நண்பர்களே படித்து பாருங்கள்
வாயில் பல்லெல்லாம் போன பிறகும் ஓயாமல் தஸ்-புஸ்ஸென்றும்… பக்..பக்கென்றும் எனக்கு தலை சுற்றி, பித்தம் தலைக்கேறி, வாந்தி வரும் அளவுக்கு பேசியே கொல்லும் தாத்தாவிடமிருந்து பதுங்கி ஒளிந்தோடிய போது வராத உணர்வு,
"காலாட்டாதேடி. உறவு பிரிஞ்சிரும்" என்று பாட்டி சொல்லும் போது "பேசிப் பேசி சும்மா தொளைக்காத பாட்டி" என்று சள்ளென்று விழுந்து போன போதும் ஏற்படாத உணர்வு,
"மை பொட்டு வச்சுகாதேடி, மாமனுக்கு ஆகாது" என்று வைய்யும் (திட்டும்) அத்தையிடம் "சரி சரி. போரும்" என்ற என் அகம்பாவம் தலைவிரித்து ஆடிய போது ஏற்படாத உணர்வு,
அம்மா "ஈரத் தலைய வாராத. சனியன் பிடிக்கும்" என்ற போது, "போம்மா. சும்மா அறுக்காத" என்ற என் திமிர் பேசியபோதும் ஏற்படாத இந்த உணர்வு,
காலையின் அலுவலக அவசரத்தில் நான் ஓடிக்கொண்டிருக்க, என் மாமியார் ஒவ்வொரு கீரையாக அரைக்கீரையைத் தட்டித் தட்டி ஆய்ந்து வைக்கும் போது "இவ்வளோ மெள்ளமா செஞ்சா லேட்டாயிடும். நைட் செஞ்சுக்கலாம்" என்ற போது "ஏன்? இருக்குற தரித்திரம் போதாதா? ராத்திரி கீரை செஞ்சு வேற கொண்டு வரணுமா?" என்ற போது அதில் இருந்த உள்குத்தான சொல்லம்பு மட்டும் புலப்பட்டு, உள்ளுக்குள் குமைந்த போது ஏற்படாத இந்த உணர்வு,
"அப்படிச் செய்யாதேடி மகாலக்ஷ்மி போயிடுவா" என்றெல்லாம் மிரட்டிக் கொண்டே அவர்கள் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால் இன்னும் நிறையா தெரிஞ்சு கொண்டிருக்கலாமே என்ற உணர்வு வந்தன்று எங்கள் தாத்தா-பாட்டியின் பதினைந்தாவது நினைவு நாள்.
வரிசையாக ஏதேதோ பல அறிவியல் மற்றும் விஞ்ஞான புத்தக வாசிப்பின் போது, அவர்கள் கூறிய வசனங்களும் அறிவுரைகளும் தானாகவே "repeat telecast" ஆகி சுய ஒப்பீடு செய்துகொண்டு, என்னைப் பார்த்து கெக்கலித்த அந்த வினாடி
என் புத்தியை மூடியிருந்த "எனக்கெல்லாம் தெரியும். நீ சும்மாயிரு பாட்டி" என்று அறைகூவிய கர்வத்திரை விலகி, "இந்த அம்மாவே இப்படித்தான்" என்ற ஆங்காரம் அழிந்து, "ம்ச்.. அறுவை" என்ற அலட்சியம் தொலைந்து, "இதுக்கு இருக்கும் திமிரப்பாரு" என்ற வெஞ்சினம் ஒழிந்து, "எனக்குத்தான் புரியவில்லை போலருக்கு" என்ற வெட்கம் தோன்றி அவர்களின் வார்த்தைகளை மனதும் என் கையேடும் குறிக்க ஆரம்பித்து, அதைப் பற்றிய தேடலும் துவங்கியது. இன்னும் கற்றது கைமண்ணின் துகள் அளவில் கூட இல்லை என்பதும் புலப்பட்டது.
நம் மூத்தோர்கள் சொன்னதெல்லாம் மூட நம்பிக்கைகளா? அதன் பின்னணியில் அப்படி என்னதான் காரணம் இருந்திருக்கும்? அதையெல்லாம் போய் ஏன் மகாலக்ஷ்மியுடனும், மாமனுடனும், மூடத்தனமாக இணைத்தார்கள்? இன்னும் நம்மில் சிலர் அதையே பின்பற்றுவதுடன், நம் குழந்தைகளுக்கும் சொல்ல விழைவதேன்?
சில நம்பிக்கைகள் தற்போதைய சூழ்நிலைக்கு ஒத்து வராது என்பதால் அவற்றை ஒதுக்கலாமே தவிர, தற்போதைய விஞ்ஞான வளர்ச்சிகள் இல்லாத முன்பிருந்த சூழலுக்குப் பொருத்தமாயிருப்பதால் அவற்றை மூடநம்பிக்கை என்று தள்ள முடியாது என்பது என் தாழ்மையான கருத்து.
இப்போது உடனடியாக நினைவிலிருக்கும் ஒன்றிரண்டு நம்பிக்கைகளில் மூடத்தனம் ஏதும் இல்லை என்பதைக் குறிக்கிறேன்.
1. இடக்கண் துடித்தால் நல்லதா கெட்டதா?
பொதுவாகவே இந்தியாவில் இடக்கண் துடித்தால் நல்லதென்றும் வலதுகண் துடித்தால் அபசகுனம் என்றும் கூறுவார்கள். இதே போலவே சீனா, ஹவாய், ஆப்ரிக்கா போன்ற இடங்களிலும் இதே போன்ற நம்பிக்கை நிலவுகிறது.
மருத்துவ ரீதியாகப் பார்த்தால், அதீத உழைப்பு, தூக்கமின்மை, மனஅழுத்தம், நரம்புத் தளர்ச்சி, ரத்தவோட்டம் சீராக இல்லாதிருத்தல் போன்ற காரணங்கள் வலது கண்ணை துடிக்கச் செய்கின்றன.
மகிழ்ச்சி, குதூகல உணர்வு, பிட்ட்யூடரி சுரப்பி (pitutary) எண்டார்பின் (endorphins) என்ற compound சுரக்கும்போதும் இடக்கண் துடிக்கிறது.
2. மாமிசத்தை வேறு இடத்துக்கு சமைத்து/அப்படியே உணவுக்காக கொண்டு போகும் போது கரித் துண்டு (charcoal) வைத்து எடுத்து போகவேண்டும். சுடுகாடு வழியாக போகக் கூடாது.
கரி சயனைட் போன்ற கொடூரமான விஷ வாயுக்களைக் கூட உறிஞ்சிக்கொள்ளும் தன்மை உடையது. மேலும் கரித்தூள் குழந்தைகளுக்கு ஏற்படும் colic மற்றும் பெரியவர்களுக்கு ஏற்படும் உப்புசம், வாயு மற்றும் அஜீரணக் கோளாறுகளையும், அல்சர் போன்ற வயிற்று சம்பந்தமான நோய்களையும் குணமாக்கும் மருத்துவ குணம் கொண்டது. சிறு வயதிலிருந்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து கரித்துண்டை உண்டு வந்தால் அவரை விஷம் தாக்காது என்று சித்த மருத்துவத்தில் குறிக்கப்பட்டுள்ளது.
நோய் தொற்று மற்றும் இறந்தவர் உடலில் இருந்து கிளம்பும் நோய்க்கிருமிகள் போன்றவை மாமிசத்தை எளிதில் தாக்கக் கூடும்.
3. வெற்றிலை போட்டால் படிப்பு வராது / மாடு முட்டும் / நாய் கடிக்கும் இன்னும் பிற….
பன்னிரண்டு வயதுக்குள், நாக்கு (சுவை மொட்டுக்கள் / taste buds) இன்னும் முழுமையாக முதிர்ச்சி அடையாத நிலையில், வெற்றிலையின் காரம் மற்றும் வெற்றிலை நரம்புகளில் உள்ள சில இரசாயனங்கள் நாக்கின் சுவை மொட்டுக்களை கொன்று விடும். இதனால் நாக்கு தடிக்கும். பேச்சும் சரியாக வராது. அதனாலேயே படிப்பு வராது என்று சொல்லி இருக்கலாம்.
4. உப்பில் கால் பட்டால் தரித்திரம் வரும் (and so on….) உப்பைக் கொட்டினா சண்டை வரும், பிறகு இன்னொருவருக்கு உப்பு தரும் போது கையால் தரக்கூடாது. உப்பிருக்கும் பாத்திரத்தைத்தான் தரவேண்டும்.
உப்புக்கு வரி விதித்த காலங்களில் இது தோன்றி இருக்கலாம். இருந்தாலும், உணவுப் பொருட்கள் எதையுமே காலால் இடறுவதோ, உதைப்பதோ, மிதிப்பதோ அவ்வளவு நாகரீகம் இல்லை மேலும் சுகாதாரமானதும் இல்லை. விலை அதிகம் என்பதால் உப்பு கீழே சிந்தக் கூடாது, வீணாகக் கூடாது என்ற காரணத்தால் கூறப்பட்டிருக்கலாம்.
மேலும் உப்பை கையால் எடுத்தால் உப்பு நீர் விட்டுக்கொள்ளும். பிசுபிசுத்து மறுநாளே உபயோகிக்க முடியாமல் ஆகி விடும். வேண்டுமானால் ஒரு முறை செய்து பாருங்களேன்.
5. வீட்டில் யாராவது வெளியே போயிருந்தால், வீடு துடைக்கக் கூடாது / தலைக்கு குளிக்கக் கூடாது and so on…
இது முற்றிலும் sentimental தான். யாராவது வீட்டில் இறந்து விட்டால் அவரை தூக்கி இடுகாட்டுக்கு போய், தீ வைத்த பின், ஒருவர் வீட்டுக்குச் செய்தி அனுப்புவார். அப்போது வீடு முழுதும் அலம்பித் துடைத்து, வீட்டில் இருக்கும் அனைவரும் தலை முழுகுவார்கள். அதாவது அவருடனான பந்தத்தை அன்றோடு விடுவித்ததாக ஆகும். இதனால்தான் யாராவது வீட்டை விட்டு கிளம்பியதும் துடைப்பதோ தலை குளிப்பதோ கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள்.
ஊருக்குப் போகும்போது தலைக்கு எண்ணெய் வச்சு தலைகுளிக்கக்கூடாது!
முன்னெல்லாம் எண்ணெய் வைத்து தலை குளிப்பார்கள். உடல் அசதி ஏற்படும். எண்ணைக் குளியலுக்குப் பின் பயணம் செய்தால் உடல்நலக் குறைவு ஏற்படும். அதிக வேலைகள் / நடை பயணம் போன்றவற்றால் ஏற்படும் வியர்வையால் ஜலதோஷமும் உண்டாகும். இப்போதும் ஷாம்பூ போட்டுக் குளித்தாலும், பயணம் செய்தால் எனக்கெல்லாம் தலை வியர்த்து மதியத்திற்கு மேல் தலை வலிக்க ஆரம்பித்து விடுகிறது :(
எதையும் தேங்காய் உடைச்சாமாதிரி பளிச்சுன்னு நேரிடையாய் ஏனோ சொல்லாததால், இன்றும் பல நல்லப் பழக்கங்கள் பின்பற்றப் படாமல் இருக்கிறது.
காக்கை கரைந்தால் விருந்தினர் வருகை எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் பயணத்திற்கு போகுமுன் மயில் கரைந்தால் அபசகுனம் என்று சொல்வதில் என்ன இருக்கக் கூடும்? மழை வருமோ?
அதே போல வீட்டில் இருக்கிறவர்களுக்கு முதலில் உணவிட்டு விட்டு பின்தான் வீட்டில் வேலை செய்பவர்களுக்குத் தர வேண்டும், கணவரை இழந்த பெண்கள் முன்னால் வந்தால் அபசகுனம், பிள்ளை இல்லாதவர் குழந்தையைத் தூக்கினால் குழந்தைக்கு ஆயுசு குறையும் என்பதில் எல்லாம் சக மனிதரை மனிதராக மதிக்காத, அவர்கள் ஏதோ ஒரு வகையில் இழந்திருக்கும் சில மகிழ்ச்சிகளை மீண்டும் பெற்று விடக்கூடாது என்ற அஹம்பாவம் தவிர வேறெந்த காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை.
நடை முறைக்கு ஒத்துவரும், பிற மனிதரைத் துன்புறுத்தாத,ஆனால் தனிப்பட்ட ஒருவருக்கு நன்மைகள் அளிக்கக் கூடிய சில 'மூட' பழக்கங்களை காரணம் அறிந்து பின்பற்றுவதில் தவறேதும் இல்லைதானே?
6. சமையலில் துவரம் பருப்பு வேக விடும்போது மஞ்சள் பொடி போட வேண்டும்.
மஞ்சள் பொடியின் மருத்துவ குணத்தின் நலன் தினசரி சமையலில் சேரவேண்டும் என்பதற்காகக் கூறி இருக்கலாம். இல்லையென்றால் அபசகுனம் என்றெல்லாம் எதுவும் இல்லை.
7. அதிகாலைகளில் துளசி மாடம் அல்லது கோவிலைப் பிரதட்சிணம் செய்வது, அங்கப் பிரதட்சிணம் செய்வது, நின்ற இடத்திலேயே ஸ்தானப் பிரதட்சிணம்/ஆத்மப் பிரதட்சிணம் செய்வது ஏன்? பௌர்ணமி அன்று கிரி வலம் / மலையைப் பிரதட்சிணம் செய்வது ஏன்?
பொதுவாக நடைப் பயிற்சி, elevated steps-களில் ஏறுதல் எல்லாம் இதயத்திற்கு நல்லது. இதை தினசரிப் பயிற்சியாக எப்படி ஆக்குவது? இறைவனோடு இணைத்ததால் பின்பற்றப் பட்டது. இரவில், பௌர்ணமி நிலவில் (நடப்பதால்) பிரதட்சிணம் (circumambulation) செய்வதால் / சுற்றுவதால் இனப்பெருக்க உறுப்புக்கள் வலிமை பெறுகிறது என்று மருத்துவ ஆராய்ச்சியில் கண்டறியப் பட்டுள்ளது. பொதுவாக இடமிருந்து வலமாகப் பிரதட்சிணம் செய்வார்கள். எங்கே வேண்டுமானாலும் சுற்றலாமே? ஏன் இறைவன் இருக்கும் கர்ப்பக்ருஹத்தை சுற்றி வரவேண்டும்?
ஒரு நடுப்புள்ளி இல்லாமல் வட்டம் வரைய முடியாது. நடக்கும் போது மனம் / வாய் வேறு சிந்தனைகளோ அல்லது பேச்சுக்களில் ஈடுபடாமல் இருக்க, இறைவனை தியானித்துக் கொண்டே பன்னிரண்டு முறை சுற்றி வருமாறும் பணித்துள்ளனர். இப்படி சாதாரணமாக பன்னிரண்டு முறை சுற்றும் போது ஏறத்தாழ நாம் இருநூறு அடிகள் வைத்திருப்போம். பெரும்பாலும் கோவிலை சுத்தமாகவும், கோவில்களில் (ஸ்தல விருட்சம்) மரங்களும் துளசியும் நிறைந்தே இருக்கும். இதனால் உடலுக்குத் தேவையான நடையும், நல்ல காற்று மற்றும் மனதுக்கு தேவையான தியானப் பயிற்சி மற்றும் அமைதியான சூழல் மன அமைதியையும் அளிக்கிறது. இதை தவிர, எல்லாவற்றிற்கும் மேலாக, அதிகாலை எழுந்திருக்கும் பழக்கமும் வருகிறது.
இன்றும் காலை நடைப் பயிற்சியில், அந்த அதிகாலை அமைதியைக் கிழித்துக் கொண்டு சில குரல்கள் பேசிக் கொண்டு நடக்கிறார்கள். நடக்கும் போது பேசுவது உடல் நலத்திற்கும், குரலுக்கும் கேடு விளைவிக்கும்.
8. கோபுர தரிசனம் கோடி புண்ணியமா?
சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் உள்ளவர்களால் கழுத்தை மேல் நோக்கி தூக்கிப் பார்க்க முடியாது. தலை சுற்றும். அதே போல காலைச் சூரியனை வெறும் கண்ணால் பார்க்க முடியாதவர்கள் கண் நோய் நிச்சயம் இருக்கும்.
காலையில் சிறிது நேரம் நடைப் பயிற்சியும், கைகளை binacular போன்று வைத்துக் கொண்டு சூரியனைப் பார்த்து வந்தால் கண்ணுக்கும் உடலுக்கும் நல்லது. நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் இல்லையா?
9. மாலை நான்கு மணிக்கு மேல் ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளை கூட்டிச் செல்லக் கூடாது. தோஷம் படும். (அல்லது) சூரிய கிரகணத்தில் கர்பிணிகளும் குழந்தைகளும் வெளியே வரக் கூடாது.
மாலை கூடு திரும்பும் பறவைகள் காற்றில் தன் எச்சங்களை விடும். இதன் துகள்கள் காற்றில் கலந்து விஷமாகிறது. ஐந்து வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு இன்னும் நோய் எதிர்ப்பு சக்தியோ அல்லது தாங்கும் சக்தியோ குறைவாகவே இருக்கிறது. இந்த பறவை எச்சங்களை சுவாசிக்கும் குழந்தைகளுக்கு நிச்சயம் உடல் நலக் குறைவு ஏற்படும்.
அதே போல, சூரிய வெளிச்சம் பகலில் முழுமையாக மறையும் போது பூமியில் இருந்து பல விஷ நுண்ணுயிர்கள் வெளி வருகின்றன. இவை காற்றில் கலந்து தூசி போல உண்டாகும். நோயெதிர்ப்பு சக்தி கர்ப்ப காலத்தில் குறைந்திருக்கும். அதே போலத்தான் குழந்தைகளுக்கும்.
10. நல்ல நாளில் (வெள்ளி / செய்வாய் / பண்டிகை தினங்கள்) நகம் / முடி வெட்டக் கூடாது. அதே போல படுக்கையில் அமர்ந்து உண்ணக்கூடாது. நகம்/முடி வெட்டக் கூடாது. (மஹாலக்ஷ்மி போய் விடுவாள்!!)
நகம் மற்றும் முடி மூலம் நோய்கள் சீக்கிரம் பரவும். உணவில் விழுந்து விட்டால் ?? நிச்சயம் சாப்பிடும் போது அருவருப்பை உண்டாக்கும். உணவும் வீணாகும். படுக்கையில் விழுந்தாலும் பார்த்தாலே அசிங்கமாய் இருக்கும். இது தவிர இன்று போல் நகம் வெட்ட நெயில் கட்டர் எல்லாம் கிடையாது முன்பு. கத்தி தான். தவறுதலாய் கையை கிழித்து விட்டால் மற்ற வேலைகள் நின்று விடும். பண்டிகை தினங்களில் அதிக வேலை இருக்கும், பொறுமையாக நகம் வெட்ட முடியாது.
11. பச்சை மாவிலை கட்டுவது ஏன்? (பிளாஸ்டிக் தோரணம் இல்லை)
பறிக்கப் பட்ட மாவிலையில் இருந்து அதி வேகமாக ஆக்சிஜன் வெளியேறுகிறது. ஏறத்தாழ இலை வாடும் வரை ஆக்சிஜன் வெளியேறிக் கொண்டே இருக்கிறதாம். இதனால் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுகிறார்கள்.
12. வீட்டில் பறவை கூடு (குருவி) கட்டினால் நல்லது. கூட்டைக் கலைச்சால் தப்பு.
பறவைகள் முட்டையிடும் காலங்களில்தான் பெரும்பாலும் கூடு கட்டுகின்றன. பாதுகாப்பு என்று பறவைகள் நம்பும் இடத்தில்தான் கூடு கட்டுகின்றன. கூட்டைக் கலைக்கும் போது அவைகளுக்குப் போக்கிடம் இல்லாமல் போகலாம்.
13. ஒத்தை பிராமணன் குறுக்கே வந்தால், வந்த திசையில் பிரயாணம் செய்யக் கூடாது?
"ஒத்தை (ஒற்றை) பிராமணன்" என்பவன் மரணம் சம்பவித்த வீட்டில் தானே சமைத்து உண்பவன். இவன் தனியாக வந்து தனியாகவே சமைத்து உண்டு தனியாகவே போய் விடுவான். எல்லோரும் இப்படித்தான் என்று உணர்த்த பின்பற்றப் படும் பழக்கம் இது. வேதம் பயிலும் மாணவர்கள் படிக்கும் போது பிரமச்சரிய விரதத்தை மீறினால் (பெண்களோடு உறவு கொண்டு விட்டால்) அவன் ஒற்றை பிராமணனாகிறான். இது குருகுல காலங்களில் உண்டானது. மேலும் போகும் வழியில் மரணம் சம்பவித்த வீடு இருக்கிறது என்பதால் வேறு திசையில் செல்ல வேண்டும் என்பதை குறிக்க சொல்லப் பட்டது இது.
இப்போது யாருமே பிராமணன் கிடையாது. மேலும் இப்போது மனிதனின் பிணத்தையே கண்டு கொள்ளாமல் தாண்டிச் செல்லும் அளவுக்கு மனப் பக்குவமும் நமக்கெல்லாம் வந்து விட்டது. ஆகையால் இதைப் பற்றி கவலைப்படவேண்டாம்.
14. விக்கல் வந்தால் யாரோ நினைக்கிறார்கள்?
பிரிந்திருக்கும் உறவுகளை "அவர்களா இருக்குமோ" என்று நினைக்கவும் விக்கல் உதவுகிறது.
நாச்சென்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும் (335)
பிராணன் பிரிவதற்கு முன்னால் கடைசி விக்கல் வருமாம். அந்த விக்கல் வருவதற்குள், செய்யவேண்டிய அறச்செயல்களையும், நன்றி செலுத்த வேண்டியவைகளையும் செய்து முடித்து விட வேண்டும், என்கிறது இக்குறள்.
விக்கல் வருங்கால் விடாய்தீர்த் துலகிடைநீ
சிக்கலெனுஞ் சிக்கல் திறலோனே- (திருவருட்பா)
உரை: நீர்வேட்கை யெழும்போது விக்கல் தோன்றுவது உடம்பின் இயல்பாதலால், தாகத்தால் விக்கல் தோன்றும் போது தண்ணீர் அருந்தி விடாதே. தீர்த்துக்கொண்டு உலகவாழ்க்கைத் தொல்லையில் சிக்கிக் கொள்ளாதே என்று தன் பெயர்க் குறிப்பால் அறிவுறுத்தும் சிக்கல் நகரில் எழுந்தருளும் பெருமானே என உரைக்கின்றார் திருஞானசம்பந்தர். சிக்கல் நாகைப்பட்டினத்துக்கு மேற்கே 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
விக்கல் மாறிலி….
என் நினைவோ முடிவிலி..
உன் விக்கலின் காரணி
இல்லையென் நட்பினி. (Author unknown)
உன் விக்கலுக்கு காரணம் என் நினைவு என்று கூறினால் , நீ விக்கிக் கொண்டே இருக்க வேண்டியது தான் என்று அர்த்தம் !!!
இல்லையென்றாலும், வில்லங்கமாக "நான்தான் இங்கிருக்கேனே? யார் உன்னை நினைத்தார்?" என்று செல்ல சண்டை போடவும் செய்யலாம்.
தர்க்கமிட்டுற வாடி யீளைநொய்
கக்கல் விக்கல்கொ ளூளை நாயென
சிச்சிசிச்சியெ னால்வர் கூறிடவுழல்வேனோ (திருப்புகழ்)
தர்க்கவாதம் செய்தும், உறவு பூண்டு பேசியும் (சில காலத்துக்குப் பின்னர்) கோழை நோய், வாந்தி, விக்கல் இவைகளால் அவதி உற்று ஊளை நாய் போல் இழிவு பட்டு சீச்சீ சீச்சீ என்று நாலு பேர் இழித்துப் பேச நான் திரிவேனோ? என்று வருந்துகிறார் அருணகிரிநாதர்.
இதெல்லாம் யார் எப்போது விக்குகிறார்கள் என்பதைப் பொறுத்து அமைகிறது. யார் விக்கினாலும் கொஞ்சம் நெல்லிக்காயும், தேனும், தண்ணீரும் கொடுங்கள்.
நன்றி Mr. PKP...