திங்கள், 24 ஜனவரி, 2011

மனம் மகிழுங்கள் - 30 : பாதையெல்லாம் பாடம்


குறிக்கோள் நம்மை நகர்த்துகிறது என்று சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். எனவே வாழ்க்கையில் நல்லதொரு குறிக்கோளை ஏற்படுத்திக் கொள்வது, மனதிற்கும் உடம்பிற்கும் நல்லது என்றும் அறிந்தோம். அப்படியொரு குறிக்கோளை அமைத்துக் கொண்டு அதன் அடிப்படையில் நாம் இயங்கும்போது நாம் எட்டுவது இலக்கை மட்டுமில்லை; இன்னபிறவற்றையும்தாம்!

அவை என்ன?

ஒரு குறிக்கோளுக்கான பாதையில் நாம் பயணிக்கும்போது வழிநெடுக நாம் என்னென்ன கற்றுக் கொண்டோம், எந்தளவு நம் மனது அதனூடே வளர்ந்தது, பக்குவப்பட்டது என்பது குறிக்கோளின் இலக்கைவிட முக்கியமான விஷயம் ஆகும்..

எப்படியென்று பார்ப்போம்.


ஒருவர் கல்லூரியில் சேர்ந்து மாங்கு மாங்கென்று படித்து உழைத்துப் பட்டம் வாங்கியதன் பின்னர் ‘நான் பாடுபட்டதெல்லாம் இந்த ஒரு காகிதத்திற்காகவா’ என்று டிகிரி சர்டிபிகேட்டைக் காட்டி அலுத்துக் கொண்டால் எங்கோ தப்பு. அல்லது ஏட்டில் படித்ததெல்லாம் அவருக்கு வெறும் சுரைக்காயாக ஆகிவிட்டிருந்தால், “அவர் படித்தார்; பயிலவில்லை”! பெயருக்குப் பின்னால் இணைத்துக் கொள்ளப்போகும் எழுத்துகளுக்காகவா டிகிரி என்ற குறிக்கோள்? இல்லையே!

பாடம் ஒருபுறமிருக்க அந்தக் கல்விப் பயணத்தில் என்னென்ன கற்றார், யாரையெல்லாம் சந்தித்தார், எவரையெல்லாம் நண்பராக்கிக் கொண்டார் எதிரியாக்கிக் கொண்டார், என்னென்ன இன்ப துன்பங்களை அனுபவித்தார், தம்மைத் தாமே என்ன அறிந்து கொண்டார் என்பனவெல்லாம் பாடத்தைவிட முக்கியமான அனுபவங்களல்லவா? அவைதானே வாழ்க்கைப் பக்குவத்திற்கு வித்திடுகின்றன? இவற்றையெல்லாம் பேராசிரியர்கள் போர்டில் எழுதிக் காண்பிப்பதில்லை; அவையெல்லாம் அனைவருக்கும் ஒன்றுபோல்அமைவதும் இல்லை.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குறிக்கோள் இருக்கும் -

நான் சுயமாய்த் தொழில் தொடங்க வேண்டும்;

கன்னியாகுமரி முதல் கஷ்மீர் வரை நடைப் பயணம் மேற்கொள்ள வேண்டும்;

மிகப் பெரிய பங்களா கட்ட வேண்டும்;

இன்றைய ஸீரியலை கண்ணீர் சிந்தாமல் பார்த்துவிட வேண்டும்...

இப்படியாக ஏதோ ஒரு குறிக்கோளை ஏற்படுத்திக் கொண்டு அதை நீங்கள் சாதித்தும் முடித்துவிட்டீர்கள். இங்கு வெற்றி என்பது நீங்கள் துவங்கிய தொழிலோ, சென்றடைந்த கஷ்மீரோ, கட்டி முடித்த பங்களாவோ அல்ல. அந்த இலக்கை அடைய நீங்கள் சந்தித்த மனிதர்களும் அனுபவமும் நன்மையும் தீங்குகளும்தான் நீங்கள் அடைந்த வெற்றியில் முக்கியமானவை. அவைதாம் உங்கள் மனதின் உள்ளே இருக்கும் கண்களுக்கு ஒளி.

ஒருவர் ஒரு குறிக்கோளை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது துணிவைக் கற்றுக் கொண்டிருக்கலாம்; மன உறுதியைப் பெற்றிருக்கலாம்; மக்களிடம் இணக்கமாகவோ தூண்டியோ காரியமாற்றிக் கொள்ளும் திறனைப் புரிந்து அறிந்து கொண்டிருக்கலாம்; சுய ஒழுக்கம் மேம்பட்டிருக்கலாம்; விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கலாம்; அவரது தன்னம்பிக்கை அதிகமாகியிருக்கலாம்; அல்லது இல்லாளின் அதட்டல்களிலிருந்து தப்பிக்கும் உபாயம் புலப்பட்டிருக்கலாம்.

இப்படி ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டோ ‘லாம்’ உங்களை வந்தடைந்திருக்கும். சுருக்கமாய்ச் சொன்னால் நீங்கள் அடைந்தது என்ன என்பதைவிட உங்கள் மனதை அடைந்தது என்ன என்பதே முக்கியம்!

இவை இவ்வாறிருக்க,

குறிக்கோளை நிர்ணயித்துக் கொள்ளும்போது ஒன்றை முக்கியமாய்க் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அது இப்புவியின் விதி!

இங்கு விதியென்பது fate அல்ல rule!

“என்னது நீ அணு விஞ்ஞானி ஆகப் போகிறாயா? என்னவொரு குறிக்கோள், இலட்சியம்” என்று உங்கள் உற்றார், உறவினர், பால்காரர், உஙகளின் சிகை அலங்கார நிபுணர் என்று அனைவரும் உங்களுக்குச் சிகப்புக் கம்பளம் விரித்து இரு புறமும் வெள்ளையுடை மங்கையரை நிறுத்தி வைத்துப் பூத்தூவி வாழ்த்தப் போவதில்லை.

வாழ்க்கைப் பாதை கடினமானது. மேடு, பள்ளம் நிறைந்தது. இதை முதலில் உணர வேண்டும். அழுத்தந்திருத்தமாய் உணர வேண்டும்.

மரக் கன்று நட்டு அது மெதுமெதுவே வளர்ந்து மரமாவதைப் பார்த்திருக்கிறீர்களா? இன்றைய ‘ஃபாஸ்ட் ஃபுட்’ உலகில் யாருக்கு அதற்கு அவகாசம் இருக்கிறது? அல்லது மரம் வளர்க்கும் அளவிற்கு இடமொன்று இருந்தால் கூட, அதைப் ப்ரமோட்டார்கள் பிடுங்கி ஃப்ளாட் கட்டி விற்றுவிடுகிறார்கள். போகட்டும். செடியொன்று வளரும்போது சில இலைகள் பழுத்து உதிரும்; ஆனால் அதைவிடச் சிறிது அதிகமாய் இலைகள் துளிர்க்கும். இப்படிச் சில இலைகளை இழந்து, இழந்து, அதனிலும் அதிகமாய் இலைகளை ஈன்று, ஈன்று தான் செடியொன்று நெடிய மரமாகிறது.

சில, பல முறைகள் கீழே விழுந்து எழுந்தால்தானே சைக்கிள்ஓட்ட பேலன்ஸ் கிடைக்கிறது!

சில சுதந்தரங்களை இழந்தால்தானே நல்லறமாக இல்லறம் அமைகிறது!

இதை நாம் நன்றாக உணரவேண்டும். அதைவிட்டுவிட்டு, என் இலட்சியமும் குறிக்கோளும் உலக உன்னதம்; அதனால் எனக்கு அனைத்து விஷயங்களும் தங்குதடையின்றி நடைபெறவேண்டும்; அதற்கு இணக்காமாய் இல்லையெனில் புவியின் விதியை மாற்றுங்கள்; Break the Rules என்று யாரேனும் நினைத்தால்... ஸாரி! நாளைக் காலை உங்கள் ஊரிலும் சூரியன் கிழக்கேதான் உதிக்கும்!

மிகப்பெரிய தொந்திக்குச் சொந்தக்காரர் ஒருவர். ஒரு நாள் தம் செருப்பைத் தேடக் குனிய முடியாமல்போய், அதைப் பார்த்துப் பக்கத்து வீட்டுக்காரர் நமுட்டுச் சிரிப்பு சிரிக்க ரோஷம் பொத்துக் கொண்டு வந்ததால் முடிவே செய்துவிட்டார்… உடற் பயிற்சி!

அதை ஆரம்பித்து, சிறிது சிறிதாய்ப் பயிற்சி செய்து, ஆனால் கரைத்த கொழுப்பைவிட அதிகமாய் உண்டு, ஒரு மாதத்தில் பெரிய பலன் ஏதும் இல்லையென்றதும் அத்தீர்மானத்தைத் தூக்கிப் போட்டுவிட்டார். என்னாவது? மிச்ச வாழ்நாளும் அவர் தொந்தியைத் தூக்கிக் கொண்டு அலைய வேண்டியதுதான்.

மற்றொருவருக்கு வேறு கவலை. பணம் என்று எதுவும் சேமிக்க முடியாமல் எப்பவும் செலவாகிக் கொண்டே இருக்கிறதே; இம்மாதத்திலிருந்து சிறிது சிறிதாய்ப் பணம் சேமித்து ஆண்டு இறுதியில் அதைக் கொண்டு உருப்படியாய் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம். ஆனால் ஒவ்வொரு மாதமும் ஏதாவது செலவு வந்து கொண்டேயிருக்க ‘நமக்கு இது சரிப்படாது’ என்று விட்டுவிட்டார்.

குறிக்கோளுக்கான தீர்மானமொன்றை ஏற்படுத்திக் கொண்டால் இடையில் ஏற்படும் தடங்கலைக் கண்டு சோர்ந்து போகாதீர்கள்; தீர்மானத்தைக் கைவிடாதீர்கள்.

சிலர் சாமான்யமாய் எதையும் விட்டுவிடுவதில்லை. குறிக்கோளை நோக்கி நகர்கையில் ஏற்படும் சிக்கல்களையெல்லாம் என்ன பிரச்சனை, எங்கே பிரச்சனை எனப் புரிந்து கொண்டு, அதற்கேற்பத் தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொள்கிறார்கள் அவர்கள். அடியெடுத்து வைக்கும்போது அங்கு சறுக்கினால் ‘இது தப்பு அல்லது என்னிடம் தப்பு’ என்று அடுத்து அடியெடுத்து வைக்கும்போது திருத்திக் கொள்கிறார்கள். தங்களைத் திருத்தி, தங்களது செயல்பாடுகளைத் திருத்தி, இப்படித் திருத்தி திருத்திக் குறிக்கோளின் இலக்கை வெற்றிகரமாய் எட்டிவிடுகிறார்கள்.

யார் அவர்கள்?

வெற்றியாளர்கள்!


னம் மகிழ, தொடருவோம்...


சனி, 15 ஜனவரி, 2011

அனுபவம் - கண்ணதாசன்

தமிழர் திரு நாளாம் தைத் திங்கள் முதல் நாளில், நண்பர்கள் அனைவரின் வாழ்வில் நலமும்,வளமும் விழைய எல்லாம் வல்ல இறையருளை வேண்டி வணங்குகிறேன்.இந்த நாளில் நம்மில் அன்பையும், சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும், சகிப்புத் தன்மையையும் வளர்த்தெடுக்க உறுதி கொள்வோம்.

ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்து தெளிந்த ஓர் அனுபவ சித்தரின் பாடலை பகிர்ந்து கொள்கிறேன்.பாடலில் பொதிந்திருக்கும் அர்த்தம் நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கட்டும்

பிறப்பின் வருவது யாதெனக்
கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!

‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

- கவியரசு கண்ணதாசன்

ஞாயிறு, 9 ஜனவரி, 2011

கொத்தமல்லி சாதம்



தேவையான பொருட்கள்:-

அரிசி – 1 தம்ளர்
கொத்தமல்லி – 1 கட்டு
வரமிளகாய் – 4 () 5
சீரகம் – 1 டீஸ்பூன்
புளிசிறிதளவு
உப்புதேவைக்கேற்ப
எண்ணெய்தேவைக்கேற்ப
பச்சைப்பட்டாணி – 1 கையளவு

தாளிக்க:- கடுகுசிறிதளவு
கடலைப்பருப்புஅரை டீஸ்பூன்
உளுத்தம்பருப்புஅரை டீஸ்பூன்
பெருங்காயம்சிறிதளவு


செய்முறை:-


அரிசியை களைந்து தண்ணீரை வடித்து விட்டு 1 டீஸ்பூன் நெய் விட்டு பிசறிவைக்கவும். நீரில் அலசி சுத்தமாக்கிய கொத்தமல்லி, புளி, சீரகம்,வரமிளகாய், உப்பு ஆகியவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் விட்டுமைய அரைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் விட்டுசூடானதும் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்துக் கொள்ளவும்.பிறகு பச்சைப் பட்டாணியை போட்டு இரண்டு நிமிடம் வதக்கியதும்அரைத்த கொத்தமல்லி விழுதையும் போட்டு நன்றாக வதக்கவும். பச்சைவாசனை போனதும், 1 தம்ளர் அரிசிக்கு 2 தம்ளர் தண்ணீ்ர் என்கிறவிகிதத்தில் விட்டு கொதிக்க விடவும். கொதித்தவுடன் அரிசியை சேர்த்துகுக்கரை மூடி 1 விசில் வந்ததும் அடுப்பை மிதமான சூட்டில் [சிம்மில்] 5நிமிடங்கள் வைத்திருந்து அடுப்பை நிறுத்தி விடவும்.


பத்து நிமிடங்களுக்குப் பிறகு குக்கரைத் திறந்தால் சுடச்சுடச் சுவையானகொத்தமல்லி சாதம் தயார்! இந்த கொத்தமல்லி சாதத்தினை தனியாகவோ,வெங்காயத் தயிர் பச்சடியுடனோ சாப்பிடலாம்.

சட்னி - மிளகாய்ப் பொடி

தேவையான பொருட்கள்:-

வெங்காயம் – 2
தக்காளி – 2
தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி
தோசை மிளகாய்ப் பொடி – 3 தேக்கரண்டி
(காரத்திற்கேற்ப கூடவோகுறைத்தோ சேர்த்துக்கலாம்)
உப்புதோசை மிளகாய்ப் பொடியிலேயே இருப்பதால்,
தேவையானால்சேர்த்துக் கொள்ளலாம்.
கடுகு - சிறிதளவு
எண்ணெய்தேவையான அளவு
கறிவேப்பிலைசிறிதளவு

செய்முறை:-

மேலே குறிப்பிட்ட வெங்காயம், தக்காளியை நான்காக நறுக்கிக் கொள்ளவேண்டும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும்வெங்காயம் மற்றும் தக்காளியை வதக்கிக் கொள்ள வேண்டும். பின்னர்மிக்ஸியில் வெங்காயம், தக்காளி, தேங்காய்த் துருவல், தோசை மிளகாய்ப்பொடி, தேவையானால் உப்பு சேர்த்து அரைத்து எடுக்கவும். வாணலியில்சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து எடுத்து அதைஅரைத்து வைத்திருக்கும் சட்னியில் கொட்டவும். அவ்வளவு தான்சுவையான சட்னி தயார். இப்படி சுவையாக இருக்க தோசை மிளகாய்ப்பொடியில் சேர்த்திருக்கும் எள் மற்றும் பெருங்காயமே காரணம்.



அது சரி தோசை மிளகாய்ப் பொடி எப்படி செய்யறதுன்னு கேட்கறீங்களா?இதோ அதன் செய்முறை:-

½ டம்ளர் கடலை பருப்பு, ½ டம்ளர் உளுத்தம் பருப்பு, பெருங்காயம்,தேவைக்கேற்ப மிளகாய், எண்ணெய் விட்டு வறுத்துக் கொண்டு கைப்பிடிஎள்ளை வெறும் வாணலியில் வறுத்து உப்புடன் மிக்ஸியில் பொடித்தால்தோசை மிளகாய்ப் பொடி தயார்.

பின் குறிப்பு(1):- தோசை மிளகாய்ப் பொடிக்கு அரைக்கும் போது வெள்ளைஉளுந்துக்கு பதிலாக கறுப்பு உளுந்து சேர்த்துக் கொண்டால் தோலில் உள்ளசத்தும் சேரும்.

செவ்வாய், 4 ஜனவரி, 2011

முள்ளங்கி உசிலி

தேவையானப் பொருட்கள்:
முள்ளங்கி - 2
கடலைப்பருப்பு - 1/2 கப்
காய்ந்தமிளகாய் - 5
பெரிய வெங்காயம் - பாதி
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு - 3 முதல் 4 வரை
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 5 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூண் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
* கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
முள்ளங்கியைத் தோல் சீவி நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டவும்.

* வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* ஊறவைத்த கடலைப்பருப்பு, முள்ளங்கித்துண்டுகள், மிளகாய், உப்பு அக்கியவற்றை ஒன்றாகப் போட்டு வடைக்கு அரைப்பது போல் சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

* இட்லித் தட்டில் சிறிது எண்ணைத் தடவி அதில் அரைத்த விழுதை ஒவ்வொரு தட்டிலும் வைத்து பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் ஆவியில் வேக விடவும். பின்னர் இறக்கி வைத்து ஆறியதும் இட்லி தட்டிலிருந்து எடுத்து உதிர்த்துக் கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன் அதில் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன் அதில் இஞ்சி, பூண்டு ஆகியவற்றைத் தட்டிப் போடவும்.

* கறிவேப்பிலையும் போட்டு மீண்டும் வதக்கவும். இப்பொழுது உதிர்த்து வைத்துள்ள முள்ளங்கிப் பருப்பைப் போட்டு கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை அடிக்கடி கிளறி விட்டு பின்னர் அதில் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

உருளைக்கிழங்கு கட்லட்

தேவையானப் பொருட்கள்:
பெரிய உருளைக்கிழங்கு - 3
பெரிய வெங்காயம் - 1
நறுக்கிய மல்லித்தழை - கால் கப்
மிளகாய்தூள் - 2 டீஸ்பூன்
தூள் உப்பு - தேவைக்கேற்ப
மைதா மாவு - 1 டீஸ்பூன்
பொட்டுக்கடலை பொடித்தது - அரை கப்
எண்ணெய் - 2 கப்.
செய்முறை:

  • உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து மசித்து மல்லித்தழை, மிளகாய்தூள், தூள்உப்பு சேர்த்து பிசையவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, அதில் மசாலாவையும் போட்டு சூடு வரக் கிளறி ஆற வைக்கவும்.
  • மைதாவை ஒரு கரண்டி நீர் விட்டு கரைத்து கொள்ளவும். மசாலாவை வேண்டிய வடிவில் செய்து, கரைத்த மாவில் நனைத்து பொட்டுக்கடலை மாவில் புரட்டி வாணலியில் எண்ணெயை சுடவைத்து நன்கு சூடானதும் அதில் போட்டு பொரித்தெடுக்கவும்.

வெள்ளைக் கொத்துக்கடலை


தேவையானப் பொருட்கள்:

வெள்ளை கொத்துக் கடலை - 1 கிலோ (கருப்பு)
பச்சை மிளகாய் - 8 (அல்லது காய்ந்த மிளகாய்)
கடலைப் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி- சிறுதுண்டு (விரும்பினால்)
தேங்காய் - 1

தாளிக்க: எண்ணெய், கடுகு, 1 காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.


செய்முறை:

  • கொத்துக்கடலையை 15 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும். முடிந்தால் இடையில் ஒருமுறை நீரை மாற்றவும்.குக்கரில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நான்கைந்து விசில் வரும்வரை நன்கு வேக வைக்கவும்.கடலைப் பருப்பு, கசகசாவை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்.
  • ஊறவைத்த கடலைப்பருப்பு, கசகசா, இஞ்சி, தேங்காய், சிறிது மல்லித் தழை, பச்சை மிளகாயுடன் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.
  • கொத்துக் கடலையுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்துப் பிசிறிவைக்கவும்.
  • அடுப்பில் வாணலியில் கொஞ்சம் அதிகமாகவே எண்ணெய் வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
  • பிசிறிவைத்துள்ள கடலைக் கலவையைக் கொட்டி, நன்கு மேலும் 10 நிமிடங்களுக்குக் கிளறி இறக்கவும்.
  • இந்தச் சுண்டலையே தண்ணீர் அதிகம் சேர்த்து தளர்வாக பூரி பிரசாதத்திற்கு இங்கே கோயில்களில் தருகிறார்கள். கடலைப் பருப்பு சேர்ப்பதால் கிரேவி சேர்ந்தாற்போலும், மற்ற மசாலாக்கள் அதிகம் சேர்க்காவிட்டாலும் கசகசா சேர்ப்பதால் அதிக மணம், சுவையாகவும் இருக்கிறது.

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

மனம் மகிழுங்கள்! - 29 - குறிக்கோள் கொள்


யாராலும் ‘சும்மா’ இருக்க முடியாது! அனைவருக்கும் ஒரு குறிக்கோள் உண்டு. நம்புவதற்குச் சிரமமாக இருக்கிறதோ?

ஆனால் அதுதான் உண்மை!

“அதெப்படி? தவமா தவமிருந்து பெத்து வெச்சுருக்கேனே நான் ஒன்ணு... என்னத்துக்காச்சும் உருப்படி உண்டா? வந்து பாருங்க. தூங்கறது.. எழுந்திருக்கிறது.. கொட்டிக்கிறது... இதத் தவிர ஏதாச்சும் செய்யுமா?”

அந்தக் கேள்வியிலேயே பதில் அடங்கியிருக்கிறது. தாயோ, தகப்பனோ, அவர்கள் புலம்போ புலம்பு என்று புலம்பும் அந்த மகனுக்கும் ஒரு குறிக்கோள் இருக்கிறது! அவன் தூங்கும்போதே மறுநாள் இரவு வருவதற்கு முன் ஏதாவது ஒரு நேரத்தில் எழுந்து கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளுடனேயே படுக்கச் செல்கிறான். எழும்போதே வந்து விழும் திட்டுக்களை எல்லாம் துடைத்தெறிந்துவிட்டு ஏதாவது கொட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒரு குறிக்கோள் வைத்திருக்கிறான்.


அப்படியென்றால் “தெண்டம்” என்று எவருமே கிடையாதா?

இங்கு நாம் அறிந்து கொள்ள வேண்டியது ‘குறிக்கோள்’, ‘திட்டமிடாத செயல்பாடு’ இரண்டிற்கும் உண்டான வித்தியாசத்தையே! மற்றபடி குறிக்கோள் நல்ல செயலுக்கா, கெட்ட செயலுக்கா என்பது வேறு விஷயம்.


குறிக்கோளே நம்மை நகர்த்துகிறது. போராளி இயக்கங்களைக் கவனித்திருக்கிறீர்களா? வாழ்வு அநிச்சயம் என்ற பொழுதிலும் ஆயுதமேந்திக் களத்தில் இறங்கி விட்டால் அவர்களின் நோக்கம் மட்டுமே அவர்களது கண் திரையில் அப்பிக் கொள்கிறது. சுமக்கும் இடையூறுகள், நேரும் இழப்புகள் எதுவும் அவர்களது சிந்தையைத் திருப்புவதில்லை.

அரசியல்வாதிகள்? அவர்களை விட்டுத் தள்ளுங்கள்; அவர்களுக்கு ஏகப்பட்ட குறிக்கோள்கள். சின்ன அளவில் பார்ப்போம். ஜேப்படித் திருடனுக்கும்கூட ‘நல்ல கூட்டமான பஸ்ஸாகப் பார்த்து ஏறி ஆட்டையப் போடணும்’ என்று ஒரு குறிக்கோள் அமைகிறது.

அரசு அலுவலர்களை மையமாகக் கொண்டு பல பரிகாசங்களும் நகைச்சுவைத் துணுக்குகளும் உண்டு. என்ன சொல்ல? அந்தளவு உன்னதம் அரசாங்க நிர்வாகமும் அதன் பணியாளர்களும்! ஆனால் விந்தையான புள்ளி விபரம் ஒன்று உண்டு. பணியிலிருந்து குறிப்பிட்ட வயதில் ஓய்வு பெற்றவுடன்தான் அவர்களில நிறையப் பேருக்கு மாரடைப்பு நோய் ஏற்படுகிறதாம். எப்படி?

வேலை புரிகிறார்களோ, இல்லையோ ஒரு குறிப்பிட்ட இயங்கு விசையில் தினசரி இயங்கிக் கொண்டிருக்கும் அவர்களுக்கு ஒரு முடிவுக் கோட்டைக் காட்டி உட்கார வைத்ததும் மனதில் ஓர் அதிர்வு ஏற்பட்டுத் திடீரென்று ஒரு நாள் நெஞ்சில் ‘அட்டாக்’! அல்லது இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லப்பட்டு, வாழ்க்கைக்கு “டாடா பைபை!”

காரணம், ‘அன்றாடச் செயல்பாடுகளில் வரையறுக்கப்பட்ட ஒரு குறிக்கோளுடன்’ வாழ்ந்து பழகி விடுகிறார்களா, ஓய்வு வந்துசேர்ந்ததும் வாழ்க்கையின் குறிக்கோளே முடிந்து போனதாய் நினைத்து திணறிப் போகிறார்கள்.

துறுதுறுவென்று ஏதாவது வேலை செய்பவர்களைக் கவனித்துப் பாருங்கள். அவர்களது குறிக்கோள் ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும்; ஏதும் முடியாவிட்டால் பக்கத்துவீட்டு எலக்ட்ரிக் பில்லையாவது எடுத்துச் சென்று கட்டித் தரவேண்டும்.


அரசியல்வாதிகளை எடுத்துக் கொள்ளுங்கள், பலர் பழுத்த பழங்கள்! காரணம் அவர்களது மூளை எப்போதுமே சுறுசுறுப்பாய் இருப்பதுதான். ‘யாரைக் கவிழ்க்கலாம், ஆட்சியை எப்படிப் பிடிக்கலாம், பிடித்துவிட்ட நாற்காலியை எப்படித் தக்க வைக்கலாம்’ என எந்நேரமும் சிந்தனை; குறிக்கோள். அதனால் அவர்களது மூளை சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருப்பதால் எண்பதுகள் தாண்டியும் அவர்களால் களத்தில் இயங்கிக் கொண்டே இருக்க முடிகிறது.
மனிதனுடைய இயல்பு குறிக்கோள். அது இல்லாமல் அவனால் வாழ இயலாது. அதாவது எந்தவிதக் குறிக்கோளும் இல்லாமல் ஓர் அஃறிணைப் பொருளைப் போல் மனிதனால் நெடுநாள் வாழ முடியாது. அந்தக் குறிக்கோள், அதன் வேகம் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது. சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருப்பவன் மெத்தனமாய் இருப்பவனைப் பார்த்து “தெண்டம்“ என்று திட்டுகிறான். ஆனால் மெத்தனமாய் இருப்பவனது பிரச்சனை குறிக்கோளின்மை இல்லை. பிரச்சனை அவனது செயல்பாடு அல்லது அவனது குறிக்கோளின் உன்னதமற்ற தன்மை! இங்கு வித்தியாசம் என்பது ப்ளைட்டில் பறக்கும் அம்பானிக்கும் மாட்டை ஆற்றிற்கு ஓட்டிக் கொண்டு செல்லும் மாடுமேய்ப்பவனுக்கும் இடையில் உள்ளது.


முக்கியமாய் நாம் உணர வேண்டியது யாதெனில் ஒவ்வொருவருக்கும் குறிக்கோள் முக்கியம்; அது கெட்ட சமாச்சாரத்திற்கானதாய் இருக்கக் கூடாது.

அவ்வளவே! மற்றபடி அது என்ன என்பதில் பிரச்சனை இல்லை!

சிலருக்கு வாழ்க்கையில் ஒன்றைச் செய்ய வேண்டும என்ற குறிக்கோள் இருக்கும். ஆனால் தள்ளிப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். காரணம்? தம் மனதில் இருக்கும் அந்தக் குறிக்கோள் தமக்குச் சரியானது தானா என்ற சந்தேகம். அதனால் அதில் முனைப்பில்லாமல் காலம் நகரும்.


ஒருவர் ப்ளஸ் டூ முடித்துப் பொருளாதாரத் தேவையால் நிர்பந்தமாய் வேலை ஒன்றில் சேர்ந்து விட்டார். மனதளவில் அவருக்கு மேற்கொண்டு படிக்க ஆசை. இதர நிர்பந்தங்கள் அவரது குறிக்கோளைத் தள்ளிப்போடுகின்றன. சில காலம் கழித்து அவரது பொருளாதார நிலைமை சீரடைகிறது. ஆனால் காலங்கடந்து விட்டதே; வயது அதிகமாகி விட்டதே; இப்பொழுது நம்மால் முடியுமா என்று அவருக்குத் தயக்கம். இப்படியே முப்பது ஆண்டுகள் ஓடி இப்பொழுது அவரிடம் குறிக்கோள் மட்டும் அப்படியே இருக்கிறது. ஆனால் வாழ்க்கையில் போதிய அவகாசம் இல்லை.


இவ்விதம் தள்ளிப் போடாமல் அவர் அப்பொழுதே கல்வியைத் தொடர முயன்றிருந்தால், அப்படியே படிப்பு மண்டையில் ஏறாமல் போயிருந்தாலும்கூட, “அட! முயன்று பார்த்தோம்; இது நமக்குச் சரிப்பட்டு வராது என்று புரிந்து விட்டது. அடுத்து வேறு குறிக்கோளைத் தேடுவோம்” என்று அவரது மனம் மாறியிருக்கும்.


‘நம்முடைய முயற்சி தவறென்றால் உற்றார் என்ன சொல்வார்கள்’;

‘எனது குறிக்கோள் தவறாகிப்போய் என் முயற்சி தோல்வியுற்றால் நான் வருத்தமடைந்து நொந்து போவேனே’ என்ற எண்ணத்திலேயே குறிக்கோளைத் தள்ளிப் போடுவதோ அதை முயலாமல் இருப்பதோ முறையன்று! அது மனதில் அயர்ச்சியை உண்டாக்கி மகிழ்வைத் தடுக்கிறது.

அப்படியல்லாமல் மனதிலுள்ள குறிக்கோளை முயன்று பார்க்க வேண்டும். ஒருக்கால் முயற்சி தோல்வியில் முடிந்தாலும் அதுவும் ஒரு பாடமே. எப்படி?

உங்களுக்குச் சரிவராத அல்லது ஒத்துவராத ஒரு விஷயத்தை நீங்கள் அறிந்து கொண்டீர்கள் என்றாகிறது! அடுத்தமுறை அதைச் செய்யக் கூடாது என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்து விடுகிறது.


மற்றவர்கள் தோல்வியை நினைத்து மனம் சோர்ந்து உட்கார்ந்து விடும்போது, வெற்றியாளர்கள் என்று உலகில் புகழப்படும் மக்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமோ?

‘தோல்வி வெற்றியின் முதல்படி’ என்று சொல்லிக் கொண்டு ‘அடுத்து என்ன செய்யக்கூடாது’ என்ற தெளிவுடன் ஆகவேண்டிய அடுத்த வேலையைப் பார்க்க ஆயத்தமாகி விடுகிறார்கள்.


னம் மகிழ, தொடருவோம்...

தியானத்தால் ஏற்படும் நன்மைகள்

1) அறிவுக் கூர்மை ஏற்படும்.

2) மன உறுதி உண்டாகும்.

3) மனம் ஆனந்த அமைதியில் திளைக்கும்.

4) பிரச்சனைகளை எளிதாக தீர்க்க கூடிய மன வலிமை ஏற்படும்.

5) ஞாபக சக்தி அதிகரிக்கும்.

6) நம்மை சுற்றி நல்ல அதிர்வு அலை ஏற்படும்.

7) நல்ல நண்பர்களும், நல்ல சூழ்நிலைகளும் சூழும்.

8) முகம் பிரகாசமடையும்.

9) மனதிற்கு எஜமானனாகலாம். நாம் சொல்வதை மனம் கேட்கும்.

10) பழக்கத்திலிருந்து விடு படக் கூடிய மன சக்தி கிட்டும்.

11) மனம் அமைதி அடைவதால் பரபரப்பு குறைந்து உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கும்.

12) தேவையற்ற கோபம் போகும்.

13) மாணவர்களுக்கு படிப்பில் விருப்பம் ஏற்படும். நல்ல பழக்கங்கள் உண்டாகும்.

14) மன ஒருமைப்பாடு உண்டாகும்.

15) மனம் கட்டுப் பாட்டில் இருப்பதால் தேவையற்ற எண்ணங்கள் குறையும்.

ஆதலினால் தியானிப்பீர்...!

Source : Web

Oracle Codd's 12 Rules

Rule 1: The Information

All information in a relational database is represented explicitly at the logical level and in exactly one way - by values in tables.

Rule 2: Guaranteed Access

Each and every datum (atomic value) in a relational database is guaranteed to be logically accessible by resorting to a combination of table name, primary key value, and column name.

Rule 3: Systematic Treatment of Null Values

Null values (distinct from the empty character string of blank characters and distinct from any zero or other numbers) are supported in fully relational DBMS for representing missing information and inapplicable information in a systematic way.

Rule 4: Dynamic Online Catalog Based on the Relational Model

The database description is represented at the logical level in the same way as ordinary data, so that authorized users can apply the same relational language to its interrogation as they apply to the regular data.


Rule 5: Comprehensive Data Sub-language

A relational system may support several languages and various modes of terminal use (for example, the fill-in-the-blanks mode). However, there must be at least one language whose statements are expressible, per some well-defined syntax, as character strings, that is comprehensive in supporting all of the following items:

  • Data Definition
  • View Definition
  • Data manipulation (interactive and by program)
  • Integrity Constraints
  • Authorization
  • Transaction boundaries (begin, commit, and rollback)

Rule 6: View Updating

All views that are theoretically updateable are also updateable by the system.

Rule 7: High-Level Insert, Update, and Delete

The capability of handling a base relation or a derived relation as a single operand applies not only to the retrieval of data but also to the insertion, update, and deletion of data.

Rule 8: Physical Data Independence

Application programs and terminal activities remain logically unimpaired whenever any changes are made in either storage representations or access methods.

Rule 9: Logical Data Independence

Application programs and terminal activities remain logically unimpaired when information-preserving changes of any kind that theoretically permit unimpairment are made to the base tables.

Rule 10: Integrity Independence

Integrity constraints specific to a particular relational database must be definable in the relational data sub-language and storable in the catalog, not in the application programs.

Rule 11: Distribution Independence

A relational DBMS has distribution dependence.

Rule 12: Nonsubversion

If a relational system has a low-level (single record at a time) language, that low level cannot be used to subvert or bypass the integrity rules and constraints expressed in the higher-level relational language (multiple records at a time).