சனி, 15 ஜனவரி, 2011

அனுபவம் - கண்ணதாசன்

தமிழர் திரு நாளாம் தைத் திங்கள் முதல் நாளில், நண்பர்கள் அனைவரின் வாழ்வில் நலமும்,வளமும் விழைய எல்லாம் வல்ல இறையருளை வேண்டி வணங்குகிறேன்.இந்த நாளில் நம்மில் அன்பையும், சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும், சகிப்புத் தன்மையையும் வளர்த்தெடுக்க உறுதி கொள்வோம்.

ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்து தெளிந்த ஓர் அனுபவ சித்தரின் பாடலை பகிர்ந்து கொள்கிறேன்.பாடலில் பொதிந்திருக்கும் அர்த்தம் நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கட்டும்

பிறப்பின் வருவது யாதெனக்
கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!

அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!

பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!

பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!

வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!

‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!

- கவியரசு கண்ணதாசன்

1 கருத்து: