செவ்வாய், 7 டிசம்பர், 2010

வாங்க.. முன்னேறி பாக்கலாம்.. பகுதி - 1

முன்னேற வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பாகவே உள்ளது. தற்போதுள்ள நிலையில் இருந்து இன்னும் மேலே செல்ல ஒவ்வொருவரும் ஆசைப்படுகிறோம். தன் முன்னேற்றம் குறித்தான சிந்தனைகள் சிறு பொறியாக தன் உள்ளிருந்தோ, வெளியிலிருந்தோ கிடைத்தால் எடுத்து கொள்ள பலரும் தயாராக உள்ளனர். குறிப்பாய் நான் இந்த விதம் தான்.

சுய முன்னேற்ற நூல்கள் சிலர் விரும்பி வாசிக்கின்றனர். சிலருக்கு அது பிடிப்பதில்லை. விருப்பங்களும் ரசனைகளும் ஒருவருக்கொருவர் மாறுவது இயல்பு தானே? இந்த தொடரை வாசித்து பாருங்கள். நீங்கள் சுய முன்னேற்ற நூலே வாசிக்க பிடிக்காதவர் எனினும், இதில் உள்ள உண்மை உங்களை கவர கூடும்.

முதலில் சில disclaimers சொல்லி விடுகிறேன்:

நான் வாசித்த பிற புத்தகங்களில் இருந்து சில எண்ணங்கள் எதிரொலிக்கலாம். ஆனால் எந்த புத்தகத்தையும் பக்கத்தில் வைத்து கொண்டோ, முதல் நாள் வாசித்து விட்டோ எழுத போவதில்லை. எப்போதோ படித்து, யார் சொன்னது என்று கூட மறந்து போய் சொன்ன கருத்து மட்டும் உள்ளே தங்கி, பின் அது என் அனுபவமாக, கருத்தாக வெளி வரலாம்.

நிச்சயம் என் மனதில், அனுபவத்தில் உணர்ந்தவை தான் எழுத போகிறேன். நான் ஒன்றும் மிக உயர்ந்த நிலையை எட்டி விட வில்லை. ஆனால் ஒரு காலத்தில் எந்த பக்கம் செல்வது என்று குழம்பி, வாழ்க்கையை எப்படி எடுத்து செல்வது என்று புரியாமல், பல்வேறு மன குழப்பங்களுக்கு ஆட்பட்டு வெளி வந்திருக்கிறேன். நான் அன்று இருந்த நிலையிலிருந்து ஒப்பிட்டு பார்த்தால், மிக அதிக குழப்பங்கள் இடையே ஒரு சுத்த useless person-ஆக இருந்தவன், இன்று நான்கு பேர் மதிக்கும் அளவு வந்துள்ளது புரிகிறது. எவ்வளவு தவறுகள், முட்டாள் தனங்கள் செய்துள்ளேன். இவ்வளவும் செய்து விட்டும் இன்று மீண்டு வர என்னால் முடியும் போது, அது எல்லாருக்கும் முடியும் என்பதால் தான் இந்த தொடர் எழுத எண்ணுகிறேன். இது எனது சுய சரிதையாகவோ, சுய தம்பட்டம் பேசும் தொடராக இல்லாதிருக்க முடிந்த வரை முயல்கிறேன்.

"வாங்க.. முன்னேறி பாக்கலாம்" என்ற தலைப்பு, " வாங்க.. பழகி பாக்கலாம்" ரீதியில் வைத்துள்ளேன். தலைப்பு மாறினாலும் மாறலாம் :))

ஆங்கிலத்தில் "Small matter matters much " என்பார்கள். அது போல நான் பேச போவது பல சின்ன சின்ன விஷயங்களே. அவற்றில் சில உங்களுக்கு உதவலாம்.

முன்னேற்றம் என்கிற போது பல ups & downs இருக்கவே செய்யும். சில குணங்கள் நம்மை மேலே கொண்டு செல்லும். சில நம்மை பரம பதம் போல் கீழிறக்கும். இப்படி ரெண்டு விதமான குணங்களையும் இந்த தொடரில் மாறி மாறி பார்க்க உள்ளோம்.

*******

ரு வீடு கட்டுவது முதலில் எங்கே ஆரம்பிக்கிறது தெரியுமா? பில்டர் முடிவு செய்வதிலா, கல் சிமென்ட் வாங்குவதிலா, CMDA போன்ற நிறுவனத்திடம் Plan approval வாங்கும் போதா? இவை எதுவும் இல்லை. ஒரு வீடு முதலில் அந்த குடும்ப தலைவன் அல்லது தலைவி மனதில் கட்டபடுகிறது. முதலில் நமக்கென வீடு வேண்டும் என்ற எண்ணம். அது தான் விதை. முதலில் ஆசையாக இருந்து பின் இலக்காக
மாறுகிறது. ஒரு காலி மனை அல்லது flat பார்க்க ஆரம்பிக்கின்றனர், அது முடிவாகிறது; அப்புறம் பேங்க் லோனில் ஆரம்பித்து க்ரஹ பிரவேசம் வரை தொடர் ஓட்டம். கடைசியில் தனக்கென வீடு என்ற கனவு நனவாகிறது.

இது வீடு கட்டுவதற்கு மட்டுமல்ல, நீங்கள் அடைய விரும்பும் எந்த விஷயத்துக்கும் பொருந்தும்.

எதற்குமே துவக்கம் அதனை அடைய வேண்டும் என்ற எண்ணம் தான். எந்த செயலும் இரு முறை செய்யபடுகிறது; முதலில் மனதில், பின்பு தான் அதே செயல் நிஜமாய் நடக்கிறது. (Everything is created twice; first in the minds of individual and then it actually happens).

தனக்கு என்ன தேவை என்பதை தன்னை தவிர யாரால் சொல்ல முடியும்? துரதிஷ்ட வசமாக நம்மில் பலருக்கு நமக்கு என்ன தேவை என்பதே தெரிய வில்லை. நாம் என்ன செய்ய விரும்புகிறோம் என்று தீவிரமாக யோசிப்பதும், அது குறித்து தெளிவான, தீர்க்கமான முடிவெடுப்பதும் இல்லை.

நமக்கு என்ன தேவை என்பதில் நாம் தெளிவாக இருந்தால் 9 out of 10 times அதனை அடையலாம். அதனை அடையும் வழியில் எத்தனையோ பிரச்சனைகள், தடைகள் வரலாம். ஆனால் நாம் உறுதியாய், பொறுமையாய் இருந்தால் நமக்கு தேவையானதை அடைய முடியும்.

வீடு கட்டும் உதாரணத்தையே எடுத்து பாருங்கள். கட்டி முடிப்பதற்குள் எத்தனை தடை வந்திருக்கும்? தேவையான நேரத்தில் பணம் கிடைக்காது; பிளான் மாறும் குழப்பங்கள்; கட்டும் போது அடுத்து பில்டிங் காரர் ஏதாவது தகராறு செய்வார்.. இப்படி எத்தனையோ.. அனைத்தையும் தாண்டி அந்த வீடு கட்டி முடிக்கபடுகிறது.

அதே போல் தான் ஒரு தேர்வாகட்டும்; நீங்கள் அடைய எண்ணும் எந்த விஷயமாகட்டும் எத்தனையோ தடை வந்தாலும் நீங்கள் உறுதியாய் இருந்தால் அந்த இலக்கை அடையலாம்.

“9 out of 10 times அடையலாம்” என்று ஏன் சொன்னேன் தெரியுமா? நமது எல்லா விருப்பங்களும் நியாயமாக இருக்கும் என சொல்ல முடியாது; பருவ வயதில் ஒருவன் ஒரு பெண்ணின் அன்பை, காதலை பெறுவதே தன் லட்சியம் என நினைக்கிறான்; அந்த பெண்ணுக்கு பல காரணங்களால் இவனை பிடிக்காமல் போகலாம். அவள் வேறு யாரையும் நேசிக்கலாம். அப்படியும் அவளை அடைவதே என் லட்சியம் என குட்டி பட தனுஷ் போல் சொன்னால் , அது நிச்சயம் நடக்கும் என எப்படி சொல்ல முடியும்? இலக்கு நியாயமானது எனில் அது நடக்கும். நாம் பேசுவது: ஒருவரை கொல்வது, குறுகிய நாளில் பண காரன் ஆவது போன்றவை பற்றி அல்ல.

*********

ங்களுக்கு என்ன தேவை என்பதை நீங்கள் முடிவு செய்து விட்டால், அது நீங்கள் சென்று சேர வேண்டிய destination போல fix ஆகி விடுகிறது. அடுத்து அதனை நோக்கி நீங்கள் பயணிக்கிறீர்கள். சேர வேண்டிய இடத்துக்கு எப்படியும் போகலாம்.. பேருந்தில், ரயிலில், ஆட்டோவில், அல்லது இவை கலந்த combination-ல், வழியில் சில நேரம் வண்டி break down ஆகும், தாமதமாகும், ஆனாலும் நீங்கள் அந்த இடத்தை சென்று அடைவீர்கள்! அதே போல் உங்கள் இலக்கு முடிவான பின், சில போராட்டங்கள் இருந்தாலும் நீங்கள் அதனை அடைவதும் நிச்சயமாகிறது.

வீட்டை விட்டு வெளியே கிளம்பும் போது எங்கே போகிறோம் என்பது தெரியும் தானே. அதே போல் தான் வாழ்க்கையில் நீங்கள் எங்கு சென்று அடைய வேண்டும் என்பதும் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

இந்த பதிவு படித்த அரை மணியிலோ, அடுத்த நாளோ நீங்கள் முடிவு செய்ய வேண்டும் என்பதில்லை. இத்தகைய பெரிய முடிவுகள் உங்கள் உள்ளே ரொம்ப நாளாக இருக்க கூடியவை. உள்ளுக்குள் பெரும் அலசல், கேள்விகளுக்கு பிறகே, உங்கள் "ஆசை", உங்கள் " இலக்கு " ஆக மாறும்.

ஏற்கனவே உங்கள் இலக்கை நிர்ணயம் செய்து விட்டாலோ, விரைவில் முடிவு செய்தாலோ நீங்கள் முன்னேற்ற படியில் முதல் சில அடிகள் ஏற ஆரம்பித்து விட்டீர்கள் என்றே அர்த்தம். வாழ்த்துக்கள்

... (முன்னேறுவோம் )

Thanks to : http://veeduthirumbal.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக