திங்கள், 29 நவம்பர், 2010

மனம் மகிழுங்கள்! - 24 : நன்னம்பிக்கை


யானையின் பலம் எதிலே?
தும்பிக்கையிலே!
மனிதனோட பலம் எதிலே?
நம்பிக்கையிலே!

- என்று தமிழ்க் கவிஞரொருவர் எழுதியிருந்தார்.

நம்பிக்கை!

அது நம் ஒவ்வொருவருக்கும் உண்டு; எக்கச்சக்கமாய் உண்டு. மறுப்பவர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையோ அல்லது அதற்குள்ளோ தங்களது விரல் நகங்களில் தீட்டப்படும் கறுப்பு மையை உற்றுப் பார்த்துக் கொள்ளலாம். என்றாவது, எப்படியாவது, யாராவது ஓர் ஆட்சியாளர் நீதி, நேர்மையுடன் நம்மை ஆளத்தான் போகிறார் என்று நம்பவில்லை?


தவிர, நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை உண்டு. ஒவ்வொருமுறை ஏதோ காரணம் அமைந்திருந்தாலும் “இந்த முறை கணவன் தன்னை எப்படியும் முதல்முறையாக ப்ஃளைட்டில் ஏற்றி சிங்கப்பூர் அழைத்துச் செல்லப் போகிறான்,” என்று ஒரு நடுத்தரவர்க்க மனைவிக்கு நம்பிக்கை. “வரதட்சணையா? அதென்ன கற்கால வழக்கம்? பெண்ணை மட்டும் தாருங்கள்” என்று ஒரு ராஜகுமாரன் குதிரையிலோ, குறைந்தபட்சம் ஓர் ஆட்டோவிலோ வந்து நிற்கப் போகிறான், என்று பெண்ணைப் பெற்றவருக்கு நம்பிக்கை.

எதிர்மறையாய் வேறொரு வித நம்பிக்கையும் உண்டு.

மூட நம்பிக்கை!

தேர்விற்காக விடியவிடியப் படித்து, மாய்ந்து மாய்ந்து தயாராகி, தேர்வுத் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முழுகி, கடைசியில் கப்போர்டிலுள்ள பச்சைக் கலர் பேனாவைக் கண்ணில் ஒற்றி எடுத்துக் கொண்டு “தேர்வை இந்தப் பேனாவில் எழுதினால் நிச்சயம் நான் பாஸ்,” என்று சின்னப்ப தாஸுக்கு ஒரு நம்பிக்கை.

தேடித்தேடி விண்ணப்பித்து, ஆளைப்பிடித்து, கழுதைக் காலைப்பிடித்து ஒருவழியாய் அந்த மல்டிநேஷனல் கம்பெனியில் நேர்முகத் தேர்விற்கு அழைப்பிதழ் வர, படு டென்ஷனுடன் கிளம்பும் மகனிடம், “அந்த நீலநிறக் கர்சீப்பை மறக்காமல் பேண்டிற்குள் வைத்துக்கொள். உனக்கு நீலம்தான் ராசியான கலர்,” என்று மகனுக்கு அறிவுறுத்தும் அம்மாவிற்கு ஒரு நம்பிக்கை.

பூனை குறுக்கே ஓடினால், “ஆஹா! சகுனம் சரியில்லையே!”

கிளம்பும்போது “எங்கே போகிறீர்கள்?” என்று யாராவது கேட்டுவிட்டால், “போகும் காரியம் உருப்பட்டாற் போலத்தான்.”

காக்கை கத்தினால், "விருந்தாளிகள் வரப்போகிறார்கள் பார்" என்று நினைக்க, விருந்தாளிகள் வந்து சேருவார்கள். அடுத்த முறை ஊரிலுள்ள உறவினர் வீட்டிற்குச் செல்லும்முன் மெயில், போன், எஸ்.எம்.எஸ்., என்று எதுவும் முயலாமல் நேரடியாய்ச் சென்று இறங்கி, திகைத்து நிற்பவரிடம் “என்ன காக்கை கத்தவில்லையா?” என்று கேட்டுப் பார்க்க வேண்டும்.

எது எப்படியோ, இப்படியான மூடநம்பிக்கைப் பட்டியல் நூறு பக்க நோட்டு அளவிற்கு நீளம்!

மனவியலாளர்கள் இதை மாற்றி வேறுவிதமாகச் சொல்கிறார்கள். உங்கள் மனம் எதை நினைக்கிறதோ – நல்லதோ கெட்டதோ - அதை அடைந்துவிடும் தன்மை கொண்டது!

“எனக்கு ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் தலைவலி வரும்” என்று நினைத்தால் அது உங்களைத் தவறாமல் வந்தடையும். “கூடுதலாய்க் கொஞ்சம் பணம் கிடைத்தாலும் அது எனக்குத் தங்காது,” என்று நினைப்பவர்களுக்குப் பணம் ஏதும் உபரியாய்க் கிடைத்தாலே அது உடனே செலவாகிப் பர்ஸ் காலியாவது நிச்சயம் என்று தலையில் அடித்து “காட் ப்ராமிஸ்பா,” என்கிறார்கள்.

அமெரிக்காவில் கார்ல் சிமன்டண் (Dr. O. Carl Simonton) என்றொரு டாக்டர் இருந்தார். புற்றுநோய் மருத்துவர். தம் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யும் போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனித்தார். ஒரே அளவிலான கதிர்வீச்சு சிகிச்சை பெறும் நோயாளிகள் மத்தியில் இரு விதமான விளைவுகள் தென்பட்டன. “ஏன்?” என்று அவருக்குள் கேள்வி எழுந்து, அதை நுணுகி ஆராய்ந்தவர் அந்த விஷயத்தைக் கண்டுபிடித்தார். Positive attitude எனப்படும் ஆக்கபூர்வச் சிந்தனையுள்ளவர்களுக்கு மனம் சோர்வடைந்தவர்களைவிடக் குறைவான பக்க விளைவுகளே இருந்தன. “ஆஹா! மனதிற்கும் உடல்நலனிற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது,” என்றவர், புற்றுநோயின் முற்றிய நிலையில் இருந்தவர்களுக்குக் கூட மருத்துவத்துடன் சேர்த்து மனப் பயிற்சி அளிக்கும்போது அவர்களது மரணத்தைத் தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் அவர்களது சொச்ச வாழ்நாளுக்கு உற்சாகத்தையும் மனக்கட்டுப்பாட்டுத் தரத்தையும் உயர்த்த முடியும் என்று ஆராய்ந்து நிரூபித்தார்.

தமது ஆராய்ச்சியில் டாக்டர் கார்ல் முக்கியமாய்த் தெரிவித்த தகவல், “நோயாளிகளின் நம்பிக்கைக்கு ஏற்ப அவர்கள் குணமடையும் வேகம் அமையும்.” அதன் அடிப்படையில் அவர் மருத்துவச் சிகிச்சையும் மனவுறுதி ஆலோசனைகளையும் சேர்த்து அளிக்க ஆரம்பித்தார். சென்ற ஆண்டு இந்த டாக்டர் உணவு உண்ணும்போது புரையேறி இறந்து போனார் என்பது மட்டும் சோகமான உபரித்தகவல்.

வாழ்க்கையில் உங்களது மனம் எதை நம்புகிறதோ அதுவே உங்களுக்கு நிகழும். “என்னை யாரும் கண்டு கொள்வதில்லை; என்னிடம் சரியாகப் பழகுவதில்லை; என்னை ஏமாற்றப் பார்க்கிறார்கள்,” என்பது உங்கள் மன நம்பிக்கையென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அதையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

“எல்லோருக்கும் என்னைப் பிடித்திருக்கிறது; என்னிடம் அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள்,” என்று நம்புகிறவருக்கு அவர் வாழ்க்கையில் அவ்விதமே நிகழ்கிறது.

உங்கள் மனம் உங்களது கட்டுப்பாட்டில்! எதைச் சிந்தனை செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தாம் முடிவடுக்கிறீர்கள். உங்கள் மனதிற்குள் எதைத் திணிப்பது என்பதையும் நீங்கள்தாம் முடிவெடுத்து நிகழ்த்துகிறீர்கள்.

நல்லதை நம்பி மனதிற்குள் நல்ல எண்ணங்களையே திணித்தால் வாழ்க்கையில் அகமும் முகமும் மகிழ்வுடன் திகழும்.


னம் மகிழ, தொடருவோம்..

ஞாயிறு, 28 நவம்பர், 2010

அத்தியாயம் - 23 : மன ஒத்திகை

மனம் மகிழுங்கள்!

23 - மன ஒத்திகை

ற்பனை செய்ய ஆரம்பிச்சாச்சு - அடுத்து?

கற்பனைகளை நம் செயல்பாடுகளின் முன்னேற்றத்திற்கு எப்படி உபயோகிப்பது?

ரீடர்ஸ் டைஜஸ்டை (Reader’s Digest) அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஆங்கிலப் பத்திரிகை. பத்திரிகை நடத்துபவர்களுக்கென்று அசாத்திய கற்பனைத் திறன் இருக்க வேண்டும். புதுசு புதுசாய் யோசிக்க வேண்டும். அப்பொழுதுதான் வாசகரைக் கவர, தக்க வைத்துக் கொள்ள முடியும்; இல்லையா? எனவே யோசித்தார்கள். பத்திரிகையின் சார்பில் ஆய்வொன்று செய்வது என்று முடிவு செய்தார்கள். எதைப் பற்றி? மன ஒத்திகையைப் பற்றி!


ஒரு பள்ளிக்கூடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் குறிப்பிட்ட சில மாணவர்களையும் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். அந்த மாணவர்களை மூன்று அணிகளாகப் பிரித்துக் கொண்டு முதல் அணி ஒரு மாத காலத்திற்கு ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் கூடைப்பந்தைக் கூடையினுள் வீசும் பயிற்சியை மேற்கொள்ளச் செய்தார்கள். அடுத்த அணிக்கு எந்தப் பயிற்சியும் கிடையாது. சும்மா இருக்க வேண்டும். மூன்றாவது அணி பந்து வீசும் பயிற்சியைத் தினமும் ஒரு மணி நேரம் மனதில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்.

ஆய்வின் முடிவில் தினமும் பந்து வீசிப் பயிற்சி பெற்ற அணியின் திறமை சராசரியாக இரண்டு சதவிகிதம் உயர்ந்திருந்தது. வெறுமே இருந்த அணியின் திறமை இரண்டு சதவிகிதம் மட்டுப்பட்டிருந்தது. மனதளவில் தினமும் பயிற்சி பெற்றதே மூன்றாவது அணி, அவர்களின் திறமை மூன்றரை சதவிகிதம் அதிகரித்திருந்தது. ஆச்சரியமாயில்லை? செய்முறைப் பயிற்சியைவிட மனப் பயிற்சிக்கு அதிக மகத்துவம் உள்ளது என்று முடிவுரை வாசித்தது அந்த ஆய்வு!

யதார்த்தம் என்னவென்றால் நாம் இதெல்லாம் அறியாமலேயே நமது வாழ்க்கையில் தன்னிச்சையாக மனப் பயிற்சி மேற்கொள்ளத்தான் செய்கிறோம். அலுவலகத்திற்குச் செல்ல மோட்டார் பைக்கை ஸ்டார்ட் செய்யும் முன்னமேயே எந்தச் சாலை வழியே போகப் போகிறோம், மீட்டிங்கிற்குத் தாமதமாகி விட்டதே அதனால் எவ்வளவு விரைவாக ஓட்டப் போகிறோம், என்பதைப் போன்ற சிறிய ஒத்திகைகள் மனதளவில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதை நம் மனம் உணர்வதில்லை.

ஆனால் சில சமயங்களில் மட்டும் நீங்கள் உணரக்கூடும். எப்பொழுது? மனைவியிடம் பொய் சொல்லும்போது!

லேட்டாக வீட்டிற்குத் திரும்ப நேர்ந்தாலோ, மனைவிக்குத் தெரியாமல் நண்பருடன் சினிமா அது இது என்று சுற்றிவிட்டு வந்தாலோ, நுழைந்ததுமே “ஏன் லேட்டு?” என்று ஆரம்பித்து, போலீஸ் விசாரணையாய் வந்து விழப் போகும் கேள்விகளை என்ன சொல்லி சமாளிக்கலாம் என்று மனதில் ஓர் ஒத்திகை ஓடுமே, கவனித்ததில்லை?

நாம் அனைவரும் அறிந்த கிரிக்கெட் விளையாட்டு உதாரணமொன்றைப் பார்ப்போம். சுழன்று வரும் பந்தை எப்படி அடிக்க வேண்டும் என்று உங்கள் மூளையிலுள்ள செல்கள் கட்டளையிடுகின்றன. கம்ப்யூட்டர் ப்ரோகிராம் போல் வருகிறது கட்டளை. உங்கள் உடல் அதற்கேற்ப அந்தக் கட்டளைகளை நிறைவேற்றுகிறது. உங்கள் மனதிலுள்ளது நல்ல ப்ரோகிராம் என்றால் நீங்கள் நல்ல ஆட்டக்காரர். பந்து பவுண்டரி கோட்டைத் தொட்டிருக்கும். “என்னால் இந்த ஸ்பின்னையெல்லாம் தாங்க முடியாது”, என்று மனதில் கற்பனையிருந்தால் ஒன்றிரண்டு ஸ்டம்புகள் காலி! தினசரி இந்த விளையாட்டிற்கானப் பயிற்சியை நீங்கள் மேற்கொள்ளும்போது, சந்தேகமேயின்றி உங்களின் திறமை மேம்படும். நிச்சயம் மேம்படும். ஆனால், உடல்ரீதியான பயிற்சி மட்டுமே போதும், என்று நீங்கள் நினைத்தால், “போதாது” என்கிறார்கள் மன ஆய்வாளர்கள்.

நாள்தோறும் உடல்ரீதியான பயிற்சியை மேற்கொள்வதுடன் சேர்த்து மனப் பயிற்சியையும் சரியான முறையில் செய்தால் விரைவாகம் சிறப்பாகவும் திறமையை மேம்படுத்த முடியும் என்பதை அழுத்தமாய்ச் சொல்கிறார்கள். ஒரு காரியத்தைச் செய்வதுபோல் நீங்கள் கற்பனை செய்யும்போது அதை உண்மையிலேயே நிகழ்த்துவதைப் போல் உங்கள் மனதிலுள்ள ப்ரோகிராம்களை நீங்கள் வடிவமைத்துக் கொள்கிறீர்கள். உங்கள் மூளையிலுள்ள செல்களில் ரசாயண மின்மாற்றம் நிகழ்கிறது. அவை உங்கள் மனதில் புதிய மாற்றத்தைத் தோற்றுவிக்கிறது. மனம் உங்களுக்கு ஆற்றும் மாபெரும் உதவி அது என்பது அவர்களது வாதம்.

நேர்முகத் தேர்விற்குத் தயாராகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். கூகுளிலில் ஆரம்பித்துப் பல புத்தகங்கள் வரை பிரித்து மேய்ந்தாச்சு! அந்த ஹோம்வொர்க் மட்டும் போதுமென்றா இண்டர்வியூவிற்குச் செல்வீர்கள்? அவர்கள் கேட்கப் போகும் கேள்விகளுக்கு எப்படியெல்லாம் பதில் அளிக்க வேண்டும், அல்லது எப்படி பதில் அளிக்கக் கூடாது, எவ்விதம் அமர வேண்டும், என்ன சட்டை அணிந்து கொள்ள வேண்டும் என்று உள்ளாடை முதற்கொண்டு ஒரு மன ஒத்திகை நிகழ்ந்திருக்குமில்லையா? இவ்விதம் நாம் தன்னிச்சையாய் மேற்கொள்ளும் இந்த மன ஒத்திகையை முறைப்படுத்தி, வளப்படுத்தி செய்முறைப் பயிற்சியுடன் சரியானபடி ஜோடி சேர்த்தால் நம் ஆற்றலை எளிதாய், முழுமையாய் வெளிக்கொணரலாம்.

மன ஒத்திகைகளின் மூலம் நிறைவான செயற்பாட்டிற்கு உண்டான வகையில் நாம் நமது மனதை வடிவமைக்க முடியும். மனதில் நிகழும் அத்தகு ஒத்திகைக் கற்பனைகளில நாம் தவறிழைக்கப் போவதில்லை. எனவே மனம் சரியான செயற்பாட்டிற்குத் தயாராகிறது.

அதேபோல் மனதில் தப்புத் தப்பாய்க் கற்பனை செய்து ஒத்திகை பார்த்தால் நிகழ்வும் அப்படியே அமையும். இதைத்தான் பயந்தது போலவே நடந்துவிட்டது என்கிறோம். எனவே தப்புக் கற்பனை தப்பு. அதைத்தவிர்க்க வேண்டும்.

ஆக, இதனலாலெல்லாம் நாம் அறிய வேண்டியது யாதெனில்,

மனதில் கற்பனை ஒத்திகைகள் நிகழ்த்தி அதன்மூலம் நமது திறமைகளைத் தூய்மையாக்கும் முயற்சியை நாம் ஆரம்பிக்க வேண்டும். பரிட்சைக்குத் தயாராவது, இண்டர்வியூ, புதிதாய் மேடையில் பேசவிருப்பது, திருமணமாகி முதன் முதலாய் மனைவியிடம் பேசப் போவது என்று எதுவாக இருந்தாலும் முற்கூட்டியே நேரம் செலவழித்து மனதில் ஒத்தகை நிகழ்த்திவிடுங்கள். நடப்பவை நலமே நிகழும்.


னம் மகிழ, தொடருவோம்...

சைவ ஈரல் வறுவல்


தே.பொருட்கள்:
தோல் பாசிப்பருப்பு(பச்சைபயிறு) - 1 கப்
சோம்பு - 1 டீஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
பொடியாக அரிந்த தக்காளி - 1
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

அரைக்க:
தேங்காய்த்துறுவல் - 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
முந்திரி - 3
கிராம்பு - 2
ஏலக்காய் -2
பூண்டுப்பல் - 3
இஞ்சி - 1 சிறு துண்டு

செய்முறை :
*
பச்சை பயிறை 3 மணிநேரம் ஊறவைத்து அதனுடன் உப்பு+சோம்பு சேர்த்து நைசாக அரைக்கவும்.இட்லி மாவு பதத்தில் நீர் விட்டு கரைக்கவும்.

*
அதனை இட்லி தட்டில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

*
ஆறியதும் துண்டுகள் போடவும்.அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.

*
கடாயில் எண்ணெய்விட்டு வெங்காயம்+தக்காளி+மிளகாய்த்தூள்+உப்பு என ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்கவும்.

*
வதங்கியதும் அரைத்த விழுதுன் சிறிது நீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

*
பச்சை வாசனை அடங்கியதும் பச்சைபயிறு துண்டுகளை சேர்த்து நன்கு சிவக்க வறுத்தெடுக்கவும்.

*
அசத்தலான சுவையில் இந்த வறுவல் இருக்கும்.

சனி, 27 நவம்பர், 2010

அத்தியாயம் - 22 : கற்பனை செய் மனமே!

மனம் மகிழுங்கள்!

22 - கற்பனை செய் மனமே!

நாம் பிறந்து அழ ஆரம்பித்து, அதற்கடுத்தச் செயலாய் தாயின் முலைக்காம்பில் பால் குடித்த நொடியிலிருந்து ஆறு ஆண்டுகளில் நமக்குத் தேவையான எழுபது சதவீத விஷயங்களைக் கற்றுக் கொண்டு விடுகிறோம் என்று ஆய்ந்து சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். மீதம் உள்ள முப்பது சதவீதத்தைத்தான் சொச்ச வாழ்நாளுக்கும் மாய்ந்து மாய்ந்து கற்றுக் கொள்கிறோமாம்!

‘இதென்ன கணக்கு? அப்படியானால் மன்மோகன் சிங் தமது ஆறாவது வயதிலேயே எழுபது சத பிரதமரா?’ என்று என்னிடம் சண்டைக்கு வராதீர்கள். சதவீதம், இடஒதுக்கீடு போன்ற அரசியலுக்குள் எல்லாம் நுழையாமல் இந்த ஆய்வு சொல்லும் செய்தியை மட்டும் எடுத்துக் கொண்டு நாம் ஓடிவிடுவோம்.


“குழந்தைப்பருவத்தில் இருக்கும் அந்த ஆரம்பக் காலங்களில் ஒருவிஷயத்தை உட்கிரகிக்கும் நம் மனோசக்தி அத்தனை வலுவானது; அந்தப் பருவத்தில் நமது கற்பனைத் திறன் அந்தளவு செழிப்பானது!“ என்பதே அந்த ஆய்வின் அடிநாதச் செய்தி.


குழந்தைகளிடம் உள்ளதெல்லாம் மாசுமருவற்ற கற்பனைத் திறன். அல்பம், அபத்தம், மேதாவித்தனம் என்ற பாகுபாடெல்லாம் வகுத்துக் கொள்ளாமல் தம்மிஷ்டத்திற்கு அவர்களால் கற்பனை செய்ய முடியும்.

அவர்களுக்கு முன் தீர்மானங்கள் இருப்பதில்லை; கயமைத்தனம், களவாணித்தனம், குதர்க்கம், சூதுவாது இன்னபிற கெட்ட வார்த்தைகள் எதுவும் தெரிந்திருப்பதில்லை. கற்றுக் கொள்கிறார்கள்! காண்பது, கேட்பது என்று எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறார்கள். நல்லது, கெட்டது என்று இனம்பிரிக்காமல் கற்று உள்வாங்கிக் கொள்கிறார்கள்!

இதையெல்லாம் நாம் குழந்தைகளிடம் காணும்போது நமது மனதிற்குப் பிடித்தால் , “ஜுஜ்ஜும்மா... புஜ்ஜுக்குட்டி” என்று உச்சி முகர்ந்து கொஞ்சுகிறோம்; பிடிக்காவிட்டால் முதுகில் சாத்துகிறோம்.

ஆக, குழந்தைகளிடம் மண்டியிட்டு ஆய்ந்த ஆய்வாளர்கள் கண்டு கொண்டது, “கற்பனைத் திறன் கற்பதற்கு முக்கியம்!”

சிறந்த கற்பனைத் திறன் விரைவாகவும் எளிதாகவும் எதுவொன்றையும் கற்பதற்கு உதவி புரிகிறது. கற்பனையை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்; ஆக்கபூர்வக் கற்பனைக்கே இடமளிக்க வேண்டும். அத்தகைய ஆக்கபூர்வக் கற்பனையைத் தூண்டித் தூண்டி வளர்க்க வேண்டும். அப்படிச்செய்தால்?

நல்லது! அறிவிற்கும் மனதிற்கும் மகிழ்விற்கும் நல்லது!

சில குழந்தைகளுக்கு அசாத்தியக் கற்பனைத் திறன் இருக்கும். நானறிந்த ஒரு பெண் குழந்தை -- ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும். படு சரளமாய்க் கற்பனை மொழியொன்றில் பேசுவாள். “தத்தக்கா.. பித்தக்கா.., தட்டுத் தடுமாறி“ என்பதைப் போலெல்லாம் இல்லாமல், கேட்பவர்களுக்கு அவள் உண்மையிலேயே ஏதோ ஓர் அன்னிய மொழியில் பேசுவதைப் போலிருக்கும். அவ்வளவு துல்லியமான கற்பனை. கேட்டு அசந்திருக்கிறேன்.

குழந்தைகளின் இத்தகு கற்பனையைக் காணும் சில பெற்றோர்கள் என்னவோ ஏதோவென்று வருந்துவார்கள். வேறு சில பெற்றோர்கள் அதைச் சரியாகப் புரிந்துகொண்டு, குழந்தையை அதற்கேற்ப ஊக்குவித்து வளர்க்க....... வளர்ந்ததும் சாதனையாளன் அல்லது சாதனையாளி.

கற்பனைத் திறன் கற்பதற்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் உதவும் ஓர் அசாதரண உபகரணம்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் காலம், வெளி (time, space) ஆகியனவற்றைப் பற்றிய தமது அறிவியல் தீர்மானத்திற்குத் தம்மை விண்ணைத் தாண்டிக் கற்பனை செய்து கொண்டார். கோளங்களுக்கு இடையே கற்பனையிலேயே பயணம் செய்தார். தம்மைக் குழந்தைபோல் பாவித்து அவர் செய்து கொண்ட கற்பனைகள்தாம் அவர் சிறந்த அறிவியலாளராக உருவாக உதவின.

தவிர, வளமான கற்பனை சிறப்பான நினைவாற்றலுக்கும் முக்கியம் ஆகும்.

வயதானவர்களுக்கு நினைவாற்றல் குறைந்திருப்பது, அவர்கள் தங்களுடைய கற்பனைத் திறனைத் தேயவிடுவதால் என்கிறார்கள் உளவில் வல்லுநர்கள்.. “காப்பி சாப்பிட்டாச்சா?” என்றால் கண்ணெதிரே ஈரம் உலராமல் கப் இருக்க அவர்கள் பதிலுக்கு யோசிக்கக்கூடும்.

நம்முடைய நினைவு வங்கிகளில் தகவல்களைச் சேமித்து வைக்க, நாம் படங்களாகவே கற்பனை செய்து பதிகிறோம். “காண்டாமிருகம்” என்று நினைத்துப் பாருங்கள், கச்சாமுச்சாவென்ற சருமத்துடன் அசந்தர்ப்பமாய் மூக்கிற்கு மேலே கொம்புடன் ஒரு மிருகம்தான் மனதில் ஓடுமே தவிர “கா..ண்..டா..மி..ரு..க..ம்” என்ற எழுத்துகள் அல்ல. எவ்வளவு சிறப்பாகப் படத்தை நாம் மனக்கண்ணில் உருவாக்குகிறோம் என்பதைப் பொறுத்தே அத்தகவலை நினைவிலிருந்து மீட்பது எளிதாகிறது. கற்பனைவளம் குறைவாய் இருப்பவர்கள் மனதில் செய்திகள், தகவல்கள் பச்சக்கென்று படம் போல் ஒட்டிக் கொள்வதில்லை.

இவ்விடத்தில் நினைவில் நிறுத்த வேண்டிய முக்கியமான விஷயமொன்றுண்டு.. கற்பனை என்பது ஆரோக்கியமானதாய் இருக்க வேண்டும். இல்லையெனில் கெட்டுக் குட்டிச்சுவராகப் போக வேண்டியதுதான்.

குற்றத்திற்கும் கொடுங்கோலுக்கும் கற்பனையைப் பிரயோகித்தால், கற்பது களவு, இழப்பது மகிழ்வு! நாள்தோறும் நடைபெறும் குற்றங்களைப் பாருங்கள் – கொள்ளையாகட்டும், கொலையாகட்டும், களவொழுகுவதாகட்டும் - ஒவ்வொரு கிரிமினலும் விதவிதமாய்க் கற்பனை செய்துதானே குற்றமிழைக்கிறான்?

நல்ல வளமான கற்பனையே நமது உடலையும் மனதையும் மகிழ்வாய் வைத்துக்கொள்ள உபயோகப்படும்!

மெரீனா பீச்சில், கடலலை எதிரே அமர்ந்து, கால் நீட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டே சுண்டலும் மிளகுவடையும் தின்பதை உங்களால் உள்ளார்ந்து கற்பனை செய்ய இயலுமென்றால் உங்களால் உங்கள் மனதைத் தளர்ச்சியின்றி, பதட்டமின்றி வைத்துக் கொள்வது எளிது. அத்தகைய கற்பனையெல்லாம் ஒருவருக்குக் கடினமாய் இருப்பின் அவர் தம்மைத் தாமே ரிலாக்ஸ் செய்து கொள்வது கடினமாம்.

ஆகவே உடற்பயிற்சி போல் கற்பனைக்கும் பயிற்சியளிக்கச் சொல்கிறார்கள். கற்பனை எந்தளவு வளர்கிறதோ அந்தளவு பிரச்சனைகளைத் தீர்க்கும் சாமர்த்தியமும் நினைவாற்றலும் பெருகும்.

கற்பனையுடன் இணைந்த மற்றொரு சமாச்சாரம் இருக்கிறது – இட்லியும் சட்னியும் போல! கனவு!

கனவென்றால் பகல் கனவு, தூக்கத்தில் கானும் கனவு, வெட்டிக் கனவு அல்ல. ஆரோக்கியக் கனவு! வேறுவிதமாய்ச் சொல்வதென்றால் இலட்சியக் கனவு! கனவும் கற்பனையும் பின்னிப் பினைந்தவை.

பிராணிகள் குலத்தில் எப்படியோ தெரியாது; ஆனால் மனிதகுல வரலாற்றில் இதற்கு நிறைய முன்மாதிரிகள் உள்ளன. லியானார்டோ டாவின்ச்சி தெரியுமா? அவருக்குத் தமது பன்னிரெண்டு வயதில் கனவொன்று இருந்தது. என்னவென்று? “நான் ஒருநாள் உலகின் தலைசிறந்த ஓவியனாக உருவாவேன். அரசர்கள், இளவரசர்கள் ஆகியவர்களுக்கு இணையாய் வாழ்வேன்.” விளைவு? உலகம் வியக்க மோனோலிசா புன்னகைத்துக் கொண்டிருக்கிறாள்.

சிறுவன் நெப்போலியனுக்குக் கனவு இருந்தது. ஐரோப்பாவை மனக் கண்ணாலேயே கைப்பற்றுவான். தனது படையை எப்படி நிர்வகிப்பது, வழிநடத்துவது என்று அவன் மனதில் கனவு ஓடிக்கொண்டேயிருக்கும். அக்கனவுகள் இன்றைய பள்ளிக்கூடப் புத்தகத்திலெல்லாம் பாடமாகிவிட்டது.

அன்றைய ரைட் சகோதரர்களின் கனவு இன்று உலோகம் இறக்கைக் கட்டிப் பறக்கிறது.

ஐன்ஸ்டீன் சொன்னாராம், ”கற்பனை என்பது அறிவைவிட முக்கியமானது.”

இதைப் பெரிய திரை, சின்னத் திரை படைப்பாளிகளெல்லாம் அப்படியே ஏற்றுக் கொண்டதுதான் பிரச்சனையாகிவிட்டது. அவர்களது ஆக்கங்களில் இருப்பது கற்பனை மட்டுமே!


னம் மகிழ, தொடருவோம்...


வெள்ளி, 26 நவம்பர், 2010

மனம் மகிழுங்கள் -21

ஆழ்மன சக்தி


பனிப்பாறை (iceberg) கேள்விப்பட்டிருக்கிறீர்களா? டைட்டானிக் எனும் பெரியதொரு கப்பல் அதில் இடித்துக் கவிழ்ந்து போனதே? துருவ மண்டலங்களுக்கு நெருக்கமாயுள்ள கடல்களில் மிதக்கும். ராட்சத மலை போன்ற இவை கடல் நீர் மட்டத்துக்கு மேல் சிறு பாறைபோல் மட்டுமே தென்படும். அப்படித் தென்படுவது ஒன்பதில் ஒரு பங்கு. மீதமுள்ள எட்டுப் பங்கு? அது நீருக்குக் கீழே சமர்த்துப் பிள்ளையாய் மிதந்து கொண்டிருக்கும்.


சரி, அதற்கு என்ன இப்போ?

உணர்வு உள்ள நம் அனைவருக்கும் உள்ளுணர்வு என்று ஒன்று உண்டு. கண்ணால் யாரும் பார்த்ததில்லை எனினும் "ஆமாம், இருக்கிறது!" என்று பொத்தாம் பொதுவாய் ஒப்புக்கொள்ளும் அளவிற்கு எல்லோருக்கும் ஓர் அபிப்ராயம் உண்டு. மறுப்பாளர்கள் பண்டிகை நாளன்று தொலைக்காட்சியில் நடைபெறும் பட்டிமன்றத்திற்கு "உள்ளுணர்வு உண்மையா பொய்யா?" என்பதைத் தலைப்பாகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

இந்த உள்ளுணர்வு என்பது என்ன, அது எப்படி இயங்குகிறது, என்பதை விவரிக்கச் சொன்னால்... அது சிரமம். அதற்காகச் சாமான்யர்கள் நாம் வருத்தப்பட ஏதுமில்லை. உள்ளுணர்வு பற்றியும் அது நம்மை இயக்குவது பற்றியும் மனோவியலாளர்கள் மூளையைச் சொறிந்துக் கொண்டு நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். அதிலிருந்து சுருக்கமாய்க் காப்பி அடித்துக் கொண்டால் நமக்குப் போதும்.

"மனதின் ஆழ்மனம் சக்தி வாய்ந்தது. நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை அடைய வழிவகை செய்து விடுகிறது. அந்த ஆழ்மனதின் ஆதிக்கமும் பயனும் நம்மை முழுவதும் ஆலிங்கனம் செய்யக் கூடியது." இதுதான் சாராம்சம்!

உள்ளுணர்வெனும் அந்த ஆழ்மனச் சக்தியைத்தான் மேலே சொன்ன பனிப்பாறையை உவமையாகக் கூறி விவரிக்கிறார்கள். நாம் உணர்ந்த, அறிந்த நம் வெளியுணர்வு வெளியே தெரியும் பனிப்பாறை அளவே (tip of the iceberg). வலிமையான மீதம் நம்முள்ளே புதைந்திருக்கும் நம் உள்ளுணர்வு! பிரமிப்பாயில்லை?

வங்காள விரிகுடாவிலும் அரபிக் கடலிலும் பனிப்பாறைக்கு எங்கு செல்வது; எப்படிப் புரிந்து கொள்வது? எனவே நாம் வேறு சில உதாரணங்களை ஊருக்குள் தேடுவோம்.

சைக்கிள் ஓட்டப் பழகுவதற்குப் பெரும் பிரயத்தனம் தேவைப்படும்; கவனித்திருப்பீர்கள். சைக்கிளின் கைப்பிடியை ஆட்டாமல் பிடிக்க வேண்டும் என்பார்கள்; முதுகைச் சாய்க்கக் கூடாது என்பார்கள்; பேலன்ஸ் தவறாமல் பெடலை மிதிக்க வேண்டும் என்பார்கள்... விழுந்து சில்லறை எண்ணாமல் சைக்கிள் ஓட்டக் கற்றவர்கள் மிகவும் குறைவாகவே இருக்க வேண்டும். அப்படிப் பலவற்றையும் மனமானது உள்வாங்கி, உடலானது செயல்படுத்தி, சைக்கிளானது நம்மைச் சுமந்து கொண்டு ஓடத் துவங்கியபின், கற்பதற்குச் சிந்தனை செலுத்திய அத்தனையும் பொருட்டின்றி மறைந்துபோய், சைக்கிள் ஓட்டனுமா நீங்கள் ஏறி உட்கார்ந்தால் போதும்; செயல்படுத்துவது உங்கள் உள்மனமே. உங்கள் வெளியுணர்வு பழகி உணர்ந்த அனைத்தும் உள்மனதில் ஆழப்பதிந்து, நீங்கள் சைக்கிளில் எவ்விதச் சிரமமுன்றிச் சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரையும் அதைத் தின்று கொண்டிருக்கும் மாட்டையும் பார்த்துக்கொண்டே செல்ல வேண்டியதுதான்.

பிரக்ஞையுடன் கூடிய நமது சிந்தனைகள், நமது உடலின் செயல்பாடுகள், மனோபாவம், செயல் திறன் ஆகியன எல்லாம் உள்ளுணர்வுக்குள் பலமாய் பதிக்கப்பட்டுவிடுகின்றன. இவை நம்முடைய உள்ளுணர்வை வடிவமைக்கின்றன. அது தன்னிச்சையாய் நம்மை இயக்குகிறது.

அதாவது?

படுவேகமாய்த் தட்டச்சு செய்யும் திறன் கொண்ட ஒருவரிடம் எந்த எழுத்து எங்கிருக்கிறது என்று கேட்டால் அவரால் உடனே சொல்ல முடியாது. கீ போர்டை நைஸாய் அவர் எட்டிப் பார்க்க வேண்டியிருக்கும். அல்லது மேசையில் தன் விரல்களால் தட்டச்சுவது போல் பாவனை செய்தே சொல்ல வேண்டியிருக்கும். வியப்பாயில்லை? இது உள்ளுணர்வின் மகிமை என்கிறார்கள்.

க்ளாட் பிரிஸ்டல் (Claude Bristol) தன்னுடைய The Magic of Believing என்ற புத்தகத்தில், "உள்ளுணர்வு நம் வலிமைக்கு மூலம்" என்கிறார்.

நாம் நடப்பது, பேசுவது, சட்டென சில பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது, சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென நம்மை நோக்கி ஓடிவரும் எருமை மாட்டினிடமிருந்து சரேலென விலகுவது என இப்படிப் பலவற்றிற்கும் நம் மனதின் உள்ளே ஆழ்மனதில் கச்சிதமான ப்ரோக்ராம் ஒன்று அமர்ந்து கொண்டு நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது.

தினசரி நமக்கு எழும் எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியன சிறிது சிறிதாக உள்மனதில் பதிவாகிப் பதிவாகி, நம்மைத் தன்னிச்சையாய் வலிமையுடன் இயக்கிக் கொண்டே இருக்கின்றன. எந்த அளவிற்கு? நம்முடைய வெற்றி தோல்விகளின் காரணிகளை நிர்ணயிக்கும் அளவிற்கு!

உங்களது உள்ளுணர்வு உண்மையென்று நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, உங்களது உள் மனம் தயாராகியுள்ளதற்கு ஏற்பவே நீங்கள் வாழ்க்கையின் இலக்கினை அடைவீர்கள் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

அதனால்தான் "வெற்றி" என்பதைக் குறிக்கோளாய்க் கொண்டவருக்கு வெற்றியை எட்டுவதே உள்மனதின் எதிர்பார்ப்பாக மாறிப்போய், அது ஆழப் பதிந்துவிடுகிறது. அதற்கேற்ப அந்த வெற்றியின் இலக்கிற்கு அவரது ஆழ்மனம் அவரைச் செலுத்துகிறது. அதற்கு எதிர்மறையான எண்ணம் கொண்டவருக்கு மனதின் எதிர்பார்ப்பும் மாறிப்போகிறது.

ஆழ்மனம் பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் அசாதரணமான ஆற்றல் கொண்டது. ஏதோ ஒரு பிரச்சனை; என்ன செய்வதென்று தெரியாமல் தூக்கமும் வராமல் புரண்டுக் கொண்டிருப்பீர்கள். ஒருநிலையில் அலுத்துப்போய், "சரி நாளை பார்த்துக் கொள்ளலாம்" என்று தூங்கியும்போய் மறுநாள் எழும்போது திடீரென்று ஒரு வழி தோன்றியிருக்கும்.

இதையே, "ஒரு பிரச்சனைக்குத் தீர்வு காண்பதிலோ, ஏதோ ஒன்றைத் தேர்வு செய்வதிலோ குழப்பம் இருந்தால் அதை ஒத்திப்போடுங்கள்; இன்னம் உசிதம் இரவு தூங்கிவிட்டுக் காலையில் எழுந்து பாருங்கள்; சட்டெனத் தெளிவான ஒரு முடிவை நீங்கள் அடைய முடியும்," என்று நெதர்லாந்து நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தாங்கள் சமீபத்தில் நிகழ்த்திய ஆராய்ச்சியின் மூலம் மேலும் உறுதிப்படுத்துகிறார்கள்.

இது எவ்விதம் நிகழ்கிறது? இதுதான் என்று அடித்துச் சொல்ல முடியாது. மூளை என்பது மிகவும் சிக்கலான, மனிதனால் முழுதும் பிரித்துப் போட்டு ஆராய முடியாத ஒரு சதை. அது இன்னும் மனிதனுக்குப் புதிரே! எனவே வெளியுணர்வற்ற ஆழ்மன சிந்தனா நிலையினால் நிகழ்கிறது என்று மட்டும் அறிந்து கொள்ளலாம்.

மனதில் உள்ளது தானே வார்த்தையில் வரும்! மிகவும் புழக்கத்தில் உள்ள வாசகம். இங்கு அந்த மனம் ஆழ்மனம்!

நமது எண்ணங்களே நமது ஆழ்மன உணர்வை நிர்ணயிக்கின்றன. ஆழ்மனமே நம்மை நடாத்துகிறது. எனவே நமது எண்ணம் தூய்மையாய் இருப்பது,

மனதிற்கு நல்லது!

உடம்பிற்கு நல்லது!

சூழ்ந்திருக்கும் சுற்றத்துக்கும் நட்புக்கும் நல்லது.னம் மகிழ, தொடருவோம்...

புதன், 24 நவம்பர், 2010

மனம் மகிழுங்கள்-20

புவிக்கு ஈர்ப்பு விசை இருப்பதைப்போல் மனதிற்கும் ஈர்ப்பு விசை உண்டு. ஆனால் அது சற்று வித்தியாசமான ஈர்ப்பு விசை ஆகும். நீங்கள் விரும்புவது எதுவோ அதை நோக்கி உங்களை இழுக்கும்; விரும்பாதது எதுவோ அதை நோக்கியும் இழுக்கும். உங்கள் மனதை எது அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறதோ அதுதான் இந்த ஈர்ப்பு விசையின் குறியிலக்கு.


“இந்தத் தவறை மட்டும் நான் மீண்டும் செய்யக் கூடாது... இன்னொரு முறை அவன் முகத்தில் நான் முழிக்க மாட்டேன்... எங்களை மதிக்காத அந்தக் கட்சியுடன் இனி என்ன புடலங்காய்க் கூட்டணி...”

நமக்கெல்லாம் இவை, இன்னபிற ஏதோ ஒரு சந்தர்பத்தில் நன்கு பரிச்சயமான உரையாடல்கள் தாம். ஆனால் சற்றுக் கவனித்துப் பாருங்கள்………. எதெல்லாம் வேண்டாம் என்றார்களோ அதெல்லாம் முறைப்படி நடந்திருக்கும்; தவறு மீண்டும் நிகழ்ந்திருக்கும்; முகத்தில் மீண்டும் முழித்து இளித்தோ முறைத்தோ கடந்திருப்பார்கள்; அந்தக் கட்சியுடன் இந்தக் கட்சி ஒன்றிப்போய் மேடையில் கரங்கள் இணைந்து உயர்ந்திருக்கும். காரணம், அலசல் அதெல்லாம் இங்கு முக்கியமில்லை. மனது - அது எப்படி ஈர்க்கப்படுகிறது?

ஐஸக் நியூட்டன் சொல்ல மறந்த விதி மன ஈர்ப்பு விசைக்கு உண்டு. “எதை மனம் நினைக்கிறதோ, மனதை எது ஆக்கிரமிக்கிறதோ அதை நோக்கி மனம் நம்மை நகர்த்தும்.”

அந்த நகர்வு ஓர் இலக்கினை நோக்கித்தான் இருக்குமே தவிர அந்த இலக்கின் எதிர்த் திசையில் பயணிக்காது. இதென்ன புதுக் குழப்பம்? விஞ்ஞானியைத் துணைக்கு அழைக்கும்போதே நினைத்தேன் என்று ஓட வேண்டாம். மிகவும் எளிதாய் இதைப் புரிந்து கொள்ளலாம்.

“நான் ஒன்று சொல்வேன். அதை நீங்கள் கற்பனை செய்யவே கூடாது. ஒரு பூம்பூம் மாடு. அதன் கழுத்தில் மணி. முதுகில் கலர்கலராய்த் துணி. அந்த மாட்டின் கண்களில் பெரியதொரு கூலிங் க்ளாஸ்,” என்று விவரித்தால் உங்கள் மனதில் ஏற்படும் பிம்பம் என்ன? சாட்சாத் அந்த வர்ணனைக்கு ஏற்ப ஒரு மாடு. ஆரம்பத்திலேயே கற்பனை செய்யக்கூடாது என்று சொன்னது? அதை மனம் புறந்தள்ளிவிடும்.

“இதை மறக்கக்கூடாது,” என்று உங்களுக்குள் சொல்லிய எத்தனை விஷயங்களை இதுவரை மறந்திருக்கிறீர்கள். நேற்றோ, கடந்த வாரமோ, அதற்குமுன் ஏதோ ஒருநாள், “இன்னிக்கு வேலைமுடித்து சீக்கிரம் வீட்டுக்கு வாங்க; மறக்கக் கூடாது,” என்று வீட்டில் சொன்னதற்குச் சிரிக்க சிரிக்கத் தலையாட்டிவிட்டு, அதை மறந்து தொலைத்து வாங்கிக் கட்டிக் கொள்ளவில்லை?

மனமானது “மறதி“ எனும் சங்கதியை விட்டுவிலகி “மறதியில்லை” என்ற எதிர்த்திசைக்குச் செல்லாது. ஏனெனில் மனதிற்கு அப்படி ஒன்று இல்லை!

அதற்கு மாற்றாய், “நான் இதை நிச்சயம் நினைவில் வைத்துக் கொள்ளப்போகிறேன்,” என்று சொல்லிப் பாருங்கள், நடக்கும். “ஞாபகம் கொள்” என்ற இலக்கை நிர்ணயித்துக் கொண்டு மனம் அதை நோக்கி நகரும்.

இதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் சில விவரங்களைப் பார்ப்போம்.

மன நகர்வைச் சரியாகப் புரிந்துகொண்டால் நம் மனதிற்கு இடவேண்டிய கட்டளைகளும் சரி, பிறருக்கு இடவேண்டிய கட்டளைகளும் சரி மிக எளிதாகிவிடும்.

சிக்கிக்கொண்ட பட்டத்தை எடுக்க மரத்தில் ஏறியிருக்கும் சிறுவனிடம், “டேய் பார்த்துடா! விழுந்துடப் போறே,” என்று சொன்னால் அவன் தவறிக் கீழே விழ நீங்கள் உபகாரம் செய்தாச்சு.

“இன்று புத்தகத்தை எடுத்துச் செல்ல மறக்கக்கூடாது,” என்று நீங்கள் நினைத்தவுடனேயே, “அப்படியா சேதி,” என்று உங்களது மனம் மறதிக்குப் பாதி தயார்.

மனமானது பிம்பங்களின் அடிப்படையில் இயங்கும் தன்மை கொண்டது. மேலே சொன்ன பூம்பூம் மாடு ஒரு நல்ல உதாரணம். அதனால் “புத்தகத்தை மறக்கக் கூடாது” என்று நினைக்கும்போதே மறதி எனும் மாயபிம்பம் உங்கள் மனதில் உருவாகிவிடுகிறது. மனது அந்த பிம்பத்தை நோக்கி ஈர்க்கப்பட, புத்தகத்தை மறந்து விடுவீர்கள்.

“இன்று புத்தகத்தை எடுத்துச் செல்ல வேண்டும்,” என்று சொல்லிப் பாருங்கள். மனம் “ஞாபகம் கொள்“ என்ற பிம்பத்தை ஏற்படுத்திக் கொள்ளும். புத்தகத்தை ஞாபகமாய் எடுத்துக் கொள்ளும் சாத்தியம் ஏற்பட்டு விடுகிறது.

வீட்டிற்கு விருந்தினர்கள் குழந்தைகளுடன் வந்திருக்கிறார்கள். உங்கள் குழந்தைகளின் வால்தனம் போதாதென்று வந்த குழந்தைகளின் வால்தனமும் சேர்ந்து கொண்டு ஒரே ரகளை. உங்கள் பாட்டனார் வழிச் சொத்தாக ஒரு பழங்கால கடிகாரம் வீட்டின் நடுக் கூடத்தில். மிகுந்த அக்கறையும் கவலையுமாய், “பிள்ளைகளா! பார்த்து விளையாடுங்க, இந்தக் கடிகாரத்தை உடைச்சுடாதீங்க,” என்று சொன்னால் அந்தக் கடிகாரம் பேரீச்சம் பழத்திற்குத் தயாராகிவிடும்..

“சீக்கிரம் கிளம்பு, பஸ்ஸை மிஸ் பண்ணத்தான் போறோம்,” என்று கிளம்பினால் பேருந்தைத் தவறவிட உங்கள் மனது ரெடி.

இதற்கெல்லாம் என்ன செய்வது? என்ன வழி?

நெகட்டிவ்வை பாஸிட்டிவ் ஆக்க வேண்டும். தீர்ந்தது பிரச்சனை!

லூட்டி அடிக்கும் உங்கள் பிள்ளைகளிடம், “கத்தாதே! சப்தம் போடாதே!” என்பதற்குப் பதிலாய், “அமைதியாய் இரு!” என்றுதான் உபதேசம் இருக்க வேண்டும்.

அக்கறைக் குறைவாய் உண்பவரிடம் “சாம்பாரைச் சட்டையில் கொட்டிக்கப் போறே” என்று சொல்லாமல் “சாம்பாரைக் கவனமாய் தட்டில் ஊற்றிக் கொள்ளுங்கள்,” என்பதே சரியான ஆலோசனை. இவையெல்லாம் முக்கியமற்றவை போல் தோன்றலாம். ஆனால் இவை நம் வாழ்வில் நிகழ்த்தும் மாற்றம் அபாரமானது.

பல ஆண்டுகளாய்க் கார் ஒன்றை ஓட்டிக் கொண்டிருந்தீர்கள். எங்கும் சென்று இடித்ததில்லை; கீறல் இல்லை. நீங்களும் சமர்த்து; காரும் சமர்த்து. பிறகு அதை விற்றுவிட்டுப் புதிதாய் ஒரு கார் வாங்கி, அதன் புது மெருகின் கவனத்தில் “எங்கேயும் இடித்துவிடக்கூடாது,” என்று நினைத்துக் கொண்டே காரை ஓட்ட ஆரம்பிக்காமல், “நான் இந்தக் காரைப் பத்திரமாக ஓட்டப் போகிறேன்,” என்று சொல்லிக் கொண்டால் போதும்.

பரபரப்பான கிரிக்கெட் மேட்ச். அசால்ட்டாய் 96 ஓட்டம் எடுத்துவிட்டார் தொடக்க ஆட்டக்காரர். அவருடைய செஞ்சுரிக்காக அரங்கத்தில் டென்ஷன். அவருக்கும் டென்ஷன். “இந்தப் பந்தில் நான் கேட்சாகிவிடக் கூடாது,” என்று நினைக்காமல், “வா போடு! ஸிக்ஸர் அடிக்கிறேன் பார்,” என்று நினைத்தால் போதும், நூறு நிச்சயம்.

இதேதான் அனைத்திற்கும்.

“நான் வாழ்க்கையில் நொடித்து விடக்கூடாது... நான் இந்த விஷயத்தைச் சொதப்பி விடக்கூடாது...” என்பதையெல்லாம் உதறி எறிந்துவிட்டு,

“நான் முன்னேறுவேன்... சாதிக்கப் பிறந்தவனப்பா நான்... வெற்றி எனது தோஸ்த்...” என்று மனதைப் பழக்கப்படுத்திக் கொண்டால் மனம் சரியாய் நகரும்; மகிழும்!

னம் மகிழ, தொடருவோம்..

செவ்வாய், 23 நவம்பர், 2010

மனம் மகிழுங்கள்-19

இணையம், ஐஃபோன் போன்ற சங்கதிகளெல்லாம் இல்லாத ஆதி காலத்தில் வானொலி என்றொரு பொருள் இருந்தது. பல்பொடி விளம்பரம், உங்கள் விருப்பம், செய்திகள் போன்றவை தவிர சிறுவர்களுக்கென்று ஞாயிறன்று நிகழ்ச்சி ஒன்றும் இருக்கும். சிறுவர்கள் மேல் அக்கறை தொலையாமல் இருந்த காலமாதலால் நல்லதொரு சைவ நிகழ்ச்சி. அதை நடத்தும் வானொலி அண்ணா என்பவர் “சிரிச்சு கிட்டே இருங்க, சந்தோஷமா இருங்க.” என்று நிகழ்ச்சியை முடிப்பார்.

நகைச்சுவை உணர்வு மனிதர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள மிகப் பெரிய கொடை. அதன் பலன் அதைத் திறம்பட உபயோகிப்பதில் உள்ளது. நல்ல நகைச்சுவை என்ன செய்யும்? சிரிக்க வைக்கும். அந்தச் சிரிப்பை வாய்விட்டுச் சிரித்தால்? நோய் விட்டுப் போகும் என்கிறது முதுமொழி.


“சிரிப்பு ஒரு சிறந்த மருந்து” என்கிறார்கள் உளவியலாளர்கள். மனதாரச் சிரித்தால் மூளையில் என்டார்ஃபின் (endorphin) எனும் அமிலம் கிளம்பி, லாகிரி வஸ்துகள் அற்ற இயற்கையான உற்சாகத்தை அளிக்கிறதாம். உடம்பிலுள்ள சுவாச அமைப்பிற்கும் இலேசான உடற்பயிற்சி செய்த பலன் கிடைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.


நார்மன் கஸின் (Norman Cousin) எனும் அமெரிக்கப் பத்திரிகையாளர் ஒருவர் இருந்தார். பேராசிரியரும் கூட. அவருக்கு நோயொன்று ஏற்பட்டு மிகவும் படு்த்தி எடுத்தது. இதர மருந்துகளுடன் பிரதானமாய்ச் சிரிப்பையும் ஒரு மருந்தாக அவர் உபயோகித்ததையும் அது அவருக்கு எத்தகைய நிவாரணத்தை அளிதததென்பதையும் அவர் எழுதிய Anatomy of an Illness என்ற புத்தகத்தில் விவரித்துள்ளார்.


சிரிப்பு மனதிற்கு எத்தகைய இதமளிக்கிறது என்பதைப் பெரும்பாலும் நாம் அனைவரும் இயற்கையாகவே உணர்ந்திருப்போம். மனதையும் முகத்தையும் சிரிப்பு மலர வைக்கும். முகத்தை “உம்“ மென்று வைத்துக் கொண்டு சிரிக்க முடியுமா என்று முயன்று பாருங்கள். சகிக்காது!


வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவையும் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் பதற்றமின்றி அணுகி, மனம் விட்டுச் சிரிக்கப் பழகினால் மனதை நாள்தோறும் மகிழ்வாய் வைத்துக் கொள்ளலாம்.


பிரச்சனை, கவலை, சோதனை இல்லாத வாழ்க்கையென்பது யாருக்கும் இல்லை. அந்தந்த நிகழ்விற்கு ஏற்ப வாழ்க்கையை எதிர்கொண்டே ஆக வேண்டும். ஆனால் அதைத் தாண்டி எவ்வளவு விரைவில் இயல்பு நிலையை அடைகிறோம் என்பதில்தான் மன மகிழ்வின் சூட்சமம் அடங்கியிருக்கிறது.


புது கார். வாங்கி ஒருமாதமே இருக்கும். பல் துலக்க மறந்தாலும் கார் துடைக்க மறக்காமல் கவனித்துக் கொள்கிறீர்கள். ஒருநாள் ஆட்டோகாரர் ஒருவர் உங்கள் காரை ஸடைலாகக் “கட்“ செய்து இடித்து விட்டு, தவறு உங்களுடையது என்பதைப்போல் கைநீட்டியும் திட்டிவிட்டு போயே போய்விட, இறங்கிப் பார்த்தால் உங்கள் காரின் முன் பகுதி நசுங்கிய மூக்காய்க் காட்சியளிக்கிறது.


அதற்கு என்ன செய்யலாம்? ஒரு மாதம் சோறு தண்ணீர் இல்லாமல் கிடந்து மாயலாமோ?


இயற்கையாய்த் தோன்றும் வருத்தம், கோபம், ஆத்திரம் இவற்றையெல்லாம் கட்டுக்குள் கொண்டுவந்து செப்பனிட வேண்டியதைச் செப்பனிட்டுவிட்டு அடுத்த ஓரிரு நாளுக்குள் வாய் விட்டுச் சிரிக்கும் அளவிற்கு நீங்கள் தேறிவிட்டால் நடந்த முடிந்த அந்த வேண்டாத செயலும் பெரும் பிரச்சனையாகத் தெரியாது. சிரித்துக் கொண்டேகூட நண்பரிடம்அந்த நிகழ்வை நீங்கள் விவரிக்க முடியும்.


ஒரு பிரச்சனையை அடுத்து இயல்பு நிலையை அடைய ஒருவருக்கு ஒருநாள் ஆகலாம்.
பிறி தொருவருக்கு ஒருவாரம் ஆகலாம். வித்தியாசம் என்ன? முதலாமவர் ஆறு மடங்கு குறைவாய் வருத்தப்படுகிறார்!

நாமெல்லாம் மனிதர்கள். ஆசாபாசம் நிறைந்தவர்கள். சில சமயம் காரியங்கள் தவறாய் நடைபெறத்தான் செய்யும். சில கணவன்மார்களின் மனைவிகளிடம் ஓயாத வருத்தம் உண்டு. “என்னிக்குததான் இவர் ஒரு விஷயத்தை உருப்படியாய்ச் செய்திருக்கிறார்.” அதையெல்லாம் நினைத்து மாய்ந்து மறுகாமல் திருத்திக் கொண்டு சிரித்துப் பழகினால் வருத்தத்தை ஒதுக்கிவிட்டு மன மகிழ்வை எளிதில் எட்ட முடியும்.


குழந்தைகள் சிரிப்பைக் கவனித்திருக்கிறீர்களா? அந்த உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்ளாது? அதனால்தான் “பிறரை நோக்கிப் புன்னகைப்பதும் தர்மமே,” என்று உலகிற்கு வழி காட்டிய தலைவர்கள் கூறிச் சென்றனர். உங்கள் புன்னகைக்கு ஒருவர் பதில் புன்னகையை அளித்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுகிறது. அப்படி இல்லையெனில் அவரிடம் நீங்கள் வாங்கிய கடன் நிலுவையில் இருக்கலாம்.


தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த என் நண்பரொருவர் -- மனுஷருக்கு நல்ல ஹாஸ்ய உணர்வு -- தமக்குப் பள்ளியில் நிகழ்ந்த அனுபவத்தை ஒருமுறை பகிர்ந்து கொண்டார். பத்தாம் வகுப்பில் அவர் படித்துக் கொண்டிருக்கும்போது, “இனி குற்றவாளிகள் யாரும் பொய் பேச முடியாது. தலையில் ஹெல்மட் மாதிரியான கருவியைப் பொருத்தி மின்னதிர்வுகளை தலைக்குள் செலுத்தினால் குற்றவாளிகள் கடகட என்று செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு உண்மையைக் கக்கிவிடுவர்” என்று அவருடைய வாத்தியார் கூறியிருக்கிறார். உடனே இவர் எழுந்து, “ஏன் சார்! குற்றவாளி ஊமையாக இருந்தால் என்ன செய்வார்கள்?” என்றிருக்கிறார். இவருடைய நண்பர்கள் உம்முனாம் மூஞ்சியர்களாக இருக்க வாய்ப்பே இல்லை.

அதற்காக எதற்கெடுத்தாலும் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டே இருப்பதும் நல்லதன்று. “அளவிற்கதிகமான சிரிப்பு உள்ளத்தை மந்தப்படுத்தும்.” தவிரவும் உடம்பிற்கு நல்லதோ இல்லையோ, மற்றவருக்கு நம்மேல் சந்தேகத்தை ஏற்படுத்திவிடும். நம்மை வேறுவிதமான டாக்டரிடம் அனுப்பிவிடுவார்கள்.


அளவோடு சிரித்தால் வளமோடும் வாழலாம். மகிழ்வோடும் வாழலாம்.


னம் மகிழ, தொடருவோம்..

மனம் மகிழுங்கள்-18

வெயிலும் மழையும் போல இன்பமும் துன்பமும் கலந்ததே வாழ்க்கை. மாறி மாறி வரும். சில நேரங்களில் வானிலை அறிக்கை தவறாகி விடுவிதைப் போல் இவை சற்றுத் தாமதமாக மாறலாம்; ஆனால் மாறும்! எனவே துன்பம் என்பது என்ன; அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும்; மகிழ்வை எப்படித் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று சில விஷயங்களைக் கூறுகிறார்கள்.
நிச வாழ்க்கையில் எல்லாம் இன்ப மயமும் இல்லை; துன்ப மயமும் இல்லை. அனைத்தும் சரியாக அமைந்து வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கும்போது, அல்லது அப்படி நினைத்துக் கொண்டிருக்கும்போது எதிர்பாரா இடர் வரும். பிரிவு, உயிரிழப்பு, தொழில் நட்டம்! குறைந்தபட்சம் காலில் ஆணியாவது குத்திவிடும்! அப்படி நிகழும் இடர் பேரிழப்பாயிருந்தால், "எல்லாம் போச்சு! இனி வாழ்க்கையில் என்ன இருக்கு?" என்று விரக்தியின் விளிம்பிற்கே சென்று விடுவோம். ஆனால், அடுத்து சில நாளோ, மாதமோ, வருடமோ கழிந்தபின் அதிலிருந்து மீண்டு எழுந்து வரத்தான் செய்வோம்; வாழ்க்கை மாறத்தான் செய்யும்.

பெருந்துயர் என்று அன்று நினைத்ததைக் கடந்து வந்து இன்று திரும்பிப் பார்க்கும்போது அந்தத் துயரின் வீரியம் இன்று இருக்காது; கவனித்திருக்கிறீர்களா? சிலசமயம் அதை நினைத்து அசைபோட்டுச் சிரிப்பதும் நடக்கும்.

ஏன்? எப்படி? மனசு தான். வேறென்ன?

வாழ்க்கையின் இடைஞ்சலான தருணங்களில் மனம் முழுதாய் நிதானத்தைக் கடைபிடிப்பதில்லை. நம்மில் பெரும்பாலானவர்களின் மனம் பிரச்சனையை அதன் அளவைவிட அதிகமாய் உருவகித்துக் கொள்கிறது. ஆங்கிலத்தில் out of proportion என்பார்கள். எனவே அத்தகையவர்களுக்கு எதிர்காலமே கேள்விக் குறியாகி, தென்படுவதெல்லாம் பிரச்சனை, பிரச்சனை, மேலும் பிரச்சனை!

இது படு அபத்தம் என்கிறார் ஓர் உளவியலாளர்.

"என்னது, அபத்தமா? அவரவருக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும் திருகுவலியும்" என்று நாம் நினைக்கலாம்.

ஆனால் அவர் உதாரணத்துடன் விளக்குகிறார்.

அலுவலோ எதுவோ ஒரு வார காலத்திற்குப் பயணம் செல்லவேண்டியிருக்கிறது. அதற்கு ஒருவர் மூன்று பெட்டிகளில் துணிமணிகள், ஒரு பெரிய பெட்டி நிறைய சோப்பு, பேஸ்ட், பல் துலக்க ஒரு டஜன் ப்ரஷ், என்று எடுத்துக் கொண்டால் என்ன சொல்வோம்? குடும்ப சமேதராய் பயணமா என்றால் இல்லை.

"அப்படியானால் அது முட்டாள்தனம்," என்பது எளிய பதில்.

அதேதான் மனதிற்கும்! அடுத்த இருபத்தைந்து வருடத்திற்கான கவலைகளை மனதில் சுமந்து கொண்டு திரிந்தால் மனம் என்னவாகும்? அந்த மனதை நினைத்து நாம் பரிதாபப்பட வேண்டாம்? ஒருநாளைக்கு இருப்பதே இருபத்து நாலு மணிநேரம் எனும்போது, இன்றைய பொழுதிற்கும் வேண்டுமானால் கொஞ்சமாய் நாளைய பொழுதிற்கும் யோசித்தால், கவலைப்பட்டால் போதாது? அதை நாம் செய்வதில்லை.

படவேண்டிய கவலையை அளவு பிரித்துச் சிறிதாக்கிக் கொண்டால் மனம் அதற்குத் தீர்வு காண்பது எளிது. இன்று இன்றையப் பிரச்சனையைத் தீர்ப்போம், மற்றதை நாளை பார்ப்போம் என்று நினைத்தாலே பிரச்சனை பாதிக்குமேல் குறைந்துவிடும்.

அடுத்த முறை ஒரு பிரச்சனை தோன்றினால் முக்கியமாய் ஒரு கேள்வியை நம்மை நாமே கேட்டுக் கொள்ளலாம் - "இது தலைபோகும் பிரச்சனையா?"

எத்தனை முறை நம் அனுபவத்தில் தலைபோகும் பிரச்சனையைச் சந்தித்திருப்போம்? ஆனால் மனது மட்டும் ஒவ்வொரு முறையும் "தலையே போச்சு" என்றுதான் கன்னத்தில கைவைத்துக் கொள்கிறது!

"சுவாசிக்கத் தேவையான காற்று இருக்கிறதா?", "இன்று உண்பதற்குப் போதிய உணவு இருக்கிறதா?" என்பதற்கு நாம் "ஆம்" சொல்லிவிட்டால் அதிலேயே பிரச்சனை தீர்ந்து விடுகிறது. உலக உருண்டையில் இன்னும் சில பகுதிகள் உள்ளன. அங்கும் சில மனிதர்கள் வாழ்கிறார்கள். நாம் தினமும் உண்ணும் வகைவகையான உணவை யாராவது அவர்களுக்கு ஃபோட்டோவில் காண்பித்தால்தான் உண்டு! அத்தகைய அபாக்கியம் நமக்கு இல்லாத நிலையில் மற்றவையெல்லாம் அடுத்தக் கட்டப் பிரச்சனைகளே. அவை தீர்க்கத் தகுந்தவை, மறக்கத் தகுந்தவை, புறந்தள்ளக் கூடியவை என்ற வகையறாக்களில் அடங்கிவிடும். எனவே நாம் ஏன் மன மகிழ்வைப் புறந்தள்ளி வாழ வேண்டும்?

நம்முடைய அவசியத் தேவைகளை மீறிய சில்லறைப் பிரச்சனைகளுக்கெல்லாம் மனதை வருத்தி இன்பத்தைத் தொலைக்கக் கூடாது.

உற்சாக சீலர் ஒருவரை அவரின் நண்பர் தொலைபேசியில் அழைத்தார். "எல்லாம் முடிந்தது; என் தொழிலில் போட்ட என்னுடைய பணம் அத்தனையும் காலி. நான் இப்போ போண்டி, திவால்."

இவர் கேட்டார்: "உன்னால் பார்க்க முடிகிறதா?"

"நல்லாத் தெரியுது."

"நடக்க முடிகிறதா?"

"முடிகிறது."

"உன்னால் கேட்க முடிகிறது என்று என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும். இல்லையென்றால் எனக்கு போன் செய்திருக்க மாட்டாய்."

"ஆம்."

"பிறகென்ன? உன்னிடம் எல்லாம் பாக்கி இருக்கிறது. நீ தொலைத்தது வெறும் பணத்தை."

புரிகிறதோ? அதுதான் சூட்சுமம். எந்த நிலையிலும் தொலைந்தது என்னவென்பதைச் சரியாக அவதானித்துவிட்டால் மனம் மகிழ்வைத் தொலைக்காது.

இதையே சற்று மாற்றியும் சொல்லாம். "நமக்கு நடக்கவே கூடாது, அப்படி நடந்தால் நம் வாழ்க்கை முடிந்தது" என்று நாம் நம்பும் பிரச்சனை என்ன என்பதை ஒவ்வொருவரும் கேட்டு அதற்குரிய நியாயமான பதிலை மனதிலிருந்து பெற வேண்டும். அந்தப் பதிலுடன் அவரவருடைய பிரச்சனைகளை ஒப்பிட்டுக் கொண்டால் பிரச்சனையின் சரியான பரிமாணம் புலப்படும். யதார்த்த வாழ்க்கையில் நாள்தோறும் நாம் எதிர்கொள்வன பிரச்சனைகள் என்பதைவிட அசௌகரியங்களே! சிறியது முதல் பெரிய அளவிலான அசௌகரியங்கள். அதைத்தான் மனமானது மாய்ந்து மாய்ந்து உருப்பெருக்கி வருந்தி மகிழ்வைத் தொலைக்கிறது.

மனவியலாளர்கள் சில டிப்ஸ் அளிக்கிறார்கள். நாமும் முயன்று பார்க்கலாம். உடம்பில் அலர்ஜி, அரிப்பு எதுவும் ஏற்படாது என்பது உத்தரவாதம்!


* "என்னை நானே மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்கிறேனோ?" என்று உங்களை கேட்டுக் கொள்ளுங்கள். ஏதோ ஒரு விஷயத்திற்காக ஒருவாரமாய்த் தூக்கமின்றி நீங்கள் கவலைப்பட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் அதே பிரச்சனையை உங்களின் நண்பர் சட்டையே பண்ணாமல், மெது பக்கோடா தின்று காபி குடித்துக் கொண்டிருப்பார்.

* ஏதோ உலகில் உள்ளவர்கள் அனைவரும் நம்மையே கவனித்துக் கொண்டிருப்பதைப் போலவும் நம்மைப் பற்றிப் புறம் பேசவே காத்திருப்பதைப் போலவும் சிலர் நினைத்துக் கொண்டு வாழ்க்கையைப் படுசீரியஸாக ஆக்கிக் கொள்வதும் உண்டு. பக்கத்து வீட்டில் தேவையின்றி எட்டிப்பார்ப்பது, மூக்கை நுழைப்பது மனித இயல்பாக இருக்கலாம். ஆனால் அதற்காக? அவரவருக்கும் வாழ்க்கை படுபிஸியாக நகர்ந்து கொண்டிருக்க, மற்றவர்கள் குந்தவைத்து உட்கார்ந்து ஏதோ சினிமா பார்ப்பதுபோல் நம் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றெல்லாம் நினைத்து வருந்தி மகிழ்வைத் தொலைத்தல் கூடாது.* எந்தச் சிக்கலான பிரச்சனையானாலும் "இந்த நிகழ்வினால் நான் படித்த பாடம் என்ன?" என்று சுய ஆய்வு செய்து கொள்ளுதல் நல்லது. அது நமக்கு பாடம் கற்க உதவும். பக்குவம் வளரும். உற்சாக மனிதர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்விலும் அனுபவம் பெற்றுத் தங்களுடைய மகிழ்வான வாழ்க்கைக்கு அடித்தளம் அமைத்துக் கொள்கிறார்கள். அதனால் அவர்கள் செயலிலும் நடையிலும் உற்சாகம்! முகத்தில் எப்பொழுதும் சிரிப்பு. "எப்படியும் சமாளித்துவிடலாம், ஜெயித்து விடலாம்," என்பது அவர்களது ஆழ்மன நம்பிக்கை வாசகம்.

* எந்தத் தீவிரமான பிரச்சனையானாலும் "அடுத்த ஐந்து நிமிடத்திற்கு என்னால் அமைதியாய், சாந்தமாய் இருக்க முடியுமா?" என்று கேட்டுக் கொள்ளுங்கள். அப்படி அடுத்த ஐந்து நிமிடங்களைக் கடந்துவிட்டால், அடுத்த ஐந்து நிர்ணயித்துக் கொள்ளவும். இப்படி சில ஐந்துகளைக் கடந்ததுமே அந்தப் பிரச்சனை ‘ஒரு மேட்டரே இல்லை’ என்பீர்கள்.

* தொடர்ந்து ஆக்கபூர்வ வேலைகளில் மும்முரமாய் இருக்கப் பழகிக் கொள்வது மன ஆரோக்கியம் வளர்க்கும் வழியாகும். தன்னிரக்கம், அதிகமான மன உளைச்சல் இவையெல்லாம் நம்மைப் பற்றிய அளவுக்கதிகமான சிந்தனையின் பின் விளைவுகள் என்பதால் அதற்கெல்லாம் மனதிற்கு அவகாசம் அளிக்கக் கூடாது.

* இதையும் தாண்டி மற்றொன்று இருக்கிறது. தன்னலம் கருதா உதவி. பிறருக்கு உதவக் களமிறங்கினாலே பாதிக்கும் மேலான பிரச்சனைகள் தீர்ந்து விடும். நீங்கள் ஒருவருக்கு உதவி புரிந்து அதனால் அவர் முகத்தில் தோன்றும் புன்னகை இருக்கிறதே, அது உங்கள் மனதில் மகிழ்வைக் கொண்டு வந்து கொட்டும்.

கிணற்றடியில் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். முகத்தில் வருத்தம். அவ்வழியே வந்த தனபால் விசாரித்தார். தமது கைக்கடிகாரம் நீரில் விழுந்துவிட்டதாக அவர் தெரிவிக்க, அவருக்கு எப்படியும் உதவியே தீருவது என்று தோன்றியது தனபாலுக்கு. அடுத்த நொடி உடனே கிணற்றுக்குள் குதித்துவிட்டார். பெரியவருக்கு ஒரே ஆச்சரியம், "காலையில் நான் ஆற்றில் குளிக்கும்போது தவறவிட்ட கடிகாரத்திற்கு இவர் ஏன் இப்பொழுது கிணற்றுக்குள் குதிக்கிறார்?"

னம் மகிழ, தொடருவோம்.

சனி, 20 நவம்பர், 2010

மனம் மகிழுங்கள்-17

னதில் மகிழ்வில்லை என்று ஒருவர் கூறினால் என்ன அர்த்தம்? அவர் எதிர்பார்த்தபடி அவர் வாழ்க்கை அமையவில்லை; அவர் எண்ணப்படி பல விஷயங்கள் நடைபெறவில்லை என்று அர்த்தம். அவரது மகிழ்வின்மைக்குக் காரணம் தேடினால் அடிப்படை இதுவாகத்தான் இருக்கும்.. எனவே அவர் என்ன செய்கிறார்? தம் மனதில் மகிழ்விற்கு "நோ வேகென்ஸி" போர்டு மாட்டிவிட்டு வருத்தம், சோகம், அயர்வு இப்படி பலவற்றையும் வாடகையே இல்லாமல் குடியமர்த்திக் கொள்கிறார்.

சரி! எதிர்பார்ப்பு என்பது என்ன? அது வயது, பால், வாழ்க்கைத்தரம் போன்றவற்றைப் பொருத்து ஆளுக்கு ஆள் மாறுபடும் ஒன்றாகும்.

குழந்தைகளின் எதிர்பார்ப்பு ஓர் எளிய வட்டத்திற்குள் நிற்கும் பீட்ஸா, ஐஸ்க்ரீம், வீடியோ கேம்ஸ் இப்படி ஏதாவது ஓர் எதிர்பார்ப்பு அவர்களுக்கு நிறைவேறவில்லை என்றால், அடம், அழுகை, பிடிவாதம் இத்தியாதி. ..... எதிர்பார்த்தது கிடைத்துவிட்டால் பார்க்கவேண்டுமே அவர்கள் மகிழ்ச்சியை.

இதையெல்லாம் பார்க்கும் ஒரு பெண் "இதென்ன சிறுபிள்ளைத்தனம்?" என்பார். ஆனால் அவர் எதிர்பார்த்த டிஸைனில் புடவை, நகை கிடைக்கவில்லை அல்லது அதற்குக் கணவர் ஓக்கே சொல்லவில்லை என்றால் மகிழ்ச்சி தொலைந்து முகம், "உம்".

கணவர்கள் எதிர்பார்ப்பு வேறு ரகம். அரசியல்வாதிகள் எதிர்பார்ப்பு நாலு கால் ஆசனம், பணம், பினாமி பெயர்களில் சொத்து என விரியும்.. இப்படி எதிர்பார்ப்பு என்பது எண்ணற்ற வகையில் ஆளுக்கேற்ப மாறுபடும்; அது நிறைவேறாத போது அதற்கேற்ப ஏமாற்றமும் மாறுபடுகிறது; அதற்கேற்ப மன மகிழ்வும் தொலைகிறது.

இவையனைத்தும் உணர்த்தும் உண்மை - நினைத்ததெல்லாம் நிறைவேறிய முழு மனிதரென்று எவருமே உலகில் இல்லவே இல்லை என்பதையே!.

"எனவே கனவான்களே, நான் எப்பொழுது மகிழ்வடைவேன் என்றால்..."என்று ஒரு கால நிர்ணயம் செய்து கொள்வது அபத்தம். உலக வாழ்க்கை முழு நிறைவற்றது என்றானபின், சில சமயம் உற்சாகம், சில சமயம் ஏமாற்றம், சில சமயம் வெற்றி, சில சமயம் தோல்வி என்பது இயற்கை விதி.

"இன்பம் பாதி, துன்பம் பாதி, இரண்டும் சேர்ந்த கலவை நான்" என்பதுதான் வாழ்க்கை.

வாழ்க்கை என்பது நாடக மேடையாக இருக்கலாம். நாமெல்லாம் நடிகர்களாக இருக்கலாம். அதற்காக, நாடகம்போல் அனைத்துக் காட்சிகளும் முடிந்து இறுதியில் சுபம் என்று திரை இழுத்து மூடும்போது கைதட்டி மகிழலாம் என்று காத்திருந்தால், நமது வாழ்க்கை நாடகம் முடிந்திருக்கும். ஏனெனில் அது ஒரே ஒரு காட்சி மட்டுமே. மறுநாள் அடுத்தக் காட்சி கிடையாது.

பேருந்து நிலையத்தில் காத்திருந்து பேருந்து வந்ததும் ஏறி அமர்ந்து கொள்வதுபோல் மகிழ்ச்சி வந்ததும் மகிழ்ந்து கொள்ளலாம் என்பது வாழ்க்கையில் நடக்காது.

மகிழ்ச்சி என்பது ஓரிடத்தில் அமர்ந்திருக்கவில்லை நாம் நடந்து போய் அடைவதற்கு.

கவலைகளெல்லாம் முடிந்து, "அப்பாடா வந்து சேர்ந்துவிட்டோம்" என்றும் மகிழ்வடைய முடியாது.

மகிழ்வு என்பது ஒரு தீர்மானம். அந்தத் தீர்மானத்தை நாம் உளமாற எடுக்க வேண்டும். முடிந்தது விஷயம். சிக்கலெல்லாம் அந்தத் தீர்மானத்தை எடுப்பதில்தான்.

நாம் விடும் ஒவ்வொரு மூச்சும் நகரும் ஒவ்வொரு வினாடியும் சந்தேகமேயின்றி உணர்த்தும் ஒரு விஷயம் நமது வாழ்நாள் குறைந்து கொண்டே போகிறது என்பதைத்தான். பிறந்த நொடியிலிருந்து நமது நெஞ்சில் கட்டித் தொங்கவிடப்பட்டுள்ளது "கவுண்ட் டௌன்" (count down) கடிகாரம். அதிலுள்ள ஒரே சௌகரியம், கவுண்ட் டௌன் எண்ணிக்கை நமக்குத் தெரியாது என்பது மட்டுமே. ஆயினும் இதில் நாம் உணர வேண்டியது இப்புவியில் நமது அவகாசம் குறைவு என்பதையே!. புவியின் வரலாற்றையும் இன்னமும் சுற்ற அதற்குள்ள வாய்ப்பையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நமது வாழ்க்கை அவகாசம் ஒரு புள்ளி மட்டுமே.

இதைச் சரியானபடி கருத்தில் கொண்டால் போதும். நிகழ்காலத் தருணத்தை, நொடியை உபயோகமாய், மகிழ்வாய் மாற்ற முடியும். இதற்குக் குதர்க்கமாய் அர்த்தம் புரிந்து கொண்டு, "இவ்வளவு தானே அவகாசம்! ஓர் ஆட்டம் ஆடிவிடலாம்" என்று வாழ்க்கையில் கெட்டக் குத்தாட்டம் போட்டால் அடைவது மகிழ்ச்சியில்லை; அது கானல் நீர்!

உலக வாழ்க்கை முழு நிறைவற்றதே. ஆனால் உலகில் அழகும் அற்புதமும் நிறைந்துள்ளன. இறைவன் படைக்கும் போதே நிரப்பி வைத்தவை அவை. எனவே நாம் மகிழ்வாயிருக்க, வரிந்து கட்டி இறங்கி உலகில் அனைத்தையும் செப்பனி்ட்டால்தான் ஆச்சு என்று கவலைப்படாமல், நமது கண்களால் நாம் சரியான கோணத்தில் பார்த்தாலே போதுமானது. அதற்காகத் திருடன் செயினை லவட்டிக் கொண்டு ஓடும்போது, அவன் ஓடும் அழகை ரசிப்பது மடமை. தீமையைத் தவிர், தடு என்பதையும் சரியான கோணத்தில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு சிந்தனையாளர் கூறினார் - "ஒரு ரகசியம் சொல்கிறேன், நீ மனம் மகிழ வேண்டுமானால், மனம் மகிழ்."

என்ன புரிகிறது?

யாரும் நம் வீட்டுக் கதவைத் தட்டி "இந்தா மகிழ்வு" என்று இலவச டிவி, வேட்டி, சேலை போல் தரப் போவதில்லை, நாமும் கடைக்குச் சென்று ஒரு கிலோ மகிழ்வு கொடுப்பா என்று வாங்கி வரப் போவதில்லை.

எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என்பனவற்றைச் சரியான விகிதாச்சாரத்தில் புரிந்து கொண்டு, மகிழ்வு எனும் தீர்மானத்தை மனம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். எனில் மனம் மகிழலாம்.

னம் மகிழ, தொடருவோம்...

வெள்ளி, 19 நவம்பர், 2010

மனம் மகிழுங்கள்-16

கூடுவாஞ்சேரியில் சின்னதொரு தொழிற்கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்த தனபாலுக்கு வேலை போய்விட்டது. ஒருநாள் அவரை அழைத்த முதலாளி, "உலகப் பொருளாதார நிலை சரியில்லையாம். அமெரிக்காவில் வீடெல்லாம் விற்காமல், கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தாமல், பேங்க் திவாலாகிறதாம். அதனால் நமக்குத் தொழில் படுத்துவிட்டது. நான் ஆள் குறைப்புச் செய்ய வேண்டும். ரொம்ப ஸாரி. நீ இனிமேல் வேலைக்கு வரவேண்டாம்" எனக் கூலாகச் சொல்லிவிட்டார்.என்ன அநியாயம் இது? அமெரிக்காவிற்கும் கூடுவாஞ்சேரிக்கும் என்ன சம்பந்தம்?

அது பொருளாதார இலாகா; அதில் நாம் மூக்கை நுழைக்க வேண்டாம். நமக்கு முக்கியம் தனபால். அவரது எதிர் வினை - reaction.

வீட்டிற்குத் திரும்பிய தனபால் யோசித்தார். என்ன செய்யலாம்? "போகட்டும், ஒரே கம்பெனியில் குப்பை கொட்டி அலுத்துப் போய்விட்டது. புதிதாய் ஏதாவது முயல்வோம். குச்சி ஐஸ் விற்றுப் பார்க்கலாமா? டீக்கடை? எங்கு போட்டாலும் மவுசு குறையாத தொழில், அதைச் செய்வோமா?" இப்படியெல்லாம் யோசித்து, யோசித்து ஏதோ ஒன்றை அடுத்த சில நாட்களிலேயே அவர் தொடங்கி விட்டார்.

சென்னையில் மற்றொரு தொழிலதிபர். ஏகப்பட்ட சொத்து, பங்களா, கார், ஆஸ்திக்கு ஒரு மனைவி, ஆசைக்குப் பல நாயகிகள் என்று சொகுசு வாழ்க்கை. ஒருநாள் தடாலென ஸ்டாக் மார்க்கெட் தலைகீழாகத் தரையில் விழுந்தது; மனுஷன் இரவில் படுக்கச் சென்றவரைக் காலையில் பார்த்தால் மின் விசிறியில் கால்கீழாகத் தொங்கிக் கிடந்தார்.

இங்கு இருவர் எடுத்த இருவேறு முடிவுகளுக்குக் காரணம் மனம் ஓர் இழப்பை எதிர்கொண்ட பக்குவம் ஆகும். அதுதான் இரு முடிவுகளுக்கிடையேயான முக்கியமான வித்தியாசம். ஒருவர் இழப்பை மட்டுமே கண்டு துவண்டுவிட, மற்றவர் ”போனால் போகட்டும் போடா” என்று உதறிவிட்டு, அதைவிட வேறு நல்ல வாய்ப்புகளைத் தேடிக் கண்டுபிடித்து விட்டார்.

வாழ்க்கையின் நிகழ்வுகள் மட்டுமே மகிழ்ச்சியையோ துயரத்தையோ நிர்ணயிப்பதில்லை. அந்த நிகழ்வை நாம் எப்படி உள்வாங்குகிறோம்; பிறகு எப்படி எதிர் வினையாற்றுகிறோம் (react) என்பது தான் நிர்ணயிக்கும்.

"எல்லாம் எல்லை மீறிப் போச்சு! இனிச் செய்வதற்கு ஒன்றுமில்லை!" என்று நினைத்தால் நாம் அவ்விஷயத்தில் நமது கட்டுப்பாட்டை இழக்கிறோம். அந்தக் கட்டுப்பாட்டிழப்பு நமது முடிவு!

"நான் அம்பேல்!" என்று கையைத் தூக்கிவிடுவதால் ஏற்படுவது.

போராட்டம் இல்லையெனில் அது என்ன வாழ்க்கை?

மன மகிழ்வுடன் இருப்பதென்பது, எப்பொழுதுமே எளிதான ஒன்றில்லை. வாழ்க்கைப் பாதையில் காணும் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப அதன் கடுமையும் மாறுபடும். நாம் எதிர்கொள்ள வேண்டிய மிகப் பெரிய சவால் அது! சில சமயங்களில் நம்முடைய மனவுறுதி, விடாமுயற்சி, சுயக் கட்டுப்பாடு ஆகியனவற்றையெல்லாம் படையாகத் திரட்டி, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதில் உருவாவதுதான் நம் மனப் பக்குவம்.

மனப் பக்குவம் என்பதென்ன?

அதுவே தனி சப்ஜெக்ட் ஆக விரியும்.. இந்த இடத்தில் நமக்குத் தேவையான மனப் பக்குவத்தை மட்டும் பக்குவமாய்ப் பார்த்துவிடுவோம்.

இங்கு மனப் பக்குவம் என்பதன் பொருள் நமது மன மகிழ்விற்கு நாம் பொறுப்பேற்றுக் கொள்வது ஆகும்.

நம்முடைய சுற்றமும் நட்பும் சூழ்நிலையும் கூட நம் மன மகிழ்வைச் சிதைக்கக் கங்கணம் கட்டிக் களத்தில் இறங்கலாம்.

ஆனால் ஒவ்வொருவரின் மனதும் யாருடையது? அவரவருடையது!

அதன் மகிழ்வு யாருடையது? அவரவருடையது!

எனில், அதன் பொறுப்பு யாருடையது? அதுவும் அவரவருடையதே!

அப்படியானால் அவரவரும் தங்களிடம் இருப்பதில் தானே கவனம் செலுத்த வேண்டும்? அந்த மனப் பக்குவம் வர வேண்டும் என்கிறார்கள்.

மேலும் சற்று விளக்கமாய்ப் பார்ப்போம்.

நமது மனதில் ஓடக்கூடிய எண்ணங்கள் யாருடையவை?

நம்முடையவை! இன்று இதையெல்லாம் நீ நினைக்க வேண்டும் என்று யாரும் நமது மூளைக்குள், கணினியில் ஃபீட் செய்வதுபோல் கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போகவில்லையே! நம் மனதில் ஓடும் எண்ணங்களையெல்லாம் நாமாகத் தானே சிந்தித்து ஓட்டிக் கொள்கிறோம்.

எனவே நமது மகிழ்ச்சிக்கான ஆதிக்கம் நம்மிடம் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஜவுளிக் கடைகளில் பெண்கள் தேடித் தேடி நல்ல டிஸைன் துணிகளை எடுப்பது போலத் தேடித் தேடி மகிழ்வான எண்ணங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அதில நம் கவனத்தைச் செலுத்தப் பழக வேண்டும். அந்த மனப் பக்குவம் வந்து விட்டால் போதும், வாழ்க்கையின் நிகழும் பெரும்பாலான அநாவசிய நிகழ்வுகளை உதாசீனப்படுத்தி விட்டோ, நிராகரித்து விட்டோ, மனம் மகிழலாம்.

ஆனால் பெரும்பாலும் நடப்பவை என்ன? நேர்மாறானவை!

அலுவலகத்தில் ஒரு முக்கிய ப்ராஜெக்ட். இராப் பகலாய் உழைத்துச் சாதித்து விட்டீர்கள். அனைவரும் உங்களைப் பாராட்டியிருப்பார்கள். நீங்களும் மகிழ்வடைவீர்கள். ஆனால் அதில் ஒரே ஒருவர் மட்டும், பர்மா பஜாரிலிருந்து நல்ல பூதக் கண்ணாடி ஒன்று வாங்கி வந்து நெற்றியில் மாட்டிக் கொண்டு, உங்கள் ப்ராஜெக்ட்டை அலசி மேய்ந்து, தருமியிடம் நக்கீரன் சொன்னதுபோல், "உமது ரிப்போர்ட்டில் ஒரு குற்றம் இருக்கிறது!" என்று மட்டம் தட்டியோ இகழ்ந்தோ பேசிவிடுவார்.

போச்சு! எல்லாம் போச்சு!

அத்தனை பேரின் பாராட்டும் நல்வாழ்த்துகளும் மறந்துபோய், அந்தக் கீறலும் கீரனும் உங்கள் மனதை ஆக்கிரமித்துக்கொள்ள, அந்த எண்ணமே நாள், வார, மாதக் கணக்காய் உங்கள் மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும். வெற்றிகரமான 25ஆவது வாரம் போஸ்டர் ஒட்டாத குறை!

ஒரு கெட்ட அனுபவம், இகழ்ச்சி, யாரோ எவரோ போகிற போக்கில் உங்களைச் சீண்டிவிட்டுப் போகும் ஒரு பேச்சு, இப்படி ஏதாவது ஒன்று உங்கள் மனதை ஆக்கிரமித்து இடம்பிடித்துக் கொண்டால் அதன் விளைவுகள் மகிழ்வைக் கொன்றுவிடும். அதற்கு இடமளிக்கக்கூடாது. நம் மனதின் கட்டுப்பாடு நம்மிடம் தான் உள்ளது என்பதை உணர வேண்டும். அதற்கேற்பச் செயலாற்ற வேண்டும்.

நம்மில் பலரும் பாராட்டைச் சில நிமிடங்களுக்கும் இகழ்ச்சியை ஆண்டாண்டிற்கும் நினைவில் வைத்துக் கொள்கிறோம். அதன் பலன்?

நாம் குப்பை சேகரிப்பாளர்களாக ஆகிவிடுகிறோம். தன் முகத்தை குறிவைத்துத் தூக்கி எறியப்பட்ட ஷுவையே புஷ் "ஷு" எனத் தட்டிவிட்டுச் சென்றுவிட, இருபது முப்பது வருடங்களுக்கு முன் நம் மீது வீசப்பட்ட குப்பைகளையெல்லாம் பத்திரமாகச் சேகரித்து வைத்துக் கொண்டு "மறப்பேனா அதை?" என்று மல்லுக்கட்டினால் எப்படி?

"இருபது வருஷமாச்சு. இன்னிக்கும் அவன் சொன்னது மறக்கலே! என் மனசுல அப்படியே இருக்கு!" என்பவர், முந்தாநாள் எதிர் வீட்டுக்காரர் ஏதோ ஒரு விஷயத்திற்காக அவரைப் பாராட்டியதை மறந்தே போயிருப்பார். ஆனால் பழைய குப்பை அவரது மனதை அப்படியே ஆக்கிரமித்து இருக்கும்.

ஆம்; அதற்கு என்ன செய்ய வேண்டும்?

எளிய உபாயம் உண்டு. நாளைக் காலை ஆயுள் பாக்கியிருந்து எழுந்தால், ஒரேயொரு தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். அது, "ஹேப்பி! இன்று முதல் ஹேப்பி!". விவிதபாரதியில் ஒலிபரப்பாகும் பாடல் இல்லை; நீங்கள் எடுக்க வேண்டிய உண்மையான தீர்மானம்.

என்றாவது ஒருநாள் நாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தானே எல்லோரும் பிரயாசைப்படுகிறோம். அந்த என்றாவது ஏன் இன்றாக இருக்கக்கூடாது? உணர்ந்து பாருங்கள். மாற்றம் தென்படும்.

"கடுந்துயரம்", "மனப்பாரம்", "தனிமை" என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோகம் இருந்து கொண்டுதான் இருக்கும். அவையெல்லாம் தீர்ந்தபின் மகிழ்வடையலாம் என்பதெல்லாம் அல்லாமல் ஒரே ஒரு முடிவு மட்டும் தேவைப்படுகிறது. அனைத்தையும் ஒதுக்கி ஓரமாய் வைத்துவிட்டு "ஹேப்பி! இன்று முதல் ஹேப்பி!"

வாழ்வின் நிறமே மாறிவிடும்!

மன மகிழ்வுடன் வாழ்வதென்பது, பூமி மாசடைய ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே கடினமாக இருந்துவந்த செயல்தான். அதற்காக மகிழ்வைத் தொலைப்பதா?

வீட்டை அழகாய் வைத்துக்கொள்ள என்ன செய்வோம்? குப்பையைக் கடாசிவிட்டு, பயனுள்ள பொருட்களை மட்டுமே வைத்துக் கொள்வோம். அதைப் போல்தான் மன மகிழ்வும். மனதிலுள்ள குப்பையை எறிந்துவிட்டு, நல்லவற்றை மட்டுமே சுமந்தால் போதும்.

கண்ணாடி சன்னல் வழியாக இருவர் வெளிப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சன்னலுக்கு வெளியே உள்ள அழகிய தோட்டம் ஒருவரின் மனதைப் பறித்தது; அங்கிருந்த பூக்கள் புத்துணர்வூட்டின. மற்றவருக்கோ சன்னலில் படித்துள்ள அழுக்கும் பிசுக்கும் மட்டுமே கண்ணை உறுத்தியது. தோட்டமும் பூக்களும் அவர் கண்ணில் படவே இல்லை.

நாம் எதைக் காண விரும்புகிறோமோ அதையே நமது மனம் காணும். அதுதான் சூட்சமம்.

னம் மகிழ, தொடருவோம்...

ஞாயிறு, 14 நவம்பர், 2010

Egg Kothu Parotta

Ingredients:
Frozen Parotta- 2
eggs- 2
onion- 3/4(medium,sliced)
ginger garlic paste- 1/2 tsp
curry leaves- few
turmeric powder- 1/4 tsp
green chillies- 2(chopped)
tomato- 1(medium,chopped)
chicken curry powder- 1 1/2 tsp
chilli powder- 1/4 tsp
pepper- little less than 1/2 tsp
salt
corriander leaves
Procedure:
Heat tawa and cook parotta as per package directions. cool and tear it into small pieces. Heat oil in kadai and fry onions,ginger garlic paste,chillies,turmeric and curry leaves. When the onion turns golden brown, add tomato and all the masala powders. Cook until raw smell goes. Move this to the side of the kadai . Crack and pour eggs in the kadai. When it is 3/4 th done, add parotta and mix well. Add required salt. Using two spatulas mince the parottas and cook till done. Finally add corriander leaves and pepper. Blend well and serve with onion raitha.

சனி, 13 நவம்பர், 2010

மனம் மகிழுங்கள்-15

வலையைப் பற்றிக் கவலைப்படாமல் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்வதை அத்தியாயம் 13-இல் படித்தோமில்லையா? அதில் திருமணமானதும் நகை புடவை பற்றிய கவலைகள் கணவனுக்குப் புதிதாய் ஏற்படுவது பற்றிப் படித்துவிட்டு மதுரையைச் சேர்ந்த மு. ரஃபீக் என்பவர் இப்படி மின்னஞ்சல் அனுப்பியிருந்தார் - ”எப்படி சார் பக்கத்தில இருந்து பாத்த மாதிரியே எழுதுறீங்க? நானும் ஃப்ரெண்டும் பேசிக்கிட்டது அங்கு வரை கேட்டுருச்சா?”

எனக்குக் கொஞ்சமாய் டெலிபதி தெரியும் என்று ஜல்லி அடிக்கலாமா என்று யோசித்தேன்.

அதெல்லாம் பெண் தோன்றி பொன் தோன்றிய காலத்திலேயே புவியில் தோன்றிவிட்ட விதி ரஃபீக்.

என்ன விதியோ அல்ல சதியோ நிகழ்காலத்தில் மகிழ்வுடன் வாழ முக்கியமான மற்றொரு சமாச்சாரம் உண்டு.


மன்னிப்பு!

“இனி ஜென்மத்துக்கும் அவனை மன்னிக்க மாட்டேன்.”

“செத்தாலும் சரி, அவன் முகத்தில் முழிக்க மாட்டேன்.”

“நான் செய்திருக்கிற காரியத்திற்கு என்னை நானே மன்னிக்க முடியாது.”

பரிச்சயமிருக்கிறதா? வீட்டுக்கு வீடு பழக்கப்பட்ட டயலாக் இது. மேற்படி வசனங்களில் உள்ள முக்கிய உள்ளர்த்தம் என்ன தெரியுமா? பிறரையோ அல்லது நம்மை நாமோ மன்னிக்க மறுக்கிறோம். மட்டுமல்லாமல்,

“எங்கோ தவறொன்று நிகழ்ந்துவிட்டது. அதை நிவர்த்திக்க வேண்டிய முயற்சி எதுவும் நான் எடுக்க முடியாது. கடந்த காலத்திலேயே வாழ்வேன். நடந்த தவறுக்கு யாரையாவது பழி சுமத்திக் கொண்டே இருப்பேன். அல்லது என்னை நானே பழித்துக் கொள்வேன்.”

இதுதான் மன்னிக்க மறுப்பதன் உண்மை. நம்மில் பலர் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மன்னிக்க மறுப்பதன் மூலம் பிறரையோ நம்மையோ ஒரு குற்ற உணர்வுடனேயே வைத்துக் கொள்கிறோம். மனதின் ஏதோ ஒரு ஓரத்தில் அது நமக்கு வசதியாக சொகுசாக இருக்கிறது. ஆனால் அது நாளுக்குநாள் நமக்கு அதிகப்படியான மனவேதனையை அளித்து - சுமந்து திரிகிறோம்.

இதில் மற்றொரு சிக்கலான வேடிக்கை ஒன்று உள்ளது.

தன் சகலையின் மனைவியினுடைய சகோதரியின் அப்பாவை தன்னால் மன்னிக்க முடியாதென்றால் அது தன்னுடைய பிரச்சனையல்ல, அது தன் சகலையின் மனைவியினுடைய சகோதரியின் அப்பாவின் பிரச்சனை எனும்படியான எண்ணம் சிலருக்கு உண்டு. உங்களுக்கும் உங்கள் மாமனார் மீது அப்படியொரு எண்ணம் உள்ளது என்றால் - மன்னிக்கவும். அது அவருடைய பிரச்சனையல்ல, உங்களுடைய பிரச்சனை!

“என்ன ஸார் இப்படிச் சொல்றீங்க? அவர் எத்தகைய அல்ப ஆசாமி தெரியுமா?” என்று அவர் உங்களுக்குச் சீர் அளித்த பைக்கிற்கு ஹெல்மெட் வாங்கித் தரவில்லை என்று உடனே என்னிடம் மல்லுக்கட்ட வரவேண்டாம். யோசித்துப் பாருங்கள். நீங்கள் அவரை மன்னிக்க மறுப்பதால் மனவேதனை அடைவது யார்? முதல் ஆளாக நீங்கள்தான். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நிகழ்வது என்ன தெரியுமா? நாம் யாரிடம் கோபம் கொண்டு மன்னிக்க மறுத்துக் கொண்டிருக்கிறோமோ அவர் அதை உணராவதராகவே இருப்பார். அதனால் அவர் தன்னளவில் “சோற்றைத் தின்றோமா, டிவியில் ஸீரியலைப் பார்த்தோமா” என்று சுகமாக வாழ்ந்து கொண்டிருக்க, மனதில் கிடந்து மாய்வது நீங்களாகத்தான் இருக்கும்.

உங்கள் அத்தையின் மைத்துனர் மாடியில் புதிதாய் அறையொன்று கட்டி, அதற்காக ஒரு புதுமனை புகுவிழா நடத்தி, உங்களைக் கூப்பிட மறந்துவிட்டார். ”எத்தகைய அவமதிப்பு? மனுஷரா அவர்? அவரை மன்னிக்கவே முடியாது,” என்று நீங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தால் பாதிப்பு யாருக்கு? அவருக்குத் தூக்கம் தொலையப் போகிறதா, வயிற்றைப் புரட்டப் போகிறதா, வாயில் கசப்புணர்வு ஏற்படப் போகிறதா? ம்ஹும். அவையனைத்தும் உங்களுக்குத்தான் நிகழ்ந்து கொண்டிருக்கும்.

உங்களுக்கு நீங்கள் முக்கியம், உங்கள் ஆரோக்கியம் முக்கியம், உங்கள் மன மகிழ்வு முக்கியமென்றால், அவரை மன்னிக்க வேண்டும். ஏன்? அவருக்காக அல்ல. உங்களுக்காக. ஒருவரின் உடல் நலக்குறைவிற்கு அவரது பிழை பொறுக்கா மனமும் ஒரு முக்கியக் காரணமாய் அமையும்.

பொதுவாய்ப் பிறருடைய குற்றங்குறைகளைப் பெரிதுபடுத்தி, உங்களுடைய மன வேதனைக்கு அவரைக் குற்றவாளியாக்க நீங்கள் விரும்பினால் என்னவாகிறது தெரியுமா?

நீங்கள் உங்களுடைய பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறீர்கள் என்றாகிறது.

பிறரைக் குறை சொல்லிக் கொண்டே இருப்பது நிலைமையை மோசமாக்குவதைவிட என்ன பலனைத் தரும்? மாறாய்க் குறை சொல்வதை நிறுத்திக் கொண்டால் மட்டுமே மேற்கொண்டு ஏதாவது செய்து நிலைமையைச் சீராக்க இயலும். அதனால் பிறரைக் குறை சொல்லிக் கொண்டிருப்பது - பிரச்சனைகள் எதையும் தீர்க்க விரும்பாமல் தீர்ப்பதற்கான எந்த வித நடவடிக்கையும் எடுக்க விரும்பாமல் இருக்க உதவும் கெட்ட போதை வஸ்து ஆகும்..

இதைப் படித்துவிட்டு, “என் உறவிலேயும் மன்னிக்க முடியாத சில சமாச்சாரம் நடந்து விட்டது. இங்கு எழுதியுள்ளது புரிவதைப்போல் தெரிகிறது. சரி ஸார். போகட்டும் மன்னித்து விடுகிறேன், ஆனால் ஒனறு, நடந்ததை என்னால் மறப்பது என்பது மட்டும் முடியாது,” என்று காஞ்சிபுரத்திலருந்து சுரேஷ் மின்னஞ்சல் அனுப்பலாம்.

சுரேஷ் என்ன சொல்கிறாரென்றால், “நான் கொஞ்சூண்டு மன்னித்துவிடுகிறேன் ; மிச்சத்தை மனதில் ஓரமாய் வைத்துக் கொள்கிறேன்; பின்னர் ஏதாவது சந்தர்ப்பத்தில் சொல்லிக்காட்ட அவை தேவைப்படும்.”

மன்னிக்கவும் சுரேஷ். உண்மையாய் மன்னிப்பதென்பது நம் அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்வதுவே! “மன்னிப்போம், மறப்போம்.” அவர்களுக்கு எப்படியோ இதில் நமக்கு உண்மை இருக்கிறது. மன்னிப்பதென்பது பழையதை மறப்பதுமாகும். அதுவே மேன்மை.

யாரிடம் தவறில்லை? நாமெல்லாம் வாழ்க்கையை எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? கற்றது, பெற்றது என்றதன் அடிப்படையில் தெரிந்து கொண்ட அளவு சிலாக்கியமாய் வாழ முயன்று கொண்டிருக்கிறோம். அப்படி வாழும் வாழ்க்கையில் பல தவறுகள் இழைக்கிறோம்; தவறான தகவல்களின் அடிப்படையில் சில காரியங்கள் ஆற்றுகிறோம், சில சமயம் முட்டாள்த்தனமான காரியங்கள் செய்கிறோம். யோசித்துப் பார்த்தால் அவையனைத்தையும் நாம் உணர்ந்தே செய்திருக்கப் போவதில்லை. நம் வாழ்க்கை சிறப்பாய் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் செய்திருப்போம். கண்ணைத் திறந்து கொண்டே மலையிலிருந்து கிழே குதிப்போமா என்ன?

பிறந்த குழந்தை கண்ணைத் திறந்த நொடியிலேயே, “இதோ பூமிக்கு வந்துவிட்டேன். நான் முடிந்தளவு எனது வாழ்க்கையைச் சொதப்பிக் கொள்ளப் போகிறேன்” என்று தீர்மானம செய்து கொண்டு பிறப்பதுமில்லை; வளர்வதுமில்லை. அந்தந்தத் தருணங்களில் நமக்குள்ள மன முதிர்ச்சியினாலேயே வாழ்வில் சில தவறுகள் நிகழ்ந்திருக்கும்.

ஒவ்வொரு பெற்றோரும் அவர்கள் கற்றுக் கொண்டது, வீட்டில் பெரியவர்கள் சொன்னது, மருத்துவர்கள் உபதேசித்தது என்ற தகவல்களின் அடிப்படையில் தம் குழந்தைகளை வளர்க்கிறார்கள். நாம் வளர்ந்த பிறகு நமக்குப் பிடித்தவகையில் நம்மைப் பெற்றவர்கள் வளர்க்கவில்லை என்று கோபித்துக் கொள்ள முடியுமா? அதற்காகப் பெற்றவர்களை மன்னிக்கவே முடியாது என்று தீர்மானித்துக் கொண்டு, “உங்கள் வளர்ப்பு சரியில்லை என்பதை உலகத்துக்கு நிரூபித்துக் காட்டுகிறேன் பார்,” என்று தறுதலையாக, கிரிமினலாக வாழ்ந்தால் என்னாவது?

புரிந்து கொள்ளவேண்டியது என்ன? பிறரைக் குறை சொல்வதென்பது பிரச்சனையைத் தீர்க்காது. ஒரு தவறு நிகழ்ந்துவிட்டால் அது நடந்து முடிந்துவிட்டது. சரி அடுத்து ஆகவேண்டிய நல்லதைப் பார்ப்போம் என்று நகர வேண்டும். தீர்ந்தது விஷயம்.

மனதிற்குள் அதையே அரைத்துக் கொண்டிருந்தால் நோய் தான் மிஞ்சும்.

அதெல்லாம் இருக்கட்டும்; என் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக மற்றவர் எனக்கிழைத்த அநீதியை, அக்கிரமத்தை, அட்டூழியத்தை நான ஏன் மன்னிக்க வேண்டும்? என்று கேள்வி எழலாம். நடந்த அநீதி, அக்கிரமம், அட்டூழியம் என்பதெல்லாம் கிரிமினல் விஷயங்களாக இருந்தால் அது வேறு கதை. நீங்கள் வக்கீல் வீடடிற்கு அவருடைய ஊதியத்தை பையில் எடுத்துக் கொண்டுபோய்ப் பேச வேண்டி/யிருக்கும்/ய விஷயங்கள். நாம் இங்கு சொல்ல வருவது வேறு.

சமூக வாழ்வில் மன்னிப்பு என்பது அற்புதமான செயல். நீங்கள் ஒருவரை உள்ளார்ந்து மன்னிக்க முற்பட்டுவிட்டால் உங்களிடம் ஒரு மாற்றம் ஏற்படும். மாற்றம் ஒரு தொற்று வியாதி. உலகளவில் பாடாவதி ஸ்டைலுக்கும் ஆபாச ஆடையலங்காரத்திற்கும் அது ஒரு காரணி. இங்கு உங்கள் மாற்றம் நல்ல வைரஸ்.

மன்னிப்பு மனதில் தோன்றியதுமே உங்கள் ஆத்திரம் தணிகிறது. உங்களிடம் ஒரு மாற்றம் ஏற்படுகிறது. நீங்கள் உங்கள் எதிராளியிடமும் உங்களுடைய நடவடிக்கையை மாற்றிக் கொள்கிறீர்கள். அடுத்து அவரும் அதைப் போல் உங்களிடம் அவர் அறியாமலேயே இயல்பாய் மாற ஆரம்பிப்பார். நாம் ஒரு விஷயத்தை ஆரோக்கியமான கண்ணோட்டத்தில் அணுக முயற்சி எடுத்துவிட்டாலே போதும், மற்றவர்கள் நம்முடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ப மாறுவதைக் காணலாம்.

இதுவரை கண்டது பிறர் நமக்கிழைத்த தவறுக்கு அவர்களை மன்னிப்பது.

நாம் நம்முடைய தவறுக்கு நம்மை வருத்திக் கொள்வதும் நடக்கும். எனவே நம்மை நாமே மன்னிப்பதும் முக்கியம். நம்மை நாமே எப்படி வருத்திக் கொள்கிறோம்?

நம்முள் சிலர் சுயபச்சாதாபத்தில் தங்களுடைய தவறுக்குத் தம்மையே தண்டித்துக் கொள்வதாகக் கருதித் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தம் மனதை வருத்தி வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருப்பார்கள். அத்தகைய நடவடிக்கை சிறிதாகவும் இருக்கலாம்; பெரிதாகவும் இருக்கலாம்.

· சிலர் தின்று கொழுத்து உடலைக் கெடுத்துக் கொள்வார்கள்.
· சிலர் திண்ணாமல் உடல் வருத்தி மெலிவார்கள்.
· சிலருக்கு மொடாக் குடி.
· சிலர் திட்டமிட்டுத் தங்களது உறவைத் துண்டித்துக் கொள்வார்கள்
· சிலருக்கு வறுமையில் கிடந்து மடிவோம் என்று சங்கல்பம்
· சிலருக்கு ஆரோக்கியத்தை அழித்துக் கொள்வது என்று ஆனந்தம்

இதற்கெல்லாம் அவர்களுடைய ஆழ்மனதில் ஒரு காரணம் ஒளிந்து கொண்டிருக்கும். “நான் படு கேவலமானவன்,” “நான் மோசமானவன்,” “நான் ஆரோக்கியமாய், மகிழ்வாய் வாழ லாயக்கற்றவன்.”

உலகில் பல வியாதியஸ்தர்களுக்கு “தாங்கள் ஆரோக்கியமாய் வாழ அருகதையில்லை” என்ற குற்ற உணர்வு உள்ளது என்று புள்ளிவிவரம் கூறுகிறதாம்.

நீங்கள் உங்களையே குற்றம் சொல்லி, மன மகிழ்வைத் தொலைத்து விடுவதால் என்ன பயன்? மேலும் ஓரிரு வருடங்களுக்கு உங்கள் குறைகளையே நினைத்து நீங்கள் அழுது கொண்டிருந்தால் எல்லாம் சரியாகி விடுமா? அப்படிப் பார்த்தால் ஓட்டு போட்ட குற்றத்திற்காகவே அவரவரும் அழுது மாய வேண்டியதுதான்.

முதலில் நீங்கள் உங்களை மன்னித்து, நல்லதொரு குப்பைத் தொட்டியாய்ப் பார்த்து உங்களின் குற்ற உணர்வைத் தூக்கி எறிந்து விடவேண்டியது தான். அது அவ்வளவு எளிதன்று என்று நீங்கள் சொல்லலாம். ஸார் இது உங்கள் வாழ்க்கை. அதற்காகச் சற்று கடின முயற்சி எடுப்பதில் தப்பே இல்லை.

மனைவி, கணவன், மாமனார், மாமியார், எதிர்வீட்டுக்காரர், பால்காரர், வானிலை அறிக்கை வாசிப்பவர் என்று ஒவ்வொருவரையும் குற்றம் சொல்லிக் கொண்டேயிருந்தால் அது பிரச்சனையை எவ்விதத்திலும் தீர்க்க உதவாது. வராத மழைக்காகக் குடை எடுத்துக் கொண்டு செல்ல நேர்ந்திருந்தாலும் பிறருடைய நக்கல் சிரிப்பை உதாசீனப்படுத்திவிட்டு வானிலை அதிகாரியை மன்னித்து விடுங்கள்.


னம் மகிழ, தொடருவோம்...