அகன்ற சிறகாக உடைந்த இலைகளை உடையது சுண்டை. வெள்ளை நிறமான பூங்கொத்துக்களையும், கொத்து கொத்தான உருண்டை வடிவமான காய்களையும் உடைய முள்ளுள்ள சிறு செடி இனம். காய் சற்று கசப்புச் சுவை உடையது. காய் வற்றலாகக் கடைகளில் கிடைக்கும். காயே மருத்துவக் குணம் உடையது. வீட்டுத் தோட்டங்களிலும் வளர்ப்பதுண்டு. மலைக் காடுகளிலும் இது தானாகவே வளர்வதுண்டு. இந்த வகை சுண்டையை மலைச் சுண்டை என்பார்கள். கோழையை அகற்றவும், வயிற்றுப் பூச்சிக் கொல்லியாகவும் மருத்துவக் குணம் உடையது.
மருத்துவக் குணங்கள்:
பால் சுண்டைக் காயைச் சமைத்து உண்ணக் கபக்கட்டு, ஈளை, காசம், இருமல், மூலச்சூடு, மூலக்கடுப்பு, திமிர்ப்பூச்சி வெளியேறும்.
சுண்டைக் காயை உப்பு கலந்த புளித்த மோரில் 2 முறை ஊறவைத்து காயவைத்து எண்ணெயில் வறுத்து உணவில் இரவில் பயன்படுத்தி வர மார்புச் சளி, இரைப்பிருமல் (ஆஸ்துமா), காச நோய் குணமாகும். வயிற்றுப் போக்கு நின்றுவிடும்.
சுண்டை வற்றல், நெல்லி வற்றல், சுக்கு, வெந்தயம், ஓமம், மாதுளை ஓடு, மாம் பருப்பு, கறிவேம்பு, சீரகம் சம அளவாக எடுத்து வறுத்து இடித்துப் பொடியாக்கி 2 வேளை ஒரு சிட்டிகையளவு 1 டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பேதி, மூலம், பசியின்மை, மார்புச் சளி குணமாகும்.
சுண்டை வற்றல், கறிவேம்பு, மிளகு, சீரகம், வெந்தயம், சம அளவாக எடுத்து பொன்னிறமாக வறுத்து சிறிது உப்பு சேர்த்து ஒரு சிட்டிகையளவு உணவுடன் 3 வேளை சாப்பிட பசி மந்தம், சுவையின்மை, மலக்குடல் கிருமிகள். மூலம் குணமாகும்.
சுண்டைக்காயைக் காயவைத்து போதுமான அளவு நன்றாகப் புளித்த மோரும், உப்பும் கலந்து காயவைத்து உலர்த்தி எடுத்து உணவுடன் உண்டு வர நீரிழிவு நோய் தணியும்.
சுண்டை வற்றல், கறிவேப்பிலை, மாங்கொட்டை பருப்பு, ஓமம், நெல்லி வற்றல், மாதுளை ஓடு, வெந்தயம் சம அளவாக எடுத்து தனித்தனியே இளவறுப்பாக வறுத்துப் பொடி செய்து 5 கிராம் பொடியை 2 வேளை 1 டம்ளர் மோருடன் கலந்து சாப்பிட தீக்குற்றத்தால் உண்ட சுவையின்மை, வயிற்றுப் புழு, நிலைக் கழிச்சல், சீதக் கட்டு நீங்கும். இதையே மார்பு சளி செரியாக் கழிச்சல், மூலம், நீரிழிவு இவற்றிற்கும் சாப்பிட கட்டுப்படும்.
சுண்டைக் காயை சிற்றாமணக்கு எண்ணெய் விட்டு வறுத்து, உப்பு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொடித்துப் போட்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர மூலம், மந்தம், செரியாமை குணமாகும்.
சுண்டைக்காய் வேர்ப் பட்டையை பொடி செய்து தேங்காய்க் குடுக்கையில் வைக்க வேண்டும். இதனை ஒரு சிட்டிகை மூக்கிழுக்க, தலை நோய், நீரேற்றம், மண்டைக் குடைச்சல், ஒற்றைத் தலைவலி, மூக்கில் நீர்ப்பாய்தல் நீங்கும்.
சுண்டை வேர், தும்பை வேர், இலுப்பை பிண்ணாக்கு சம அளவாக எடுத்து இடித்துப் பொடி செய்து முகர இழுப்பு நோய் தணியும்.
சுண்டை வேர் கைப்பிடியளவு எடுத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வலிகாய்ச்சல் குணமாகும்.
Read more: http://www.livingextra.com/2010/12/blog-post_7017.html#ixzz1Fz34CYus
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக