செவ்வாய், 2 நவம்பர், 2010

மனம் மகிழுங்கள்-11

“அவன் என்ன செய்வான்? எல்லாம் பழக்க தோஷம்!”

இந்த டயலாக் உங்களுக்குப் பழக்கமா? அனைவரும் அறிந்த விஷயம் இது. உள்ளார்ந்து இல்லாவிட்டாலும் அனைவருக்கும் மேலோட்டமாகத் தெரியும், பிறருடைய பழக்கம் நம்மையும் பற்றிக்கொள்ளக் கூடியது. மனிதன் பிறரால் எளிதில் பாதிப்படையக்கூடிய வகையிலேயே மன வடிவமைக்கப்பட்டுள்ளான்.

சில மாதங்கள் மேல்நாடு சுற்றுப்பயணம் சென்றுவிட்டு வந்த உங்கள் நண்பரின் ஆங்கில வாடை மாறியிருப்பதைத் தாங்கள் கண்டிருக்கக்கூடும். மலேஷியா சென்று வந்தவர்களுக்கு “லா“ சேர்ந்திருக்கும். வளைகுடா வாசிகளுக்கு “கல்லிவல்லி“ ஒட்டியிருக்கும். விரும்பியோ விரும்பாலோ இவை நிகழ்ந்திருக்கக் கூடும். வெள்ளந்தி மனதுடன் மழலையாகப் பேசிக் கொண்டிருக்கும் நமது குழந்தை பள்ளிக்கூடம் சென்று வர ஆரம்பித்ததும், “பா பா ப்ளேக் ஷீப்”புடன் சேர்த்து ஒவ்வாத சில வார்த்தைகள் கற்றுக்கொண்டு வந்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

இவையெல்லாமே பழக்க தோஷங்கள் தாம்.

நமது சுற்றுப்புறச் சூழ்நிலைக்கேற்ப நமது உடல் தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்வதைப்போல் மனதும் உடனே பழக்கப்படுத்திக் கொள்கிறது. நம் குடும்பம், நட்பு, உறவு, அலுவலக சகா, ரேடியோ, டிவி, செய்தித்தாள், புத்தகம், சினிமா, நடிகர்கள், இப்படி நாம் வாழ்க்கையில் தினந்தோறும் எதிர்கொள்ள நேரிடும் அனைத்தும் நமது மனதைத் தாக்கவல்லன. அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள எந்தத் தடுப்பூசியும் கிடையாது. நமது எண்ணங்கள், செயல்கள், உணர்ச்சிகள், லட்சியம் என அனைத்தும் நாம் வாழும் சூழலுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

“வெய்ட் எ மினிட்! நான் அப்படியெல்லாம் இல்லை. நூறு சதவிகிதம் நான் நானேதான்,” என்று யாராவது சொன்னால் அவர் அனேகமாய் மியூஸியத்திலிருந்து வந்தவராய் இருக்க வேண்டும்.

உடலும் மனதும் சூழ்நிலைக்கேற்பத் தம்மை மாற்றியமைத்துக் கொள்ளும் என்பது இயற்கையின் விதி.

அரசாங்க அலுவலகத்தில் உத்தியோகம் பார்ப்பவர்களின் அலுவல் வேகம் பிரசித்தம். அது, டாக்டர், பயந்தாங்கொள்ளி அரசன் இவையெல்லாம் வார இதழ்களுக்கு நகைச்சுவை எழுதுபவர்களுக்காகவே உலகத்தில் உருவாக்கப்பட்டவை.

தனபால் படித்துக் கொண்டிருக்கும் நாளிலிருந்தே சற்று வித்தியாசமாய், நேர்மையாய்ச் சிந்திக்க முற்பட்டவன். நல்ல குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். தகப்பனார் அந்தக் காலத்து டிஸிப்ளின் பேர்வழி. அவரைப் பொருத்தவரை அரசாங்க உத்தியோகத்தில் கறார் அதிகாரியாகப் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

தனபாலுக்கு நாட்டுப்பற்றும் அதிகம். “அதென்ன நமது அரசாங்கம், நமது நிர்வாகம், நமது அரசாங்க உத்தியோகம் என்றால் இளக்காரம், கேவலம்?” என்ற எண்ணம் அவனுக்குள் குறுகுறுத்துக் கொண்டிருந்தது. அரசாங்க வேலைதான் வேண்டும் என்று சேர்பவர்கள் கூட ஏதோ உழைத்து மக்கள் நலனாற்ற வேண்டும் என்றெல்லாம் இல்லாமல் ஒரு ஜாப் செக்யூரிட்டிக்காகவே அதை நாடியும் சைடில் தனி பிஸினஸ் என்று உழைப்பைக் கொட்டுவதும் கொழிப்பதும் அவனுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணிக் கொண்டிருந்தது. ஒரு முடிவெடுத்தான். வங்கியும் பொருளாதார நிறுவனங்களும் “வா வா“ என்று அழைக்கும் அத்தனைக் கல்வியும் தகுதியும் இருந்தும் வேலைமெனக்கெட்டு அரசாங்க உத்தியோகம்தான் வேண்டும் என்று சேர்ந்தான்.

டீ அருந்தப் பத்து நிமிடம் போதுமானதாயிருக்க, அதற்காகவே அலுவலக சகாக்கள் அரை மணிநேரம் செலவிடுவது அதிர்ச்சியையும் எரிச்சலையும் அவனுக்குத் தந்தது. “ம்ஹும்! இது தப்பு” ... மிகச் சரியாக பத்து நிமிடம் மட்டுமே தனபாலுக்கு ப்ரேக். எல்லாம் சுயக்கட்டுப்பாடு. ஒரு மாதமாகியிருக்கும். பத்து நிமிடம் பதினைந்தானது. ஒரே வருடத்தில் தனபாலுக்குப் ப்ரமோஷன் ஆகியிருந்தது. வேலையில் இல்லை. டீ ப்ரேக்தான் அரைமணி நேரம் ஆகிவிட்டது! பத்து வருடத்தில் தனபால் டிபிக்கல் அரசாங்க அலுவலனாக ஆகிவிட்டிருந்தான். உதாரணம் மிகையாகத் தோன்றுகிறதோ?

இந்த அரசியல் சாக்கடையைப் பினாயில், க்ளோரின் பவுடர் போட்டுச் சுத்தப்படுத்துவதே வேலை என்று தனிக்கட்சி ஆரம்பித்து, அத்தனை கட்சியும் கச்சடா, எனவே தனித்துப் போட்டி, தனித்து அரசாங்கம் என்று ஆரம்பத்தில் வேகவேகமாக அரசியல் அரங்கினுள் நுழைபவரைப் பார்த்திருப்பீர்கள். அந்த ஆரம்பக் கலகலப்பில் மக்களும் கவரப்பட்டு ஏதோ நல்லது நடக்கத்தான் போகிறது போலிருக்கிறது என்று சற்று சுவாரசியப்பட்டு நிமிர்ந்து உட்கார்ந்து கவனிக்க ஆரம்பித்திருப்பார்கள். சில வருடங்களே ஆகியிருக்கும். அந்தக் கட்சி, கூட்டணிக்கும் பதவிப் பங்கீட்டிற்கும் தெற்கே, வடக்கே, கிழக்கே, மேற்கே என்று ஆலாய்ப் பறக்க ஆரம்பித்திருக்கும். “காலத்தின் கட்டாயம்“, “நிரந்தர நண்பனும் இலலை, பகைவனும் இல்லை“ என்று ரெடிமேட் வாசகங்களுடன் அக்கட்சி தேசிய நீரோட்டத்தில் ஐக்கியமாகிவிட, மக்கள் மீண்டும் சானலைத் மாற்றி “எந்த நடிகையின் இடுப்பு மடிப்பு அழகாயிருக்கிறது” என்று தங்களது பணியில் மும்முரமாகியிருப்பார்கள்.

இதில் விசேஷம் என்னவென்றால், நமக்குள் அத்தகைய மாறுதல்கள், மாற்றங்கள் நிகழ்வது நமது உள்மனதிற்கே தெரியாது. எல்லாம் தானாய் -- இயல்பாய் நிகழ்ந்து கொண்டே இருக்கும். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் எழில்மிகு சென்னையின் மாசுற்ற சூழலையும் துர்நாற்றத்தையும் அசௌகரியத்தையும் நாம் உணர வேண்டுமென்றால் பசுமையான ஒரு கிராமத்திற்கு நாலைந்து நாள் ட்ரிப் சென்றுவிட்டு வரவேண்டும். அதன் பிறகு நமக்குப் புரியும். ஏனெனில் நாற்றத்திலேயே இருக்கும்போது நாசி நாற்றத்திற்குப் பழகியிருக்கும்.

அதனால் உளவியலாளர்கள் என்ன தெரிவிக்கிறார்கள் தெரியுமா?

குற்றம் குறை சொல்பவர்களுடன் உங்கள் சங்காத்தம் இருந்தால் நீங்களும் தொட்டதற்கெல்லாம் குற்றம் குறை சொல்லப்பழகிவிடுவீர்கள். மகிழ்ச்சிகரமான மக்களுடன் பழகினால் உங்களையும் மகிழ்ச்சி தொற்றிக் கொள்ளும். குழப்பவாதி, குளறுபடியாளர்களுடன் இருந்தால் உங்கள் வாழ்க்கை முறையும் குழப்பம்தான். ஆர்வம் நிறைந்த உற்சாக மனிதர்கள் உங்கள் தோஸ்த் என்றால் நீங்களும் உற்சாக மனிதர். ரேஸ் கார் ஓட்டுவது, வீர சாகச வேலைகள் புரிவது என்று சிலருக்கு ஆர்வமிருக்கும். அவர்களுடன் நீங்கள் இணைந்தால் உங்களுக்கும் அந்த ஆர்வம் தோன்றிவிடும். எதையும் விவாதித்துக் கொண்டே இருப்பவர்களுடன் உறவாட நேரிடடால், விவாதம் புரிவதே உங்களுடைய இயல்பாகவும் மாறிவிட்டிருக்கும். அதைப் போலவே வெற்றியாளர்களுடன் இணைந்தால் அவர்களது பழக்க வழக்கங்கள், வெற்றிப்பாதை உங்களுக்கும் சொந்தமாகிவிடும்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? நாம் யாராக மாறவிரும்புகிறோமோ அத்தகையோரைத் தேர்ந்தெடுத்து அவர்களுடன் நமது உறவை அமைத்துக் கொள்ள வேண்டும். அது எப்படி முடியும்?

தேடித்தான் பெறவேண்டும். கோழி பிரியாணி வேண்டுமென்றால் சரவண பவனில் சென்றா ஆர்டர் தர முடியும்? தலைப்பாக்கட்டுக் கடையைத்தான் தேடவேண்டும்.

ஒருவர் வாழ்க்கையில் நொடித்துப் போனவராக, மன அழுத்தத்தில் உள்ளவராக, உற்சாகமற்றவராக இருந்தால், வெகுநிச்சயமாக அவர் பழகும் நட்பு வட்டாரம் அத்தகையவர்களாகவே இருக்கும் என்று அடித்துச் சொல்கிறார்கள். ஏனெனில் ஒருவர் வாழ்க்கையில் எப்பொழுதுமே அத்தகைய நிலையிலிருந்தால் அது தற்செயல் அல்லவாம். ஆகவே அவர் வாழ்க்கையில் உருப்படுவதற்கு வழிவகை காணவேண்டும் எனில் முதலில் தன்னைச் சுற்றிப் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறகு அதைவிட்டு விலகி வரவேண்டும்.

அடுத்து நற்குண மக்கள், பண்பாளர்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுத்து, விண்ணப்பப் படிவம் இருந்தால் பூர்த்தி செய்து கொடுத்து அவர்களுடன் சேர்ந்து கொள்ளவேண்டும். ”பூவுடன் சேர்ந்து நாரும் மணப்பதைப் போல” மனம் மாறும், மகிழ்வுறும். வாழ்க்கையும் தானாய் மாறும்.

அதேநேரம் எச்சரிக்கையும் அவசியம். கெட்ட சமாச்சாரம் எப்பொழுதுமே கவர்ச்சியானது. பண்பாளன் ஒருவன் தட்டுக்கெட்டுப் போய், “கெட்டப் புள்ளை“களுடன் சேர்ந்து கொண்டால், நாருடன் சேர்ந்து பூவும் நாற வேண்டியதுதான்.

னம் மகிழ, தொடருவோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக