வியாழன், 21 மே, 2009

துபாய் உங்களை அன்புடன் வரவேற்கிறது!

வாழும்போதே சொர்க்கத்தைத் தரிசிக்க விரும்புபவர்கள் அனைவரும் துபாயைத் தேர்ந்தெடுப்பதற்குப் பல காரணங்கள். திரும்பும் பக்கமெல்லாம் செல்வச் செழிப்புடன் பளிச்சிடும் இந்த நகரம், புத்தரையும் பிசினஸ்மேனாக மாற்றிவிடும். குறிப்பாக, தொழிலாளர்களின் கனவு தேசம். வா, வா என்று வரவேற்று,வந்தவர் கள் அனைவருக்கும் வேலையும் இருப்பிடமும் உணவும் அளிக்கும் தேசம்.

தொழிலாளர்கள் மட்டுமல்ல... முதலீட்டாளர்களும் துபாயை விடாமல் மொய்த்தனர். கோடி கோடியாகக் கொண்டுவந்து கொட்டினார்கள். தொட்டதற்கும் வரி விதிக்கும் உலகத்தில், உங்களுக்கு வேண்டியதைச் சம் பாதித்துக்கொள்ளுங்கள் என்று நாசூக்காக ஒதுங்கிப் போகும் அரசாங்கத்தை வேறு எங்காவது கண்டது உண்டா?

இங்குள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 90 சதவிகிதம். துபாயின் செல்வச்செழிப் புக்குக் காரணம், இந்த 90 சதவிகித அயல்தேச மனித உழைப்புதான் என்பதை துபாய் நன்கு உணர்ந்திருந்தது. எனவே, சற்றே கூடுதலாக அள்ளிக்கொடுப்பதில் தவறேதும் இல்லையே!

இதன் தொடர்ச்சியாக, அடுக்கு மாடிக் கட்டடங்களில் வீடு வாங்கும்படி மக்களை ஊக்குவித்தது துபாய். குளிரூட்டப்பட்ட புல்வெளி, மாடியில் நீச்சல் குளம், பளிங்குத் தரை என்று இழைத்து இழைத்துக் கட்டப்பட்ட குடியிருப்புகளை முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்க ஆரம்பித்தனர். வங்கிக் கடன் தாராளமாக அளிக்கப்பட்டது. முதலீட்டாளர்கள் நிரந்தரமாக வீடு வாங்கித் தங்கிவிட்டால், அவர்கள் முதலீடும் நிரந்தரமாகிவிடுமே!

ரியல் எஸ்டேட் பிசினஸ் புது வேகத்தில் வளர்ச்சி அடைய ஆரம்பித்தது இந்தப் புள்ளியில் இருந்துதான். நிலத்தில் வீடு கட்டுவதில் என்ன பெரிய கிக் இருந்து விட முடியும்? ஏகப்பட்ட சொகுசான கட்டடங்களை ஏற்கெனவே உருவாக்கியாகிவிட்டது. எனவே, கடலுக் குக் கீழே செயற்கைத் தீவுகளை உருவாக்குவதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டன. அந்த வரைபடத் தையே மாதிரியாக வைத்து விற்கவும் ஆரம்பித்தனர். 'நாங்கள் அமைக்கப்போகும் அதிசய உலகில் உங்க ளுக்கு ஓர் இடம் வேண்டுமானால் இப்போதே அட்வான்ஸ் செலுத்திவிடுங்கள். தவறவிட்டால், வாய்ப்பு கிடைக்காது.'



அதற்கும் போட்டி. அவசரமாக வங்கியில் கடன் வாங்கி, தங்கள் பெயரைப் பதிவு செய்துகொண்டார்கள். இவர்களில் சிலர், வாங்கிய இடத்தைக் கூடுதல் விலைக்கு விற்று மேலும், ஒரு புதிய அலையைப்பரப்பி விட்டனர். கவனிக்கவும், வெறும் வரைபடத்தை மட்டுமே வைத்துக்கொண்டு நடத்தப்பட்ட சூதாட்டம் இது. 'கிட்டத்தட்ட இங்கேதான் வரும் சார்' என்று நடுக்கடலில் மையமாகக் கையைக் காட்டுவார்கள். பிறகு, ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று கூல்டிரிங்க் கொடுத்து, உபசரித்து பத்திரத்தை நீட்டுவார்கள். கேட்கும் பணத்தைச் செலுத்திவிட்டு, நடுக்கடலில் வீடு என்னும் வண்ணக் கனவுடன் வீட்டுக்குப் போய்விட வேண்டியதுதான்!

பொருளாதாரச் சரிவு அமெரிக்காவைத் தாக்கியபோது, துபாய் அதிகம் அலட்டிக்கொள்ளவில்லை. ஒட்டுமொத்த உலகமும் சரிந்து பொடிப்பொடியாக உதிர்ந்தாலும், துபாய் தடுமாறாது என்று நம்பி னார்கள்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீழ்ச்சியின் வாசனையை நுகர ஆரம் பித்துவிட்டது என்று பின்னொரு நாள் தெரிந்துகொண்டபோதும் துபாய்வாசிகள் கலங்கவில்லை. துபாய் சரிய ஆரம்பித்தது. முதல் தாக்குதல், அவர்கள் ஆசை ஆசையாக நம்பிக்கொண்டிருந்த ரியல் எஸ்டேட் பிசினஸ் மீதுதான். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது வருவாயில் 30 சதவிகிதத்தை ரியல் எஸ்டேட்டில் இருந்து பெற்று வந்தது என்பதை இங்கே நினைவில்கொள்ள வேண்டும். ஆகவே, முதல் அடி மரண அடியாக இருந்தது.

நடுக்கடலில் முளைக்க இருந்த வீடுகள் முளைக்குமுன்னே கடலில் மூழ்கிவிட்டன. சட்டென்று கைமாற்றலாம் என்றால், வாங்குவோர் யாருமில்லை. கடல் வீடுகள் மட்டுமல்ல... நில வீடுகளும் தத்தளிக்க ஆரம்பித்தன. சென்ற ஆண்டோடு ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 72 சதவிகிதச் சரிவு. நினைத்துப் பார்க்க முடியாத சேதம்... சோகம்!

சில சலுகைகளை வழங்கிப் பார்த்தது துபாய். 'ஒரு மில்லியன் திர்ஹாமை இங்கே முதலீடு செய்வதாக யார் வாக்களித்தாலும் அவர்கள் விசா காலத்தை மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்கிறோம். ரியல் எஸ்டேட்டைத் தூக்கி நிறுத்தும் பணியில் இறங்குங்கள். விரைவில் நிலைமை கட்டுக்குள் வந்துவிடும். இழந்த பணத்தை மீண்டும் பெறலாம்.'

கிட்டத்தட்ட அதே சமயம், பணியாளர்கள் கும்பல் கும்பலாக வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பிசினஸ் டல் என்று காரணம் சொல்லப்பட்டது. தொழிலாளர்களுக்கு எந்தக் காரணமும் சொல் லப்படவில்லை. டிக்கெட் மட்டும் எடுத்துக் கொடுத்து அனுப்பி விட்டார்கள். வட்டிக்குக் கடன் வாங்கி துபாய் வந்த பலர், காலி பாக்கெட்டுடன் வீடு போய்ச் சேர்ந்தனர்.

ஒரு சிலர் ஆர்ப்பாட்டம் நடத்திப் பார்த்தனர். கொளுத்தும் வெயிலில் வீதியில் இறங்கி கோஷம் போட்டுப் பார்த்தனர்.

வழங்கப்பட்டிருந்தது வொர்க் விசா என்பதால், வேலை இழந்த அனைவரும் துபாயில் தங்கியிருப்பதற்கான அனுமதியையும் இழந் தார்கள். கடன் செலுத்த முடியாதவர்கள் ஜெயிலில் தள்ளப்பட்டனர். வாழ்நாள் முழுவதும் சம்பளம் இல்லாமல் உழைத்தாலும், கடனை அடைக்க முடியாது என்று தெரிந்துகொண்ட பலர் கார், வீடு அனைத்தையும் அங்கேயே அப்படியே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

இப்படியே விட்டால் தேசம் காலியாகிவிடும் என்று அஞ்சிய துபாய் அரசு, ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. 'துபாயில் பொருளாதார வீழ்ச்சி என்று யாராவது முறைகேடாகச் செய்தி வெளியிட்டால், ஒரு மில்லியன் திர்ஹாம் அபராதம் விதிக்கப்படும். நீங்கள் வெளியிட வேண்டிய செய்தி இதுதான். முதலீட்டாளர்களே, கலங்க வேண்டாம். சின்னச் சின்னச் சலசலப்புகள்தாம். எல்லாம் சரியாகிவிடும். அச்சமின்றி வாருங்கள். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யுங்கள். கடலுக்குள் கோட்டை கட்டுங்கள். துபாய் உங்களை அன்புடன் வரவேற்கிறது!'


நன்றி : விகடன்.

1 கருத்து:

  1. இது அப்படியே நிஜம். இப்பொழுது துபாய் தூற்றும் பாய் ஆகிவிட்டது

    பதிலளிநீக்கு