வியாழன், 10 மார்ச், 2011

வெற்றிக்கு ஒரு புத்தகம்: சதுர ஆப்பிள்

ஆப்பிள்கள் சதுரமாயிருக்கும் என்றால் நம்புவீர்களா? சதுர ஆப்பிள்கள் (Apples are square) என்று ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள் சூஸன் ஸ்மித், தாமஸ் குஸ்மார்ஸ்கி தம்பதி. வாழ்க்கை என்ற ஆப்பிள் ருசிக்க அதை சதுரமாக்கியிருக்கிறார்கள் இவர்கள். அதன் ஆறு பக்கங்களுக்கும் ஒரு அம்சத்தைச் சொல்கிறார்கள்.

1. பணிவு
2. கருணை
3. வெளிப்படையாகப் பழகும் தன்மை
4. எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் குணம்
5. குழுவோடு இணைந்து பணியாற்றும் திறமை
6. முடிவெடுக்கும் திறன்

பணிவு
இப்போதெல்லாம் ஒரு துறையில் புதிதாக நுழைகிறவர்கள் நாலு விஷயம் உருப்படியாகச் செய்யப் பழகியவுடனேயே கர்வம் அவர்களுடைய தலைக்குமேல் ஏறிக்கொள்கிறது. "என்னைப்போல யாரு?' என்று நினைக்கத் தெசடங்கிவிடுகிறார்கள். இதுதான் சரிவுக்கான முதல் படி!
இந்தக் கர்வ மனப்பான்மை ஈகோவாக மாறி உங்களுடைய முன்னேற்றத்துக்குத் தடை போடும். "நான் என்ன இவன் பேச்சைக் கேட்கிறது?' என்கிற நினைப்பிலேயே பல நல்ல உறவுகளை, நட்புகளை, வளர்ச்சிக்கான வாய்ப்புகளைத் தவறவிடுவீர்கள். தேவையா?
அதற்குப் பதிலாக, பணிவை வளர்த்துப் பாருங்கள். மற்றவர்கள் வலிய வந்து உங்களுக்கு உதவுவார்கள், உங்கள் முன்னேற்றத்துக்குத் துணை நிற்பார்கள்.

கருணை
உங்களைச் சுற்றியிருக்கும் மற்றவர்கள் ஒரு துயரத்தை அனுபவிக்கும்போது அவர்களுக்கு ஆறுதலாய் இருங்கள். அந்த ஆறுதல் உறவுகளை மேம்படுத்தும்.
உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் பக்கபலமாக நிற்பதற்கு இந்த உலகமே தேடிவரும்.

வெளிப்படையாகப் பழகும் தன்மை
உள்ளே ஒன்றை நினைத்துக்கொண்டு வெளியே வேறுவிதமாகப் பேசுகிறவர்கள், விஷயங்களை வேண்டுமென்றே மறைத்துவைப்பவர்கள், போலியாக நடிப்பவர்கள், நேர்மையில்லாமல் நடந்துகொள்பவர்கள்... இவர்களெல்லாம் எப்போதும் வில்லன்களாகத்தான் இருக்கமுடியும். ஒரு காலத்திலும் ஹீரோவாக முடியாது!
வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, உங்களுக்கு மேலே உள்ளவர்களிடமும் சரி, கீழே உள்ளவர்களிடமும் சரி, வெளிப்படையாக நடந்துகொள்ளுங்கள்.
மர்மங்கள் ஏதும் இல்லாத திறந்த புத்தகமாக வாழத் தொடங்குங்கள். பல புதிய வாசல்கள் தானே திறப்பதைக் காண்பீர்கள்.

எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் குணம்
பொதுவாக மனிதர்கள் தங்களைப்போலவே இருப்பவர்களிடம்தான் நட்பு காட்டுவார்கள், நெருங்கிப் பழகுவார்கள்.
உலகில் எல்லாவிதமான மனிதர்களும்தான் இருப்பார்கள் என்பதை ஒப்புக்கொண்டு, அவர்களுக்கு இடையே உள்ள வேற்றுமைகளை ஏற்றுக்கொண்டு ஒவ்வொருவரிடமும் இருக்கும் நல்ல விஷயங்களைப் பார்த்துப் புரிந்துகொண்டு பழகத் தொடங்கினால் உங்களுடைய நட்பு வட்டம் பெருகும் வாழ்க்கையும் அழகாகும்.

குழுவோடு இணைந்து பணியாற்றும் திறமை
சிலர் தனிப்பட்டமுறையில் பெரிய திறமைசாலிகளாக இருப்பார்கள்.
ஆனால் அதே நபர்களை ஒரு குழுவில் உட்காரவைத்துப் பணியாற்றச் சொன்னால் போச்சு. "நான் என்னோட வேலையை முடிச்சுட்டேன். மத்தவங்க எக்கேடு கெட்டா எனக்கென்ன?' என்று மூலையை வெறித்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்.
நாம் ஒவ்வொருவரும் தனித்தனியே எத்தனை பிரமாதமான திறமையைக் கொண்டிருந்தாலும் அது ஒரு குறிப்பிட்ட அளவு முன்னேற்றத்தைத்தான் கொடுக்கும். எல்லோரும் இணைந்து பணியாற்றப் பழகினால் அந்த வெற்றி பலமடங்கு உயர்வானதாக இருக்கும். அதனால்தான் "டீம் பிளேயர்' எனப்படும் குழுவோடு இணைந்து பணியாற்றுகிற திறமைசாலிகளுக்கு எந்தத் துறையிலும் தனி மரியாதை உண்டு!


முடிவெடுக்கும் திறன்
தினந்தோறும் நாம் எல்லோருமே எல்லாப் பிரச்னைகளிலும் ஏதாவது ஒரு முடிவை எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம். அதை எந்த அளவு யோசித்துச் செய்கிறோம் என்பதில்தான் வித்தியாசம் இருக்கிறது. நமது திறமை மற்றும் அனுபவத்தைச் சரியான விகிதத்தில் கலந்து குழைத்து எடுக்கும் முடிவுகள்தான் நம் வாழ்வின் முக்கியமான திருப்புமுனைகளாக இருக்கின்றன. அவையே நமது வளர்ச்சியையும் அடுத்த நிலைக்குக் கொண்டு செல்கின்றன.
உங்களுடைய ஆப்பிளில் இந்த ஆறு பக்கங்களும் உண்டா? இல்லை எனில், இப்போது அவற்றைச் செதுக்க ஆரம்பித்துவிடுங்கள்!

Thanks to :Kumudam.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக