வெள்ளி, 19 நவம்பர், 2010

மனம் மகிழுங்கள்-16

கூடுவாஞ்சேரியில் சின்னதொரு தொழிற்கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்த தனபாலுக்கு வேலை போய்விட்டது. ஒருநாள் அவரை அழைத்த முதலாளி, "உலகப் பொருளாதார நிலை சரியில்லையாம். அமெரிக்காவில் வீடெல்லாம் விற்காமல், கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தாமல், பேங்க் திவாலாகிறதாம். அதனால் நமக்குத் தொழில் படுத்துவிட்டது. நான் ஆள் குறைப்புச் செய்ய வேண்டும். ரொம்ப ஸாரி. நீ இனிமேல் வேலைக்கு வரவேண்டாம்" எனக் கூலாகச் சொல்லிவிட்டார்.



என்ன அநியாயம் இது? அமெரிக்காவிற்கும் கூடுவாஞ்சேரிக்கும் என்ன சம்பந்தம்?

அது பொருளாதார இலாகா; அதில் நாம் மூக்கை நுழைக்க வேண்டாம். நமக்கு முக்கியம் தனபால். அவரது எதிர் வினை - reaction.

வீட்டிற்குத் திரும்பிய தனபால் யோசித்தார். என்ன செய்யலாம்? "போகட்டும், ஒரே கம்பெனியில் குப்பை கொட்டி அலுத்துப் போய்விட்டது. புதிதாய் ஏதாவது முயல்வோம். குச்சி ஐஸ் விற்றுப் பார்க்கலாமா? டீக்கடை? எங்கு போட்டாலும் மவுசு குறையாத தொழில், அதைச் செய்வோமா?" இப்படியெல்லாம் யோசித்து, யோசித்து ஏதோ ஒன்றை அடுத்த சில நாட்களிலேயே அவர் தொடங்கி விட்டார்.

சென்னையில் மற்றொரு தொழிலதிபர். ஏகப்பட்ட சொத்து, பங்களா, கார், ஆஸ்திக்கு ஒரு மனைவி, ஆசைக்குப் பல நாயகிகள் என்று சொகுசு வாழ்க்கை. ஒருநாள் தடாலென ஸ்டாக் மார்க்கெட் தலைகீழாகத் தரையில் விழுந்தது; மனுஷன் இரவில் படுக்கச் சென்றவரைக் காலையில் பார்த்தால் மின் விசிறியில் கால்கீழாகத் தொங்கிக் கிடந்தார்.

இங்கு இருவர் எடுத்த இருவேறு முடிவுகளுக்குக் காரணம் மனம் ஓர் இழப்பை எதிர்கொண்ட பக்குவம் ஆகும். அதுதான் இரு முடிவுகளுக்கிடையேயான முக்கியமான வித்தியாசம். ஒருவர் இழப்பை மட்டுமே கண்டு துவண்டுவிட, மற்றவர் ”போனால் போகட்டும் போடா” என்று உதறிவிட்டு, அதைவிட வேறு நல்ல வாய்ப்புகளைத் தேடிக் கண்டுபிடித்து விட்டார்.

வாழ்க்கையின் நிகழ்வுகள் மட்டுமே மகிழ்ச்சியையோ துயரத்தையோ நிர்ணயிப்பதில்லை. அந்த நிகழ்வை நாம் எப்படி உள்வாங்குகிறோம்; பிறகு எப்படி எதிர் வினையாற்றுகிறோம் (react) என்பது தான் நிர்ணயிக்கும்.

"எல்லாம் எல்லை மீறிப் போச்சு! இனிச் செய்வதற்கு ஒன்றுமில்லை!" என்று நினைத்தால் நாம் அவ்விஷயத்தில் நமது கட்டுப்பாட்டை இழக்கிறோம். அந்தக் கட்டுப்பாட்டிழப்பு நமது முடிவு!

"நான் அம்பேல்!" என்று கையைத் தூக்கிவிடுவதால் ஏற்படுவது.

போராட்டம் இல்லையெனில் அது என்ன வாழ்க்கை?

மன மகிழ்வுடன் இருப்பதென்பது, எப்பொழுதுமே எளிதான ஒன்றில்லை. வாழ்க்கைப் பாதையில் காணும் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப அதன் கடுமையும் மாறுபடும். நாம் எதிர்கொள்ள வேண்டிய மிகப் பெரிய சவால் அது! சில சமயங்களில் நம்முடைய மனவுறுதி, விடாமுயற்சி, சுயக் கட்டுப்பாடு ஆகியனவற்றையெல்லாம் படையாகத் திரட்டி, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதில் உருவாவதுதான் நம் மனப் பக்குவம்.

மனப் பக்குவம் என்பதென்ன?

அதுவே தனி சப்ஜெக்ட் ஆக விரியும்.. இந்த இடத்தில் நமக்குத் தேவையான மனப் பக்குவத்தை மட்டும் பக்குவமாய்ப் பார்த்துவிடுவோம்.

இங்கு மனப் பக்குவம் என்பதன் பொருள் நமது மன மகிழ்விற்கு நாம் பொறுப்பேற்றுக் கொள்வது ஆகும்.

நம்முடைய சுற்றமும் நட்பும் சூழ்நிலையும் கூட நம் மன மகிழ்வைச் சிதைக்கக் கங்கணம் கட்டிக் களத்தில் இறங்கலாம்.

ஆனால் ஒவ்வொருவரின் மனதும் யாருடையது? அவரவருடையது!

அதன் மகிழ்வு யாருடையது? அவரவருடையது!

எனில், அதன் பொறுப்பு யாருடையது? அதுவும் அவரவருடையதே!

அப்படியானால் அவரவரும் தங்களிடம் இருப்பதில் தானே கவனம் செலுத்த வேண்டும்? அந்த மனப் பக்குவம் வர வேண்டும் என்கிறார்கள்.

மேலும் சற்று விளக்கமாய்ப் பார்ப்போம்.

நமது மனதில் ஓடக்கூடிய எண்ணங்கள் யாருடையவை?

நம்முடையவை! இன்று இதையெல்லாம் நீ நினைக்க வேண்டும் என்று யாரும் நமது மூளைக்குள், கணினியில் ஃபீட் செய்வதுபோல் கொண்டுவந்து கொட்டிவிட்டுப் போகவில்லையே! நம் மனதில் ஓடும் எண்ணங்களையெல்லாம் நாமாகத் தானே சிந்தித்து ஓட்டிக் கொள்கிறோம்.

எனவே நமது மகிழ்ச்சிக்கான ஆதிக்கம் நம்மிடம் மட்டுமே இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்?

ஜவுளிக் கடைகளில் பெண்கள் தேடித் தேடி நல்ல டிஸைன் துணிகளை எடுப்பது போலத் தேடித் தேடி மகிழ்வான எண்ணங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அதில நம் கவனத்தைச் செலுத்தப் பழக வேண்டும். அந்த மனப் பக்குவம் வந்து விட்டால் போதும், வாழ்க்கையின் நிகழும் பெரும்பாலான அநாவசிய நிகழ்வுகளை உதாசீனப்படுத்தி விட்டோ, நிராகரித்து விட்டோ, மனம் மகிழலாம்.

ஆனால் பெரும்பாலும் நடப்பவை என்ன? நேர்மாறானவை!

அலுவலகத்தில் ஒரு முக்கிய ப்ராஜெக்ட். இராப் பகலாய் உழைத்துச் சாதித்து விட்டீர்கள். அனைவரும் உங்களைப் பாராட்டியிருப்பார்கள். நீங்களும் மகிழ்வடைவீர்கள். ஆனால் அதில் ஒரே ஒருவர் மட்டும், பர்மா பஜாரிலிருந்து நல்ல பூதக் கண்ணாடி ஒன்று வாங்கி வந்து நெற்றியில் மாட்டிக் கொண்டு, உங்கள் ப்ராஜெக்ட்டை அலசி மேய்ந்து, தருமியிடம் நக்கீரன் சொன்னதுபோல், "உமது ரிப்போர்ட்டில் ஒரு குற்றம் இருக்கிறது!" என்று மட்டம் தட்டியோ இகழ்ந்தோ பேசிவிடுவார்.

போச்சு! எல்லாம் போச்சு!

அத்தனை பேரின் பாராட்டும் நல்வாழ்த்துகளும் மறந்துபோய், அந்தக் கீறலும் கீரனும் உங்கள் மனதை ஆக்கிரமித்துக்கொள்ள, அந்த எண்ணமே நாள், வார, மாதக் கணக்காய் உங்கள் மனதில் ஓடிக்கொண்டேயிருக்கும். வெற்றிகரமான 25ஆவது வாரம் போஸ்டர் ஒட்டாத குறை!

ஒரு கெட்ட அனுபவம், இகழ்ச்சி, யாரோ எவரோ போகிற போக்கில் உங்களைச் சீண்டிவிட்டுப் போகும் ஒரு பேச்சு, இப்படி ஏதாவது ஒன்று உங்கள் மனதை ஆக்கிரமித்து இடம்பிடித்துக் கொண்டால் அதன் விளைவுகள் மகிழ்வைக் கொன்றுவிடும். அதற்கு இடமளிக்கக்கூடாது. நம் மனதின் கட்டுப்பாடு நம்மிடம் தான் உள்ளது என்பதை உணர வேண்டும். அதற்கேற்பச் செயலாற்ற வேண்டும்.

நம்மில் பலரும் பாராட்டைச் சில நிமிடங்களுக்கும் இகழ்ச்சியை ஆண்டாண்டிற்கும் நினைவில் வைத்துக் கொள்கிறோம். அதன் பலன்?

நாம் குப்பை சேகரிப்பாளர்களாக ஆகிவிடுகிறோம். தன் முகத்தை குறிவைத்துத் தூக்கி எறியப்பட்ட ஷுவையே புஷ் "ஷு" எனத் தட்டிவிட்டுச் சென்றுவிட, இருபது முப்பது வருடங்களுக்கு முன் நம் மீது வீசப்பட்ட குப்பைகளையெல்லாம் பத்திரமாகச் சேகரித்து வைத்துக் கொண்டு "மறப்பேனா அதை?" என்று மல்லுக்கட்டினால் எப்படி?

"இருபது வருஷமாச்சு. இன்னிக்கும் அவன் சொன்னது மறக்கலே! என் மனசுல அப்படியே இருக்கு!" என்பவர், முந்தாநாள் எதிர் வீட்டுக்காரர் ஏதோ ஒரு விஷயத்திற்காக அவரைப் பாராட்டியதை மறந்தே போயிருப்பார். ஆனால் பழைய குப்பை அவரது மனதை அப்படியே ஆக்கிரமித்து இருக்கும்.

ஆம்; அதற்கு என்ன செய்ய வேண்டும்?

எளிய உபாயம் உண்டு. நாளைக் காலை ஆயுள் பாக்கியிருந்து எழுந்தால், ஒரேயொரு தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். அது, "ஹேப்பி! இன்று முதல் ஹேப்பி!". விவிதபாரதியில் ஒலிபரப்பாகும் பாடல் இல்லை; நீங்கள் எடுக்க வேண்டிய உண்மையான தீர்மானம்.

என்றாவது ஒருநாள் நாம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தானே எல்லோரும் பிரயாசைப்படுகிறோம். அந்த என்றாவது ஏன் இன்றாக இருக்கக்கூடாது? உணர்ந்து பாருங்கள். மாற்றம் தென்படும்.

"கடுந்துயரம்", "மனப்பாரம்", "தனிமை" என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோகம் இருந்து கொண்டுதான் இருக்கும். அவையெல்லாம் தீர்ந்தபின் மகிழ்வடையலாம் என்பதெல்லாம் அல்லாமல் ஒரே ஒரு முடிவு மட்டும் தேவைப்படுகிறது. அனைத்தையும் ஒதுக்கி ஓரமாய் வைத்துவிட்டு "ஹேப்பி! இன்று முதல் ஹேப்பி!"

வாழ்வின் நிறமே மாறிவிடும்!

மன மகிழ்வுடன் வாழ்வதென்பது, பூமி மாசடைய ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே கடினமாக இருந்துவந்த செயல்தான். அதற்காக மகிழ்வைத் தொலைப்பதா?

வீட்டை அழகாய் வைத்துக்கொள்ள என்ன செய்வோம்? குப்பையைக் கடாசிவிட்டு, பயனுள்ள பொருட்களை மட்டுமே வைத்துக் கொள்வோம். அதைப் போல்தான் மன மகிழ்வும். மனதிலுள்ள குப்பையை எறிந்துவிட்டு, நல்லவற்றை மட்டுமே சுமந்தால் போதும்.

கண்ணாடி சன்னல் வழியாக இருவர் வெளிப்புறத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். சன்னலுக்கு வெளியே உள்ள அழகிய தோட்டம் ஒருவரின் மனதைப் பறித்தது; அங்கிருந்த பூக்கள் புத்துணர்வூட்டின. மற்றவருக்கோ சன்னலில் படித்துள்ள அழுக்கும் பிசுக்கும் மட்டுமே கண்ணை உறுத்தியது. தோட்டமும் பூக்களும் அவர் கண்ணில் படவே இல்லை.

நாம் எதைக் காண விரும்புகிறோமோ அதையே நமது மனம் காணும். அதுதான் சூட்சமம்.

னம் மகிழ, தொடருவோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக