வியாழன், 16 டிசம்பர், 2010

முன்னேறி பார்க்கலாம் - 6-நம்மை பின்னிழுக்கும் ஆமை

நம்மை பின்னிழுக்கும் ஆமை
பாராட்டு நாணயத்தின் ஒரு பக்கமென்றால் அதன் மறு(எதிர்) பக்கம் பொறாமை.


உங்களுடன் படித்த நண்பர் உங்களை விட பணியிலும் அந்தஸ்திலும் சில மடங்கு பெரியவராக உள்ளது - உங்களுக்கு நெருடலாக உள்ளதா?
அலுவலகத்தில் உங்களுக்கு இணையானவர் - ஆனால் உங்களைவிட அதிகம் உழைப்பவர் - சம்பள உயர்வு அதிகம் பெற்றால் நீங்கள் சுணங்கி போகிறீர்களா? உங்கள் உடன் பிறந்தவர் அல்லது உறவினர் - புது வீடு வாங்க - உங்களுக்கு பெரு மூச்சு எழுகிறதா?

இவற்றிற்கு நம் பதில் ஆம் எனில் அந்த ஆமை சற்று இறுக்கமாய் பிடித்திருக்கிறது என்று கொள்ள வேண்டியது தான்!

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடுவதாக சொன்னார் வள்ளலார். பொறாமை வாதிகள் சற்று வித்தியாசமானவர்கள். அவர்கள் நன்றாக வாழ்பவர்களை பார்த்தால் வாடி விடுவார்கள்.

மனித பிறப்பின் அற்புதமே ஒவ்வொரு மனிதரும் வித்யாசமான தனி தன்மை பெற்றிருப்பது தான். அடுத்தவரின் இலக்கு/ பயணம்/ துயரம் இவை நமக்கு எப்படி தெரியும்? ஒருவரை மற்றவருடன் ஒப்பிடுவது, ஒப்பிடுபவரை அவமானபடுத்துவதற்கு சமம். இப்போது சொல்லுங்கள்: உங்களை உங்கள் நண்பருடன் ஒப்பிட்டு உங்களை நீங்களே அவமான படுத்திக்கொள்ள போகிறீர்களா?


ஒவ்வொரு மனிதரும் தனித்தன்மை கொண்டவராதலால் அவரை அவருடன் தான் ஒப்பிட வேண்டும். இது எப்படி சாத்தியம் என்கிறீர்களா?

சென்ற ஆண்டிலிருந்து இந்த ஆண்டுக்குள் சிறிதளவாவது முன்னேறியிருக்கிறீர்களா? உங்களுக்கான இலக்கை நிர்ணயம் செய்திருந்தால் அதை நோக்கி கொஞ்சமேனும் முன்னேறியிருக்கிறீர்களா?சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு வருமானம் சற்றேனும் அதிகமானதா? உங்களிடம் உள்ள கெட்ட குணத்தில் ஒரு சிலவாவது களைந்திருக்கிறீர்களா?


இப்படி சென்ற ஆண்டில் இருந்த உங்களுக்கும், தற்போதைய உங்களுக்கும் செய்யும் ஒப்பிடே சிறந்தது. ஒவ்வொரு ஆண்டு முடியும் போது நான் இவ்வாறே சுய பரிசோதனை செய்வது வழக்கம்.


உங்கள் நண்பர்/ உறவினர் மேல் கொள்ளும் பொறாமை என்னென்ன விதமான தீங்கு விளைவிக்கிறது?

முதலில் அந்த தீய எண்ணங்கள் உங்கள் மனதிற்கும் உடலுக்கும் கெட்டது செய்யும். வயிற்றெரிச்சல், அல்சர் போன்ற உடல் பிரச்சனைகளும் நிம்மதியின்மை போன்ற மன தொந்தரவுகளும் தரும்.

அடுத்து உங்கள் பொறாமை சம்பந்தப்பட்ட நபருக்கு உங்கள் பேச்சிலேயே தெரிந்து விடும்.

"உனக்கென்னப்பா.. சொந்த வீடு.. ரெண்டு பேரும் சம்பாதிக்கிறீங்க.. ராஜா மாதிரி இருக்கே" என்ற ரீதியில் பேசினால் நண்பருக்கு என்ன தோன்றும்? அவர் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் உங்களிடமிருந்து தூரம் செல்ல துவங்கி விடுவார்.

அவரது வளர்ச்சியை பார்த்து நீங்கள் "கண் வைப்பதாக" அவருக்கு நெருங்கியவர்களே சொல்ல கூடும். ( தனிப்பட்ட முறையில் இந்த கண் வைக்கும் சமாசாரத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை; ஆனால் இந்த உலகம் இன்னும் இந்த மாதிரி சமாசாரங்களை நம்பிக்கிட்டு தான் இருக்கு!!)

ஒரு துறையில் உன்னத நிலையை அடைந்தவரை, ஒரு ரோல் மாடலாக கொண்டு அவர் அளவு உயர வேண்டும் என உழைக்கலாம். அவர் வளர்ச்சியில் பாதி உயர்ந்தாலும் நாம் கணிசமான வளர்ச்சி அடைந்திருப்போம். ஆனால் நெருங்கிய நண்பர்/ உறவினர் வளர்ச்சியுடன் உங்கள் வளர்ச்சியை எக்காரணம் கொண்டும் ஒப்பிடாதீர்கள். அது எல்லா விதத்திலும் கெடுதலே செய்யும்.

மற்றவர் வெற்றியிலும், சந்தோஷத்திலும் நாம் வருத்தபடுபவராயிருந்தால், வாழ்நாளைக்கும் நாம் நிம்மதியாய் இருக்க முடியாது.

வெற்றி பெற, முன்னேற, மகிழ்ச்சி கொள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை உண்டு. அது நமக்கு மட்டுமே நடக்க வேண்டும் என நினைப்பது மூட தனம். வாழ்க்கையும் வாய்ப்புகளும் அனைவருக்கும் பொது.

*************

பிறரின் வெற்றியில் நீங்களும் மகிழுங்கள். எப்போதும் மகிழ்வாய் இருக்க இது சிறந்த வழி.

பிறர் முன்னேற்றத்தில் நீங்களும் பங்கு பெறுங்கள். உங்கள் முன்னேற்றமும் இயல்பாய் நடக்கும்.

பிறர் சிரிக்கும் போது சேர்ந்து சிரியுங்கள். அது உங்கள் உறவுக்கு நல்லது.

ஒரு மனிதன் அழும்போது அவனை பார்த்து யார் வேண்டுமானாலும் பரிதாப படலாம். ஆனால் உங்கள் வெற்றியில் உண்மையில் மகிழ்பவன் எவனோ அவனே உங்களின் உண்மையான நண்பன்.

Thanks to : http://veeduthirumbal.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக