மனித வாழ்க்கையில் பல பருவங்கள் உண்டு. டீன்-ஏஜ்... அவற்றுள் பரவசமானது!
இந்தப் பருவ வயதில் உடல், மன ரீதியாக நடைபெறும் பல்வேறு மாற்றங்களில் முக்கியமானது, 'தனித்தன்மை' உருவாவது! அவரவரின் கேரக்டரைத் தீர்மானிக்கும் அந்த 'தனித்தன்மை'... அழுத்தங்கள், ஏக்கங்கள், போராட்டங்கள், கவர்ச்சிகள் என்று பலவிதமான படிக்கற்களையும் கடந்து அடைய வேண்டிய முக்கிய நிலை! அதற்கான கனிவான, கவனமான வழிகாட்டல்தான்... இந்த இணைப்பு! மொத்தத்தையும் நீங்கள் படித்து முடிப்பதோடு, மறக்காமல் படிக்கக் கொடுங்கள்... உங்கள் வீட்டு ஸ்வீட் டீன்களிடம்!
ரொம்ப 'ஷை'யா ஃபீல் பண்றீங்களா?
1. முன்னேற்றத்தின் எதிரிகளில் முக்கியமானது, இந்தக் கூச்சம்! இந்தப் பருவத்தில் மற்றவர்களிடம் சகஜமாக பேச முடியாதபடி ஒரு கூச்சம், தயக்கம் எழும். அதை வளரவிடாமல், அப்போதே களைய வேண்டியது அவசியம். முதலில் உங்களுக்கு நன்றாகத் தெரிந்த நண்பர்களுடன் பேசிப் பழக ஆரம்பியுங்கள். குறிப்பாக, கண்களைப் பார்த்துப் பேசுவது, கேள்விகள் கேட்பது, பயப்படாமல் பதில் சொல்வது என ஆரம்பியுங்கள். பின் அந்த வட்டத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடையச் செய்யுங்கள்.
2. தயக்கத்துக்கான முக்கிய காரணமே, அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள் எனும் எண்ணம்தான். அடுத்தவர்களின் நினைப்பை கொஞ்சம் ஒதுக்கி வையுங்கள். தைரியம்தான் முக்கியம். விமர்சனங்களைக் கண்டு பயப்படாமல் பேசுங்கள்.
3. சிலருக்கு எப்படி பேச்சைத் துவங்குவது என்பது தெரியாது. முதல் வாக்கியத்துக்கே சிரமப்படாமல், ''ஹாய்... எப்படி இருந்தது உங்க டிராவல்..?'', ''புது டிரெஸ்ஸா... நைஸ்!'' - இதுபோல இயல்பாக ஆரம்பிக்கலாம்.
4. உரையாடலின் முடிவில் ஒரு கேள்வியை வையுங்கள். அப்போது அந்த உரையாடல் வளர்ந்து கொண்டே இருக்கும். உங்கள் தயக்கங்களும் விலகும்.
5. கல்லூரி மேடையில், கிளாஸ் செமினாரில் என்று ஒரு கூட்டத்துக்கு முன் பேச கூச்சம் அப்பிக்கொள்கிறதா? அதற்காக முன்கூட்டியே பயிற்சி எடுங்கள். கண்ணாடி முன் நின்று சத்தமாகப் பேசிப் பழகுவது ஒரு நல்ல வழி. நன்றாகப் பயிற்சி எடுத்த பின், அங்கு தைரியமாக, தயங்காமல் பேசுங்கள். அப்படியும் தப்பு வரலாம்... தப்பில்லை. அடுத்தடுத்த வாய்ப்புகளில் அவைஎல்லாம் தானாக மறைந்து விடும்.
6. ஆன்மிகம், பொதுநல சேவை, யோகா, தியானம் என ஏதாவது ஒரு சமூக குழுவில் இணையுங்கள். அவை நல்ல குழுக்களாக இருக்கட்டும். அந்தக் குழு விஷயங்களில், ஆலோசனைகளில், கூட்டங்களில் பங்கெடுங்கள்... பேசுங்கள். எந்தக் குழுவில் இணைந்தாலும் உங்கள் பெற்றோரிடம் சொல்லிவிட்டு இணைவது நல்லது.
7. நிறைய படிப்பது, நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்வது, நீங்கள் பேசுவதற்கான கருப்பொருள் கொடுக்கும். நண்பர்கள் ஏதாவது பேசிக்கொண்டிருக்கும்போதே, ''ஆமா... இப்படித்தான் ஜப்பான் பிரதமர்கூட...'' என்று ஆரம்பித்து கலக்கலாம்!
தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்!
8. உங்களுக்கான லட்சியம் ஒன்றை உருவாக்குங்கள். அவை குறுகிய கால லட்சியங்களாகவும் இருக்கலாம். அதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருங்கள். அந்த நினைவூட்டல் உங்களை வழிநடத்திக் கொண்டே இருக்கும்.
9. அடுத்தவர்களைத் திருப்திப்படுத்த எதையும் செய்ய ஆரம்பிக்காதீர்கள். உங்களுக்குச் சரி எனப்படுவது சரியாக இருந்தால், தயங்காமல் அதைச் செய்யுங்கள். தவறு என உணர்ந்தால் நிறுத்துங்கள். எல்லோரும் படகு வாங்குகிறார்கள் என்று படகு வாங்கி ரோட்டில் நிறுத்துவது பயனளிக்காது. 10. 'தம் அடிப்பதை நிறுத்த வேண்டும்' என பிடிவாதமாக முயன்றாலும், முடியவில்லையா? கவலை வேண்டாம். உங்கள் முயற்சியில் தொடர்ந்து பிடிவாதமாக, நம்பிக்கையுடன் இருங்கள். வெற்றி உங்களுக்கே!
11. உங்கள் திறமைகளை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள். 'நான் குட்!' என்று உங்களுக்கு நீங்களே மரியாதை செய்யுங்கள். நல்ல திருத்தமான ஆடைகள் அணியுங்கள். இவையெல்லாம் உங்கள் தன்னம்பிக்கையை வளர்க்கும்.
12. எதை நீங்கள் அதிகம் சிந்திக்கிறீர்களோ, அதுவாகவே மாறிவிடுவீர்கள். எனவே, உங்களுடைய இயலாமைகளையே சிந்தித்துக் கொண்டிருப்பதை உடனடியாக நிறுத்துங்கள். நல்ல பாஸிட்டிவ் விஷயங்களைச் சிந்தியுங்கள்.
13. தவறுகள், தோல்விகள்... இவற்றையெல்லாம் அனுபவங்களாகக் கொள்ளுங்கள். தவறே செய்யாமலும், தோல்வியே இல்லாமலும் யாரும் இல்லை என்பதை உணருங்கள். 'இட்ஸ் ஆல் இன் த கேம்...' என்று அவற்றை அந்த நிமிடமே உதறிவிட்டு, அடுத்த வேலையை ஆரம்பியுங்கள்.
14. 'நான் ஸ்லிம்மா இல்லையே...', 'எனக்கு லாங் ஹேர் இல்லையே...' போன்ற உங்களின் பர்சனாலிட்டி பற்றிய நெகட்டிவ் எண்ணங்களைத் தூக்கி தூரப் போடுங்கள். 'அழகு என்பது முகம் அல்ல... அகம்' என்பதை உணருங்கள்! மனதளவில் அழகி, அழகனாகுங்கள்!
15. உங்களுக்குத் திறமை, ஆர்வம் இருக்கும் ஏரியாவைக் கண்டறிந்து அதை டெவலப் செய்யுங்கள். அப்போது உங்களை அறியாமலேயே உங்களுக்குள் இருக்கும் அசாத்திய பலம் தெரிய வரலாம். இது உங்களுக்கு அதீத தன்னம்பிக்கை தரும்.
16. வகுப்பறை, நண்பர் கூட்டம், குழுக்கள் என்று எங்கேயானாலும் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். எதுவும் சொல்லாமல் இருப்பதைவிட ஆயிரம் மடங்கு சிறப்பானது, உங்கள் கருத்தைச் சொல்வது. கருத்துகள் அங்கீகரிக்கப்பட்டால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இல்லாவிட்டாலும் கவலையில்லை, 'நம் கருத்தைச் சொல்லும் தைரியம் நமக்கு இருந்தது' என்று திருப்திப்பட்டுக் கொள்ளலாம்.
கோபத்தைக்கட்டுப்படுத்த..!
17. டீன்-ஏஜ் உணர்ச்சிபூர்வமான வயது. அடிக்கடி கோபம் வருவது இயற்கை. கோபத்தால் பெற்றோருடனோ, மற்றோருடனோ சண்டைகள் போடுவதற்கு முன்... அந்த கோபத்துக் கான உங்கள் காரணம் நியாயமானதுதானா என்று நிமிட நேரம் சிந்தியுங்கள். அப்படியே நியாயமாக இருந் தாலும், அதை 'இந்த இடத்தில் காட்டுவதால் என்ன லாபம்?' என யோசியுங்கள்.
18. கோபத்தை நீங்கள் கட்டுக்குள் வைத்திருந்தால் சிக்கல்கள் பல விலகும். கோபம் உங்களைக் கட்டுப்படுத்தினால் விளைவுகள் விபரீதமாகும்.
19. உங்களைக் கோபப்படுத்தும் சூழல் உருவானால் சில நிமிடங்கள் அமைதியாக இருங்கள். உங்களுக்குள்ளேயே சில கேள்விகளைக் கேளுங்கள். இந்தச் சூழலில் எப்படியெல்லாம் செயல்படலாம் என்பது உங்களுக்குப் புரியவரும். நல்ல வழியை முடிவு செய்யுங்கள். இந்த சில நிமிட இடைவெளி பல அதிசய மாற்றங்களைத் தரும்.
20. கோபப்பட்டால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை சிந்தியுங்கள். விளைவுகளை எப்படிச் சமாளிக்க முடியும் என்பதையும் கண நேரம் யோசியுங்கள். நீங்கள் சரியான முடிவை எடுக்க இது உதவும்.
21. நீங்கள் கோபப்பட்ட சூழல்களையும், அதில் நீங்கள் செய்தவற்றையும் ரீவைண்ட் செய்து பாருங்கள். உங்களுக்குப் பல பாடங்கள் புரியும்.
22. கோபத்தின் எதிரி இசை. நல்ல இசை கேட்டால் கோபம் ஓடியே போய்விடும். தினமும் சிறிது நேரம் இசைக் கேட்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல் மிகவும் நல்லது. கூடவே, கோபம் எனும் அந்தச் சக்தியை ஆக்கபூர்வமாக கலைகளில் ஈடுபடுத்தி சமன் செய்யுங்கள்.
23. உங்கள் கோபங்கள், எரிச்சல்கள் எல்லாவற்றையும் எழுதி வைக்கும் பழக்கத்தை உருவாக்குங்கள். அது உங்கள் கோபத்தைக் குறைக்கும்.
எக்ஸாம் ஃபீவரை எளிதில் துரத்தலாம்!
24. பயத்தை விரட்ட எளிய வழி, பயத்தை எதிர்கொள்வதுதான். எந்த விஷயத்துக்காகப் பயப்படுகிறீர்களோ அதை தைரியமாக, நம்பிக்கையுடன் எதிர்கொள்ளுங்கள்.
25. பயத்தை எதிர்கொள்ள சரியான தயாரிப்புகள் வேண்டுமல்லவா? ஆக, தேர்வு பயத்தை விரட்ட நன்றாகப் படித்து விடுங்கள். வேறு வழியே இல்லை.
26. தேர்வுக்கு முந்தைய நிமிடங்களில் ரிலாக்ஸ்டாக இருங்கள். அந்த நேரத்தில் நண்பர்களுடன் சேர்ந்து வேகவேகமாக பக்கங்களை உருட்டினால், அவர்கள் ஒப்பிக்கும் விஷயங்களை 'ஐயோ, இதெல்லாம் எங்கே இருக்கு?!' என்று பதறித் தேட ஆரம்பிப்பீர்கள். பின் படித்ததெல்லாம் அம்போதான்.
27. பரீட்சைக்கு முன்பே 'ஒருவேளை நான் ஃபெயில் ஆயிட்டா..?' என்று தேவையில்லாமல் நெகட்டிவாக நினைத்து பயப்படுவதை நிறுத்துங்கள். பரீட்சைத் தாளை நம்பிக்கையுடன் கட்டிக்கொடுங்கள்.
28. மதிப்பெண்கள், நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் வழங்கப்படுவதில்லை. நீங்கள் என்ன எழுதுகிறீர்கள் என்பதன் அடிப்படையில் தரப்படுவதுதான். எனவே, படிக்காதவற்றை நினைத்து பதற்றப்படாமல், படித்தவற்றை நன்றாக எழுதுங்கள்.
29. தேர்வுக் காலங்களில் உடற்பயிற்சி, நல்ல உணவு, சுத்தமான காற்று இவையெல்லாம் முக்கியம். 'பரீட்சை... பரீட்சை' என சீக்கு வந்த கோழி போல அறைக்குள்ளேயே அடைபட்டு கிடக்காமல், இயல்பாக இருங்கள்.
30. 'படிக்காமலேயே பாஸாகணுமா? படிச்சதெல்லாம் நினைவில் நிற்கணுமா?' என்றெல்லாம் கூவிக் கூவி விற்கும் மருந்துகள் பக்கமெல்லாம் பார்வையைக் கூட திருப்பாதீர்கள்.
31. தேர்வுக்கு முந்தைய நாள் நன்றாகத் தூங்கி ஓய்வெடுங்கள். அடுத்த நாள் சுறுசுறுப்பாக தேர்வு எழுத இது உதவும். தேர்வுக்கு சீக்கிரமாகவே கிளம்பி விடுங்கள். கால், அரை மணி நேரம் முன்பாகவே பள்ளி வளாகத்தில் காத்திருப்பது தப்பில்லை. டிராஃபிக், பஸ் பிரேக்டவுன் என எதிர் பாராத சிக்கலில் மாட்டி, எக்ஸாம் ஹாலுக்கு நொடிகள் லேட்டாக போனா லும், அந்த டென்ஷனிலேயே படித்ததில் பாதி மறந்து போய்விடும்.
32. தேர்வு எழுதும்போது அடுத்தவர்கள் என்ன எழுதுகிறார்கள் என்பதையெல்லாம் எட்டிப் பார்க்காதீர்கள். 'ஆஹா... எல்லோரும் நாலாவது கேள்வி எழுதறாங்களே, நான் ரெண்டாவதுதானே எழுதுறேன்', 'ஐயோ, நான் இன்னும் அடிஷனல் ஷீட் வாங்கலையே... எல்லோரும் வாங்கிட்டாங்களே' போன்ற பதற்றங்களெல்லாம் வேண்டாம். உங்களுக்குத் தெரிந்ததை எதைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதுங்கள்.
33. ஒரு தேர்வு எழுதும்போது அதில் மட்டும் கவனம் இருக்கட்டும். அடுத்த பாடத்துக்கான திட்டமிடுதலோ, அதைப் பற்றிய கவலையோ தேவையில்லை. 'ஐயோ, நாளைக்கு மேத்ஸ்...' என கவலைப்பட்டால்... இன்றைய சயின்ஸ் பாடமும் காலி!
நல்ல நட்பைத் தேர்ந்தெடுங்கள்!
34. பெரும்பாலும், பருவ வயதில் நமக்கு அமையும் நண்பர்கள்/தோழிகள்தான் நம் ஆத்ம நண்பர்களாகி, இறுதி வரை வருவார்கள். எனவே, இப்போது தேர்ந்தெடுக்கும் நட்பில் இருக்கிறது நமது வாழ்க்கை. படிப்பு, கலாட்டா என அனைத்திலும் ஆர்வமுடைய நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள். எக்காரணம் கொண்டும் ஸ்மோக், ட்ரிங்க், டேட்டிங் என்று தீய வழிக்கு இழுக்கும் நண்பர்கள் பக்கம் ஒதுங்கவே ஒதுங்காதீர்கள். விளையாட்டாக ஆரம்பித்து வினையில் முடியும் சமாசாரங்கள் இவை!
35. நல்ல தோழியைத் தேர்ந்தெடுப்பதில் தாமதம் நிலவினாலும் பரவாயில்லை... பொறுமையாக தேர்ந்தெடுங்கள். ஒரு நல்ல தோழி கிடைத்தால் அவர் மூலம் மேலும் பல நல்ல தோழிகள் கிடைப்பார்கள்.
36. நண்பர்கள் உற்சாகமானவர்களாக இருந்தால்தான், அந்த உற்சாகம் உங்களையும் வந்தடைந்து உற்சாகமாக இயங்க வைக்கும். ''பேப்பர் பிரசன்டேஷனா..? அதெல்லாம் நம்மளால முடியாதுடி'', ''உன்னால மேடையில பயமில்லாம நின்னுட முடியுமா..?'' என்றெல்லாம் பேசி, தங்களுக்கும் தன்னம்பிக்கை இல்லாமல், நம் நம்பிக்கையையும் குலைக்கப் பார்க்கும் நண்பர்களை கழித்துக் கட்டுங்கள்.
37. சிலருக்கு நிறைய தோழிகள் இருப்பார்கள், சிலருக்கு சில தோழிகளே இருப்பார்கள். ஒரு நல்ல தோழிகூட போதும்... வாழ்க்கை சுவாரஸ்யமாகவும் அர்த்தமுள்ளதாகவும் அமைய. எனவே, தோழிகளின் எண்ணிக்கை குறித்த கவலை வேண்டாம்.
38. உங்கள் நண்பர்கள் உங்களிடம் எப்படியெல்லாம் அன்பு செலுத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அந்த அன்பை முதலில் நீங்கள் அவர்களுக்குக் கொடுங்கள். தப்பு செய்தால் நண்பர்களிடம் மன்னிப்பு கேட்கத் தயங்க வேண்டாம். குறிப்பாக, ஈகோ எனும் வார்த்தையே நட்பில் இருக்கக் கூடாது.
39. நட்பில் 'நம்பிக்கை' மிக முக்கியம். அதை எந்தச் சூழ்நிலையிலும் உடைக்காதீர்கள். உங்கள் தோழி ஒரு ரகசியம் சொன்னால், அதை ரகசியமாகவே வையுங்கள். ஒரு வாக்குறுதி கொடுத்தால், அதை நிறைவேற்றுங்கள். தோழியிடம் உண்மையை மட்டுமே பேசுங்கள்.
40. தோழிக்கு ஏதேனும் ஆபத்து என்றால் உதவத் தயங்காதீர்கள். அதற்காக சில கஷ்டங்களைத் தாங்கிக் கொள்வதும் தப்பில்லை. துணையாகத் தோள் கொடுப்பதும்தான் நட்பின் முக்கிய இலக்கணம். அது நட்பின் ஆழத்தை இன்னும் அதிகரிக்கும்.
41. நண்பர்கள் இடையேயான ஆத்மார்த்த உரையாடல்கள் அவ்வப்போது நடக்கட்டும். மன அழுத்தம், கோபம், எரிச்சல் போன்றவற்றைஎல்லாம் அது வீசி எறிந்துவிடும்.
42. உங்கள் வளர்ச்சியில் பொறாமைப்படாமல் ஆனந்தமடைபவரும், உங்களைப் பற்றி தப்பாக கிசுகிசுக்காதவருமே உங்களின் உண்மையான நண்பர்!
43. பழைய, பால்ய நண்பர் களுடனும் தொடர்பில் இருங்கள். பழைய நட்புகள் வேர்கள் போல. எப்போதும் நமக்குள் வியாபித்திருக்கட்டும்.
இதெல்லாம் மன அழுத்த சிம்ப்டம்ஸ்!
44. மிகவும் கவலையாக, கோபமாக, எரிச்சலாக இருக்கிறதா? இந்த உணர்வுகள் பல மணி நேரம் நீடிக்கிறதா?
45. உலக மஹா ஜோக் சொன்னால்கூட, சிரிப்பு வரவில்லையா... நண்பர்களின் உற்சாக அரட்டை சலனப்படுத்தவில்லையா... சிரிக்க வேண்டுமென்று முயற்சிகூட செய்யத் தோன்றவில்லையா?
46. உங்களைப் பற்றி உங்களுக்கு நிறைய தாழ்வு மனப்பான்மை இருக்கிறதா? 'நான் ஒரு உதவாக்கரை, யாருக்கும் தேவையற்றவன், என்னால் என்ன பயன் இருக்கப் போகிறது..?' என்றெல்லாம் சிந்தனை ஓடுகிறதா?
47. திடீர் திடீரென தலைவலி வருகிறதா? உடல் வலி வருகிறதா? காரணமே இல்லாமல் சோர்வாக இருக்கிறதா?
48. அவ்வப்போது அழுகை வருகிறதா... யாராவது சாதாரணமாகப் பேசும் வார்த்தைகள்கூட அழுகையை மேலும் கிளறுகிறதா... சும்மாவாச்சும் உட்கார்ந்து அழ வேண்டுமென்று தோன்றுகிறதா?
49. திடீரென உடல் எடை அதிகரிக்கிறதா... அல்லது டயட் இருக்காமலேயே உடல் எடை சட சடவென குறைகிறதா?
50. எதிலும் கவனம் செலுத்த முடியாமல் இருக்கிறதா... ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போதே பாதியில் மறந்து போய்விடுகிறதா... படிப்பு எல்லாம் 'சர்'ரென கீழே இறங்குகிறதா?
51. 'யாரும் எனக்கு உதவி செய்ய முன்வரவில்லை' என தோன்றுகிறதா... 'என்ன செய்தாலும் இனி என்னால் கரையேற முடியாது' என்று தோன்றுகிறதா?
52. தூக்கம் எட்டாக்கனியாகி தொந்தரவு செய்கிறதா? அல்லது அதீத தூக்க மயக்கமாகவே இருக்கிறதா?
53. மரணம் அடிக்கடி சிந்தனையில் வருகிறதா? தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என தோன்றுகிறதா?
- மேற்சொன்னவை எல்லாம் மன அழுத்தத்துக்கான அறிகுறிகள். பதற வேண்டாம். வழி இருக்கிறது. வாழ்க்கை அழகானது! மேலே படியுங்கள்!
'ஸ்ட்ரெஸ்'-ஐ சிம்பிளா விரட்டலாம்!
54. 'ஸ்ட்ரெஸ்' எனப்படும் மன அழுத்தம் ஏற்படும்போது செய்ய வேண்டிய முதல் காரியம், பெற்றோரிடம் உங்களின் நிலையை விளக்கிவிடுவதுதான்.
ஆத்மார்த்த நேசம் கொண்டவர்களுடனான உரையாடல், மன அழுத்தங்களை விலக்கிவிடும். 'அம்மா, அப்பா என்ன நினைப்பாங்க..? புரிஞ்சுப்பாங்களா..?' என்றெல்லாம் யோசித்துக் குழம்பாதீர்கள். உலகிலேயே நீங்கள் அதிகம் நம்ப வேண்டிய இரண்டு பேர்... உங்கள் பெற்றோர்தான்.
55. அதேசமயம், பெற்றோர் சண் டையிடுவதுதான் உங்கள் ஸ்ட்ரெஸ்-க்கு காரணமா? தயக்கம் வேண்டாம்... அதை பெற்றோரிடம் நேரடியாகச் சொல்லுங்கள். சண்டை நடக்கும்போதல்ல... எல்லாம் முடிந்து இயல்பு நிலைக்கு வந்தபின்.
56. மன அழுத்தமாக உணர்கிறீர்களென்றால் உடனடியாக உடற்பயிற்சியை ஆரம்பியுங்கள்... ஓடுவது, நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, ஸ்கிப்பிங் என உங்களுக்குப் பிடித்த ஏதோ ஒன்று. உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். மன அழுத்தம் மட்டுப்படும். கூடவே யோகா போன்ற தியான முறைகளிலும் ஈடுபட்டால் உங்களை விட்டு மன அழுத்தம் ஓடோடி விடும்.
57. 'எதற்காக இந்த மன அழுத்தம்..?' என்பதே பல வேளைகளில் உங்களுக்கு விளங்காது. நண்பன் சொன்ன ஏதேனும் வார்த்தையாக இருக்கலாம். ஏதோ ஒரு தோல்வியாக இருக்கலாம். உங்களுக்குப் பிடித்த நபர் இன்னொருவருடன் பேசுவதால் இருக்கலாம். எதுவானாலும், அந்தக் காரணம் என்ன என்பதைக் கண்டறியுங்கள். அதற்குள் ரொம்ப மூழ்க வேண்டாம். காரணத்தைக் கண்டுபிடித்தால் பலவேளைகளில் உங்களுக்கே 'ப்ப்பூ... இதுக்கா இவ்ளோ ஃபீல் பண்றோம்' எனத் தோன்றும்.
58. உங்களுடைய பெஸ்ட் ஹாபியை அந்த நேரம் கையில் எடுங்கள். ஏதேனும் கிரியேட்டிவிட்டி சார்ந்ததென்றால் ரொம்ப நல்லது. மன அழுத்தம், கற்பனை சக்தியை முடக்கும். நீங்கள் உங்கள் ஹாபியின் மூலம் அதை புதுப்பிக்கும்போது உங்கள் மன அழுத்தம் குறையும். 'அப்படி ஹாபி எதுவும் இல்லையே...' என்கிறீர்களா? சரி... சந்தோஷமாக, சந்தோஷமான சினிமா பாருங்கள்.
59. மிகவும் மனப்புழுக்கமாக இருந்தால், உங்களின் நம்பிக்கைக்குரிய நண்பர் ஒருவரிடம் சென்று மனம்விட்டுப் பேசுங்கள். வேடிக்கை பார்க்கும் நண்பர்களிடம் போய் மாட்டிக் கொள்ளாதீர்கள். பின் மன அழுத்தம் இரண்டு மடங்காகிவிடும்.
60. சமீபத்தில் நடந்த மகிழ்ச்சியான நினைவுகளை அசை போடுங்கள். உங்களை யாராவது பாராட்டியிருக்கலாம், ஏதேனும் பரிசுகள் வாங்கியிருக்கலாம், நண்பனைச் சந்தித்திருக்கலாம், நகைச்சுவை படித்திருக்கலாம்... ஏதோ ஒன்று!
61. ஒருவேளை உங்களின் மன அழுத்தம் அதிகமாகி, ஓர் உளவியல் நிபுணரைப் பார்க்க வேண்டும் என பெற்றோர் விரும்பினால்... எகிறிக் குதிக்காதீர்கள். மன அழுத்தம் என்பது காய்ச்சல் போல ஒரு நோய்தான். 'மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்' எனும் சிந்தனைகளை தூர எறிந்து, சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள். சீக்கிரம் குணம் பெறலாம்.
ட்ரெண்டி டீன்-ஏஜ்!
62. ட்ரெண்ட், ஃபேஷன்களைப் பின்பற்றுவது சந்தோஷம் தரும் விஷயங்கள்தான். ஆனால், உங்கள் தன்னம்பிக்கை குறைவினால் நீங்கள் ஃபேஷன் பக்கம் சாய்ந்து விடக்கூடாது. 'அழகில்லை' என க்ரீம்கள் பூசுவதெல்லாம் வேண்டாம். ஆனால், ஹேர் ஸ்டைல், டிரெஸ் ஸ்டைல் எல்லாம் உங்கள் விருப்பத்துக்கு அமைவதில் தப்பில்லை.
63. 'பிராண்ட்'களைப் பார்த்து மயங்க வேண்டாம். ஒரு பந்தாவுக்காக 'பிராண்ட்'களில் பணத்தைக் கொட்டாமல் கவனமாக இருங்கள். உடைகள் அணியும்போது அவை ரசிக்கும்படியாக இருப்பது முக்கியம். கவர்ச்சி ஆடைகளை ஒதுங்குங்கள்.
64. உங்களால் இயல்பாக இருக் கக்கூடிய 'கம்ஃபர்ட்னஸ்' தரும் ஆடை களையும், நகைகளையுமே அணியுங்கள். அங்கே குத்தி, இங்கே பிடித்து என உங்களுக்கு பிரச்னை தரும் ஆடை, ஆபரணங்களைத் தவிர்க்கலாம்.
65. ஹை ஹீல்ஸ், ஆரோக்கியத்துக்கு எதிரி. முதுகு வலி, சுளுக்கு, தசைப் பிடிப்பு போன்ற பிரச்னைகளை விரும்பி அழைப்பது அது. எனவே, ஹீல்ஸ் எவ்வளவு சின்னதாக இருக்கிறதோ... அவ்வளவு நல்லது.
66. சில காஸ்மெடிக்ஸ், ஃபேஷன் ஜுவல்லரிகள் சிலருக்கு அலர்ஜியை உருவாக்கும். எனவே, உங்கள் உடம்புக்கு ஒப்புக் கொள்ளாதெனில் அவற்றைத் தயங்காமல் ஒதுக்கிவிடுங்கள்.
67. உடை, ஹேர் ஸ்டைல், அக்ஸஸரிஸ் என்று நடிகர், நடிகைகளின் வெளிப்புற ஃபேஷன்களை நீங்கள் பின்பற்றலாம். ஆனால், அவை உங்களை கேலிக்குரியவராக மாற்றிவிடக்கூடாது. உங்களுக்கு சூட் ஆகிறது என்றால் மட்டுமே தொடருங்கள்.
பருவ வயது பொழுதுபோக்குகள்!
68. டீன்-ஏஜ் பருவத்தினருக்கு நிச்சயமாக ஒரு ஹாபியாவது இருந்தாக வேண்டும். அது அவர்களுடைய திறமையை வளர்க்கும். கூடவே, தன்னால் எதையும் முன்னின்று செய்ய முடியும் எனும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும். அடிக்கடி மனம் குழப்பமடைவது, சோர்வடைவது, தோல்வி வந்தால் தொட்டால் சிணுங்கி போல துவண்டு போவதெல்லாம் டீன்- ஏஜ் பருவத்தில் சகஜம். ஒரு நல்ல ஹாபி இருந்தால், இத்தகைய மனக் குழப்பங்களுக்கான வடிகாலாகவும் அமையும்.
69. எழுதுங்கள். மனதில் தோன்றும் கவிதைகள், சிந்தனைகள், கற்பனைகள் என எல்லாவற்றையும். நிறைய எழுதுவது கற்பனை வளத்தை அதிகரிக்கும். யாரிடமும் சொல்ல முடியாததைக்கூட எழுதலாம். அது மனதை லகுவாக்கும். யாருக்குத் தெரியும்... உலகையே உலுக்கக் கூடிய எழுத்தாளர்கள் உங்களுக்குள் ஒளிந்திருக்கலாம்!
70. டி.வி., மொபைல், கம்ப்யூட்டர் கேம்ஸ் என்று நாளெல்லாம் அதிலேயே அடிமையாகிக் கிடப்பது என்பது, பொழுதுபோக்கல்ல... பொழுதை வீணாக்குவது. ஹாபிக்கும், அடிக்ஷனுக்கும் வித்தியாசம் உண்டு... உணருங்கள்.
பாலியல் விழிப்பு உணர்வு!
71. டீன் பருவத்தினருக்கு பாலியல் கல்வி விழிப்பு உணர்வு இருக்க வேண்டியது மிக மிக அவசியம். பெரும்பாலான நாடுகளில் பாலியல் சார்ந்த சிக்கல்களுக்குப் பலியாவது பெரும்பாலும் டீன்-ஏஜ் பெண்களே! எனவே, பாலியல் சார்ந்த சந்தேகங்கள் இருந்தால் சரியான நபரிடம் அதைத் தெரியப்படுத்துங்கள், தெளிவு பெறுங்கள். மருத்துவரோ, பெற்றோரோ, அல்லது பக்குவம் வந்த பெரியவர்களையோ அணுகுங்கள். தப்பான நண்பர்களிடம் பேசி சிக்கலைப் பெரிதாக்கி விடாதீர்கள்.
72. இந்த வயதில் ஏற்படும் உடலின் வளர்ச்சி மாற்றங்கள் பெண்களுக்குள் பயத்தையும் கிளர்ச்சியையும் உருவாக்கி விடுகின்றன. இதைத் தெரிந்து கொள்ளும் ஆண்கள், அவர்களை வலைக்குள் விழ வைத்து விடுகிறார்கள். ஒரு த்ரில், ஒரு அனுபவம், ஒரு காதல் என ஏதேனும் மர்ம வலைகள் உங்களுக்கும் விரிக்கப்படலாம். எனவே, அதுகுறித்த விழிப்பு உணர்வு டீன் பருவத்தினருக்கு மிக அவசியம்.
73. முகம் தெரியாத நபர் உங்களுக்கு அடிக்கடி மிஸ்ட் கால் கொடுத்து உங்கள் கவனத்தைக் கவர்கிறாரா... தேவையில்லாமல் சில்மிஷப் பேச்சுகளை நடத்துகிறாரா? உடனடியாக 'கட்' செய்து விடுங்கள். தொடர்ந்தால், 'புகார் கொடுப்பேன்' என மிரட்டுங்கள். மீண்டும் தொடர்ந்தால், புகார் கொடுத்து விடுங்கள்.
74. ''உலகத்துல நடக்காததையா..?!'' என்றெல்லாம் காதலரே வலை விரித்தாலும் உஷார். ''உலகத்துல கொலைகூடதான் நடக்குது. அதுக்காக, கொலை செய்யக் கிளம்பிடலாமா..?'' என்று நறுக்கெனப் பேசி, சூழலுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். கூடவே, ''இது பத்தி இன்னொரு முறை பேச வேண்டாம்...'' என கண்டிப்பாகச் சொல்லி விடுங்கள்.
75. 'எமோஷனல் பிளாக் மெயில்' என்பது ரொம்ப டேஞ்சர். உங்களிடம் நட்பு காட்டி, அன்பு காட்டி, பாசம் காட்டி சிலர் தப்பு செய்யத் தூண்டுவார்கள். கத்தியைக் காட்டி மிரட்டுவதும், பாசத்தைக் காட்டி மிரட்டுவதும் இந்த விஷயத்தின் ஒன்றுதான். எனவே, இத்தகைய கண்ணிகளில் சிக்காதீர்கள்.
டெக்னாலஜி டிஸ்டர்பன்ஸ்!
76. டீன்-ஏஜ் பருவத்தினர் இன்றைய டெக்னாலஜிகளை பற்றிய அப்டேட்களோடு இருப்பது, நல்ல விஷயம். அதேசமயம், அதன் ஆபத்தையும் உணர வேண்டும். குறிப்பாக, கேமரா மொபைல் போன்கள் மீது கவனமாக இருங்கள். நண்பர்கள் யாராவது உங்களை 'குறும்புப்' படம் எடுத்தால், கண்டிப்புடன் தடுத்துவிடுங்கள்.
77. எடுக்கப்பட்ட படம் என்பது சொல்லப்பட்ட வார்த்தை போல. அது எங்கெல்லாம் போய்ச் சேரும் என்பதைச் சொல்ல முடியாது. உங்கள் முன்னால் டெலீட் செய்யப்பட்ட படத்தைக் கூட மீண்டெடுக்கும் மென்பொருட்கள் உண்டு. அதனால் யாராவது ''போட்டோவை எடுக்கிறேன். நீயே டெலிட் செஞ்சுடு'' என்று சொன்னாலும், ''வேண்டவே வேண்டாம்'' என பெரிய முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள்.
78. புளூ டூத் வகையறாக்களை எப்போதும் 'ஆஃப்' செய்தே வைத்திருங்கள். அதுதான் தேவையற்ற படங்கள், வீடியோக்கள் போன்றவை பரவ ஒரு முக்கிய காரணம். நினைவில் கொள்ளுங்கள்... உங்களை அறியாமலேயே உங்கள் மொபைலில் இருக்கும் சர்வ சங்கதிகளையும் திருட இப்போது வசதிகள் உண்டு.
79. பாலியல் சார்ந்த படங்கள் அனுப்புவது, செய்திகள் அனுப்புவதெல்லாம் தப்பு... நீங்கள் அனுப்பினாலும், உங்களுக்கு வந்தாலும். பாதிக்கப்பட்ட நபர் உங்களுக்கு எதிராக சைபர் கிரைம் போலீஸில் புகார் தெரிவித்தால்... விளைவுகள் விபரீதமாக இருக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
80. பிரவுஸிங் சென்டர் போகிறீர்களா? உஷாராக இருங்கள். பெரும்பாலானவை ரகசிய கேமரா வைத்து இயக்கப்படுபவை. உங்கள் சேட்டைகள் பதிவாகும். பின் உங்களை மிரட்டி மீண்டும் மீண்டும் தப்பு செய்ய வைப்பார்கள்.
81. இணையத்தில் வாழ்க்கைக்கு மிகமிகத் தேவையற்ற வலைதளங்களில் உங்கள் பெயர், முகவரி, போன் நம்பர் போன்ற பர்சனல் தகவல்களைக் கொடுக்காதீர்கள்.
82. தவறான தளங்களைத் தவிர்த்து, கல்வி, ஆராய்ச்சி, மருத்துவம், உலக அரசியல் என ஆரோக்கியமான தளங்களை தரிசி யுங்கள். குறிப்பாக, உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள முக்கியப் பத்திரிகைகள் இணையத்தில் இலவசமாகவே இருக்கின்றன. அவற்றைப் படித்துப் பயன்பெறுங்கள்.
டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்?!
83. டீன்-ஏஜ் பிள்ளைகளின் முன்னால் சகட்டுமேனிக்குச் சண்டையிடுவதை நிறுத்துங்கள். உங்களுக்குள் விவாதங்கள் இருக்கலாம். அவை ஆரோக்கியமானதாக இருக்கட்டும். எப்படிப்பட்ட கருத்து மோதல்களானாலும், கடைசியில் ஒரு முடிவுடன் முற்றுப் பெறுவது அவசியம். இல்லையேல் பெற்றோரின் சண்டை, பிள்ளைகளைப் பாதிக்கும்.
84. மகளோ... மகனோ... குழப்பத்துடன் தென்பட்டால், முதலில் பெற்றோர் செய்ய வேண்டியது, அவர்களுக்காக நேரம் ஒதுக்குவது. எந்த வேலை இருந்தாலும் ஓரமாகப் போட்டு, அவர்களை நிதானமாக, ரிலாக்ஸ்டாக விசாரியுங்கள். அவர்களின் குழப்பத்துக்கு தீர்வு தாருங்கள்.
85. 'உலகம் முழுவதும் கெட்டுப் போனாலும் தன் குழந்தை பரிசுத்தமாக இருக்க வேண்டும்' என்பதுதான் பெற்றோர்களின் தவிப்பு. அது தவறல்ல. அதற்காக குரூப் ஸ்டடி, பிரவுஸிங், காலேஜ் டூர், ஃப்ரெண்டோட போன் கால் என்று எதற்கெடுத்தாலும் 'புள்ள கெட்டுப் போய்டுவானோ...' என்று கண்மூடித்தனமாகப் புலம்பாதீர்கள். டீன்-ஏஜ் பிள்ளைகளிடம் வெளிப்படையான உரையாடல் அவசியம்.
86. அவர்களின் விருப்பங்களுக்கு நேரடியாகப் பதில் சொல்லுங்கள். 'இது தவறு, இது சரி, இதன் விளைவுகள் இவை' என்பதை 'பளிச்' என சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் கருத்தும் அதன் மீது நீங்கள் வைத்திருக்கும் உறுதியும் குழந்தைகளுக்குப் புரிய வேண்டியது முக்கியம்.
87. குழந்தைகளுக்கும் உங்களுக்கும் இடையே தொடர்ந்த உரையாடல்கள் மிக அவசியம். 'அம்மாகிட்ட சொன்னா... நல்ல அட்வைஸ் கொடுப்பாங்க...' என மகள் நினைக்குமளவுக்கு அம்மா நடந்து கொள்ள வேண்டும். சின்ன வயதிலிருந்தே இந்த பிணைப்பு கட்டி எழுப்பப்பட வேண்டும்.
88. அதற்காக 'அட்வைஸ் சொல்கிறேன் பேர்வழி' என நீங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருக்காதீர்கள். முதலில் அவர்களைப் பேசவிட்டு, அந்தச் சூழலை அலசி, பின் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். 'என்ன சொன்னாலும் அம்மா இப்படித்தான் சொல்வாங்க' என ஒரு மைண்ட் செட் அவர்களிடம் உருவாகிவிட்டால், பிள்ளைகள் உங்களிடம் பகிர்தலுக்கே வரமாட்டார்கள்.
89. எந்த விஷயத்துக்கும் 'பேசியாச்சே...' என்று ஒரே சிட்டிங்கில் முற்றுப்புள்ளி வைக்க எண்ணாதீர்கள். சில விஷயங்களை அடிக்கடி பேச வேண்டும். கெட்ட விஷயங்களைத் தொடர்ந்து விற்றுக் கொண்டே இருக்கிறது உலகம் என்பதை மறந்துவிடாதீர்கள். எனவே, அதற்கேற்ப நல்ல விஷயங்களை அடிக்கடி பேசிக்கொண்டே இருப்பதும் அவசியம்.
90. உங்கள் குழந்தை செய்யக் கூடாத ஒரு தவறைச் செய்திருந்தாலும்கூட, உங்கள் குழந்தைக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என நம்பிக்கை ஊட்டுங்கள். இது, 'அம்மா, அப்பா எப்பவும் உனக்கு துணையா இருப்போம்' என்ற நம்பிக்கையை அவர்களுக்குத் தரவேண்டுமே தவிர, 'வரட்டும் பார்த்துக்கலாம்டா...' என்று அவர்களின் தவறை ஊக்குவிப்பதாக இல்லாமலும் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
91. சினிமாவுக்குப் போவது, அவுட்டிங் போவது சின்னச் சின்ன டீன் தேவைகளை, குறும்புகளை அனுமதியுங்கள். ஆனால், சிகரெட்... தண்ணி போன்றவையெல்லாம் தெரிய வந்தால், முளையிலேயே கிள்ளிவிடுங்கள். எதை அனுமதிக்கலாம், எது அறவே கூடாது என்பதில் பெற்றோருக்கு முதலில் தெளிவு வேண்டும்.
92. டீன்-ஏஜ் பிள்ளைகளின் பெற்றோருக்கு அதீத பொறுமை அவசியம். திடீரென கத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் பிள்ளைகளை நிதானத்துடன் அணுகுங்கள். நீங்களும் உணர்ச்சிவசப்பட்டால் போச்சு. காரியம் கெட்டு விடும். டீன் பருவத்தில் கலவையான உணர்வுகள் மேலோங்கும். அதற்கெல்லாம் காரணம், அவர்களுடைய உடல் மற்றும் மன வளர்ச்சியே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
93. பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடத்தில் அவ்வப்போது திடீர் விசிட் கொடுங்கள். ஆசிரியர்களைச் சந்தித்து உரையாடுங்கள். பிள்ளைகளின் தேவை என்ன என்பதை கவனியுங்கள்.
94. பிள்ளைகளைச் சமூகக் குழுக்களில் ஈடுபட ஊக்கப்படுத்துங்கள். அவர்களின் நண்பர்களை வீட்டுக்கு வரவழைத்து பேசுங்கள். நல்ல ஹாபிகளுக்கு உற்சாகமூட்டுங்கள். அடிக்கடி வெளியே சுற்றுலா செல்லுங்கள். அவர்களுடைய வாழ்க்கையில் நடப்பவற்றையெல்லாம் கேட்டறியுங்கள். இதெல்லாம் டீன்-ஏஜ் பருவத்தை வளமாக்கும்.
95. உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் மேல் ஒருவேளை உங்களுக்குத் திருப்தியில்லை என்றாலும், ''இனிமே அவன்கூட சேர்ந்தேனா பாரு...'' என்று அதை அவர்களிடம் கோபத்துடன் வெளிப்படுத்தாதீர்கள். அந்த எதிர்ப்பு, அவர்களின் நட்பை இன்னும் நெருக்கமாக்கும். மாறாக, உங்கள் பிள்ளைக்கு அந்த நண்பரை பிடிப்பதற்கான காரணங்களை இதமாகப் பேசி தெரிந்துகொண்டு, உங்களுக்கு அந்த நண்பரை பிடிக்காததற்கான காரணத்தையும் நிதானமாக உங்கள் பிள்ளையிடம் தெரிவியுங்கள். எந்த தரப்பின் காரணங்கள் வலுவாக இருக்கிறதோ, அதன்படி முடிவெடுங்கள்.
96. இன்றைய இளசுகளின் கவச குண்டலம், செல்போன். எனவே, அதைப் பார்த்து டென்ஷன் ஆகாதீர்கள். அவர்கள் வீட்டில் செல்போன் பயன்படுத்தும் நேரத்தை முதலில் லிமிட் செய்யுங்கள். பின், அதை தேவைக்குத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதிமுறையை மெள்ள மெள்ள ஏற்படுத்துங்கள்.
97. 'அன்னிக்கு நீ டியூஷனை கட் அடிச்ச இல்ல...' என்று ரீவைண்ட் செய்து அவர்களின் தவறுகளை சுட்டிக் காட்டிக்கொண்டே இருப்பது, டிபிக்கல் பேரன்ட் பிஹேவியர். இதனால் டீன்-ஏஜ் பிள்ளைகளுக்கு எரிச்சல், எதிரி மனப்பான்மை பெற்றோர்கள் மீது ஏற்பட வாய்ப்பு உண்டு... கவனம்.
98. வரும் முன் காப்பது நலம். செல்போன் வாங்கிக்கொடுத்து, நெட் கனெக்ஷன் கொடுத்து, பைக் வாங்கிக்கொடுத்து என அனைத்தையும் செய்துவிட்டு, பின் அதில் அவர்கள் பொழுதை வீணாக்குவதை சொல்லிப் புலம்பி பயனில்லை. எனவே, உங்கள் பிள்ளைகளுக்குத் தேவையானதை மட்டுமே வாங்கிக்கொடுங்கள்... அவர்கள் ஆசைப்படுவதை எல்லாம் அல்ல!
99. டீன்-ஏஜ் பிள்ளைகளின் ரகசிய சிநேகிதன், கண்ணாடி. அதற்காக, ''எப்பா பார்த்தாலும் கண்ணாடி முன்னாலயே நின்னுட்டு...'' என்று அவர்களை பழித்து பல்லவி பாடாதீர்கள். அவர்களது வயதையும், நிலையையும் புரிந்து கொண்டு இது போன்ற விஷயங்களில் சில வேளைகளில் அவர்களோடு கூடவே இருந்தும், சில நேரங்களில் கண்டும் காணாமல் நாசூக்காக நடந்து கொண்டால் ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் பிள்ளைகளின் 'பெஸ்ட் ஃப்ரெண்ட்'தான்.
100. பிள்ளைகளுக்கான பாலியல் கல்வி குறித்து பெற்றோர் பயப்படக் காரணம், அதுகுறித்த தெளிவு இல்லாததுதான். பாலியல் கல்வியில் உடல் ஆரோக்கியம், தகாத உறவுகள், அதன் விளைவுகள், அதனால் பாதிக்கப்படப் போகும் எதிர்காலம், கலாசாரம், குடும்ப சூழல் என அனைத்தும் ஆழமாக உணர்த்தப்படும். பாலியலில் டீன்-ஏஜ் பருவத் தினருக்கு எழும் கிளர்ச்சியைத் தாண்டி அதிலுள்ள விளைவுகளையும் புரிய வைப்பதே பாலியல் கல்வியின் நோக்கமாக இருக்கும். எனவே, பதற்றம் வேண்டாம் பெற்றோர்களே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக