திங்கள், 7 மார்ச், 2011

மனம் மகிழுங்கள் - ஏட்டில் எழுதி வை - 31

ட்டியல் அறியாதவர் யாரும் இருக்க முடியாது. மளிகைக் கடைப் பட்டியல், மருந்துப் பட்டியல், வாக்காளர் பட்டியல், மந்திரி சபைப் பட்டியல், என்று நாம் அனைவரும் எங்காவது ஏதாவது ஒருவிதத்தில் பட்டியல் தயாரிக்க, அல்லது அதில் இடம் பிடிக்க என்று முயல்வதால் அது நம் வாழ்க்கையோடு இணைந்த ஒன்று ஆகிவிட்டது. இந்தப் பட்டியலுக்கும் நாம் சென்ற இரு அத்தியாயங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோமே குறிக்கோள், அதற்கும் தொடர்பு உண்டு.

அது என்னவென்று பார்க்குமுன் -

நம் மனமானது எப்படி நாம் அதிகமதிகம் நினைத்துக் கொண்டிருக்கும் விஷயத்தை நோக்கியே "காந்தத்தைக் கண்ட இரும்பைப்போல்" நகர்கிறது என்பதை முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். அதன் அடிப்படையில் இங்கு நாம் அறிந்து கொள்ளவேண்டியது யாதெனில், நம் மனதில் தெளிவான நிச்சயமான குறிக்கோள் என ஒன்று இருந்தால், நம் மனமானது சதா நேரமும் அதையே நினைத்துக் கொண்டிருக்கும்; பிறகு அதை நோக்கி நகர்ந்து நாம் எளிதாய் நமது குறிக்கோளை எட்டிவிட உதவும்.

அதைப்போலவே குறிக்கோளென்று எதுவும் இல்லாவிட்டாலும் அப்பொழுதும் நமது சிந்தனையை ஆக்கிரமிக்கும் விஷயத்தை நோக்கியே நம் மனது நம்மை நகர்த்தும். ஏனெனில் நம் சிந்தையில் இருப்பது நல்லதொரு குறிக்கோளா அல்லது வெறும் அக்கப்போரா என்பதெல்லாம் நம் மனதிற்கு முக்கியமில்லை. ‘நீ நினைத்துக் கொண்டிருப்பது இதைத்தானே, வா போகலாம்’ என்று நம்மை இழுத்துச் சென்று விட்டுவிடும்.

எனவே வாழ்க்கையில் குறிக்கோள் நிர்ணயித்துக் கொள்வது மெத்த உத்தமம். இதை நினைவில் வைத்துக் கொள்வோம்.

சரி எங்கு ஆரம்பித்தோம்? ஹாங்... பட்டியல். அதைப் பார்ப்போம்.


மாதாந்திர மளிகை அல்லது ஊரிலிருந்து வந்திருக்கும் மனைவி வீட்டாருக்கு விருந்து சமைக்கக் காய்கறி என்று ஏதோ வாங்கக் கடைக்குக் கிளம்புகிறீர்கள். என்ன செய்வீர்கள்? நாலைந்து பொருள் என்றால் ஏதும் பெரும் பாதகமில்லை. மூன்று பொருளை வாங்கி முக்கியமான இரண்டை மறந்து வீட்டில் வந்து ‘வாங்கிக் கட்டிக்’ கொள்ளலாம். இது நிறைய ஐட்டம். எனவே உங்கள் மனைவி ஒரு லிஸ்ட் எழுதிக் கொடுத்திருப்பார். அவரவர் வசதிக்கு ஏற்ப அது சுண்டெலி வாலைப் போலவோ அல்லது ஆறு கெஜம் புடவை நீளத்திற்கோ இருக்கலாம்.

எதற்கு இந்த லிஸ்ட்?

‘கிளம்புகிற அவசரத்தில் சரியாய்க் கேட்டுக் கொள்ளவில்லையே! கத்திரிக்காய் கேட்டாளா? கேழ்வரகு மாவு கேட்டாளா?’ என்று தட்டுக்கெட்டுப் போய்ச் சொதப்பக் கூடாதில்லையா? இந்தச் சின்ன முன்னேற்பாடு நாம் கடைக்கு என்ன நோக்கத்தோடு செல்கிறோம்; என்ன வாங்கப் போகிறோம் என்று நம் குறிக்கோள் மாறாமல் செயல்பட உதவுகிறது. காரியம் சாதிக்க உதவுகிறது.

ஒரு நிறுவனம். அவர்களுக்குப் பற்பல திட்டங்கள், நோக்கங்கள். அதையெல்லாம் நிறைவேற்ற வேண்டுமானால் அதன் CEO அல்லது உயர் அதிகாரி குறைந்தபட்சம் என்ன செய்வார்?

அல்லது கல்யாணம், புதுமனை புகுவிழா என்று வீட்டில் ஏதோ ஒரு விசேஷம் என்று வையுங்கள். என்ன செய்வோம்?

பட்டியல்!

யார் யாரை அழைப்பது, என்னென்ன வாங்குவது, விருந்தில் என்னென்ன பரிமாறுவது என்று பட்டியல்!

அல்லது என்னென்ன செய்ய வேண்டும், யார் யார் என்னென்ன பங்கு வகிக்க வேண்டும் என்று அட்டவணை!

இப்படி நம்மையறியாமல் சில முக்கியச் செயல்களுக்கு நாம் பட்டியல் எழுதத்தான் செய்கிறோம். அதன் சௌகரியம் உணர்ந்திருக்கிறோம். ஆனால் அதை முக்கியமான ஒரு விஷயத்திற்கு நம்மில் பெரும்பாலானவர் சரிவரப் பிரயோகப்படுத்துவதில்லை.

என்ன அது?

வாழ்க்கை!

வாழ்க்கையில் முன்னேற வேண்டும், அதைச் செய்ய வேண்டும், இதைச் சாதிக்க வேண்டும் என்று குருட்டாம் போக்கில் பற்பல எண்ணங்களும் ஆசைகளும் இலட்சியங்களும் இருந்தாலும் அவையெல்லாம் ஏன் அனைவருக்கும் கைகூடுவதில்லை? அடிப்படைக் காரணம் வாழ்வின் குறிக்கோள்களை ஒழுங்குபடுத்திப் பட்டியலிட மறப்பதுதான்!

எனவே நோட்புக், டைரி, காலண்டர், பாத்ரூம் சுவர் என்று எங்காவது நம் குறிக்கோள்களைப் பட்டியலிட்டுக் கொள்வது பல் துலக்குவதற்கு அடுத்த நல்ல பழக்கம். அதைப்போல் அடுத்தகட்டமாய் அவற்றை அடைவதற்கான செயல்பாடுகள், முயற்சிகள், பணிகள் ஆகியனவற்றின் பட்டியல்.

இதன் பலனாய் நமது செயல்கள் சரியான முறையில் ஓர் ஒழுங்குடன் அமையும்; நாம் நினைத்ததைச் செய்து முடிக்க உதவும்.

கடைக்கும் விருந்துக்கும் விசேஷத்திற்கும் பட்டியல் உதவுவதைப் போலவே வாழ்க்கைக்கும் பட்டியல் அவசியம்.

குறிக்கோளை ஒரு வாகனம் போலவும் நினைத்துக் கொள்ளலாம். அது நாம் செல்ல வேண்டிய ஊருக்கு இட்டுச் செல்கிறது. செல்லும் பாதையெல்லாம் பாடம் கற்றுத் தருகிறது.

அம்பானியாக வேண்டும் என்றால்தான் குறிக்கோள் முக்கியம் என நினைக்கக் கூடாது. குறிக்கோளுடனான ஒரு வாழ்க்கை அமைந்தால்தான் அது நமக்கு அனுபவத்தையும் பக்குவத்தையும் கற்றுத் தருகிறது என்பதற்காகவாவது குறிக்கோள் வேண்டும்.

எனக்குத் தெரிந்த தம்பதியர். மனைவியுடன் ஷாப்பிங் செல்வதாக இருந்தால் கணவர் வெகு முனைப்புடன் ஒரு சின்னப் பட்டியல் தயார் செய்து விடுவார். மனைவியிடம், “இதோ ஷாப்பிங் லிஸ்ட். தேவையானதை வாங்கிக் கொண்டு நாம் டைம் வேஸ்ட் செய்யாமல் வந்துவிட வேண்டும்.”

மனைவியும் சமர்த்தாய்த் தலையாட்ட, கடைக்குச் செல்வார்கள். இறுதியில் வீட்டிற்குச் சுமந்து வரும் பைகளுக்கும் அநதப் பட்டியலுக்கும் சம்பந்தமே இருக்காது! திட்டமிட்டதைவிட நேரம், பணம் எல்லாம் அதிகம் செலவாகியிருக்கும்.

“என்னங்க இது? அப்ப எதற்கு ஒவ்வொரு முறையும் லிஸ்ட்?” என்றால் அவர் சிரித்துக் கொண்டே சொல்வார், “என் குறிக்கோள் என் இல்லாளை மனம் மகிழ வைப்பது. அது நடந்துவிட்டது.”


னம் மகிழ, தொடருவோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக