திங்கள், 2 மே, 2011

மனம் மகிழுங்கள் -40- கேளுங்கள் ராசாவே!


நாம் விரும்புவதை அடைய வேண்டுமானால் கேட்க வேண்டுமாம். ‘கேட்டுப் பெறு’ என்கிறார்கள்.

‘என்ன கேட்க வேண்டும்; எதைக் கேட்க வேண்டும்’ என்கிறீர்களா?

நம்மிடம் பொதுவாய் ஒரு குணம் உண்டு. யாரிடமும் எதையும் கேட்கக் கூச்சம். கூர்ந்து ஆராய்ந்து, கூறு போட்டு அதைத் தயக்கம், பயம் என்று விதவிதமாகவும் சொல்லலாம்.

அதே நேரத்தில் நேர் எதிர்மாறாய், எங்கெல்லாம் கேட்கக்கூடாதோ அங்கெல்லாம் கூச்சம் மறந்து போகும்!

லஞ்சம், கமிஷன், டொனேஷன், எதற்கெடுத்தாலும் இலவசம் இத்தியாதி. இதையெல்லாம் பார்த்து ‘ஆமாமாம், இந்த நாடே உருப்படாது’ என்று சலித்துக் கொள்பவர்கள் பெண் வீட்டில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு, டௌரி, சீர், செனத்தி, கார், நகை, நட்டு, லொசுக்கு என்று கேட்க வெட்கப்படுவதில்லை.

வேடிக்கையாய் இல்லை?

கேட்டுப் பெறுதல் நம் உலக வாழ்வின் செயல்பாடுகளுக்கு, சாதனைகளுக்கு அவசியம். ஆனால் அதை முறையாய்ப் பின்பற்றாமல் போவதில் நிகழ்கிறது பிழை.

வாழ்க்கையில் நாம் வேண்டுவதெல்லாம் நடப்பதில்லை என்று பலரும் அங்கலாய்க்கிறோம்; நம்பிக்கை இழக்கிறோம். ஆனால் நமக்குத் தேவையான உதவிகளை உரிமைகளை கேட்டுப்பெற ஏன் மறுக்கிறோம்; தயங்குகிறோம்?

"பிறருக்கு உதவுவது எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் எனக்கு ஏதாவது வேண்டுமென்றால்தான் பிறரிடம் கேட்கப் பிடிக்காது" ஏன் அப்படி?

நம் மனமறிந்து தாமாய் அனைவரும் நமக்கு உதவ வேண்டும் என்றால் அது சாத்தியத்திற்கு அப்பாற்பட்டது. கடைக்கு மளிகை வாங்கச் சென்று ஓரமாய்க் கையைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தால், "ஸார் முகத்தைப் பார்த்தால் அவருக்கு ஒரு கிலோ சர்க்கரை தேவை போலிருக்கிறது" என்று கடைக்காரர் நமக்குத் தேவையான பொருள்களைக் கட்டிக் கொடுத்துவிடுவாரா என்ன?

நமக்கு வேண்டியதை நாம் கேட்டுப்பெறுவதில் தப்பே இல்லை. அதற்குரிய நியாயங்கள் பல உள்ளன.

கேட்டுப்பெறுவது சுயமரியாதை மட்டுமன்று; சுயமதிப்பும் கூட. புருவம் உயர்கிறதோ? நாம் உரிமையுடன் பிறரிடம் உதவி கேட்கும்போது நம் மனதிலும் நாம் யாரிடம் கேட்கிறோமோ அவர்களின் மனதிலும் பரஸ்பரம் உரிமையும் சலுகையும் ஏற்படுவதைக் கவனித்திருக்கிறீர்களா? குட்மார்னிங் சொல்லிவிட்டுக் கடந்து செல்லும் பக்கத்து வீட்டுக்காரரிடம், "பாத்ரூம் கெய்ஸர் ரெண்டு நாளா வேலை செய்யலை. எனக்குத் தெரிஞசதெல்லாம் செஞ்சு பாத்துட்டேன். புரியலை" என்று சொன்னால், ஒன்று அவருக்குத் தெரிந்த ரிப்பேர் செய்வார்; அல்லது அவருக்குத் தெரிந்த மெக்கானிக், ஃபோன் நம்பர் என்று வீட்டிற்குச்சென்று எடுத்து வந்து தருவார். அதை விடுத்து ‘அந்த ஆள் போட்டிருக்கிற சட்டை எனக்குப் பிடிக்கலே. அவரிடம் சென்று உதவி கேட்பதாவது’ என்று நினைத்தால்?

தேவையான உதவிகளை வேண்டிப் பெறுவது அதற்கு நாம் தகுதியுடையவர்களே என்ற நம்பிக்கையை உங்களது மனதில் அது ஏற்படுத்துகிறது.

கேட்டுப் பெறுவது ஆரோக்கியத்திற்கு நல்லது. நீங்கள் பிறரிடம் உங்களது தேவைகளைத் தெரிவிக்காதபோது அவர்கள் அதை அறியாமல் போகக்கூடும். அல்லது தாமாகவே அறிந்திருந்தாலும் மறந்து போய் உங்களைத் தவிர்த்துவிடக் கூடும். விளைவு? உங்களது மனதில் ஏமாற்றம். உங்கள் மனதிலுள்ளதை நீங்கள் வெளிப்படுத்தாதபோது வயிற்றுக்குள் ஏதோ ஓர் அசௌகரியம் ஏற்பட்டுப்போய் அதன் தாக்கம் பிறகு மனதில் வந்து தங்கும்.

கேட்டுப் பெறுவது என்பது உங்களது மனதில் உள்ளதை நீங்கள் முறையுடன் வெளிப்படுத்தும் முதல் செயல். இறைவனிடம் கையேந்திக் கேட்டால்தானே பிரார்த்தனை! மனதிலுள்ளதை அறியும் இறைவனே "கேள் கொடுக்கிறேன்" என்று சொல்லும்போது மனிதர்களிடம் நம் மனதிலுள்ளதைக் கேட்கத்தானே வேண்டும்? உங்களின் முதலாளி, குடும்பம், நண்பர்கள் என்று யாரிடம் உங்களுக்கு என்னத் தேவையோ நீங்கள் அதை வெளிப்படுத்த வேண்டும். வேண்டுமானால் "இன்னிக்குப் பூரியும் தக்காளித் தொக்கும் செய்து கொடேன்" என்று மனைவியிடம் கேட்டுப் பாருங்கள். பெருமையுடன் சமைத்துப் பரிமாறுவார். கோபமாய்த் திட்டு வந்து விழுந்தால் அது வேறு பிரச்சினை.

‘நீங்கள் உதவிகள் கேட்டுப் பெறும்போது உங்களுக்கு உதவுபவர் மனதில் அது ஓர் அலாதி மகிழ்வைத் தருகிறது. அதனால் கேட்காமல் இருப்பது உங்களது சுயநலம்’ என்று திட்டுகிறார் ஓர் உளவியலாளர். ‘நீங்கள் மட்டும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று நினைக்கிறீர்கள்; அதனால் மனம் மகிழ்கிறீர்கள். எனில் அந்த வாய்ப்பைப் பிறருக்கும் அளித்து அவர்களும் மனம் மகிழ நீங்கள் உதவ வேண்டாமா?’ என்கிறார்.

யதார்த்த உலகில் மக்கள் பிறருக்கு உதவவே விரும்புகிறார்கள். உங்களுக்குத் தேவை என்று ஒன்று ஏற்படுவது தெரிந்தால் உதவுவது அவர்களுக்குப் பெருமை அளிக்கிறது. நீஙகள் உங்களாலான அனைத்து முயற்சிகளையும் செய்து விட்டீர்கள், இப்பொழுது உங்களுக்குத் தோள் கொடுக்க ஆள் தேவை என்றால் ஓடிவந்து உதவவே அவர்களுக்கு விருப்பம் ஏற்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் சிலர் உதவி புரிவதற்கு வாய்ப்புக் கிடைக்காதா என்று பரபரப்பாகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அப்படித் தாமே முன்வந்து பிறருக்கு உதவுவதால் அது அவர்களுடைய காரியத்தில் மூக்கை நுழைப்பதாக ஆகிவிடுமோ என்ற தயக்கம் பலருக்கும் இருக்கிறது.

கர்ப்பிணிப் பெண்களைக் காணும்போது மக்களிடம் ஏற்படும் மாறுதல்களைக் கவனித்திருக்கிறீர்களா?

ஒருவர் அடித்துப் பிடித்து பஸ்ஸில் ஏறி ஸீ்ட் பிடித்திருப்பார். அப்பொழுது கூட்ட நெரிசலில் அமர இடம் இல்லாமல் நிற்கும் கர்ப்பிணியைக் கண்டால் அவரது நல்லுள்ளம் விழிப்படைந்து உடனே எழுந்து, "நீ உக்காந்துக்கோம்மா". பிரதியுபகாரமற்ற அந்த உதவி அவருக்குப் பெருமை.

மீட்டருக்குச் சூடு வைத்துக் கொதிக்கக் கொதிக்க ஓடும் ஆட்டோக்களின் முதுகில் பார்த்தால் "பிரசவத்திற்கு இலவசம்".

தொழிலோ, திருமணமோ, கார் வாங்க வேண்டுமோ, வேலை தேட வேண்டுமோ, என்ன காரியமோ - சிலர் தாங்கள் நினைத்ததை நினைத்தபடியே வெற்றிகரமாய் அடைவதைக் காணலாம். அதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, அவர்கள் தங்களுக்கு வேண்டியதை யாரிடம் எப்படிக் கேட்டுப் பெறவேண்டும் என்று அறிந்து வைத்திருப்பதே!

தேவைப்படும் உதவிகளைப் பிறரிடம் கேட்பதில் கௌரவக் குறைச்சல் இல்லை என்பதை உணர வேண்டும். இன்று பைக் ரிப்பேர் எனில் அலுவலகம் செல்ல நண்பர்களிடம் ‘லிஃப்ட்’ கேட்கிறோமில்லையா?

ஆனால் முக்கியமான ஒன்று! கேட்டுப் பெறுவதைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

கேட்கக் கூடாதது யாசகம், கையூட்டு, வரதட்சணை, இலவசம் போன்றவை. ‘பெண்களிடம் வயது’ என்று வால்தனமாய்க் குறும்பர் யாரேனும் பின்னூட்டம் இடலாம். எதற்கெடுத்தாலும் பிறரைத் தொணதொணத்து ஏதாவது கிடைக்குமா என்று பிறாண்டுவது என்பதெல்லாம் கேட்டுப் பெறுவதல்ல. மக்கள் அதை விரும்புவதில்லை. பிறகு உங்களைப் பார்த்தாலே ஓட்டப் பந்தயம் ஆரம்பித்து விடுவார்கள்.

மனமறிந்து தானாய் எல்லாம் நடக்க வேண்டும் என்று நினைத்தால் அது சொற்பமாய் யதேச்சையாய் நடக்கலாம்; எப்பொழுதுமே நடக்காது.

எனவே, தேவைகளை, உதவிகளை, உரிமைகளைக் கேட்டுப் பெறுங்கள். ‘வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்.’

Thanks to :www.inneram.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக