திங்கள், 28 பிப்ரவரி, 2011

சோலே மசாலா



தேவையான பொருட்கள்:

வெள்ளை கொண்டக் கடலை – 1 கப்
வெங்காயம் – 2
தக்காளி – 3
இஞ்சி – 1 துண்டு
பச்சை மிளகாய் – 1
மிளகாய்ப் பொடி – ½ டீஸ்பூன்
தனியாப் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி – ¼ டீஸ்பூன்
கரம் மசாலாப் பொடி – ½ டீஸ்பூன்
சோலே மசாலா – ½ டீஸ்பூன் (இப்போதெல்லாம் கடைகளிலேயே கிடைக்கிறது.)
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவைக்கேற்ப
சீரகம் – ½ டீஸ்பூன்
கொத்தமல்லி – அலங்கரிக்க
எலுமிச்சைசாறு – புளிப்பு சுவை பிடித்தால், கடைசியில் சேர்த்துக் கொள்ளலாம்.
பூண்டு சேர்க்க விருப்பமுள்ளவர்கள் இரண்டு பல் பூண்டு சேர்த்துக் கொள்ளலாம். நான் பெரும்பாலும் சேர்ப்பது கிடையாது.

செய்முறை:

ஒரு கப் கொண்டக்கடலையை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு இரவு முழுவதும் ஊற வைக்கவும். காலையில் மேலே கொடுக்கப் பட்ட பொருட்களில் உள்ள வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் இவற்றுடன் பிடித்தால் பூண்டு சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் செய்வது போல குக்கரில் நேரிடையாக செய்யப் போகிறோம். அடுப்பை பற்ற வைத்து குக்கரை வைத்து அதில் எண்ணெய் விட்டு, அது காய்ந்ததும் சீரகத்தை போட்டு பொரிய விடவும். பின்பு அதில் அரைத்து எடுத்த வெங்காய-தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இரண்டு நிமிடங்கள் வதங்கியதும் அதில் மேலே குறிப்பிட்டுள்ள மிளகாய்ப் பொடி, மஞ்சள் பொடி, தனியாப் பொடி, கரம் மசாலாப் பொடி, சோலே மசாலா, உப்பு ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். இப்படி வதக்க குக்கரின் மூடியை திருப்பிப் போட்டு மூடி வைத்தால் இந்த க்ரேவி நம் மேல் தெளிக்காமலும், கிச்சன் டைல்ஸ் மேலும் தெளிக்காமலும் இருக்கும்.

க்ரேவி நன்றாக வதங்கியதும் ஊற வைத்திருந்த கொண்டக் கடலையை குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து (மூழ்கும் வரை) குக்கரை மூடி வெயிட் போட்டு அடுப்பை சிம்மில் (மிகவும் குறைந்த தணலில்) 25 நிமிடங்கள் வைத்து அடுப்பை நிறுத்தவும். சிறிது நேரங்கழித்து குக்கரைத் திறந்து விருப்பமிருந்தால் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைகளைப் போட்டு அலங்கரிக்கவும். சுவையான சன்னா மசாலா தயார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக