புதன், 29 டிசம்பர், 2010

முயலும் ஆமையும்




ஒரு மரத்தடியில் ஆமையிடம் ஓட்டப்பந்தயத்தில் தோற்ற முயல் இளப்பாறிக் கொண்டிருந்தது.அதனிடம் வென்ற ஆமை..தனது ஓடும் திறமையில்தான் வென்றோம் என்னும் இறுமாப்பில் முயலைப் பார்த்து'மீண்டும் ஓட்டப் பந்தயத்திற்கு வருகிறாயா?'எனக் கேட்டது.

தனது அலட்சியப் போக்கால் முன்னர் தோல்வியடைந்த முயல்..சரியான தருணத்திற்குக் காத்திருந்தது.ஆமைக் கேட்டதுமே முயல் 'சரி' எனச் சொல்லி விட்டது. இம்முறை தூங்கிவிடாது, ஒரே தாவலாய்த் தாவி வெற்றிக் கோட்டை அடைந்தது முயல்.

ஆமையும் ..அப்போது தான் முயல் போல தன்னால் வேகமாக ஓட முடியாது என்பதை உணர்ந்து..வெட்கித் தலை குனிந்தது.
முயலும் சென்ற முறை தன்னை உயர்வாக எண்ணியதால்..ஓடுகையில் தூங்கச் சென்றதை உணர்ந்து..அத் தவறை இம்முறை செய்யாது ஓடி வென்றது.

தவறு செய்வது என்பது அனைவரும் செய்யக் கூடியதே..

அது போல ஒரு முறை தவறு செய்துவிட்டால் அத்தவறை மீண்டும் செய்யாமல் கவனமாய் இருக்க வேண்டும்.

திங்கள், 27 டிசம்பர், 2010

மனம் மகிழுங்கள் - 28 - நன்றியும் மகிழ்வும்


ந்நன்றி கொன்றார்க்கும்” எனத் தொடங்கும் திருக்குறள் தெரியுமில்லையா? பள்ளியில் கோனார் நோட்ஸெல்லாம் வைத்துக்கொண்டு விரிவாய்ப் படித்திருப்பீர்கள். அதன் பொருள் பொத்தாம் பொதுவாய் உங்களுக்குத் தெரிந்திருக்கும். நன்றி மறந்தால் அவனுக்கு ‘உய்வில்லை’ என்று அதட்டியிருப்பார் வள்ளுவர்.

“நன்றி கெட்ட மாந்தரடா, நானறிந்த பாடமடா” என்று தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர் ஒருவர் மிகவும் வருந்தி எழுதிய பாடலையும் கேட்டிருப்பீர்கள்.


‘நன்றி மறத்தல் தகாது’; ‘நன்றியுணர்வு வேண்டும்’ என்றெல்லாம் நாம் அனைவரும் அடிப்படையில் புரிந்து வைத்துள்ளோம். ஆனால் என்ன பிரச்சனையென்றால் இயல்பு வாழ்க்கையில் அது அவ்வளவு வீரியத்துடன் நம்மிடம் வெளிப்படுவதில்லை; அல்லது சுயநலத்தில் மறைந்துபோய் விடுகிறது.

நான் நன்கு அறிந்திருந்த ஊரில் ஒருவர் இருந்தார். அவர் மிகப் பெரிய பணக்காரர் இல்லையென்றாலும் நன்கு வசதி படைத்தவர். நன்றாக உழைத்து முன்னுக்கு வந்தவர். ஆசைக்கும் ஆஸ்திக்குமென்று ஒரே மகன். தம் மகன் விரும்பிக் கேட்பது, கேட்காதது என்றெல்லாம் வாங்கிக் கொடுப்பவர். அதற்காகக் கதைகளில் வரும் அப்பிராணி அப்பா எனவும் நினைத்து விடக்கூடாது. நிறைய நியாய உணர்வு உள்ளவர். அதனால் தம் பாசம் தம் கண்ணை மறைக்கக் கூடாது என்பதில் அவருக்குத் தெளிவு இருந்தது. தம்முடைய அன்பு, செல்லம் இதெல்லாம் தம் மகனைக் கெடுத்துவிடக் கூடாது என்பதிலும் அவருக்குக் கவனம் அதிகம். எதையும் யோசித்தே செய்து பழகியவர்.

ஒரு நாள் மகன் ஏதோ ஒரு பொருள் வாங்கித் தரும்படி கேட்க, அது அவசியமற்றது என்பது அவருக்குத் தெரிந்ததால் நாசூக்காய் மறுத்தார். மகனின் கோரிக்கை அடங்கவில்லை. அதட்டிப் பார்த்தார். மகனுக்கு ‘அடம்’ அதிகமானது. தந்தைக்குச் சகிக்கவில்லை. கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இழுத்து வைத்து முதுகில் நாலு சாத்து சாத்தத் தோன்றியது. சட்டென்று அவருக்கு அந்த எண்ணம் மாறி வேறு யோசனை தோன்றியது.

“இதோ பார். உனக்கு அரை மணி நேரம் அவகாசம் தருகிறேன். ஒரு பேப்பர், பென்சில் எடுத்துக் கொள். உன் அறைக்குள் செல். நிதானமாய் அமர்ந்து உன்னிடம் ‘உனக்கே உனக்கென்று’ என்னென்ன பொருட்கள் உள்ளன என்பதை எழுதி எடுத்துக் கொண்டுவா. பிறகு பேசுவோம்”என்றார்.

முணுமுணுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்று அமர்ந்து கொண்டான் மகன். அரை மணி நேரம் கழித்து அவன் அளித்த பேப்பரை வாங்கிப் பார்த்த தந்தை அசந்து விட்டார். தன்னிடம் என்னென்ன இல்லை என்று அந்தப் பட்டியல் ஒரு வால்போல் நீண்டிருந்தது.

‘இப்படியொரு திருப்தியற்ற மகனா?’ என்று கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்துவிட்டார்.

இதைப் படிக்கும் தந்தைகள் பலருக்கு இத்தகைய அனுபவம் நிகழ்ந்திருக்கலாம். ‘நன்றி கொன்ற பிள்ளைகள்’ என்று ஏதாவது ஒரு சூழ்நிலையில் வருத்தம் ஏற்படத்தான் செய்கிறது. ஆனால் நாம் என்ன செய்கிறோம்?

”நான் என் மகனைப் போல் இல்லை; என் பெற்றோரைக் கண்ணுக்குக் கண்ணாய்ப் பார்த்துக்கொண்டேன்,” என்று சொல்லலாம். இங்கு நாம் அறியவிருப்பது பெற்றோர் - பிள்ளை சென்டிமென்ட் கதையில்லை; மனதிற்கும் நன்றியுணர்வுக்கும் இருக்க வேண்டிய தொடர்பு!

நம்மிடம் என்ன உண்டு என்பதைவிட நம்மிடம் என்ன இல்லை என்பதுதான், நாம் அறிந்தோ அறியாமலோ, நம் மனதை என்றும் எப்பொழுதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. நம்மிடம் இருக்கும் பலவற்றை உணர்ந்து மகிழ்வதை விட்டுவிட்டு இல்லாத ஒன்றிற்காக எப்பொழுதும் கவலை; ஏகப்பட்ட தொல்லை. இதனால் நிம்மதியானது நம்மிடம் வரப்பயந்து கொண்டு எங்கோபோய் ஒளித்துக் கொள்கிறது.

மேற்கொண்டு தொடரும் முன் இங்கு ஒன்றை நன்றாக நினைவில் கொள்ள வேண்டும். அது -

‘இலட்சியக் கனவிற்கும் ஆசைக்கும் உள்ள வித்தியாசம்; குறிக்கோளும் பேராசையும் எவை என்ற தெளிவு.’

நல்லதொரு இலட்சியம் நம் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு மிக அவசியம்; ஆனால் அது வேண்டும், இது வேண்டும் என்று பார்ப்பதற்கெல்லாம் ஆசைப்படுவது தப்பு!

மனமானது எப்படி இயங்குகிறது? நாம் எதை விரும்புகிறோமோ அதை நோக்கி!

நம்மிடம் உள்ள நிறைகளை மறந்துவிட்டுக் குறையுடனேயே வாழ்ந்து வந்தால், மனதில் என்ன எண்ணம் படியும்? “நீ ஒன்றுமற்றவன்; உனக்கு வாழ்க்கையில் எந்த நல்லதும் வாய்க்காது...” இத்யாதி எண்ணங்கள். அனைத்தும் நெகட்டிவ் எண்ணங்கள்.

அத்தகைய எண்ணங்கள் என்ன செய்யும்?

உங்கள் மனதைக் குலைத்து, உங்களை அழுமூஞ்சியாக்கி, நீங்களே “நானொரு தண்டம்“ என்று எண்ணுமளவிற்கு இட்டு்ச் சென்று விட்டுவிடும்.

எனவே, உங்களிடம் என்ன உள்ளது என்பதை உள்ளார்ந்து உணர்ந்து, மேடைப் பேச்சாளர் மறக்காமல் சொல்வது போல், ‘அதற்காக முதற்கண்’ நன்றியுணர்வு கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

காலுக்கு ரெண்டு ஜோடி செருப்பு, மூன்று ஜோடி ஷு மட்டுமே இருக்கிறது; நேற்றுப் புதிதாய் வாங்கிய டிரஸ்ஸிற்கு மேட்சாய்க் காலணி இல்லை என்று வருத்தமான வருத்தத்தில் இருக்கும் ஒருவர் கால் ஊனமுற்ற அல்லது காலே இல்லாத ஒருவரைக் கண்டால் என்ன சொல்வார்?

ஒருவருக்கு ஒரு ஜோடி செருப்பே கூட இல்லாது போகட்டும். அதற்காகச் செருப்பில்லையே என்று அவர் வருந்திக் கிடந்தால் மன மகிழ்வைத் தொலைத்துவிட்டு, மனம் ஊனமாகிச் செயலற்றுப் போய்விட நேரிடும். அதையே அவர் ‘எனக்கென்ன குறை? ஓடியாட இரண்டு கால்கள் இருக்கின்றன!’ என்று உரத்துச் சொல்லி எழுந்து நின்றால் போதும்; பூமியின் நிறமே மாறிக் கண்ணெல்லாம் பிரகாசம் ஒளிரும்.

“எதுவொன்றும் எனக்கு நடப்பதில்லை; எப்பப் பாரு பணக் கஷ்டம்; என்னைக் கண்டால் யாருக்குமே பிடிப்பதில்லை; எனக்கென்று எந்த வேலையும் சரியாய் அமைவதில்லை; வாழ்க்கையை ஓட்டுவது ஒரு பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது,” என்றெல்லாம் ஒருவர் புலம்பலும் மூக்குச் சிந்தலுமாக இருந்தால் அவருக்கு என்ன அமையும் என்று நினைக்கிறீர்கள்?

இத்தொடரைத் தொடர்ந்து படித்துவரும் வாசகர் அனைவரும் இந்தக் கேள்விக்குத் தவறான பதில் அளிக்கவே முடியாது.

அந்த மனிதரின் உள்மனம் ‘நீ ரொம்ப பாவம்!” என்று அதையெல்லாம் அப்படியே நம்பி அவர் தன்னைத் தானே ‘ஒரு தண்டம்’ என்று உறுதிப்படுத்திக் கொண்டால் அவருக்கு வாய்ப்புகள் கைநழுவும்; நட்புறவு அமையாது; கையில் வரும் பணம் தங்காது! அவர் மன மகிழ்வற்று வாழ அவர் உள்மனமே மாய்ந்து மாய்ந்து உழைக்கும். அவர் நம்பிக்கையின்படியே அவர் வாழ்க்கை அமைய சகல முயற்சிகளும் செய்து தந்துவிடும். ஆகவே மேலும் அழுகை; மேலும் மூக்கு சிந்தல்!

உலகில் இறைவன் அமைத்துத் தந்த விதி பொதுவானது; மிகவும் நீதியானது.

ஒரு மனிதன் தான் பெற்றிருப்பதை அல்லது அடைந்து விட்டதை நினைத்து நன்றியோடு இல்லாமல் தன்னிடம் இல்லாததைப் பற்றியே நினைத்துக்கொன்டிருந்தால் அவனுக்கு இல்லாமையே அதிகரிக்கும்.

நல்ல நட்புறவு கொண்டுள்ள மக்களை உற்றுக் கவனித்துப் பாருங்கள்; அவர்கள் மக்களிடம் உண்மையான நட்பு கொண்டவர்களாகவும் நன்றியுணர்வு கொண்டவர்களாகவுமே இருப்பர். சிடுமூஞ்சிகள் எத்தனை பேரிடம் நல்ல நண்பர்களைப் பார்த்திருக்கிறீர்கள்?

அதைப்போல் உற்சாகமான மனிதர் ஒருவரைப் பாருங்கள். அவர் ஒன்றும் உலக மகாச் செல்வந்தராகவோ, அனைத்துவித வசதிகளும் அடையப் பெற்றவராகவோ இருக்க மாட்டார். தம்மிடம் உள்ளதைக் கொண்டு திருப்தியுற்றவராக மன மகிழ்வுடன் வலம் வந்து கொண்டிருப்பார்.

உலகிலுள்ள அனைத்து வியாபார நிறுவனங்களுக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் ஒரு பொதுத் தன்மை உண்டு. நாடு, இனம், மொழி என்ற எந்தப் பாகுபாட்டிலும் சிக்காத ஒரே குறிக்கோள். மக்கள் அனைவரும் ஒரு நிலையிலேயே இருக்க வேண்டும்!


"மக்கள் அனைவரும் தம்மிடம் இருப்பவற்றை மறந்து, புதுப்புதுப் பொருட்களின்மீது மோகம் கொண்டலைய வேண்டும்!"

நமது கண்களையும் சிந்தையையும் வந்து தாக்கும் ஒவ்வொரு விளம்பரமும் நம்மிடம் சொல்ல வரும் செய்தி என்ன? ‘இதோ பார் புது கார்’, ‘இதோபார் புது டிஸைன் தோசைக் கல்’, ‘இதோபார் புது ரக டாய்லெட் பேப்பர்’ என்று நம்மைத் தொடர்ந்து ஆசைப்பட வைக்க வேண்டும். ஏதோ அந்தப் பொருள் இல்லாவிட்டால் நமது வாழ்க்கையே சூன்யமாகிவிட்டதைப் போன்ற ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஏக்கம் ஒன்று மனதில் உருவாகி, ஆசையாக வலுப்பெற்று, மனமானது ‘வேண்டும், வேண்டும்’ என்று அலறி அது நாம் அறியாமலேயே நமது இதயத் துடிப்பாக மாறிவிடுகிறது.

விளைவு?

நம்மிடம் உள்ளவற்றையெல்லாம் மனமானது மறந்துவிட்டு, மகிழ்ச்சியைத் தொலைத்துவிட்டு, ஒரு காமாந்தகனைப் போல் அலைய ஆரம்பித்து விடுகிறது.

பத்து விஷயங்கள் உருப்படியாய் உங்களிடம் இருந்தாலும் உருப்படாமல் போன ஏதாவது ஒரு விஷயத்தையே உங்கள் மனம் நினைத்துக்கொண்டிருக்கிறது.

சுண்டு விரல் ஓரத்தில் நகம் பெயர்ந்து இலேசாய் இரத்தம் கசிந்தால், மனமானது அதையே நினைத்து மாய்ந்து போகிறதே தவிர, எனது இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது, எனது கை கால்கள் நன்றாக இயங்குகின்றன, என் தலையில் வலியில்லை, என் நுரையீரல், கிட்னி, குடல் எல்லாம் ஆரோக்கியமாய் உள்ளன என்று மகிழ மறந்துவிடுகிறதே!

ஒரு சிந்தனையாளர் கூறினாராம் - ‘நீங்கள் வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கிடைக்காமல் போன ஒன்றை நினைத்து மன மகிழ்வைத் தொலைப்பதைவிட, இது மட்டும் எனக்கு நடக்கவே கூடாது என்று நீங்கள் நினைத்து அப்படி கிடைக்காமல் போனதை நினைத்து மகிழ்வடையக் கற்றுக் கொள்ளுங்கள்.’

புரியவில்லையோ? நாம் யாராவது புற்று, இதய நோய், விபத்து இதெல்லாம் வேண்டும் என்று ஆசைப்படுவோமா? வேண்டாம் எனும் அவையெல்லாம் நமக்குக் கிடைக்காததை நினைத்து மகிழுங்கள் என்கிறார் அவர்.

எதுவொன்றிற்கும் பாஸிட்டிவ்வான மறுபக்கம் உண்டு. நம்மிடம் இருப்பதைக் கொடுத்திருப்பதற்காக இறைவனுக்கு நன்றியுரைத்து மனம் மகிழுங்கள்.

னம் மகிழ, தொடருவோம்...


ஹோட்டல் நாகரிகம்

ஹோட்டலில் இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்ற வரைமுறை இருக்கிறது. இன்று ஹோட்டலில் சாப்பிடுவது பலருக்கும் தவிர்க்க முடியாததாகி விட்டது. ஆனால், ஹோட்டலில் முறைப்படி எப்படி சாப்பிடுவது, ஸ்பூன், ஃபோர்க்கை எப்படிப் பிடிப்பது, நாப்கினை எப்படி உபயோகிப்பது என்று கூட பலருக்குத் தெரிவதில்லை.

இதோ அவர்களுக்கு உதவும் வகையில் இந்த டிப்ஸ்...

முதலில் அங்குள்ள நாப்கின் மடிப்புகளை நீக்கி, இரண்டாக மடித்துக் கொள்ளுங்கள். சாப்பிடும் முன் நாப்கினை மடியில் விரிக்க வேண்டும்.

கத்தியை வலது கையிலும் , ஃபோர்க்கை இடது கையிலும் பிடிக்க வேண்டும்.

சூப் குடிக்கும்போது, ஸ்பூனின் கைப்பிடியைக் கடிகாரத்தின் 4 மணி திசையிலும், ஸ்பூனின் தலைப்பகுதியை 11 மணி திசையிலும் இருக்கும்படி வைத்து எதிர்ப்புறமாக சூப்பை அள்ள வேண்டும். அப்போதுதான், சூப் நம்மேல் சிந்தாது.

கத்தியையும் ஃபோர்க்கையும் பிடித்து பிரெட்டையோ, மற்ற உணவுப் பொருட்களையோ ' கட் ' செய்ய வேண்டும். ஃபோர்கால் உணவைக் குத்தி சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.

சாப்பிட்டு முடித்துவிட்டீர்கள் என்றால் ஃபோர்க்கையும் கத்தியையும் இணையாக அடுத்தடுத்து சேர்த்து வையுங்கள். இன்னும் சாப்பிட வேண்டும் என்று ஆர்டர் செய்வதாக இருந்தால், ஃபோர்க்கையும் கத்தியையும் ஒன்றின் மேல் ஒன்றாக (பெருக்கல் குறி போல) வையுங்கள்.

பெரும்பாலான ஸ்டார் ஹோட்டல்களில் டிக்காஷன் , பால் , சர்க்கரை இவைகளைத் தனித்தனியாக வைக்கப்பட்டிருக்கும். முதலில் டிக்காஷனை கப்பில் ஊற்றி , பிறகு அதில் தேவையான் பால் ஊற்றி , பின்பு சர்க்கரையைப் போட்டு ஸ்பூனால் கலக்கவேண்டும் . சூப்போ , காஃபியோ சத்தம் போட்டு உறிஞ்சிக் குடிக்காதீர்கள்.

தும்மலோ இருமலோ வந்தால், நாப்கின் கொண்டே உங்கள் முகத்தை நாசுக்காக மறைத்துக் கொள்ளுங்கள்.

உணவுப் பொருள் பல்லில் மாட்டிக் கொண்டால், நாப்கினை வைத்து , வாயை மறைத்தபடி பல் குத்தும் குச்சியால் ( அங்கு பல் குத்தும் குச்சி இருக்கும் ) சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்
.

சனி, 25 டிசம்பர், 2010

ஹெல்த் ஜூஸ்

ஹெல்த் ஜூஸ்-தயாரித்தல்

கேரட் வெள்ளரி ஜூஸ்

தேவையான பொருட்கள்

கேரட் _ அரை கிலோ, வெள்ளரி _ 100 கிராம், தக்காளி _ 100 கிராம், வெள்ளை மிளகு _ அரை டீஸ்பூன், உப்பு _ 2 சிட்டிகை, கருப்பட்டி_50 கிராம், எலுமிச்சம்பழச்சாறு_10 அல்லது 12 துளிகள்.

செய்முறை

முதலில் கேரட்டின் தோலை கட் பண்ணாமல் சுடுதண்ணீரில் போட்டு நன்றாக வாஷ்பண்ண வேண்டும். (ஏன்.. தோலை கட் பண்ணக் கூடாதுன்னா தோல்லதான் விட்டமின்_ஏ சத்து அடங்கியிருக்கு) அடியையும் நுனியையும் கட் பண்ணினால் போதும். வெள்ளரியை எப்பவும் போல கட் பண்ணிக்க வேண்டும் தக்காளியை மேலே ரவுண்டா கட்பண்ணி கருப்பட்டி, எலுமிச்சம் பழம், உப்பு எல்லாத்தையும் சேர்த்து அப்படியே மிக்ஸியில் ஒரு அடி அடித்தால்போதும் திக்கான சன் ஷைன் ஜூஸ் ரெடி.

தண்ணீர் தேவையான அளவுக்கு ஊத்தினால் போதும். தோல் சருமத்துக்கு இது ரொம்ப ரொம்ப நல்ல ஜூஸ். பெண்கள் மட்டுமில்லை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். அதுவும் வெறும் வயித்துல சாப்பிடுவதுதான் பெட்டர். ஆனால் சுகர், பி.பி. உள்ளவர்கள் வெறும் வயித்துல சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். சுகர் பேஷண்ட்டுகள் கருப்பட்டிக்கு பதிலாக சுகர்ஃபிரீ, போட்டு சாப்பிடலாம்.

டயட்

கேரட்ல விட்டமின்_ஏ ஜாஸ்தி. இதுல ஃபைட்டோ கெமிக்கல்ஸ் இருக்கிறதால நம்ம உடம்புல உள்ள செல்களுக்கு பாதிப்பு வராமல் பாதுகாத்துக்க முடியும். கருப்பட்டியில் _ அயர்ன் இருக்கிறதால சத்துக்குறைவு (இரத்த சோகை) பிரச்னைகள் வராம பாதுகாத்துக்கலாம்.

வெள்ளரியில தண்ணீர் சத்தும் நார்ச்சத்தும் இருப்பது உடம்புக்கு நல்லது. பொதுவாக எல்லாப் பழவகைகளையும் அப்படியே சாப்பிடுறதுதான் நல்லது. ஆனா கோடை வெயில் இந்த அளவுக்கு சுட்டெரிக்கிறதால நம்ம உடம்புல இருக்கிற நீரும், உப்பும் வெளியாகிறது. அதனாலதான் பழங்களை ஜூஸா சாப்பிடவேண்டியிருக்கு. சர்க்கரையை விட வெல்லம் நல்லது.
டயாபடீஸ்காரங்க எந்த ஸ்வீட்டும் ஜூஸ்ல கலக்காம பழத்துல இருக்கிற நேச்சுரல் சுவீட்டோட சாப்பிடுறதுதான் நல்லது.

லெமன் ஜூஸ்

இது ஒரு டயட் ஜூஸ். ப்ளட் ப்ரஷர் கம்மியா இருக்கிறவங்களுக்கு ரொம்பவும் யூஸ் ஃபுல்லான ஜூஸ். வியர்வையை ஏற்படுத்தி ரிலாக்ஸாக வைத்திருக்கும்.

தேவையான பொருட்கள்

பார்லி _ கால்கிலோ, எலுமிச்சம்பழம்_2, மாங்காய் இஞ்சி_50, கிராம், உப்பு_2 சிட்டிகை, சர்க்கரை 100 கிராம் (டயாபடீஸ்காரராக இருந்தால் ஒரு க்ளாஸுக்கு ஒரு டேப்ளட்)

செய்முறை

பார்லியை தண்ணீரில் நன்றாக வேகவைத்து வடிகட்டிக்கொள்ள வேண்டும். அப்படியே சூடாக இருக்கும் போதே சர்க்கரையை பார்லியில் சேர்த்துவிட வேண்டும். பிறகு எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து உப்பைச் சேர்ப்பதோடு, அரைத்த மாங்காய் இஞ்சியையும் கலந்து விட வேண்டும். இந்த ஆரோக்கிய ஜூஸை அழகான பாட்டிலில் பதப்படுத்தி வைத்துக் கொண்டால் போதும். பதினைந்து நாட்கள் முதல் 20 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ஃப்ரிஜ்ஜில் கூட வைக்கத் தேவையில்லை.

டயட்

பார்லியில சிறுநீரக பிரச்னைகள் வராம பாதுகாத்துக்கிற வல்லமை இருக்கு. எலுமிச்சம் பழத்துல சி விட்டமின் இருக்கு. டென்ஷனை விரட்டி மனசை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள எலுமிச்சம்பழம் ரொம்பவும் துணைபுரியுறதா தற்போதைய மருத்துவ ஆய்வுல கண்டுபிடிச்சிருக்காங்க. ப்ளட் பிரஷர் உள்ளவங்களுக்கு ரொம்ப நல்லது. இஞ்சி மருத்துவ குணம் வாய்ந்தது.

அஞ்சு பழங்க ஜூஸ்


தேவையான பொருட்கள்

பப்பாளி_100 கிராம், மேங்கோ_100 கிராம், ஆரஞ்சுப்பழம்_100 கிராம், திராட்சை_100 கிராம், எலுமிச்சம்பழம்_பாதியளவு, சோடா (கோலிசோடா அல்லது ஸ்பிரிட்), சுகர்_200 கிராம், வாட்டர் 10 மில்லி, உப்பு _ 1 சிட்டிகை.

செய்முறை

எலுமிச்சம்பழத்தைத் தவிர மீதி நான்கு பழத்தையும் நன்றாக தோல் நீக்கி மிக்ஸியில் ஜூஸாக்கி விட வேண்டும். இல்லையெனில், பழங்களை சின்னச்சின்ன துண்டுகளாக கட் பண்ணிக்கொண்டு சுகரையும், தண்ணீரையும் கலந்து கொதிக்க வைத்து விட்டு, பிறகு எலுமிச்சம் பழத்தையும் சோடாவையும் சேர்த்துவிட்டால் ஃப்ரூட் பஞ்ச் ரெடி. குழந்தைங்க இதை விரும்பிச் சாப்பிடுவாங்க. ஃபிரிஜ்ஜில் வைத்து எல்லோரும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பருகி மகிழலாம்.

டயட்

பப்பாளியில் ஏ விட்டமின் அதிகம். ஆரஞ்சுல_சி விட்டமின், பப்பாளியைத் தவிர மீதி நான்கு பழமும் சிட்ரஸ் ஃபுரூட்ஸ். (சிட்ரஸ் அமிலம் நிறைந்தது)

புதினா ஜூஸ்

தேவையான பொருட்கள்

புதினா _கைப்பிடி அளவு, துளசி _ கைப்பிடி அளவு, கற்பூரவள்ளி இலை _கைப்பிடி அளவு, மிளகுத்தூள் _கால் டீஸ்பூன், சுக்குப் பொடி _ கால் டீஸ்பூன், உப்பு _ 1 சிட்டிகை, சர்க்கரை_ 200 கிராம், தண்ணீர் _100 மில்லி எலுமிச்சம் பழம் _ கால் பழம்.

செய்முறை

புதினா, துளசி, கற்பூரவள்ளி இலை, மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அதோடு மிளகுத்தூள், சுக்குப்பொடி, உப்பு கலந்து கொள்ளவும். சர்க்கரை, தண்ணீர், எலுமிச்சம் பழத்தைக் கலந்து சூடேற்றி ஆறிய பிறகு, தனியாக வைத்திருந்த அனைத்தையும் ஒன்று சேர்த்தால் மெடிக்கல் ஜூஸ். அரை க்ளாஸ் மெடிக்கல் ஜூஸோடு பெரியவர்களுக்கு சோடாவை ஊற்றிக் கொடுக்கலாம். குழந்தைகள் என்றால் தண்ணீரைக் கலந்து கொடுப்பதுதான் நல்லது.

டயட்

பெயரைப் படிச்சதும் ஏதோ நோயாளிகள் சாப்பிடுறதுன்னு நெனைக்க வேணாம். ஏன்னா இந்த ஜூஸ் நோய் வராம பாதுகாக்கும் ஜூஸ். புதினா, துளசி ரெண்டுலேயும் இரும்புச்சத்து அதிகம். சளித்தொல்லையை அடித்து விரட்டக் கூடியது. குழந்தைகளுக்கு வாரத்துக்கொருமுறை கொடுத்தால் போதும். கற்பூரவல்லி இலையை ஜூஸ் செய்தோ அல்லது 3 இலை ஒருநாளைக்கு எனச் சாப்பிட்டு வந்தாலே அப்புறம் சளின்னா என்னன்னு கேட்பாங்க.

பைனாப்பிள் ஜூஸ்

தேவையான பொருட்கள்

பைனாப்பிள் _ 1, சர்க்கரை _ தேவைக்கு, பைனாப்பிள் எசன்ஸ் _ 1 டீஸ்பூன், சிட்ரிக் ஆஸிட் அல்லது ஒரு எலுமிச்சம்பழம்.

செய்முறை

பைனாப்பிள் (அன்னாசிப்பழம்) மேல் தோலை எடுக்க வேண்டாம். அப்படியே நான்கு துண்டாக கட் பண்ணிக் கொள்ள வேண்டும். பிறகு அதை கேரட் துருவுவது போல் துருவி விட்டு ஒரு மெல்லிய துணியில் பிழிந்து ஜூஸாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். ஜூஸானது 200 கிராம் அளவு இருந்தால், அதே அளவு (200 கிராம்) தண்ணீரில் கலந்து அதோடு இரண்டு மடங்கு (400 கிராம்) சர்க்கரையும் கலந்து கொதிக்க வைக்க வேண்டும். ஆறிய பிறகு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து விட வேண்டும்.

இதை அப்படியே குடிக்கக் கூடாது. கால் பங்கு ஜூஸுடன் முக்கால் பங்கு தண்ணீர் கலந்து சாப்பிடுவதுதான் நல்லது. வெயில் காலத்தில் ஏற்படும் ஸ்கின் அலர்ஜிகளைத் தவிர்க்கலாம். டயட் விட்டமின்_ஏ சத்து அடங்கியது. மினரல், பொட்டாசியம், மெக்னீசியம் பாஸ்பரஸ் சத்துகள் அடங்கியது. சிட்ரிக் அமிலத்துக்கு பதில் எலுமிச்சம் பழம்தான் பெஸ்ட்&சி விட்டமின் டயாபட்டீஸ் அன்பர்கள் உஷார்.

வெஜிடபிள் ஜூஸ்

தேவையான பொருட்கள்

கேரட் _100 கிராம், பீட்ரூட்_ 50 கிராம், கோஸ் _50 கிராம், தண்ணீர்_ 2 டம்ளர், இஞ்சி_ 1, புதினா _ கைப்பிடி அளவு.

செய்முறை
கேரட்டை சுடுதண்ணீரில் கழுவிக் கொள்ளவும், பிறகு பீட்ரூட்டை வேகவைத்துக் (சீக்கிரம் வேகாது) கொண்டு, கோஸையும் வேகவைத்து விட்டு சீக்கிரம் மூன்றையும் ஒன்றாகவே மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். இதோடு 2 டம்ளர் தண்ணீரை ஊற்றி துணியில் வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய ஜூஸில், தனியாக இஞ்சி, புதினா அரைத்து மேலே தூவ வேண்டும். ஒரு கட்டி வெல்லத்தை அப்படியே போட வேண்டும். குடிச்சுப் பாருங்க மிக்ஸ்டு வெஜிடபுள் ஜூஸ். ஆரோக்கியம் தானா வரும்.
தேவையான பொருட்கள் கேரட்_ஏ சத்து நிறைந்தது. பீட்ரூட் ஃபைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்தது.

படித்ததில் பிடித்தது


நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.
- பில் கேட்ஸ் (Bill Gates)

சிக்கல்கள் என்பவை,
ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும்
மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும்.
இதுதான் வாழ்க்கை!

நீ தனிமையில் இருக்கும்போது
உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.
- விவேகானந்தர்.....

வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால்
நாம் ஜெயித்து விடலாம்....

மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்;
ஏனெனில் நேரான மரங்கள்
முதலில் வெட்டப்படும்;
நேர்மையானவர்களே முதலில்
பழிதூற்றப்படுவார்கள்.
கொஞ்சம் வளைந்து கொடுங்கள்.
வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.
- சாணக்கியனின் பொன்மொழி

மெழுகுவர்த்திக்கு உயிர் கொடுக்க
உயிர்விட்டது தீக்குச்சி.
நினைத்து நினைத்து உருகியது
மெழுகுவர்த்தி.

விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.

உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
- அன்னை தெரஸா.

வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
அதனால்,
வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!

கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.
கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!

தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!
கையில் 10 ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள்!
அந்த 11ஆவது ரோஜா,
உங்கள் புன்னகை!
நீங்ள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன்!
வெற்றியை விரும்பும் நமக்குத்
தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;
தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால்
அதுவும் ஒரு வெற்றிதான்.....

இதை மெதுவாகப் படியுங்கள்:
LIFEISNOWHERE
இதை எப்படிப் படித்தீர்கள்?
LIFE IS NO WHERE என்றா?
LIFE IS NOW HERE என்றா?

நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது
என்பதை இந்த ஒற்றை வரி உணர்த்திவிடுகிறது...!
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்.....!

நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது.....

பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம்
இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம்
வாழும்போதாவது
எல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்......

வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும்
உப்பாக இருக்கலாம்.
ஆனால்,
அவைதான்
வாழ்வை இனிமையாக மாற்றும்........

நாம் அனைவரும்
ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை
ஆனால்,
நம் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.
- அப்துல்கலாம்.

ஓர் உண்மை:
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,
நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!
நீ துயரத்தில் இருக்கும்போது,
உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

யாரேனும் உங்களைக் காயப்படுத்தினால்
அதற்காக வருந்தாதீர்கள்.
ஏனெனில் அதுதான் இயற்கையின் விதி.
சுவையுள்ள கனிகளைத் தரும் மரம்தான்
அதிக கல்லடிகளைப் பெறும்.
Source : Web

செவ்வாய், 21 டிசம்பர், 2010

முன்னேறி பார்க்கலாம் பகுதி - 10- உடல் நலம்

முன்னேற்றத்துக்கும் உடல் நலத்துக்கும் என்ன சம்பந்தம் என யாரேனும் புருவம் உயர்த்துகிறீர்களா? முன்னேற்ற படிக்கட்டுகளில் ஏறும் சுவாரசியத்தில், உடல் நலனை கவனிக்காமல் விட்டால் உங்களால் உங்கள் வெற்றியை முழுதும் சுவைக்க முடியாமல் போய் விடும்.

இந்த விஷயத்தை நீங்கள் இரு விதமாய் அணுகலாம். " உடல் தொந்தரவு ஏதும் இல்லையே. அப்படி ஏதும் வரும் போது பார்த்து கொள்ளலாம்; இப்போதிருந்தே இது பற்றி கவலை பட என்ன அவசியம்?" இது ஒரு அணுகுமுறை. மற்றொன்று "வருமுன் காக்கும்" அணுகுமுறை. என்னை பொறுத்த வரை இரண்டாவது நிச்சயம் நல்லது என்பேன்.

ஒரு காலத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை நாற்பது வயதில் பலருக்கு எட்டி பார்க்கும். நாற்பது வயதில் இவை ஒரு முறை வந்து விட்டால் பின் வாழ் நாளின் கடைசி வரை அந்த நோய்கள் நம் உடன் பிறப்பாகி விடும். அவற்றோடு நாம் வாழ பழகி கொள்ள வேண்டியது தான். ஆனால் இன்றைய மாறிய சூழலில் முப்பதுக்கும் குறைவான வயதிலேயே கூட இத்தகைய நோய்கள் பலருக்கு வர துவங்கி விட்டது. எனவே நாற்பது வயதுக்கு பின் டயட், உடற் பயிற்சி இவற்றை பார்த்து கொள்ளலாம் என நினைத்தால் தயவு செய்து மாற்றி கொள்ளுங்கள்.

இன்றைக்கும் உங்கள் தெருவில் காலை அல்லது மாலை நேரத்தில் பலர் நடை பயிற்சி செய்வதை பார்க்கலாம். இவர்களில் பெரும்பாலானோர் நாற்பது, ஐம்பது வயதுகளில் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அநேகமாய் சர்க்கரை நோய் அல்லது ரத்த அழுத்தம் வந்து, மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த நடை பயிற்சியில் இருப்பார்கள். அவர்களிடம் பேசி பார்த்தால், இந்த நோய்கள் வருமுன்னே இத்தகைய பயிற்சி செய்திருந்தால் நோயே வந்திருக்காதே என்ற வருத்தம் இருப்பதை நிச்சயம் உணரலாம்.

எனது தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். இந்த பதிவில் சுய புராணம் சற்று அதிகம் இருக்கலாம். காரணம் உடற் பயிற்சி விஷயத்தில் மற்றவர்களை உதாரணம் காட்டுவது எளிது. ஆனால் நாமே அதனை செயல் படுத்தினால் தான் இதனை சொல்ல தகுதி இருக்கும் என நினைக்கிறேன். சுய புராணம் என நினைப்போர் எந்த நிலையிலும் இந்த பகுதியை தவிர்க்கலாம்.

சிறு வயது முதலே நான் சற்று பூசிய உடல் வாகு தான். எப்போதுமே சற்று அதிக வெயிட் என்ற எண்ணம் என்னுள் இருந்து கொண்டே இருக்கும். இதற்காக ஏதேனும் செய்ய வேண்டும்; நடை பயிற்சி அல்லது ஓட்டம் இப்படி செய்ய வேண்டும் என அடிக்கடி நினைப்பேன். சில காலம் அவற்றில் ஈடு படுவேன். மழையின் போது சாலைகள் சரியில்லை என விட்டுவிடுவேன்.ஒரு முறை நிறுத்தினால் மறுபடி ஆரம்பிக்க ரொம்ப காலம் ஆகும்.(இது மாதிரி ஆட்கள் நாட்டில நிறைய பேர் இருக்காங்க) திருமணத்திற்கு பின் சிறிது சிறிதாக இன்னும் கூட எடை கூடி கொண்டு போனது. அதிகம் நடக்காமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்க்கும் அலுவலக வேலையும் ஒரு காரணம். இது இந்த பதிவை வாசிக்கும் உங்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

ஒரு முறை புது நிறுவனத்தில் சேரும் போது ஹெல்த் செக் அப் செய்ய, சற்று கொலஸ்ட்ரால் இருப்பது தெரிந்தது. பெரிய அளவு பிரச்சனை இல்லை என மீண்டும் கண்டு கொள்ள வில்லை. அடுத்த இரண்டு வருடம் கழித்து ரத்த அழுத்தம் மிக லேசாக எட்டி பார்த்தது. டாக்டர் "மருந்து சாப்பிட வேண்டாம். சற்று பொறுத்திருந்து பார்க்கலாம்" என சொல்ல, இப்போது நான் விழித்து கொண்டேன்.

எடையை குறைத்தால், பார்டரில் இருக்கும் உயர் ரத்த அழுத்தம் குறையலாம் என கேள்விப்பட, அலுவலகத்தில் இருக்கும் ஜிம்முக்கு செல்ல ஆரம்பித்தேன்.

ஜிம் என்றால் அதுவரை வெயிட்டுகளை தூக்குவது, உடலை "கரளை கரளை" யாக ஆக்குவது என்று நினைத்தவனுக்கு ஜிம்முக்கு செல்ல ஆரம்பித்த பிறகு தான், "ஏரோபிக்ஸ்" என்று தனி வகை இருப்பது தெரிய வந்தது. ஏரோபிக்ஸ் சற்று அந்நிய வார்த்தை போல் தெரிந்தாலும் ஓடுதல், நடத்தல், சைக்கிளிங் செய்தல் போன்றவை தான் அவை. இவற்றை மட்டுமே தீவிரமாய் செய்ய ஆரம்பிக்க, முதல் மூன்று மாதங்களில் ஐந்து கிலோ எடை குறைந்தது. மிக மகிழ்ச்சி ஆகி விட்டது. சட்டை, பேன்ட் அடுத்த சிறிய சைஸ் வாங்க ஆரம்பித்தேன். அதன் பின் எடை கொஞ்சமாய் தான் குறைந்தது. எனது உயரத்திற்கு இருக்க வேண்டிய சரியான வெயிட்டுக்கு வந்து விட்டாலும், இதனை தக்க வைத்து கொள்ள தொடர்ந்து செல்வது அவசியமாகிறது. நாள் முழுதும் வேலை பார்த்து விட்டு மாலையில் பாட்டு கேட்டவாறே செய்யும் உடற் பயிற்சி நிச்சயம் உடலுக்கும் மனதுக்கும் நல்ல relaxation. நீண்ட நாள் கழித்து பார்க்கும் பலரும் எப்படி இந்த அளவு இளைத்தீர்கள் என கேட்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்த இடத்தில ஒரு சிறு தகவல்: உங்கள் உயரத்தை செண்டி மீட்டரில் அளவெடுங்கள். உதாரணமாய் உங்கள் உயரம் 170 செண்டி மீட்டர் எனில், அதில் நூறை கழித்தால் உங்கள் ஐடியல் எடை ( 70 கிலோ ) வரும். இது ஒரு தோராயமான கணக்கு தான். இதை தவிர Body Mass Index என்பது போல பல விஷயங்கள் இருந்தாலும் " உயரத்தில் நூறை கழிப்பது" ஒரு தம்ப் ரூல் டெஸ்ட்.

இப்படி தொடர் உடற் பயிற்சிக்கு பின் மறுபடி உடல் பரிசோதனை செய்த போது கொலஸ்ட்ரால், உயர் ரத்தஅழுத்தம் அனைத்தும் நார்மல் ஆக இருந்தது. இந்த ரிசல்ட் பார்த்ததும் உடற் பயிற்சி மேல் காதல் இன்னும் அதிகமாகி விட்டது.

இதை படிக்கும் உங்களை போலவே நானும் ரொம்ப வருடங்களாக " எக்சர்சைஸ் செய்யணும், செய்யணும்" என நினைத்த ஆசாமி தான். இப்போது செய்ய ஆரம்பித்து அதன் பலனை முழுதும் அனுபவிக்கிறேன். இது உங்களுக்கும் சாத்தியம் தான் !!

உடற் பயிற்சியுடன் செய்ய கூடிய மற்றொரு நல்ல செயல் : யோகா மற்றும் மூச்சு பயிற்சி. இதனை கற்று தர பல நல்ல இயக்கங்கள் உள்ளன. நான் கற்றது வேதாத்திரி மகிரிஷி அவர்களின் "வாழ்க வளமுடன்" அமைப்பின் மூலம். காலையில் 20 நிமிடங்கள் இதற்கென செலவழித்தால் பல நன்மைகளை நாம் உணரலாம். தியானமும் கற்று தரபட்டலும் எனக்கு அது சரியே கை கூடவில்லை. மூச்சு பயிற்சி மற்றும் யோகா மட்டும் விடாது செய்கிறேன். சமீபத்தில் திரு. கருணாநிதி அவர்கள் வேதாத்திரி மகிரிஷி நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசும் போது தனது ஆரோக்கியத்திற்கு மூச்சு பயிற்சியும் ஒரு காரணம் என்றார்.

மூச்சு பயிற்சி நமக்கு தொடர்ந்து உடலில் இருக்கும் சில தொந்தரவுகளை மாத்திரை இன்றியே நீக்க வல்லது. எனக்கும் சில உடல் தொந்தரவுகள் மூச்சு பயிற்சியால் சரியாவதை அனுபவ பூர்வமாய் உணர்ந்தேன். மூச்சு பயிற்சியும் யோகாவும் வாழ்க வளமுடன் அமைப்பு மூலம் தான் செய்ய வேண்டுமென்பதில்லை. உங்களுக்கு விருப்பமான எந்த நிறுவனத்திலும் கற்கலாம்.

உடற் பயிற்சி செய்யாத காலத்தில் தேவையற்ற உணவு பொருட்களை தவிர்க்க முடிவதில்லை. அதே நேரம் ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டு உடற்பயிற்சி செய்து விட்டு மறுபுறம் வெயிட் போடும் நொறுக்கு தீனி உண்ணலாமா என மனம் கேள்வியெழுப்புகிறது. உண்மையில் அப்போது தான் உணவிலும் கட்டுப்பாடோடு இருக்க துவங்குகிறோம்.

சாமியார் போல சுவையுள்ள உணவு பொருட்களை முழுமையாய் தவிர்க்க வேண்டுமென்பதில்லை. எதையும் அளவோடு சாப்பிட வேண்டும். அது தான் முக்கியம்.

நாம் சாப்பிடும் உணவின் மேல் நம் பெயர் ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் என்பார்கள். பிறந்தது முதல் இறக்கும் வரை இவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என்பதை இறைவன்/ இயற்கை முதலிலேயே முடிவு செய்து விடுகிறது. சிலர் அந்த அளவை விரைவிலேயே அடைந்து விடுகின்றனர். அந்த அளவை மெதுவாக அடைய, அடைய இன்னும் அதிக நாள் சுவையுள்ள உணவுகளை உண்ணலாம். ஆயுளும் நீடிக்கும்.


உணவு பற்றி இன்னொரு முக்கிய விஷயம்: நாக்கிற்கு அதிக சுவை தரும் உணவுகள் (இனிப்புகள், நொறுக்கு தீனி போன்றவை) உடலுக்கு தீங்கே தருகின்றன. அதே நேரம் நாவிற்கு சுவை தாராத உணவுகள் பெரும்பாலும் ( பச்சை காய்கறிகள், வெந்தயம் போன்றவை) உடலுக்கு நல்லது செய்கின்றன.

உடல் நலனுக்காக எப்போதும் செய்கிற/ நீங்களும் செய்யகூடிய இன்னும் சில விஷயங்கள்:

1. பழங்கள், காய்கறிகள் நிறைய சாப்பிடுதல்.

அலுவலகம் செல்லும் நாட்களில் வீடு வந்தால் பழங்கள் சாப்பிடுவதையும், சனி, ஞாயிறு மட்டும் முறுக்கு அல்லது மிக்சர் போன்ற சமாச்சாரங்கள் அளவோடு சாப்பிடுவதையும் வழக்கமாக்கி கொள்ளலாம். பழங்கள் நிறைய சாப்பிடுவது மல சிக்கல் நீக்கம், உடலில் நல்ல ரத்தம்/ சக்தி சேருதல் போன்ற பல நல்ல பலன்கள் அளிக்கிறது. ..

2. உணவில் பூண்டு வெங்காயம் நிறைய சேர்த்து கொள்ளுதல்

பூண்டை பார்த்தால் விடுவதில்லை. பாக்கிய ராஜுக்கு முருங்கை காய் போல நமக்கு பூண்டு. பூண்டு குழம்பு, பூண்டு ரசம், பூண்டு சட்னி என பெரும்பாலும் தினம் சமையலில் இருக்கும். ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் இரண்டும் எட்டி பார்த்ததன் விளைவு. இப்போது இரண்டுமே இல்லை.

3. ஏழு அல்லது எட்டு மணி நேர தூக்கம்

விழாக்கள் அல்லது வெளியூர் செல்வது போல ஒரு சில நாட்கள் மட்டும் குறைந்தாலும், பெரும்பாலும் ஏழு அல்லது எட்டு மணி நேரம் தூங்கி விடுதல் நலம். தூக்கம் குறைந்தால் பிரச்ச்சனையாயிடும்.

4. உடலில் எந்த தொந்தரவு இருந்தாலும் டாக்டரை சந்திப்பது

சளி போன்ற சிறு விஷயங்கள் ஓகே. நாமே கூட சமாளிக்கலாம். உடல் குறித்த நம் பயங்கள் தீர்க்க வேண்டிய நபர் டாக்டர் தான். அவரிடம் பேசி விட்டால் பிரச்சனை நம்முடையதல்ல அவருடையது; அவர் சரி செய்ய வேண்டும்; நாம் ஒத்துழைக்க வேண்டும்.

5. வருடாந்திர உடல் பரிசோதனை


இது இந்த லிஸ்டில் சமீபத்தில் சேர்ந்தது. என்ன தான் இருந்தாலும் "அடிக்கடி இரவில் சிறுநீர் போகிறோமோ? சர்க்கரை நோய் இருக்குமோ? இடுப்பு பக்கம் வலிக்கிறதே? கிட்னி பிரச்சனை இருக்குமோ" போன்ற சந்தேகங்கள்/ பயங்கள் ஒரு பக்கம் இருந்து கொண்டே தான் இருக்கும். இவை முழுதாய் போக வேண்டுமானால் வருடாந்திர உடல் பரிசோதனை தான் சிறந்தது. பொதுவாக நாற்பது வயதுக்கு மேல் வருடம் ஒரு முறை உடல் பரிசோதனை எடுக்க வேண்டும் என்பார்கள். இன்றைய சூழலில் முப்பதுக்கு மேலே கூட, 1 அல்லது 2 வருடத்திற்கொரு முறை எடுக்கலாம். வேடிக்கை என்னவென்றால் உங்களில் பலரை போல நானும் " ஏதாவது நோய் என சொல்லி விட்டால் என்ன செய்வது? எப்படி எதிர் கொள்வது?" என்று தான் பயந்து சோதனை செய்யாமல் இருந்தேன்.ஆனால் இந்த சோதனை செய்த பிறகு உடல் குறித்து வந்திருக்கும் தைரியம் அசாத்தியமாய் உள்ளது. இதற்காக செய்த 1500 ரூபாய் செலவு அது தந்த தைரியத்திற்கே சரியாய் போச்சு.

**
சமீபத்தில் வந்த ஒரு எஸ். எம். எஸ் " நிறுவனத்தில் கீழ் நிலையில் வேலை செய்பவர்கள் வாக்கிங் செல்ல நினைக்கிறார்கள். மானேஜர்கள் வாக்கிங் செல்கிறார்கள். CEO-க்கள் கோல்ப் விளையாடுகிறார்கள்"

சிரிப்பு வர வைத்தாலும் இது மிக உண்மை தான். பணம் வந்து சேர்ந்த பிறகு தான் உடல் நலன் மேல் அக்கறை வர வேண்டுமென்பதில்லை. அதற்கு முன்பே அக்கறை வந்து விட்டால் நீங்கள் நினைத்தது எதையும் அடைய அதுவே பெரிய அடித்தளமாய் இருக்கும்.


சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் இவற்றின் வருகையை தவிர்க்கவும், நாளடைவில் இவை இதயத்தையும் பாதித்து ஹார்ட் அட்டாக் வராதிருக்கவும் நாம் செய்ய வேண்டியது 45 நிமிட உடற் பயிற்சி தான்.

குறிப்பாய் நாம் வசிக்கும் பகுதியிலேயே 45 நிமிடம் தினம் நடப்பது பல விதங்களில் மிக சிறந்தது. நம் ஏரியாவில் நடக்கும் விஷயங்களை தெரிந்து கொள்ளவும், பலரையும் பார்த்து புன்னகைக்கவும், அன்றைய தினத்தில் செய்ய வேண்டிய வேலைகளை பிளான் செய்யவும் இந்த 45 நிமிடங்கள் உதவும்.

ஒரு குடும்பத்தில் நடக்க கூடிய சோகங்களில் பெரியதொரு சோகம் சம்பாதிக்கும் நபரின் மரணம். அவரின் மரணம் அந்த குடும்பத்தை நிலை குலைய வைத்து விடும். என்ன தான் இன்சுரன்ஸ் பாலிசி, சேமிப்பு இருந்தாலும் முன்பு இருந்த வாழ்க்கை முறையை ( Life style ) அதன் பின் குடும்பத்தாரால் வாழ முடியாது. இதனை தவிர்க்க சற்று உடல் பயிற்சியும், உடல் குறித்த அக்கறையும் (பயமல்ல; அக்கறை ) நிச்சயம் தேவை. உங்களுக்காக இல்லா விட்டாலும் உங்கள் குடும்பத்திற்காக தினம் 45 நிமிடம் செலவிட உறுதி கொள்ளுங்கள். வாரத்தில் ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கேனும். இதனை தொடர்ந்து செய்ய முடிந்தால் நம் மேல் நமக்கே பெரிய மரியாதையும் நம்பிக்கையும் வருகிறது. முயற்சித்து தான் பாருங்களேன் !!

Thanks to : http://veeduthirumbal.blogspot.com

வாங்க முன்னேறி பார்க்கலாம் பகுதி - 9- சுய வெறுப்பு

முன்னேற தேவையான குணங்களில் அன்பு என்கிற பாசிடிவ் குணத்தை தொடர்ந்து "சுய வெறுப்பு" என்கிற நெகடிவ் குணம்.

ஒவ்வொரு மனிதனும் மிக அதிகம் நேசிப்பது தன்னைத்தான். அவன் மிக அதிகம் வெறுப்பதும் கூட தன்னையே தான். இது ஒரு முரண் எனினும் உண்மை தானே!

ஒவ்வொரு மனிதரும் அவரவர் எண்ணங்கள், ஆசைகள் இவற்றிற்கு தான் அதிக முக்கியத்துவம் தருவோம். எனவே ஒவ்வொருவரும் தன்னை தான் அதிகம் நேசிப்போம் என்பதை எளிதில் ஒப்பு கொள்ளலாம். ஆனால் தன்னை தான் அதிகம் வெறுப்பது என்பது??

ஒவ்வொரு மனித மனமும் பல்வேறு மர்மங்கள் அடங்கிய காடு. தனது குறைகள், தவறுகள் இது அத்தனையும் முழுதாய் அவரவருக்கு மட்டுமே தெரியும். மனைவி/ நண்பர் இவர்களிடம் தன்னை பற்றி பெரும்பாலான விஷயங்கள் (90 to 95%) சொல்லியிருந்தாலும் கூட, அந்த மீதமிருக்கும் 5 % யாரிடமும் சொல்ல முடியாமல் தடுமாறுகிறோமே அங்கு தான் சுய வெறுப்பின் வேர் உள்ளது.

சுய வெறுப்பு பெரும்பாலும் அவரவரின் கடந்த காலத்தின் மூலம், அப்போது செய்து தவறுகள் மூலம் உண்டாகிறது. உண்மையில் ஒரு தவறை செய்யும் போது அது தவறு என மனதுக்கு தெரிவதில்லை. தெரிந்தால் பெரும்பாலும் தவறை செய்வதில்லை. (சிகரெட், குடி பழக்கம் போன்றவை இதில் விதி விலக்கு; அதனை தவறு என தெரிந்தும் செய்கிறார்கள். செய்பவர்களே விட நினைக்கிறார்கள். முடிவதில்லை). இப்படி தவறு என தெரியாமல் செய்து விட்டு, பிற்காலத்தில் அதனை நினைத்து வருந்துகிறோம்.. எத்தனை பேர் மனதை கஷ்டபடுத்தினோம் என மனம் குமைகிறோம். இது ஒரு அளவிற்கு மேல் போனால் மன நோயாகும் வாய்ப்பும் உண்டு எனினும் பெரும்பாலானவர்கள் அந்த அளவுக்கு செல்வதில்லை.

கடந்த கால தவறுகளை எண்ணி வருந்துவது தவறா? நிச்சயம் தவறில்லை. அது ஒரு அளவோடு இருந்தால்.

எனது அலுவலக வாழ்க்கையின் துவக்கத்தில் வேலை பார்த்த நிறுவனத்தில் சில நல்ல வாழ்க்கை முறையும் கற்று தரப்பட்டது. அங்கு சொல்லி தந்த முக்கிய விஷயங்களில் ஒன்று "Legitimize your past ". அதாவது கடந்த காலத்தில் நாம் நடந்து கொண்டவை அனைத்தும் அந்தந்த சூழல், வயது காரணமாக தான் நடந்தது. எனவே அதற்காக நம் மீது இருக்கும் வெறுப்பை களைவது ஒரு வாழ்க்கை முறையாகவே (Process) அந்த நிறுவனத்தில் செய்யப்பட்டது. இத்தகைய பழைய கால வெறுப்பு/ எண்ணங்களை "பாகேஜ் " என்று சொல்வார்கள். இத்தகைய பாகேஜ் சேர்த்து நாம் சுமக்க சுமக்க அது நமக்கு கெடுதல் செய்வதோடு, நம் முன்னேற்றமும் தடை படும். எனவே தான் இத்தகைய சுய வெறுப்பை/ பாகேஜ்ஜை களைய வேண்டும் என அங்கு சொல்லி தர பட்டது.

கீழ்க்காணும் வரிகளை ஒரு முறை வாசியுங்கள்:

" On no account brood over your errors. Take the learning alone. Rolling over the muck is not the best way of getting clean".

எத்தனை உண்மை இது! உங்கள் பழைய தவறுகளுக்காக சில நிமிடங்கள் வேண்டுமானால் உங்களை நீங்களே திட்டி கொள்ளலாம். இனி இப்படி நடக்க கூடாது என உறுதி (Resolution ) எடுத்து கொள்ளலாம். இதனால் யாராவது பாதிக்க பட்டிருந்தால் மனமார அவர்களிடம் மன்னிப்பும் கேட்கலாம். அதற்கு மேல் அந்த விஷயத்தை பற்றி வருத்தமோ கவலையோ பட கூடாது.
**
என் வீட்டுக்கருகே புதிதாக ஒரு குடும்பம் குடி வந்தது. வயதான அம்மா, அப்பா, அவர்கள் பெண், பேத்தி இவர்கள் மட்டும் இருந்தனர். அந்த சிறு குழந்தையின் தந்தை வீட்டில் இல்லை. அந்த வயதானவர் என்னிடம் அவ்வப்போது பேசுவார். ஒரு முறை ரொம்ப நேரம் மனம் விட்டு பேசினார். அப்போது தனது சொந்த கார பையனை தான் தனது பெண்ணுக்கு மணம் முடித்ததாகவும் அலுவலகத்தில் நடந்த ஒரு விபத்தில் அவர் மரணம் அடைந்ததாகவும் மிக வருத்தத்துடன் சொன்னார். " நான் தான் விடா பிடியா நின்னு இந்த கல்யாணத்தை முடிச்சேன். சொந்த காரங்க சில பேர் வேண்டாம்னு சொன்னாங்க. என்னால் தான் எல்லாம். என்னால் தான் என் பொண்ணுக்கு இந்த நிலைமை" என்று வருந்தினார்.

சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு நான் கேட்டேன். " சார் கடவுளாலும் முடியாத விஷயம் ஒண்ணு உண்டு. அது என்ன தெரியுமா? "

"......."

" நடந்ததை மாற்ற அவரால் கூட முடியாது"

சில நொடிகள் மௌனத்திற்கு பின் சில துளி கண்ணீருடன் என் கைகளை அவர் பிடித்து கொண்டார். அவர் முகம் முன்பை விட சற்று தெளிவாக மாறுவதை என்னால் நன்றாக உணர முடிந்தது.

நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் என பலரிடமும் அடிக்கடி நான் சொல்லும் வரிகள் இவை:

"கடவுளாலும் முடியாத விஷயம் ஒன்று உண்டு. நடந்ததை மாற்ற அவராலும் முடியாது ! "

இதனை முதல் முறை படிக்கும் போது நான் எப்படி உணர்ந்தேனோ, அதே வகை அதிர்வை இந்த வரிகளை கேட்டு அவர்கள் ஒவ்வொருவரும் உணர்வதை பல முறை கவனித்துள்ளேன்.

இந்த வரிகள் உண்மையில் தனிப்பட்ட முறையில் எனக்குப் பெரும் தெளிவை கொடுத்துள்ளது. இதனை உண்மையாக உணர்ந்த பிறகு கடந்த காலம் குறித்து கவலைப்படுவது அநேகமாக குறைந்து விட்டது. சில நேரம் நாம் முன்பு செய்த தவறுகள் புதிதாக இப்போது தான் புரிய வரும். அப்போது சில நொடிகள் மட்டும் என்னை நானே திட்டி கொண்டு, இனி இவ்வாறு செய்ய கூடாது என சொல்லி கொண்டு மீண்டு விடுவேன்.
***
சுய வெறுப்பு, நாம் செய்யும் தவறுகளை விரைவில் களையாமல் அல்லது அதனை குறித்த குற்ற உணர்ச்சியை நெடு நாள் மனதில் சுமப்பதால் வருகிறது.

உள்ளுக்குள் எப்போதோ செய்த சில தவறுகள் இன்னும் இருக்கிறது எனில் ஒன்று மட்டும் செய்யலாம். குறிப்பிட்ட நபரிடம் மன்னிப்பு கேட்டு வெளிப்படையாய் பேசுவது அல்லது அவர் உயிருடனே இல்லை அல்லது வேறு காரணத்திற்காக பேச முடியாது எனில் உங்கள் குற்ற உணர்ச்சியை களைய வேறு ஏதாவது பிரயாசித்தம் செய்து விடலாம். அநாதை இல்ல குழந்தைகளுக்கு ஒரு நாள் அன்னதானம் அல்லது யாராவது ஒரு ஏழை குழந்தைக்கு படிக்க பணம் கட்டுவது இப்படி ஏதாவது ஒன்று செய்யலாம். இங்கு நான் எந்த தவறை வேண்டுமானாலும் செய்து விட்டு பிரயாசித்தம் செய்தால் போதும் என்று சொல்ல வரவில்லை. உங்களை அறியாமல் நீங்கள் செய்த பழைய தவறுகளை மறக்க, அதற்கு பதிலாக இன்னொரு நல்ல காரியம் செய்யுங்கள் என்று தான் சொல்கிறேன்.
**
தினசரி நான் செய்யும் சிறு சுய பரிசோதனையை இங்கு பகிர்கிறேன். புத்தகங்கள் மூலம் அறிந்த ஒன்று தான். எனினும் பெரும்பாலும் இதனை மாலை நேரம் நான் செய்வது உண்டு.

அன்றன்று நாம் செய்த நல்ல காரியங்கள் செய்த சிறு தவறுகள் இது பற்றி சிந்திப்பது. பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் நாம் செய்த நல்ல செயல்கள் தான் அதிகமாக இருக்கும். இதற்காக நம்மை நாமே பாராட்டி கொள்ளலாம். இந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமல்ல, எப்போதெல்லாம் நாம் சிறு நல்ல செயல் செய்கிறோமோ, அப்போதெல்லாம் நம்மை நாமே " குட்" என பாராட்டி கொள்ளலாம். நமது சுய மதிப்பு (Self esteem) வளர, இது ஒரு நல்ல வழி. இப்படி நல்ல விஷயங்களை பாராட்டிய பிறகு, அன்று செய்த தவறுகளை குறித்து யோசிக்கலாம். நிச்சயம் அலுவலகத்திலோ, வீட்டிலோ, வெளியிலோ சிற்சில தவறுகள் தினமும் செய்கிறோம். இவற்றை பற்றி சற்று யோசித்து " இனி இந்த மாதிரி தவறு செய்ய கூடாது" என சொல்லி கொள்ளல் வேண்டும். இது படிக்க சற்று Theoretic ஆக தோன்றினாலும் தினமும் செய்ய துவங்கினால் இதன் பலன்களை நன்கு உணரலாம். இவ்வாறு தவறுகள் பற்றி அன்றே யோசித்து அவற்றை "டீல்" செய்து விட்டால், பின்னர் அது உள்ளுக்குள் சுய வெறுப்பாக வளராது.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்: நாம் எந்த ஒரு சிறு தவறும் செய்ய கூடாதேனில், ஏதும் செய்யாமல் பேசாமல் இருந்தால் தான் முடியும் (சும்மா இருப்பதுவே ஒரு பெரிய தவறு தான்!!) நிறைய விஷயங்களில் நம்மை நாமே ஈடு படுத்திக்கொள்ளும் போது சில சிறு தவறுகள் நடக்க தான் செய்யும். அதனை சரி செய்து கொண்டு மேலே ஏறி போய் கொண்டே இருக்க வேண்டியது தான்.
**

சுய வெறுப்பு எட்டி பார்க்காமல் இருக்க நாம் செய்ய வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம்: மனதை சும்மா விடாதிருத்தல். மனதை எப்போதும் ஏதாவது உருப்படியான (Productive) விஷயங்களில் செலுத்தி கொண்டே இருக்க வேண்டும். எல்லோருக்கும் தெரிந்த பழமொழி தான்: " சும்மா இருக்கும் மனம் சாத்தானின் இருப்பிடம் " (An Idle mind is devil's paradise). மனதை சும்மா விட்டால் அது உங்களுக்கு செமையாய் வேலை வைத்து விடும். அதனை உங்கள் வேலையாள் போல நல்ல வேலைகள் தந்து கொண்டே இருக்க வேண்டும்.

மனித மனம் ஏதாவது ஒரு சிறு நல்ல வேலை செய்து கொண்டிருந்தால் தான் தன்னை தானே மதிக்கிறதாம்!! புத்தகம் படிப்பது, டிவி பார்ப்பது எதுவாயினும் சரி.. உருப்படியான ஏதோ ஒன்றில் ஈடு படுத்தி கொண்டிருக்க வேண்டும். இவை ஏதும் செய்யாது, மனம் காட்டும், இல்லாத மாய உலகம் பக்கம் போனால் அது நம்மை ஏமாற்றி, மிரட்டி முட்டாளாக்கி விடும்.

அலுவல்/ குடும்பம்/ தனிப்பட்ட வாழ்க்கை இவை மூன்றுக்கும் தனித்தனியே நல்ல குறிக்கோள்கள் இருந்தால் மனதை டீல் செய்வது சற்று எளிதாகி விடும். இந்த மூன்று விஷயங்களுக்கான குறிக்கோள்களில் ஒன்றை மாற்றி ஒன்றை நோக்கி வேலை செய்ய சொல்லி மனதை திருப்பி விடலாம்.

தன்னை நேசிக்காதவனால் மற்றவரை நேசிக்க முடியாது! கடந்த கால சுய வெறுப்புகளிலிருந்து மீண்டு வாருங்கள். முன்னேற்றத்தின் அடுத்த சில படிகளில் நிச்சயம் ஏறி விடலாம்.

Thanks to : http://veeduthirumbal.blogspot.com