திங்கள், 29 நவம்பர், 2010

மனம் மகிழுங்கள்! - 24 : நன்னம்பிக்கை


யானையின் பலம் எதிலே?
தும்பிக்கையிலே!
மனிதனோட பலம் எதிலே?
நம்பிக்கையிலே!

- என்று தமிழ்க் கவிஞரொருவர் எழுதியிருந்தார்.

நம்பிக்கை!

அது நம் ஒவ்வொருவருக்கும் உண்டு; எக்கச்சக்கமாய் உண்டு. மறுப்பவர்கள் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறையோ அல்லது அதற்குள்ளோ தங்களது விரல் நகங்களில் தீட்டப்படும் கறுப்பு மையை உற்றுப் பார்த்துக் கொள்ளலாம். என்றாவது, எப்படியாவது, யாராவது ஓர் ஆட்சியாளர் நீதி, நேர்மையுடன் நம்மை ஆளத்தான் போகிறார் என்று நம்பவில்லை?


தவிர, நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை உண்டு. ஒவ்வொருமுறை ஏதோ காரணம் அமைந்திருந்தாலும் “இந்த முறை கணவன் தன்னை எப்படியும் முதல்முறையாக ப்ஃளைட்டில் ஏற்றி சிங்கப்பூர் அழைத்துச் செல்லப் போகிறான்,” என்று ஒரு நடுத்தரவர்க்க மனைவிக்கு நம்பிக்கை. “வரதட்சணையா? அதென்ன கற்கால வழக்கம்? பெண்ணை மட்டும் தாருங்கள்” என்று ஒரு ராஜகுமாரன் குதிரையிலோ, குறைந்தபட்சம் ஓர் ஆட்டோவிலோ வந்து நிற்கப் போகிறான், என்று பெண்ணைப் பெற்றவருக்கு நம்பிக்கை.

எதிர்மறையாய் வேறொரு வித நம்பிக்கையும் உண்டு.

மூட நம்பிக்கை!

தேர்விற்காக விடியவிடியப் படித்து, மாய்ந்து மாய்ந்து தயாராகி, தேர்வுத் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முழுகி, கடைசியில் கப்போர்டிலுள்ள பச்சைக் கலர் பேனாவைக் கண்ணில் ஒற்றி எடுத்துக் கொண்டு “தேர்வை இந்தப் பேனாவில் எழுதினால் நிச்சயம் நான் பாஸ்,” என்று சின்னப்ப தாஸுக்கு ஒரு நம்பிக்கை.

தேடித்தேடி விண்ணப்பித்து, ஆளைப்பிடித்து, கழுதைக் காலைப்பிடித்து ஒருவழியாய் அந்த மல்டிநேஷனல் கம்பெனியில் நேர்முகத் தேர்விற்கு அழைப்பிதழ் வர, படு டென்ஷனுடன் கிளம்பும் மகனிடம், “அந்த நீலநிறக் கர்சீப்பை மறக்காமல் பேண்டிற்குள் வைத்துக்கொள். உனக்கு நீலம்தான் ராசியான கலர்,” என்று மகனுக்கு அறிவுறுத்தும் அம்மாவிற்கு ஒரு நம்பிக்கை.

பூனை குறுக்கே ஓடினால், “ஆஹா! சகுனம் சரியில்லையே!”

கிளம்பும்போது “எங்கே போகிறீர்கள்?” என்று யாராவது கேட்டுவிட்டால், “போகும் காரியம் உருப்பட்டாற் போலத்தான்.”

காக்கை கத்தினால், "விருந்தாளிகள் வரப்போகிறார்கள் பார்" என்று நினைக்க, விருந்தாளிகள் வந்து சேருவார்கள். அடுத்த முறை ஊரிலுள்ள உறவினர் வீட்டிற்குச் செல்லும்முன் மெயில், போன், எஸ்.எம்.எஸ்., என்று எதுவும் முயலாமல் நேரடியாய்ச் சென்று இறங்கி, திகைத்து நிற்பவரிடம் “என்ன காக்கை கத்தவில்லையா?” என்று கேட்டுப் பார்க்க வேண்டும்.

எது எப்படியோ, இப்படியான மூடநம்பிக்கைப் பட்டியல் நூறு பக்க நோட்டு அளவிற்கு நீளம்!

மனவியலாளர்கள் இதை மாற்றி வேறுவிதமாகச் சொல்கிறார்கள். உங்கள் மனம் எதை நினைக்கிறதோ – நல்லதோ கெட்டதோ - அதை அடைந்துவிடும் தன்மை கொண்டது!

“எனக்கு ஒவ்வொரு மாதமும் முதல் வாரம் தலைவலி வரும்” என்று நினைத்தால் அது உங்களைத் தவறாமல் வந்தடையும். “கூடுதலாய்க் கொஞ்சம் பணம் கிடைத்தாலும் அது எனக்குத் தங்காது,” என்று நினைப்பவர்களுக்குப் பணம் ஏதும் உபரியாய்க் கிடைத்தாலே அது உடனே செலவாகிப் பர்ஸ் காலியாவது நிச்சயம் என்று தலையில் அடித்து “காட் ப்ராமிஸ்பா,” என்கிறார்கள்.

அமெரிக்காவில் கார்ல் சிமன்டண் (Dr. O. Carl Simonton) என்றொரு டாக்டர் இருந்தார். புற்றுநோய் மருத்துவர். தம் நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யும் போது ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனித்தார். ஒரே அளவிலான கதிர்வீச்சு சிகிச்சை பெறும் நோயாளிகள் மத்தியில் இரு விதமான விளைவுகள் தென்பட்டன. “ஏன்?” என்று அவருக்குள் கேள்வி எழுந்து, அதை நுணுகி ஆராய்ந்தவர் அந்த விஷயத்தைக் கண்டுபிடித்தார். Positive attitude எனப்படும் ஆக்கபூர்வச் சிந்தனையுள்ளவர்களுக்கு மனம் சோர்வடைந்தவர்களைவிடக் குறைவான பக்க விளைவுகளே இருந்தன. “ஆஹா! மனதிற்கும் உடல்நலனிற்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது,” என்றவர், புற்றுநோயின் முற்றிய நிலையில் இருந்தவர்களுக்குக் கூட மருத்துவத்துடன் சேர்த்து மனப் பயிற்சி அளிக்கும்போது அவர்களது மரணத்தைத் தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும் அவர்களது சொச்ச வாழ்நாளுக்கு உற்சாகத்தையும் மனக்கட்டுப்பாட்டுத் தரத்தையும் உயர்த்த முடியும் என்று ஆராய்ந்து நிரூபித்தார்.

தமது ஆராய்ச்சியில் டாக்டர் கார்ல் முக்கியமாய்த் தெரிவித்த தகவல், “நோயாளிகளின் நம்பிக்கைக்கு ஏற்ப அவர்கள் குணமடையும் வேகம் அமையும்.” அதன் அடிப்படையில் அவர் மருத்துவச் சிகிச்சையும் மனவுறுதி ஆலோசனைகளையும் சேர்த்து அளிக்க ஆரம்பித்தார். சென்ற ஆண்டு இந்த டாக்டர் உணவு உண்ணும்போது புரையேறி இறந்து போனார் என்பது மட்டும் சோகமான உபரித்தகவல்.

வாழ்க்கையில் உங்களது மனம் எதை நம்புகிறதோ அதுவே உங்களுக்கு நிகழும். “என்னை யாரும் கண்டு கொள்வதில்லை; என்னிடம் சரியாகப் பழகுவதில்லை; என்னை ஏமாற்றப் பார்க்கிறார்கள்,” என்பது உங்கள் மன நம்பிக்கையென்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அதையே எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

“எல்லோருக்கும் என்னைப் பிடித்திருக்கிறது; என்னிடம் அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறார்கள்,” என்று நம்புகிறவருக்கு அவர் வாழ்க்கையில் அவ்விதமே நிகழ்கிறது.

உங்கள் மனம் உங்களது கட்டுப்பாட்டில்! எதைச் சிந்தனை செய்ய வேண்டும் என்பதை நீங்கள்தாம் முடிவடுக்கிறீர்கள். உங்கள் மனதிற்குள் எதைத் திணிப்பது என்பதையும் நீங்கள்தாம் முடிவெடுத்து நிகழ்த்துகிறீர்கள்.

நல்லதை நம்பி மனதிற்குள் நல்ல எண்ணங்களையே திணித்தால் வாழ்க்கையில் அகமும் முகமும் மகிழ்வுடன் திகழும்.


னம் மகிழ, தொடருவோம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக