ஞாயிறு, 19 டிசம்பர், 2010

மனம் மகிழுங்கள் - 27 - மனதில் உறுதி வேண்டும்


னதில் உள்ளதை வாய்விட்டுச் சொன்னால் தானே நமக்குத் தெரியும்; ஏதாவது உதவலாம்.”

ஏதோ ஒரு கவலை; அதை மனதிலேயே வைத்துக் கொண்டு வெளியில் கொட்டாமல் உம்மனா மூஞ்சியாய் இருக்கும் ஒருவனைப் பார்த்து அவனது நண்பர்கள் இப்படி உரைப்பதைக் கேட்டிருப்பீர்கள். ஒருவேளை நீங்களே சொல்லியிருக்கலாம்; அல்லது உங்களுக்கே நடந்திருக்கலாம். என்ன செய்ய? அனைத்தையும் மனதில் போட்டுப் பூட்ட முடியாது. சில சமயம் மனதிலுள்ள சிந்தனைகளை வாய்விட்டுச் சொல்ல வேண்டியதும் அவசியமாகிறது.

மனதில் ஆக்கபூர்வமான – பாஸிட்டிவ் – எண்ணங்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று முன்னர் பார்த்தோமல்லவா? அதை வலுவாக்கி உரமேற்றிக் கொள்ள உறுதிமொழி தேவைப்படுகிறது? என்ன உறுதிமொழி? ஒருவிதமான மன உறுதிமொழி. எதற்காக இது?


இந்த மன உறுதிமொழிதான் தரமான சிந்தனைகளை நாம் சிந்திக்கவும் அத்தகு சிந்தனைகளை ஆழ்மனதில் நிலைநாட்டவும் உதவுகிறது; நம்மை நாமே சிறப்பாய் உணர வைக்கிறது; சிறப்பாய்ச் செயல்பட வழிவகுக்கிறது. குழப்புகிறதோ? ஒன்றும் பிரச்சனை இல்லை. சற்றுப் பிரித்துப் போட்டுப் பார்ப்போம்.

ஒருநாள் அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறீர்கள்; கடும் தலைவலி. “சீக்கிரம் வந்து தொலையாதா?” என்று நீங்கள் பேருந்திற்குக் காத்து நிற்க, தாமதமாய் வந்து சேரும் அதுவோ மக்களை அள்ளி அடைத்துக் கொண்டு வந்து நிற்கிறது. அந்நெரிசலில் முட்டிமோதி ஏறிப் பெரும் அவதியும் எரிச்சலும் தலைவலியுமாக நீங்கள் நின்று கொண்டிருக்கும் போதே ஒரு வித்தைப் புரியலாம்.

“அம்மாங் கூட்டத்தில் புகுந்து நுழைந்து, ஒற்றைக் காலில் நின்று கொண்டு பயணிப்பதே வித்தைதான். இதில் இன்னொரு வித்தையா?” என்று முறைக்காதீர்கள்.

சென்ற வாரம் வார்த்தைகளின் சக்தியைப் பற்றிப் படித்தோமில்லையா? அதையும் மனதிலுள்ள பாஸிட்டிவ் சிந்தனா சக்தியையும் ஒருங்கே உபயோகியுங்கள். அதுதான் வித்தை.

எப்படி?

“தலை அப்படி ஒன்றும் பெரிதாய் வலிக்கவில்லை; நன்றாகத்தான் இருக்கிறது; இன்னும் சற்று நேரத்தில் வலி போயே போய் விடும்.”

இதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொள்ளுங்கள். “என்னடா இது அழிச்சாட்டியம்? அநியாயத்திற்குப் பொய் சொல்கிறாயே!” என்று உங்களது உள்மனம் உள்ளிருந்து உங்களை அதட்டும். அதைப் பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் தவிர்த்து விட்டு, நீங்கள் பாஸிட்டிவான எண்ணத்தையே சொல்லிச் சொல்லி மனதளவில் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமாம்.

மெதுவே, மெது மெதுவே, “ஆமாம்! நீ நல்லாத்தான் இருக்கே!” என்ற எண்ணம் உங்கள் ஆழ்மனதில் வேர்விட ஆரம்பித்து விடும். வலி குறைந்து போனதை உங்களையறியாமல் நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். சற்று நேரத்தில், முழுவதுமோ அல்லது பெருமளவிலோ, அந்த வலியானது மறைந்து அல்லது குறைந்து போயிருக்கும்.

இது ஓர் உதாரணம் மட்டுமே. அதற்காகக் கையில் வெந்நீரைக் கொட்டிக் கொண்டால் இதை முயலக் கூடாது. டாக்டரிடம் ஓடுவதே நல்லது. அவர் அளிக்கும் பில் உங்களது வலியை மறக்கச் செய்துவிடும்!

மேற்சொன்ன உதாரணத்தைப் போல் அந்த வித்தையைப் பலவிதங்களில் நீங்கள் பிரயோகிக்கலாம் –

“உற்றார் உறவினருக்கெல்லாம் என்மேல் மட்டற்ற அன்பும் பாசமும் உண்டு; நானும் அவர்களிடம் அன்பும் பாசமுமாய் உறவாடப் போகிறேன்.”

“அட்டகாசம்! நாளுக்குநாள் என் மன மகிழ்வு அதிகரித்து வருகிறது.”

“நான் மிகவும் ஆரோக்கியமாய் இருக்கிறேன்.”

“இன்று மேட்சில் நிச்சயம் நான் செஞ்சுரி.”

“மேனேஜர் என்ன கொம்பனா? அஞ்சாமல் அசராமல் பதில் பேசப் போகிறேன்.”

“இன்று தைரியமாய் மனைவியிடம் கைச்செலவிற்குப் பணம் கேட்கப் போகிறேன்.”

பாஸிட்டிவ் எண்ணங்கள் என்பதை வார்த்தை வடிவமாக்கி இவ்விதம் மனதால் உறுதிபடக் கூறச் சொல்கிறார்கள் உளவியலாளர்கள் . இப்படியெல்லாம் மன உறுதியிட்டுவிட்டுத் தொலைக்காட்சியில் நியூஸ் பார்க்க உட்கார்ந்து விடக்கூடாது. அது சரி வராது. அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். எதற்கான முயற்சி?

மன உறுதிமொழி என்பது நீங்கள் அடையவேண்டிய விஷயத்திற்கு உங்கள் மனதைத் தயார்படுத்தும் வழியாகும். இத்தகு மன உறுதிமொழியை ஒரு தினசரிப் பழக்கமாக நீங்கள் உருவாக்கிக் கொண்டால் அது எத்தகைய எளிய உபகரணம் என்பதையும் அதன் வலிமையும் உணர்ந்து அசந்து போவீர்கள்.

“இதென்ன? சின்னப் பிள்ளைத்தனமால்லே இருக்கு? இதையெல்லாம் நான் பின்பற்றப் போவதில்லை,” என்று நீங்கள் நினைத்தால் தேவையற்ற தலைவலி உங்கள் தலையைப் படுத்திக் கொண்டுதான் இருக்கும். உங்களது மனவலிமையின் முழு வீரியம் வெளிப்படாமல், நட்டம் உங்களது!

மன உறுதிமொழியைப் பிரயோகிப்பதற்குச் சில தந்திரங்கள் சொல்லித் தருகிறார்கள் உளவியலாளர்கள். அதையும் பார்த்து விடுவோம்.

மனமானது எப்படி நாம் நினைப்பதை நோக்கியே நகரும் தன்மையுடையது என்பதை முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். நினைவிருக்கிறதா?

“நான் இனி என் கணவன் கேட்காமலேயே கைச்செலவுக்குப் பணம் கொடுப்பேன்; நான் இனி அவரிடம் வாக்குவாதம் செய்யப் போவதில்லை.”

“எனக்கு ஞாபக மறதி இல்லை.”

என்றெல்லாம் உங்களது மனம் உறுதி எடுத்துக் கொண்டால் அதன் விளைவு என்னவாக இருக்கும்? பதில் உங்களுக்கே தெரிந்திருக்குமே? ஆம், அதேதான். “வேண்டாம்”, “இல்லை” என்பதை நோக்கி உங்கள் மனமானது வங்காள விரிகுடாவில் உண்டான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் போல் நகரத் தொடங்கியிருக்கும்.

அந்தக் காலத்தில் மாணவர்கள் தவறு செய்தால் அவர்களுக்கு ஆசிரியர்கள் ஒரு தண்டனை கொடுப்பார்கள் – imposition.

“நான் இனி பள்ளிக்குத் தாமதமாய் வரமாட்டேன்.”

“நான் இனி வகுப்பறையில் பேச மாட்டேன்.”

என்று நூறு முறை, இருநூறு முறை எழுதச் சொல்வார்கள்.

கைகடுக்க எழுதி எடுத்துவரும் மாணவன் என்ன செய்வான்?

க்ளைமேக்ஸில் திருந்தும் வில்லனைப் போல் திருந்தி விடுவானா?

அப்படிச் சுமுகமாய் வாழ்க்கை நகர்வதில்லை. அதே தவறை அதே மாணவன் மீண்டும் செய்வான். இங்கு பிரச்சனை தண்டனையில்லை; அந்த வாக்கியங்கள். தவறிலிருந்து அவனை விலக்குவதற்குப் பதிலாய் அவன் மீண்டும் மீண்டும் அந்தத் தவறை மேற்கொள்ளவே மேற்சொன்ன imposition வாக்கியங்கள் உதவியிருக்கும்.


எனவே,


நாம் என்ன செய்யப் போகிறோம், என்ன விழைகிறோம் என்பதைத்தான் நேரான முறையில் மன உறுதியாகக் கொள்ள வேண்டும். இது முதலாவது.

இரண்டாவது, இத்தகைய மன உறுதிப்பாட்டை வாய் விட்டுச் சொல்லியோ எழுதியோ வைத்துக் கொள்ள வேண்டும். இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்தில் சொல்லியுள்ளதைப் போல் வாய்விட்டுச் சொன்னால்தான் நமது மனமே நமக்கு உதவும். மனதளவில் வெறுமே ஒரு உறுதிப்பாட்டை நீங்கள் நினைத்தால் அதை நினைத்து முடிப்பதற்கு முன்னதாகவே, “அந்தப் புடவை டிஸைன் நன்றாக இருக்கிறதே, எங்கு வாங்கியிருப்பார்கள்?”, “இன்று டின்னருக்கு சோளா பூரி சரிவருமா?” என்று மனமானது தாவி ஓடிவிடும்.

ஆனால் அதையே வாய்விட்டுச் சொல்லும் போதோ, எழுதி வைத்துக்கொள்ளும் போதோ உங்கள் புலனுணர்வுகள் இதில் ஈடுபடுகின்றன. எனவே உங்கள் மனவுறுதிப் பிரமாணம் பெரும் உறுதி பெறுகிறது.

மூன்றாவதாக மனதில் நிறுத்த வேண்டியது – கிளிப் பிள்ளை போல் மீண்டும் மீண்டும் இந்த மன உறுதிப்பாட்டைக் கூறிக் கொண்டிருக்க வேண்டும். நாம் பிறக்கும் போது நம்முடன் பிறந்தது, தொன்று தொட்டு தொடர்வது என்று நம் உள்ளும் புறமும் கலந்துவிட்ட விஷயங்களை அவ்வளவு எளிதில் நீக்குவது முடியாது. அதிலிருந்து மீள பிடிவாதமும் விடாமுயற்சியும் தேவை.

ஆக,

நல்லதை நினைப்போம்; நினைத்ததைச் சொல்வோம்; சொன்னதைச் செய்வோம்.



னம் மகிழ, தொடருவோம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக