வியாழன், 26 மே, 2011

வாழைத்தண்டு ரசம்

தேவையானவை:

வாழைத்தண்டு 1/2 அடி துண்டு ஒன்று

துவரம்பருப்பு 1/2 கப்

தக்காளி 2

பச்சைமிளகாய் 2

மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்

கொத்தமல்லித்தழை சிறிதளவு


பொடி பண்ண:

மிளகாய் வற்றல் 2

மிளகு 1 டீஸ்பூன்

சீரகம் 1 டீஸ்பூன்

-------

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்

பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை ஒரு கொத்து

--------

செய்முறை:

வாழைத்தண்டை பொடியாக நறுக்கிக்கொண்டு சிறிது தண்ணீர் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் துவரம்பருப்போடு (இரண்டையும் தனித்தனி அடுக்கில்) வைத்து வேகவைக்கவும்.

மிளகாய் வற்றல்,மிளகு,சீரகம் மூன்றையும் சிறிது எண்ணையில்வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.
தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பச்சைமிளகாயை நீட்ட வாக்கில் கீறிக்கொள்ளவும்.
------
குக்கரில் இருந்து எடுத்த வாழைத்தண்டை அதிலிருந்த தண்ணீருடன் மிக்சியில் நன்கு அரைத்து வடிகட்டவேண்டும்.

வெந்த துவரம்பருப்பை நன்றாக கடைந்துகொண்டு அதனுடன் வாழைத்தண்டு சாறு,தக்காளி,பச்சைமிளகாய்,அரைத்த பொடி,தேவையான உப்பு

எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கொதிக்கவைக்கவேண்டும்.

கடைசியில் கடுகு,பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை தாளித்து அரிந்த கொத்தமல்லித்தழையை சேர்க்கவும்

செவ்வாய், 24 மே, 2011

மனம் மகிழுங்கள் - 41 : குறையற்ற மனம் - அளவற்ற மகிழ்வு

நாம் என்ன செய்தாலும் அதில் மகிழ்வடைகிறோமா; மனம் மகிழ்வடைகிறதா என்பது முக்கியம். அந்தச் செயல் தப்புச் செயலாய் இருக்கக்கூடாது என்பது அதைவிட முக்கியம். “ஜட்ஜய்யா! கொலை செய்வது மகிழ்வளித்தது; அதனால் கழுத்தை அறுத்தேன்” என்றால் நீதிபதி கழுத்திற்குத் தீர்ப்பு எழுதி விடுவார்.

ஒருவர் உத்தியோகம் செய்கிறார்; ஆனால் அதில் அவருக்கு அறவே விருப்பமில்லை; அவருக்குச் சம்பந்தமில்லாத வேலை. இன்னொருவர் - அவரது தகுதிக்கேற்ற ஊதியமில்லை; விருப்பத்திற்கேற்ப ஓய்வோ விடுமுறையோ கிடைப்பதில்லை. மனம் லயிக்கும் கலை, விளையாட்டு எதையும் கற்க இயலவில்லை; மனதிற்குப் பிடித்த காரியம் எதுவும் செய்ய முடியவில்லை; இல்லை... முடியவில்லை... என்று ஏகப்பட்ட ‘லை’ களுடன் ஒவ்வொருவருக்கும் தனிமை; மன அழுத்தம்; விரக்தி.

ஒருவர் இத்தகைய பரிதாபகர நிலைக்கு ஆட்பட்டுவிடுவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன.

பட்டியல்!

அவர் மனதில் உருவாக்கி வைத்திருக்கும் பட்டியல்!

அரசாங்கத்தின்மீது குறை; மனைவி மீது குறை; தம் குழந்தைகளின் மீது குறை; நாள் நட்சத்திரத்தின் மீது குறை; முதலாளி மீது குறை; பொருளாதாரம், தம் துரதிருஷ்டம், குறைவான கல்வித் தகுதி, மாமன், மச்சான், மாமனார் என்று குறை... குறை... கூடை நிறையக் குறை.


குறைகளில் நியாயம் இருக்கலாம்; அநியாயத்திற்கு அபத்தக் களஞ்சியமாக இருக்கலாம். அதன் அலசல் இங்கு கருப்பொருளன்று.

இந்தக் குறைகளெல்லாம் சேர்ந்து சேர்ந்து அவரது மனதில் ஒரு தீர்மானம் ஏற்பட்டு விடுகிறது. வாழ்க்கையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம். ‘குறைகள் என் வாழ்க்கையில் வற்றாத ஊற்று என்றாகிவிட்டது. எனவே நான் வாழ்க்கையில் துயருற்றுக் கிடக்க எனக்குப் போதுமான நியாயம் இருக்கிறது...’ என்று விரக்தி! கன்னத்தில் கை!

தப்பு! இது பெரும் தப்பு! நமது எண்ணத்திற்கு ஏற்பவே வாழ்க்கை அமைகிறது. செயலுக்கு ஏற்பவே முடிவு அமைகிறது.

முழ நீளத்திற்கோ, சென்னையின் நூறடி ரோடு அகலத்திற்கோ உங்களிடம் குறைகளின் பட்டியல் இருக்கலாம். அவை வெற்று லிஸ்ட்! இணைய விரும்பும் கட்சியுடன் தொகுதி உடன்பாடு ஏற்படாமல் இருக்க, தன்னிஷ்டத்திற்குத் தயாரித்துக் கொள்ளும் வேட்பாளர் பட்டியல் போல் அது உபயோகமற்ற பட்டியல். நீங்கள் விரும்பியவாறு உங்களால் உங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள இயலாவிட்டால், விரும்பிய செயல் புரிய இயலவிலலை என்றால், எத்தகைய சாக்குப்போக்குச் சொல்லியும் பயனில்லை.

ஏன்?

தலையைச் சுற்றிப் பாருங்கள்; அல்லது ஊரைச் சுற்றிப் பாருங்கள். நொடிதோறும் எத்தனை பேர் எத்தனை சவால்களை வென்று கொண்டிருக்கிறார்கள்?

கல்வித் தகுதி இல்லாதவர் கூடச் சாதனையின் விலாசத்தைச் சுமந்து கொண்டு திரிகிறார்.

‘உலகப் பொருளாதாரமே சுணங்கிக் கிடக்கிறதாம்; அதனால் நான் இன்று வேலைக்குப் போக மாட்டேன்’ என்றெல்லாம் மனைவியிடம் வம்பு பண்ணாமல் சிரமப்பட்டு உழைத்துச் சம்பாதிப்பவர் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்.

ஏகப்பட்ட பிள்ளை குட்டிகளுடன் இருப்பவர் உற்சாகமாய் இருக்கிறார்;

மனைவியுடன் சண்டைக் கோழியாய் வாழ்ந்தவர் ஒரு சந்தர்ப்பத்தில் சூட்சுமத்தைப் புரிந்து கொண்டு அணுதினமும் காதல் என்று இல்லறத்தை மகிழ்வாய் மாற்றிக் கொண்டுவிட்டார்.

தெருவுக்குத் தெரு இப்படி நிறைய உதாரணங்கள் காணலாம்.

இவர்களெல்லோரும் நமக்கு என்ன உணர்த்துகிறார்கள்? வாழ்க்கையில் அவர்கள் அவர்களுக்கான தேவைகளைச் சாதிக்க நினைத்தார்கள். அதைச் சாதிப்பது முக்கியம் என்று தங்களது மனவோட்டத்தை ஒருமுகப்படுத்திக் கொண்டார்கள். அதில் லயித்துச் செயல்பட்டார்கள். அவ்வளவுதான்!

சூழ்நிலைகளையும் மக்களையும் நாம் குறை சொல்லிக் கொண்டேயிருந்தால் நமது மனோபாவம் மாறிவிடும் அதற்கேற்ப நமது மன மகிழ்வின் விகிதாச்சாரம் நேரெதிராய் அமைந்துவிடும். எந்த அளவு குறையோ அந்த அளவிற்கு மன மகிழ்வு குறையும்.

நமக்கு வாழ்க்கை என்பது ஒரு முறையே. அந்த ஒரேயொரு வாய்ப்பில் ‘என்னால் ஏன் மன மகிழ்வுடன் இருக்க முடியவிலலை’ என்று குறைகளின் பட்டியலைப் பக்கம் பக்கமாய் எழுத ஆரம்பித்தால், விஷயம் ஒன்று மட்டுமே!

நீங்கள் மன மகிழ்வடைய முயலவில்லை.

அதையெல்லாம் ஓரமாய் ஒதுக்கிவிட்டு மகிழ்வுடன் வாழ்வதற்கான வழிவகைகளைத் தேடினால் போதும். உங்கள் மனம் தயாராகிவிடும். கொஞ்சம் முயன்று பாருங்கள். “அட! மனம் மகிழத் தயார்” என்பதை உணர்வீர்கள்.

Thanks to : www.inneram.com

திங்கள், 2 மே, 2011

ஹம்மூஸ்

இது அரபு நாட்டில் சாண்ட் விச் மற்றும் குபூசுக்கு தொட்டு சாப்பிடுவது, சட்னி மாதிரி இருக்கும்.

வெள்ளை கொண்டை கடலை - ஒரு கப்
வெள்ளை எள் வருத்தது - இரண்டு மேசை கரண்டி
பூண்டு - ஆறு பல்
ஆலிவ் ஆயில் - முன்று மேசைகரண்டி
உப்பு - தேவைக்கு
எலுமிச்சை பழ சாறு - இராண்டு தேக்கரண்டி


கொண்டை கடலையை எட்டு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து மசிக்கவும்.
பூண்டை வேகவைத்து மசித்து கொள்ளவும். முதலில் மிக்சியில் வருத்தஎள்ளை பொடித்து கொண்டு பிறகு ,பூண்டு ,கொண்டை கடலையை மையாக அரைக்கவும்.

இப்போது ஒரு பவுளில் அதை வழித்து வைத்து அதில் ஆலிவ் ஆயில்,உப்பு, லெமென் ஜூஸ் கலந்து சாப்பிடவும்.

மனம் மகிழுங்கள் -40- கேளுங்கள் ராசாவே!


நாம் விரும்புவதை அடைய வேண்டுமானால் கேட்க வேண்டுமாம். ‘கேட்டுப் பெறு’ என்கிறார்கள்.

‘என்ன கேட்க வேண்டும்; எதைக் கேட்க வேண்டும்’ என்கிறீர்களா?

நம்மிடம் பொதுவாய் ஒரு குணம் உண்டு. யாரிடமும் எதையும் கேட்கக் கூச்சம். கூர்ந்து ஆராய்ந்து, கூறு போட்டு அதைத் தயக்கம், பயம் என்று விதவிதமாகவும் சொல்லலாம்.

அதே நேரத்தில் நேர் எதிர்மாறாய், எங்கெல்லாம் கேட்கக்கூடாதோ அங்கெல்லாம் கூச்சம் மறந்து போகும்!

லஞ்சம், கமிஷன், டொனேஷன், எதற்கெடுத்தாலும் இலவசம் இத்தியாதி. இதையெல்லாம் பார்த்து ‘ஆமாமாம், இந்த நாடே உருப்படாது’ என்று சலித்துக் கொள்பவர்கள் பெண் வீட்டில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு, டௌரி, சீர், செனத்தி, கார், நகை, நட்டு, லொசுக்கு என்று கேட்க வெட்கப்படுவதில்லை.

வேடிக்கையாய் இல்லை?

கேட்டுப் பெறுதல் நம் உலக வாழ்வின் செயல்பாடுகளுக்கு, சாதனைகளுக்கு அவசியம். ஆனால் அதை முறையாய்ப் பின்பற்றாமல் போவதில் நிகழ்கிறது பிழை.

வாழ்க்கையில் நாம் வேண்டுவதெல்லாம் நடப்பதில்லை என்று பலரும் அங்கலாய்க்கிறோம்; நம்பிக்கை இழக்கிறோம். ஆனால் நமக்குத் தேவையான உதவிகளை உரிமைகளை கேட்டுப்பெற ஏன் மறுக்கிறோம்; தயங்குகிறோம்?

"பிறருக்கு உதவுவது எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் எனக்கு ஏதாவது வேண்டுமென்றால்தான் பிறரிடம் கேட்கப் பிடிக்காது" ஏன் அப்படி?

நம் மனமறிந்து தாமாய் அனைவரும் நமக்கு உதவ வேண்டும் என்றால் அது சாத்தியத்திற்கு அப்பாற்பட்டது. கடைக்கு மளிகை வாங்கச் சென்று ஓரமாய்க் கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தால், "ஸார் முகத்தைப் பார்த்தால் அவருக்கு ஒரு கிலோ சர்க்கரை தேவை போலிருக்கிறது" என்று கடைக்காரர் நமக்குத் தேவையான பொருள்களைக் கட்டிக் கொடுத்துவிடுவாரா என்ன?

நமக்கு வேண்டியதை நாம் கேட்டுப்பெறுவதில் தப்பே இல்லை. அதற்குரிய நியாயங்கள் பல உள்ளன.

கேட்டுப்பெறுவது சுயமரியாதை மட்டுமன்று; சுயமதிப்பும் கூட. புருவம் உயர்கிறதோ? நாம் உரிமையுடன் பிறரிடம் உதவி கேட்கும்போது நம் மனதிலும் நாம் யாரிடம் கேட்கிறோமோ அவர்களின் மனதிலும் பரஸ்பரம் உரிமையும் சலுகையும் ஏற்படுவதைக் கவனித்திருக்கிறீர்களா? குட்மார்னிங் சொல்லிவிட்டுக் கடந்து செல்லும் பக்கத்து வீட்டுக்காரரிடம், "பாத்ரூம் கெய்ஸர் ரெண்டு நாளா வேலை செய்யலை. எனக்குத் தெரிஞசதெல்லாம் செஞ்சு பாத்துட்டேன். புரியலை" என்று சொன்னால், ஒன்று அவருக்குத் தெரிந்த ரிப்பேர் செய்வார்; அல்லது அவருக்குத் தெரிந்த மெக்கானிக், ஃபோன் நம்பர் என்று வீட்டிற்குச்சென்று எடுத்து வந்து தருவார். அதை விடுத்து ‘அந்த ஆள் போட்டிருக்கிற சட்டை எனக்குப் பிடிக்கலே. அவரிடம் சென்று உதவி கேட்பதாவது’ என்று நினைத்தால்?

தேவையான உதவிகளை வேண்டிப் பெறுவது அதற்கு நாம் தகுதியுடையவர்களே என்ற நம்பிக்கையை உங்களது மனதில் அது ஏற்படுத்துகிறது.

கேட்டுப் பெறுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. நீங்கள் பிறரிடம் உங்களது தேவைகளைத் தெரிவிக்காதபோது அவர்கள் அதை அறியாமல் போகக்கூடும். அல்லது தாமாகவே அறிந்திருந்தாலும் மறந்து போய் உங்களைத் தவிர்த்துவிடக் கூடும். விளைவு? உங்களது மனதில் ஏமாற்றம். உங்கள் மனதிலுள்ளதை நீங்கள் வெளிப்படுத்தாதபோது வயிற்றுக்குள் ஏதோ ஓர் அசௌகரியம் ஏற்பட்டுப்போய் அதன் தாக்கம் பிறகு மனதில் வந்து தங்கும்.

கேட்டுப் பெறுவது என்பது உங்களது மனதில் உள்ளதை நீங்கள் முறையுடன் வெளிப்படுத்தும் முதல் செயல். இறைவனிடம் கையேந்திக் கேட்டால்தானே பிரார்த்தனை! மனதிலுள்ளதை அறியும் இறைவனே "கேள் கொடுக்கிறேன்" என்று சொல்லும்போது மனிதர்களிடம் நம் மனதிலுள்ளதைக் கேட்கத்தானே வேண்டும்? உங்களின் முதலாளி, குடும்பம், நண்பர்கள் என்று யாரிடம் உங்களுக்கு என்னத் தேவையோ நீங்கள் அதை வெளிப்படுத்த வேண்டும். வேண்டுமானால் "இன்னிக்குப் பூரியும் தக்காளித் தொக்கும் செய்து கொடேன்" என்று மனைவியிடம் கேட்டுப் பாருங்கள். பெருமையுடன் சமைத்துப் பரிமாறுவார். கோபமாய்த் திட்டு வந்து விழுந்தால் அது வேறு பிரச்சினை.

‘நீங்கள் உதவிகள் கேட்டுப் பெறும்போது உங்களுக்கு உதவுபவர் மனதில் அது ஓர் அலாதி மகிழ்வைத் தருகிறது. அதனால் கேட்காமல் இருப்பது உங்களது சுயநலம்’ என்று திட்டுகிறார் ஓர் உளவியலாளர். ‘நீங்கள் மட்டும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறீர்கள்; அதனால் மனம் மகிழ்கிறீர்கள். எனில் அந்த வாய்ப்பைப் பிறருக்கும் அளித்து அவர்களும் மனம் மகிழ நீங்கள் உதவ வேண்டாமா?’ என்கிறார்.

யதார்த்த உலகில் மக்கள் பிறருக்கு உதவவே விரும்புகிறார்கள். உங்களுக்குத் தேவை என்று ஒன்று ஏற்படுவது தெரிந்தால் உதவுவது அவர்களுக்குப் பெருமை அளிக்கிறது. நீஙகள் உங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்து விட்டீர்கள், இப்பொழுது உங்களுக்குத் தோள் கொடுக்க ஆள் தேவை என்றால் ஓடிவந்து உதவவே அவர்களுக்கு விருப்பம் ஏற்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் சிலர் உதவி புரிவதற்கு வாய்ப்புக் கிடைக்காதா என்று பரபரப்பாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படித் தாமே முன்வந்து பிறருக்கு உதவுவதால் அது அவர்களுடைய காரியத்தில் மூக்கை நுழைப்பதாக ஆகிவிடுமோ என்ற தயக்கம் பலருக்கும் இருக்கிறது.

கர்ப்பிணிப் பெண்களைக் காணும்போது மக்களிடம் ஏற்படும் மாறுதல்களைக் கவனித்திருக்கிறீர்களா?

ஒருவர் அடித்துப் பிடித்து பஸ்ஸில் ஏறி ஸீ்ட் பிடித்திருப்பார். அப்பொழுது கூட்ட நெரிசலில் அமர இடம் இல்லாமல் நிற்கும் கர்ப்பிணியைக் கண்டால் அவரது நல்லுள்ளம் விழிப்படைந்து உடனே எழுந்து, "நீ உக்காந்துக்கோம்மா". பிரதியுபகாரமற்ற அந்த உதவி அவருக்குப் பெருமை.

மீட்டருக்குச் சூடு வைத்துக் கொதிக்கக் கொதிக்க ஓடும் ஆட்டோக்களின் முதுகில் பார்த்தால் "பிரசவத்திற்கு இலவசம்".

தொழிலோ, திருமணமோ, கார் வாங்க வேண்டுமோ, வேலை தேட வேண்டுமோ, என்ன காரியமோ - சிலர் தாங்கள் நினைத்ததை நினைத்தபடியே வெற்றிகரமாய் அடைவதைக் காணலாம். அதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, அவர்கள் தங்களுக்கு வேண்டியதை யாரிடம் எப்படிக் கேட்டுப் பெறவேண்டும் என்று அறிந்து வைத்திருப்பதே!

தேவைப்படும் உதவிகளைப் பிறரிடம் கேட்பதில் கௌரவக் குறைச்சல் இல்லை என்பதை உணர வேண்டும். இன்று பைக் ரிப்பேர் எனில் அலுவலகம் செல்ல நண்பர்களிடம் ‘லிஃப்ட்’ கேட்கிறோமில்லையா?

ஆனால் முக்கியமான ஒன்று! கேட்டுப் பெறுவதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

கேட்கக் கூடாதது யாசகம், கையூட்டு, வரதட்சணை, இலவசம் போன்றவை. ‘பெண்களிடம் வயது’ என்று வால்தனமாய்க் குறும்பர் யாரேனும் பின்னூட்டம் இடலாம். எதற்கெடுத்தாலும் பிறரைத் தொணதொணத்து ஏதாவது கிடைக்குமா என்று பிறாண்டுவது என்பதெல்லாம் கேட்டுப் பெறுவதல்ல. மக்கள் அதை விரும்புவதில்லை. பிறகு உங்களைப் பார்த்தாலே ஓட்டப் பந்தயம் ஆரம்பித்து விடுவார்கள்.

மனமறிந்து தானாய் எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைத்தால் அது சொற்பமாய் யதேச்சையாய் நடக்கலாம்; எப்பொழுதுமே நடக்காது.

எனவே, தேவைகளை, உதவிகளை, உரிமைகளைக் கேட்டுப் பெறுங்கள். ‘வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்.’

Thanks to :www.inneram.com