இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூவைத்
தொட்டிலில் கட்டிவைத்தேன் - அதில்
பட்டுத் துகிலுடன் அன்னச் சிறகினை
மெல்லென இட்டு வைத்தேன் - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)
எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான்
மண்ணில் பிறக்கையிலே - பின்
நல்லவராவதும் தீயவராவதும்
அன்னை வளர்க்கையிலே (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)
தூக்கமருந்தினைப் போன்றவை பெற்றவர்
போற்றும் புகழுரைகள் - நோய்
தீர்க்கும் மருந்தினைப் போன்றவை கற்றவர்
கூறும் அறிவுரைகள் (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)
ஆறு கரை அடங்கி நடந்திடில்
காடு வளம் பெறலாம் - தினம்
நல்ல நெறிகண்டு பிள்ளை வளர்ந்திடில்
நாடும் நலம் பெறலாம் (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)
பாதை தவறிய கால்கள் விரும்பிய
ஊர் சென்று சேர்வதில்லை - நல்ல
பண்பு தவறிய பிள்ளையைப் பெற்றவர்
பேர் சொல்லி வாழ்வதில்லை (2) - நான்
ஆராரோ என்று தாலாட்ட - இன்னும்
யாராரோ வந்து பாராட்ட
(இந்தப்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக