சனி, 18 டிசம்பர், 2010

முன்னேறி பார்க்கலாம் - 7 - பயம் - ஓர் பார்வை

" அச்சமில்லை; அச்சமில்லை என சொல்லி கொள்ளுங்கள்; பிறருக்கும் இதையே சொல்லுங்கள். உலகில் தோன்றிய தீய எண்ணங்கள் எல்லாம் பயத்திலிருந்து தான் தோன்றியிருக்கின்றன" - விவேகானந்தர்

***

கீழே உள்ள எண்ணங்களில் ஒரு சிலவாவது உங்களுக்கு அவ்வபோது தோன்றுகிறதா?

எனக்கு (கேன்சர் போன்று) ஏதாவது பெரிய நோய் இருக்குமோ?

ஏதாவது ஒரு விதத்தில் நான் பார்க்கும் வேலைக்கு பிரச்சனை வருமோ?

நாம் இருக்கும் ஊரில் பூகம்பம். சுனாமி வந்தால் என்னாவது?

மாணவர் எனில் - இந்த பரிட்சையில் பாஸ் செய்து விடுவேனா? என் படிப்புகேற்ற வேலை கிடைக்குமா?

உண்மையை சொல்ல வேண்டுமெனில், வாழ்வின் பல்வேறு தருணங்களில் இத்தகைய பய எண்ணங்கள் வரவே செய்கின்றன. இதை தடுக்க முடியாது. அவற்றை நாம் எப்படி எதிர் கொள்கிறோம் என்பது தான் அவசியம். இத்தகைய பயங்களுக்கு நாம் முக்கியத்துவம் தந்து அவையே பற்றி ஆழமாய் சிந்தித்தால் அந்த பயங்கள் சிறிது சிறிதாய் நம்மை ஆட்கொள்ளும்.

இத்தகைய பயங்களில் எதற்கேனும் உடனடி தீர்வு உண்டா? நிச்சயமாய் இல்லை. எனும் போது, அவை பற்றி ஆழ சிந்தித்து எப்படி நம் எண்ணங்கள் மூலம் ரெடிமேட் தீர்வுக்கு வர முடியும்? இத்தகைய பயங்களை எதிர்கொள்ள சிறந்த முறை அவற்றை இக்னோர் ( Ignore ) செய்வது தான்

மனவியல் வல்லுனர்கள் பலரும் திரும்ப திரும்ப சொல்வது - நம் மனதில் தோன்றும் பயங்களில் குறைந்த பட்சம் 90 சதவீதம் நடக்கவே நடக்காத விஷயங்கள்! இவற்றிற்கு பயந்து, பயந்து தான் நாம் எனர்ஜியையும் , நிம்மதியையும் இழக்கிறோம். இத்தகைய பயங்கள் நம் Idle mind-ல் எழும் வீணான எண்ணங்கள். அவ்வளவு தான்.

நமக்கு தெரியாத/ புரிந்து கொள்ளாத ஒன்றின் மீது நமக்கு எப்போதும் சற்று பயமிருக்கும். உதாரணமாய் மரணம். இதனை அனுபவித்து பார்த்து விட்டு யாரும் சொன்னாரில்லை. எனவே மரணம்/ அதன் பின் என்ன என்பது குறித்த பயம் எல்லோருக்கும் உள்ளது.

மேலும் நமக்கு தெரியாத, இதுவரை செய்யாத விஷயங்கள் முயற்சிக்கும் போது " நம்மால் ஒழுங்காய் இதனை செய்ய முடியுமா? சரியாக வரா விடில் என்னாகுமோ?" என்ற பயங்கள் இருக்கவே செய்யும்.

மிக பெரிய ப்ராஜக்டுகளை கற்பனை செய்து அவை ஒவ்வொன்றையும் திரையில் நிஜமாக்கிய இயக்குனர் ஷங்கர் சொன்னது போல், " ஒரு வேலையை துவங்கும் வரை தான் தயக்கம்/ பிரச்சனை. துவங்கிய பின் அந்த வேலையே அதற்கு தேவையான வேலையை வாங்கி கொள்ளும்" (சமீபத்தில் வானவில்லில் குறிப்பிட்டது தான்; இங்கு பொருந்துவதால் மறு உபயோகம்; பொருத்தருள்க)

அரிதாக சில பயங்கள் நன்மை பயப்பவை. உதாரணமாய் ஆரம்பிக்கும் போது சொன்ன பயங்களில், ஒரு மாணவனுக்கு தோன்றும் " நான் தேர்வில் பாஸ் ஆகி விடுவேனா? " என்ற பயம் - படிக்கும் அனைவருக்கும் இருக்கும்/ இருக்க வேண்டிய எண்ணம்- இந்த எண்ணத்தால் தான் அந்த மாணவன் நன்றாக படிப்பான்.

இத்தகைய " நல்ல பயங்களை" நாம் பாசிடிவ் நடவடிக்கை/ செயல்களாக மாற்றி எதிர் கொள்ள வேண்டும்.

"பயமெனும் பேய் தனை கொன்றாய்" என்றார் பாரதி. எத்தனை அழுத்தமான வரி! பயம் ஒரு பேய் போல நம் கற்பனை தான். இந்த பயத்தை கொல்லுங்கள் என்கிறார் பாரதி!!

சில பயங்களை அது சம்பந்த பட்ட அலுவலக/ பழைய நண்பர்களிடம் பேசலாம். இப்படி நாம் பேசும் நபர்கள் தைரியம்/ நம்பிக்கை தர கூடியவர்களாக தேர்வு செய்து பேச வேண்டியது அவசியம். போலவே அவரகள் சொல்லும் நம்பிக்கை வரிகளை நாம் நம்புவதும் முக்கியம்.

உதாரணமாய் குடும்பம்/ வீடு குறித்த எனது பயங்களை மனைவியிடம் மட்டும் பேசுவேன். அவர் சொல்லும் நம்பிக்கை வார்த்தைகளை முழுதாய் நம்புவேன்/ ஏற்று கொள்வேன்.

நம் உடலை குறித்து வரும் பயங்களை - அவை எத்தனை சிறியதாய் இருந்தாலும் மருத்துவரை பார்க்கும் போது பேசி விடுங்கள். அவற்றில் பெரும்பாலானவை தேவையற்ற பயம் என மருத்துவர் நம் உடல்நிலையில் தெரியும் அறிகுறிகள் (symptoms) வைத்தே கூறி விடுவார். அவசியமானால் அதற்கு சரியான சோதனை (Test) எடுத்து பார்க்க சொல்லுவார். சோம்பேறித்தன படாமல், தள்ளி போடாமல் அந்த சோதனை செய்து விட வேண்டும். சோதனை முடிவில் நோய் இல்லை என்று தெரிந்ததும் - அந்த நோய் குறித்த பயம் முழுமையாக போய் விடும். இந்த இரண்டும் (டாக்டரிடம் உடல் பயம் குறித்து பேசுவது/ அவர் சொன்னால் டெஸ்ட் செய்து பார்ப்பது) நான் எப்போதும் பின் பற்றும் விஷயங்கள்.

பயம் குறித்து மேரி கியூரி சொன்ன அழகிய வரிகளுடன் இந்த பதிவை நிறைவு செய்கிறேன்:

" Nothing in this life is to be feared. It is only to be understood. " - Marie Curie.

Thanks to : http://veeduthirumbal.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக