, தொடை தட்டி நிற்பார்; சாதிப்பார்!

இவை இரண்டிலும் அதற்குரிய பலாபலன் ஒன்று உண்டு. என்ன அது?

‘நான் அம்பேல்’ என்று நினைப்பவருக்குத் தற்காலிக சுகமும் சௌகரியமும் ஏற்பட்டுவிடுகிறது. எவ்விதப் பொறுப்பையும் அவர் சுமக்கத் தேவையில்லை; ‘என்னால் முடியல இதைக் கொஞ்சம் செய்து கொடேன்’ என்று பிறரிடம் உதவி பெற்றுக்கொள்ள முடிகிறது; வெற்றிக்குத் தேவையான சுய ஒழுக்கம், கட்டுப்பாடு, முறைப்படுத்தப்பட்ட செயல்கள் என்று எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் இஷ்டத்திற்குத் திரிய முடிகிறது. சில சமயம் ‘ஐயோ பாவம்’ என்று பிறரிடம் அனுதாபமும் பெற்றுக்கொள்ள முடிகிறது.

இரண்டாமவர் இறுதியில் வெற்றியடைந்திருந்தாலும் அதற்காக அவர் செலவிட்டதும் தாங்கியதும் நிறைய. உழைப்பு, நேரம், பொறுப்புச் சுமை, சங்கடங்கள், தடங்கல்கள் இத்தியாதி.

ஆனால் முடிவில் யார் அதிக மன மகிழ்வுடன் இருப்பார்? அது ஊரறிந்த ரகசியம்.

நமக்கு எந்தக் குறையிருந்தாலும பிரச்சனையில்லை. ஆனால் நமக்கு நாமே எழுதிக் கழுத்தில் மாட்டிக்கொள்கிறோமே ‘நம்மாலாகாத் தன்மை’ என்ற அடையாள அட்டை – அதுதான் குறை! உண்மையிலேயே பெருங்குறை! அதன் விளைவு நம்மையே சாரும். நம் கழுத்தில் நாம் மாட்டிக்கொள்ளும் அந்த விலங்கைக் கழட்டித் தூரக் கடாசிவிட்டால் போதும். மகிழ்வான வாழ்விற்கு அதுவே நாம் செய்யும் மிகப் பெரும் உபகாரம். அதன்பிறகு நம்முடைய ஊனமோ, பலவீனமோ, எந்தக் குறையும் பெரிதாகத் தெரியாது.

இதற்கு வரலாறு நிறைய உதாரணங்களை நம் மேசையின்மேல் தூக்கி எறிகிறது. அதிலொன்றுதான் நாம் மேலே பார்த்த டெமாஸ்தெனஸ். கி.மு. நான்காம் நூற்றாண்டாவது ரொம்ப தூரம். சற்று நெருக்கத்தில் கி.பி. பத்தொன்பதாம் நூற்றாண்டிற்கு வருவோம்.

அமெரிக்காவில் ஒரு மனிதர் இருந்தார். ஏதாவது வியாபாரம் செய்து பிழைப்போம் என்று தம்முடைய 22ஆவது வயதில் தொழிலொன்றைத் தொடங்கினார் அவர். தோல்வியில் முடிந்தது.

வியாபாரம் சரிவரவில்லை, போகட்டும். சட்டமன்றத்திற்குப் போய் நாட்டிற்காவது உதவலாம் என்று தேர்தலில் போட்டியிட்டார்; அதிலும் தோல்வி. அது அவருடைய 23ஆவது வயது.

வயிறு பசித்தது. மீண்டும் தொழில் செய்துபார்ப்போம் என்று வியாபாரம் ஆரம்பித்தார். ம்ஹும்! மீண்டும் போண்டி. வயது 25.

அதற்கு அடுத்த ஆண்டு மனைவி இறந்து போனார். 27ஆவது வயதில் அவருக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டது. மீண்டும் அரசியலுக்குப் போவது என்று முடிவெடுத்து மூன்று முறை முயன்று மூன்று முறையும் தோற்றார். அதெல்லாம் 34, 37, 39 வயதுகளில்.

46ஆவது வயதில் மீண்டும் தோல்வி. 47 ஆவது வயதில் துணை ஜனாதிபதியாகலாம் என்று முயற்சி செய்தால் அதுவும் தோல்வி. 49ஆவது வயதில் மற்றொரு தோல்வி.

படிக்கும் நமக்கே மூச்சு வாங்கலாம். மனிதர் அசருவதாய் இல்லை. இறுதியில் அவரது 52ஆவது வயதில், “கூப்பிட்டாயா?” என்று வெற்றி எட்டிப் பார்க்க அமெரிக்க ஜனாதிபதியானார் அவர். அதன்பிறகு வரலாற்றில் நிரந்தர இடம் பிடித்து தலைநகர் வாஷிங்டனில் பெரிய சிலையாக அமர்ந்து கொண்டார்.

ஆம்! அவர் ஆபிரஹாம் லிங்கன்!

மனதின் இலக்கை எட்ட நமது குறைகள் தடையே அல்ல.

தடையெல்லாம் “என்னால் முடியாது” எனும் எண்ணம் மட்டுமே. அதுதான் குறை.

அதை நீக்குங்கள். மனம் மகிழ்வை உணரும்.

Thanks to : www. innneream.com

திங்கள், 7 மார்ச், 2011

மனம் மகிழுங்கள் - ஏட்டில் எழுதி வை - 31

ட்டியல் அறியாதவர் யாரும் இருக்க முடியாது. மளிகைக் கடைப் பட்டியல், மருந்துப் பட்டியல், வாக்காளர் பட்டியல், மந்திரி சபைப் பட்டியல், என்று நாம் அனைவரும் எங்காவது ஏதாவது ஒருவிதத்தில் பட்டியல் தயாரிக்க, அல்லது அதில் இடம் பிடிக்க என்று முயல்வதால் அது நம் வாழ்க்கையோடு இணைந்த ஒன்று ஆகிவிட்டது. இந்தப் பட்டியலுக்கும் நாம் சென்ற இரு அத்தியாயங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோமே குறிக்கோள், அதற்கும் தொடர்பு உண்டு.

அது என்னவென்று பார்க்குமுன் -

நம் மனமானது எப்படி நாம் அதிகமதிகம் நினைத்துக் கொண்டிருக்கும் விஷயத்தை நோக்கியே "காந்தத்தைக் கண்ட இரும்பைப்போல்" நகர்கிறது என்பதை முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். அதன் அடிப்படையில் இங்கு நாம் அறிந்து கொள்ளவேண்டியது யாதெனில், நம் மனதில் தெளிவான நிச்சயமான குறிக்கோள் என ஒன்று இருந்தால், நம் மனமானது சதா நேரமும் அதையே நினைத்துக் கொண்டிருக்கும்; பிறகு அதை நோக்கி நகர்ந்து நாம் எளிதாய் நமது குறிக்கோளை எட்டிவிட உதவும்.

அதைப்போலவே குறிக்கோளென்று எதுவும் இல்லாவிட்டாலும் அப்பொழுதும் நமது சிந்தனையை ஆக்கிரமிக்கும் விஷயத்தை நோக்கியே நம் மனது நம்மை நகர்த்தும். ஏனெனில் நம் சிந்தையில் இருப்பது நல்லதொரு குறிக்கோளா அல்லது வெறும் அக்கப்போரா என்பதெல்லாம் நம் மனதிற்கு முக்கியமில்லை. ‘நீ நினைத்துக் கொண்டிருப்பது இதைத்தானே, வா போகலாம்’ என்று நம்மை இழுத்துச் சென்று விட்டுவிடும்.

எனவே வாழ்க்கையில் குறிக்கோள் நிர்ணயித்துக் கொள்வது மெத்த உத்தமம். இதை நினைவில் வைத்துக் கொள்வோம்.

சரி எங்கு ஆரம்பித்தோம்? ஹாங்... பட்டியல். அதைப் பார்ப்போம்.


மாதாந்திர மளிகை அல்லது ஊரிலிருந்து வந்திருக்கும் மனைவி வீட்டாருக்கு விருந்து சமைக்கக் காய்கறி என்று ஏதோ வாங்கக் கடைக்குக் கிளம்புகிறீர்கள். என்ன செய்வீர்கள்? நாலைந்து பொருள் என்றால் ஏதும் பெரும் பாதகமில்லை. மூன்று பொருளை வாங்கி முக்கியமான இரண்டை மறந்து வீட்டில் வந்து ‘வாங்கிக் கட்டிக்’ கொள்ளலாம். இது நிறைய ஐட்டம். எனவே உங்கள் மனைவி ஒரு லிஸ்ட் எழுதிக் கொடுத்திருப்பார். அவரவர் வசதிக்கு ஏற்ப அது சுண்டெலி வாலைப் போலவோ அல்லது ஆறு கெஜம் புடவை நீளத்திற்கோ இருக்கலாம்.

எதற்கு இந்த லிஸ்ட்?

‘கிளம்புகிற அவசரத்தில் சரியாய்க் கேட்டுக் கொள்ளவில்லையே! கத்திரிக்காய் கேட்டாளா? கேழ்வரகு மாவு கேட்டாளா?’ என்று தட்டுக்கெட்டுப் போய்ச் சொதப்பக் கூடாதில்லையா? இந்தச் சின்ன முன்னேற்பாடு நாம் கடைக்கு என்ன நோக்கத்தோடு செல்கிறோம்; என்ன வாங்கப் போகிறோம் என்று நம் குறிக்கோள் மாறாமல் செயல்பட உதவுகிறது. காரியம் சாதிக்க உதவுகிறது.

ஒரு நிறுவனம். அவர்களுக்குப் பற்பல திட்டங்கள், நோக்கங்கள். அதையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமானால் அதன் CEO அல்லது உயர் அதிகாரி குறைந்தபட்சம் என்ன செய்வார்?

அல்லது கல்யாணம், புதுமனை புகுவிழா என்று வீட்டில் ஏதோ ஒரு விசேஷம் என்று வையுங்கள். என்ன செய்வோம்?

பட்டியல்!

யார் யாரை அழைப்பது, என்னென்ன வாங்குவது, விருந்தில் என்னென்ன பரிமாறுவது என்று பட்டியல்!

அல்லது என்னென்ன செய்ய வேண்டும், யார் யார் என்னென்ன பங்கு வகிக்க வேண்டும் என்று அட்டவணை!

இப்படி நம்மையறியாமல் சில முக்கியச் செயல்களுக்கு நாம் பட்டியல் எழுதத்தான் செய்கிறோம். அதன் சௌகரியம் உணர்ந்திருக்கிறோம். ஆனால் அதை முக்கியமான ஒரு விஷயத்திற்கு நம்மில் பெரும்பாலானவர் சரிவரப் பிரயோகப்படுத்துவதில்லை.

என்ன அது?

வாழ்க்கை!

வாழ்க்கையில் முன்னேற வேண்டும், அதைச் செய்ய வேண்டும், இதைச் சாதிக்க வேண்டும் என்று குருட்டாம் போக்கில் பற்பல எண்ணங்களும் ஆசைகளும் இலட்சியங்களும் இருந்தாலும் அவையெல்லாம் ஏன் அனைவருக்கும் கைகூடுவதில்லை? அடிப்படைக் காரணம் வாழ்வின் குறிக்கோள்களை ஒழுங்குபடுத்திப் பட்டியலிட மறப்பதுதான்!

எனவே நோட்புக், டைரி, காலண்டர், பாத்ரூம் சுவர் என்று எங்காவது நம் குறிக்கோள்களைப் பட்டியலிட்டுக் கொள்வது பல் துலக்குவதற்கு அடுத்த நல்ல பழக்கம். அதைப்போல் அடுத்தகட்டமாய் அவற்றை அடைவதற்கான செயல்பாடுகள், முயற்சிகள், பணிகள் ஆகியனவற்றின் பட்டியல்.

இதன் பலனாய் நமது செயல்கள் சரியான முறையில் ஓர் ஒழுங்குடன் அமையும்; நாம் நினைத்ததைச் செய்து முடிக்க உதவும்.

கடைக்கும் விருந்துக்கும் விசேஷத்திற்கும் பட்டியல் உதவுவதைப் போலவே வாழ்க்கைக்கும் பட்டியல் அவசியம்.

குறிக்கோளை ஒரு வாகனம் போலவும் நினைத்துக் கொள்ளலாம். அது நாம் செல்ல வேண்டிய ஊருக்கு இட்டுச் செல்கிறது. செல்லும் பாதையெல்லாம் பாடம் கற்றுத் தருகிறது.

அம்பானியாக வேண்டும் என்றால்தான் குறிக்கோள் முக்கியம் என நினைக்கக் கூடாது. குறிக்கோளுடனான ஒரு வாழ்க்கை அமைந்தால்தான் அது நமக்கு அனுபவத்தையும் பக்குவத்தையும் கற்றுத் தருகிறது என்பதற்காகவாவது குறிக்கோள் வேண்டும்.

எனக்குத் தெரிந்த தம்பதியர். மனைவியுடன் ஷாப்பிங் செல்வதாக இருந்தால் கணவர் வெகு முனைப்புடன் ஒரு சின்னப் பட்டியல் தயார் செய்து விடுவார். மனைவியிடம், “இதோ ஷாப்பிங் லிஸ்ட். தேவையானதை வாங்கிக் கொண்டு நாம் டைம் வேஸ்ட் செய்யாமல் வந்துவிட வேண்டும்.”

மனைவியும் சமர்த்தாய்த் தலையாட்ட, கடைக்குச் செல்வார்கள். இறுதியில் வீட்டிற்குச் சுமந்து வரும் பைகளுக்கும் அநதப் பட்டியலுக்கும் சம்பந்தமே இருக்காது! திட்டமிட்டதைவிட நேரம், பணம் எல்லாம் அதிகம் செலவாகியிருக்கும்.

“என்னங்க இது? அப்ப எதற்கு ஒவ்வொரு முறையும் லிஸ்ட்?” என்றால் அவர் சிரித்துக் கொண்டே சொல்வார், “என் குறிக்கோள் என் இல்லாளை மனம் மகிழ வைப்பது. அது நடந்துவிட்டது.”


னம் மகிழ, தொடருவோம்...

திங்கள், 24 ஜனவரி, 2011

மனம் மகிழுங்கள் - 30 : பாதையெல்லாம் பாடம்


குறிக்கோள் நம்மை நகர்த்துகிறது என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். எனவே வாழ்க்கையில் நல்லதொரு குறிக்கோளை ஏற்படுத்திக் கொள்வது, மனதிற்கும் உடம்பிற்கும் நல்லது என்றும் அறிந்தோம். அப்படியொரு குறிக்கோளை அமைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் நாம் இயங்கும்போது நாம் எட்டுவது இலக்கை மட்டுமில்லை; இன்னபிறவற்றையும்தாம்!

அவை என்ன?

ஒரு குறிக்கோளுக்கான பாதையில் நாம் பயணிக்கும்போது வழிநெடுக நாம் என்னென்ன கற்றுக் கொண்டோம், எந்தளவு நம் மனது அதனூடே வளர்ந்தது, பக்குவப்பட்டது என்பது குறிக்கோளின் இலக்கைவிட முக்கியமான விஷயம் ஆகும்..

எப்படியென்று பார்ப்போம்.


ஒருவர் கல்லூரியில் சேர்ந்து மாங்கு மாங்கென்று படித்து உழைத்துப் பட்டம் வாங்கியதன் பின்னர் ‘நான் பாடுபட்டதெல்லாம் இந்த ஒரு காகிதத்திற்காகவா’ என்று டிகிரி சர்டிபிகேட்டைக் காட்டி அலுத்துக் கொண்டால் எங்கோ தப்பு. அல்லது ஏட்டில் படித்ததெல்லாம் அவருக்கு வெறும் சுரைக்காயாக ஆகிவிட்டிருந்தால், “அவர் படித்தார்; பயிலவில்லை”! பெயருக்குப் பின்னால் இணைத்துக் கொள்ளப்போகும் எழுத்துகளுக்காகவா டிகிரி என்ற குறிக்கோள்? இல்லையே!

பாடம் ஒருபுறமிருக்க அந்தக் கல்விப் பயணத்தில் என்னென்ன கற்றார், யாரையெல்லாம் சந்தித்தார், எவரையெல்லாம் நண்பராக்கிக் கொண்டார் எதிரியாக்கிக் கொண்டார், என்னென்ன இன்ப துன்பங்களை அனுபவித்தார், தம்மைத் தாமே என்ன அறிந்து கொண்டார் என்பனவெல்லாம் பாடத்தைவிட முக்கியமான அனுபவங்களல்லவா? அவைதானே வாழ்க்கைப் பக்குவத்திற்கு வித்திடுகின்றன? இவற்றையெல்லாம் பேராசிரியர்கள் போர்டில் எழுதிக் காண்பிப்பதில்லை; அவையெல்லாம் அனைவருக்கும் ஒன்றுபோல்அமைவதும் இல்லை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குறிக்கோள் இருக்கும் -

நான் சுயமாய்த் தொழில் தொடங்க வேண்டும்;

கன்னியாகுமரி முதல் கஷ்மீர் வரை நடைப் பயணம் மேற்கொள்ள வேண்டும்;

மிகப் பெரிய பங்களா கட்ட வேண்டும்;

இன்றைய ஸீரியலை கண்ணீர் சிந்தாமல் பார்த்துவிட வேண்டும்...

இப்படியாக ஏதோ ஒரு குறிக்கோளை ஏற்படுத்திக் கொண்டு அதை நீங்கள் சாதித்தும் முடித்துவிட்டீர்கள். இங்கு வெற்றி என்பது நீங்கள் துவங்கிய தொழிலோ, சென்றடைந்த கஷ்மீரோ, கட்டி முடித்த பங்களாவோ அல்ல. அந்த இலக்கை அடைய நீங்கள் சந்தித்த மனிதர்களும் அனுபவமும் நன்மையும் தீங்குகளும்தான் நீங்கள் அடைந்த வெற்றியில் முக்கியமானவை. அவைதாம் உங்கள் மனதின் உள்ளே இருக்கும் கண்களுக்கு ஒளி.

ஒருவர் ஒரு குறிக்கோளை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது துணிவைக் கற்றுக் கொண்டிருக்கலாம்; மன உறுதியைப் பெற்றிருக்கலாம்; மக்களிடம் இணக்கமாகவோ தூண்டியோ காரியமாற்றிக் கொள்ளும் திறனைப் புரிந்து அறிந்து கொண்டிருக்கலாம்; சுய ஒழுக்கம் மேம்பட்டிருக்கலாம்; விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கலாம்; அவரது தன்னம்பிக்கை அதிகமாகியிருக்கலாம்; அல்லது இல்லாளின் அதட்டல்களிலிருந்து தப்பிக்கும் உபாயம் புலப்பட்டிருக்கலாம்.

இப்படி ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டோ ‘லாம்’ உங்களை வந்தடைந்திருக்கும். சுருக்கமாய்ச் சொன்னால் நீங்கள் அடைந்தது என்ன என்பதைவிட உங்கள் மனதை அடைந்தது என்ன என்பதே முக்கியம்!

இவை இவ்வாறிருக்க,

குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளும்போது ஒன்றை முக்கியமாய்க் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அது இப்புவியின் விதி!

இங்கு விதியென்பது fate அல்ல rule!

“என்னது நீ அணு விஞ்ஞானி ஆகப் போகிறாயா? என்னவொரு குறிக்கோள், இலட்சியம்” என்று உங்கள் உற்றார், உறவினர், பால்காரர், உஙகளின் சிகை அலங்கார நிபுணர் என்று அனைவரும் உங்களுக்குச் சிகப்புக் கம்பளம் விரித்து இரு புறமும் வெள்ளையுடை மங்கையரை நிறுத்தி வைத்துப் பூத்தூவி வாழ்த்தப் போவதில்லை.

வாழ்க்கைப் பாதை கடினமானது. மேடு, பள்ளம் நிறைந்தது. இதை முதலில் உணர வேண்டும். அழுத்தந்திருத்தமாய் உணர வேண்டும்.

மரக் கன்று நட்டு அது மெதுமெதுவே வளர்ந்து மரமாவதைப் பார்த்திருக்கிறீர்களா? இன்றைய ‘ஃபாஸ்ட் ஃபுட்’ உலகில் யாருக்கு அதற்கு அவகாசம் இருக்கிறது? அல்லது மரம் வளர்க்கும் அளவிற்கு இடமொன்று இருந்தால் கூட, அதைப் ப்ரமோட்டார்கள் பிடுங்கி ஃப்ளாட் கட்டி விற்றுவிடுகிறார்கள். போகட்டும். செடியொன்று வளரும்போது சில இலைகள் பழுத்து உதிரும்; ஆனால் அதைவிடச் சிறிது அதிகமாய் இலைகள் துளிர்க்கும். இப்படிச் சில இலைகளை இழந்து, இழந்து, அதனிலும் அதிகமாய் இலைகளை ஈன்று, ஈன்று தான் செடியொன்று நெடிய மரமாகிறது.

சில, பல முறைகள் கீழே விழுந்து எழுந்தால்தானே சைக்கிள்ஓட்ட பேலன்ஸ் கிடைக்கிறது!

சில சுதந்தரங்களை இழந்தால்தானே நல்லறமாக இல்லறம் அமைகிறது!

இதை நாம் நன்றாக உணரவேண்டும். அதைவிட்டுவிட்டு, என் இலட்சியமும் குறிக்கோளும் உலக உன்னதம்; அதனால் எனக்கு அனைத்து விஷயங்களும் தங்குதடையின்றி நடைபெறவேண்டும்; அதற்கு இணக்காமாய் இல்லையெனில் புவியின் விதியை மாற்றுங்கள்; Break the Rules என்று யாரேனும் நினைத்தால்... ஸாரி! நாளைக் காலை உங்கள் ஊரிலும் சூரியன் கிழக்கேதான் உதிக்கும்!

மிகப்பெரிய தொந்திக்குச் சொந்தக்காரர் ஒருவர். ஒரு நாள் தம் செருப்பைத் தேடக் குனிய முடியாமல்போய், அதைப் பார்த்துப் பக்கத்து வீட்டுக்காரர் நமுட்டுச் சிரிப்பு சிரிக்க ரோஷம் பொத்துக் கொண்டு வந்ததால் முடிவே செய்துவிட்டார்… உடற் பயிற்சி!

அதை ஆரம்பித்து, சிறிது சிறிதாய்ப் பயிற்சி செய்து, ஆனால் கரைத்த கொழுப்பைவிட அதிகமாய் உண்டு, ஒரு மாதத்தில் பெரிய பலன் ஏதும் இல்லையென்றதும் அத்தீர்மானத்தைத் தூக்கிப் போட்டுவிட்டார். என்னாவது? மிச்ச வாழ்நாளும் அவர் தொந்தியைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டியதுதான்.

மற்றொருவருக்கு வேறு கவலை. பணம் என்று எதுவும் சேமிக்க முடியாமல் எப்பவும் செலவாகிக் கொண்டே இருக்கிறதே; இம்மாதத்திலிருந்து சிறிது சிறிதாய்ப் பணம் சேமித்து ஆண்டு இறுதியில் அதைக் கொண்டு உருப்படியாய் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம். ஆனால் ஒவ்வொரு மாதமும் ஏதாவது செலவு வந்து கொண்டேயிருக்க ‘நமக்கு இது சரிப்படாது’ என்று விட்டுவிட்டார்.

குறிக்கோளுக்கான தீர்மானமொன்றை ஏற்படுத்திக் கொண்டால் இடையில் ஏற்படும் தடங்கலைக் கண்டு சோர்ந்து போகாதீர்கள்; தீர்மானத்தைக் கைவிடாதீர்கள்.

சிலர் சாமான்யமாய் எதையும் விட்டுவிடுவதில்லை. குறிக்கோளை நோக்கி நகர்கையில் ஏற்படும் சிக்கல்களையெல்லாம் என்ன பிரச்சனை, எங்கே பிரச்சனை எனப் புரிந்து கொண்டு, அதற்கேற்பத் தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொள்கிறார்கள் அவர்கள். அடியெடுத்து வைக்கும்போது அங்கு சறுக்கினால் ‘இது தப்பு அல்லது என்னிடம் தப்பு’ என்று அடுத்து அடியெடுத்து வைக்கும்போது திருத்திக் கொள்கிறார்கள். தங்களைத் திருத்தி, தங்களது செயல்பாடுகளைத் திருத்தி, இப்படித் திருத்தி திருத்திக் குறிக்கோளின் இலக்கை வெற்றிகரமாய் எட்டிவிடுகிறார்கள்.

யார் அவர்கள்?

வெற்றியாளர்கள்!


னம் மகிழ, தொடருவோம்...


ஞாயிறு, 2 ஜனவரி, 2011

மனம் மகிழுங்கள்! - 29 - குறிக்கோள் கொள்


யாராலும் ‘சும்மா’ இருக்க முடியாது! அனைவருக்கும் ஒரு குறிக்கோள் உண்டு. நம்புவதற்குச் சிரமமாக இருக்கிறதோ?

ஆனால் அதுதான் உண்மை!

“அதெப்படி? தவமா தவமிருந்து பெத்து வெச்சுருக்கேனே நான் ஒன்ணு... என்னத்துக்காச்சும் உருப்படி உண்டா? வந்து பாருங்க. தூங்கறது.. எழுந்திருக்கிறது.. கொட்டிக்கிறது... இதத் தவிர ஏதாச்சும் செய்யுமா?”

அந்தக் கேள்வியிலேயே பதில் அடங்கியிருக்கிறது. தாயோ, தகப்பனோ, அவர்கள் புலம்போ புலம்பு என்று புலம்பும் அந்த மகனுக்கும் ஒரு குறிக்கோள் இருக்கிறது! அவன் தூங்கும்போதே மறுநாள் இரவு வருவதற்கு முன் ஏதாவது ஒரு நேரத்தில் எழுந்து கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே படுக்கச் செல்கிறான். எழும்போதே வந்து விழும் திட்டுக்களை எல்லாம் துடைத்தெறிந்துவிட்டு ஏதாவது கொட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒரு குறிக்கோள் வைத்திருக்கிறான்.


அப்படியென்றால் “தெண்டம்” என்று எவருமே கிடையாதா?

இங்கு நாம் அறிந்து கொள்ள வேண்டியது ‘குறிக்கோள்’, ‘திட்டமிடாத செயல்பாடு’ இரண்டிற்கும் உண்டான வித்தியாசத்தையே! மற்றபடி குறிக்கோள் நல்ல செயலுக்கா, கெட்ட செயலுக்கா என்பது வேறு விஷயம்.


குறிக்கோளே நம்மை நகர்த்துகிறது. போராளி இயக்கங்களைக் கவனித்திருக்கிறீர்களா? வாழ்வு அநிச்சயம் என்ற பொழுதிலும் ஆயுதமேந்திக் களத்தில் இறங்கி விட்டால் அவர்களின் நோக்கம் மட்டுமே அவர்களது கண் திரையில் அப்பிக் கொள்கிறது. சுமக்கும் இடையூறுகள், நேரும் இழப்புகள் எதுவும் அவர்களது சிந்தையைத் திருப்புவதில்லை.

அரசியல்வாதிகள்? அவர்களை விட்டுத் தள்ளுங்கள்; அவர்களுக்கு ஏகப்பட்ட குறிக்கோள்கள். சின்ன அளவில் பார்ப்போம். ஜேப்படித் திருடனுக்கும்கூட ‘நல்ல கூட்டமான பஸ்ஸாகப் பார்த்து ஏறி ஆட்டையப் போடணும்’ என்று ஒரு குறிக்கோள் அமைகிறது.

அரசு அலுவலர்களை மையமாகக் கொண்டு பல பரிகாசங்களும் நகைச்சுவைத் துணுக்குகளும் உண்டு. என்ன சொல்ல? அந்தளவு உன்னதம் அரசாங்க நிர்வாகமும் அதன் பணியாளர்களும்! ஆனால் விந்தையான புள்ளி விபரம் ஒன்று உண்டு. பணியிலிருந்து குறிப்பிட்ட வயதில் ஓய்வு பெற்றவுடன்தான் அவர்களில நிறையப் பேருக்கு மாரடைப்பு நோய் ஏற்படுகிறதாம். எப்படி?

வேலை புரிகிறார்களோ, இல்லையோ ஒரு குறிப்பிட்ட இயங்கு விசையில் தினசரி இயங்கிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு ஒரு முடிவுக் கோட்டைக் காட்டி உட்கார வைத்ததும் மனதில் ஓர் அதிர்வு ஏற்பட்டுத் திடீரென்று ஒரு நாள் நெஞ்சில் ‘அட்டாக்’! அல்லது இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லப்பட்டு, வாழ்க்கைக்கு “டாடா பைபை!”

காரணம், ‘அன்றாடச் செயல்பாடுகளில் வரையறுக்கப்பட்ட ஒரு குறிக்கோளுடன்’ வாழ்ந்து பழகி விடுகிறார்களா, ஓய்வு வந்துசேர்ந்ததும் வாழ்க்கையின் குறிக்கோளே முடிந்து போனதாய் நினைத்து திணறிப் போகிறார்கள்.

துறுதுறுவென்று ஏதாவது வேலை செய்பவர்களைக் கவனித்துப் பாருங்கள். அவர்களது குறிக்கோள் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும்; ஏதும் முடியாவிட்டால் பக்கத்துவீட்டு எலக்ட்ரிக் பில்லையாவது எடுத்துச் சென்று கட்டித் தரவேண்டும்.


அரசியல்வாதிகளை எடுத்துக் கொள்ளுங்கள், பலர் பழுத்த பழங்கள்! காரணம் அவர்களது மூளை எப்போதுமே சுறுசுறுப்பாய் இருப்பதுதான். ‘யாரைக் கவிழ்க்கலாம், ஆட்சியை எப்படிப் பிடிக்கலாம், பிடித்துவிட்ட நாற்காலியை எப்படித் தக்க வைக்கலாம்’ என எந்நேரமும் சிந்தனை; குறிக்கோள். அதனால் அவர்களது மூளை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதால் எண்பதுகள் தாண்டியும் அவர்களால் களத்தில் இயங்கிக் கொண்டே இருக்க முடிகிறது.
மனிதனுடைய இயல்பு குறிக்கோள். அது இல்லாமல் அவனால் வாழ இயலாது. அதாவது எந்தவிதக் குறிக்கோளும் இல்லாமல் ஓர் அஃறிணைப் பொருளைப் போல் மனிதனால் நெடுநாள் வாழ முடியாது. அந்தக் குறிக்கோள், அதன் வேகம் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருப்பவன் மெத்தனமாய் இருப்பவனைப் பார்த்து “தெண்டம்“ என்று திட்டுகிறான். ஆனால் மெத்தனமாய் இருப்பவனது பிரச்சனை குறிக்கோளின்மை இல்லை. பிரச்சனை அவனது செயல்பாடு அல்லது அவனது குறிக்கோளின் உன்னதமற்ற தன்மை! இங்கு வித்தியாசம் என்பது ப்ளைட்டில் பறக்கும் அம்பானிக்கும் மாட்டை ஆற்றிற்கு ஓட்டிக் கொண்டு செல்லும் மாடுமேய்ப்பவனுக்கும் இடையில் உள்ளது.


முக்கியமாய் நாம் உணர வேண்டியது யாதெனில் ஒவ்வொருவருக்கும் குறிக்கோள் முக்கியம்; அது கெட்ட சமாச்சாரத்திற்கானதாய் இருக்கக் கூடாது.

அவ்வளவே! மற்றபடி அது என்ன என்பதில் பிரச்சனை இல்லை!

சிலருக்கு வாழ்க்கையில் ஒன்றைச் செய்ய வேண்டும என்ற குறிக்கோள் இருக்கும். ஆனால் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். காரணம்? தம் மனதில் இருக்கும் அந்தக் குறிக்கோள் தமக்குச் சரியானது தானா என்ற சந்தேகம். அதனால் அதில் முனைப்பில்லாமல் காலம் நகரும்.


ஒருவர் ப்ளஸ் டூ முடித்துப் பொருளாதாரத் தேவையால் நிர்பந்தமாய் வேலை ஒன்றில் சேர்ந்து விட்டார். மனதளவில் அவருக்கு மேற்கொண்டு படிக்க ஆசை. இதர நிர்பந்தங்கள் அவரது குறிக்கோளைத் தள்ளிப்போடுகின்றன. சில காலம் கழித்து அவரது பொருளாதார நிலைமை சீரடைகிறது. ஆனால் காலங்கடந்து விட்டதே; வயது அதிகமாகி விட்டதே; இப்பொழுது நம்மால் முடியுமா என்று அவருக்குத் தயக்கம். இப்படியே முப்பது ஆண்டுகள் ஓடி இப்பொழுது அவரிடம் குறிக்கோள் மட்டும் அப்படியே இருக்கிறது. ஆனால் வாழ்க்கையில் போதிய அவகாசம் இல்லை.


இவ்விதம் தள்ளிப் போடாமல் அவர் அப்பொழுதே கல்வியைத் தொடர முயன்றிருந்தால், அப்படியே படிப்பு மண்டையில் ஏறாமல் போயிருந்தாலும்கூட, “அட! முயன்று பார்த்தோம்; இது நமக்குச் சரிப்பட்டு வராது என்று புரிந்து விட்டது. அடுத்து வேறு குறிக்கோளைத் தேடுவோம்” என்று அவரது மனம் மாறியிருக்கும்.


‘நம்முடைய முயற்சி தவறென்றால் உற்றார் என்ன சொல்வார்கள்’;

‘எனது குறிக்கோள் தவறாகிப்போய் என் முயற்சி தோல்வியுற்றால் நான் வருத்தமடைந்து நொந்து போவேனே’ என்ற எண்ணத்திலேயே குறிக்கோளைத் தள்ளிப் போடுவதோ அதை முயலாமல் இருப்பதோ முறையன்று! அது மனதில் அயர்ச்சியை உண்டாக்கி மகிழ்வைத் தடுக்கிறது.

அப்படியல்லாமல் மனதிலுள்ள குறிக்கோளை முயன்று பார்க்க வேண்டும். ஒருக்கால் முயற்சி தோல்வியில் முடிந்தாலும் அதுவும் ஒரு பாடமே. எப்படி?

உங்களுக்குச் சரிவராத அல்லது ஒத்துவராத ஒரு விஷயத்தை நீங்கள் அறிந்து கொண்டீர்கள் என்றாகிறது! அடுத்தமுறை அதைச் செய்யக் கூடாது என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்து விடுகிறது.


மற்றவர்கள் தோல்வியை நினைத்து மனம் சோர்ந்து உட்கார்ந்து விடும்போது, வெற்றியாளர்கள் என்று உலகில் புகழப்படும் மக்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமோ?

‘தோல்வி வெற்றியின் முதல்படி’ என்று சொல்லிக் கொண்டு ‘அடுத்து என்ன செய்யக்கூடாது’ என்ற தெளிவுடன் ஆகவேண்டிய அடுத்த வேலையைப் பார்க்க ஆயத்தமாகி விடுகிறார்கள்.


னம் மகிழ, தொடருவோம்...