செவ்வாய், 21 டிசம்பர், 2010

வாங்க முன்னேறி பார்க்கலாம் பகுதி - 9- சுய வெறுப்பு

முன்னேற தேவையான குணங்களில் அன்பு என்கிற பாசிடிவ் குணத்தை தொடர்ந்து "சுய வெறுப்பு" என்கிற நெகடிவ் குணம்.

ஒவ்வொரு மனிதனும் மிக அதிகம் நேசிப்பது தன்னைத்தான். அவன் மிக அதிகம் வெறுப்பதும் கூட தன்னையே தான். இது ஒரு முரண் எனினும் உண்மை தானே!

ஒவ்வொரு மனிதரும் அவரவர் எண்ணங்கள், ஆசைகள் இவற்றிற்கு தான் அதிக முக்கியத்துவம் தருவோம். எனவே ஒவ்வொருவரும் தன்னை தான் அதிகம் நேசிப்போம் என்பதை எளிதில் ஒப்பு கொள்ளலாம். ஆனால் தன்னை தான் அதிகம் வெறுப்பது என்பது??

ஒவ்வொரு மனித மனமும் பல்வேறு மர்மங்கள் அடங்கிய காடு. தனது குறைகள், தவறுகள் இது அத்தனையும் முழுதாய் அவரவருக்கு மட்டுமே தெரியும். மனைவி/ நண்பர் இவர்களிடம் தன்னை பற்றி பெரும்பாலான விஷயங்கள் (90 to 95%) சொல்லியிருந்தாலும் கூட, அந்த மீதமிருக்கும் 5 % யாரிடமும் சொல்ல முடியாமல் தடுமாறுகிறோமே அங்கு தான் சுய வெறுப்பின் வேர் உள்ளது.

சுய வெறுப்பு பெரும்பாலும் அவரவரின் கடந்த காலத்தின் மூலம், அப்போது செய்து தவறுகள் மூலம் உண்டாகிறது. உண்மையில் ஒரு தவறை செய்யும் போது அது தவறு என மனதுக்கு தெரிவதில்லை. தெரிந்தால் பெரும்பாலும் தவறை செய்வதில்லை. (சிகரெட், குடி பழக்கம் போன்றவை இதில் விதி விலக்கு; அதனை தவறு என தெரிந்தும் செய்கிறார்கள். செய்பவர்களே விட நினைக்கிறார்கள். முடிவதில்லை). இப்படி தவறு என தெரியாமல் செய்து விட்டு, பிற்காலத்தில் அதனை நினைத்து வருந்துகிறோம்.. எத்தனை பேர் மனதை கஷ்டபடுத்தினோம் என மனம் குமைகிறோம். இது ஒரு அளவிற்கு மேல் போனால் மன நோயாகும் வாய்ப்பும் உண்டு எனினும் பெரும்பாலானவர்கள் அந்த அளவுக்கு செல்வதில்லை.

கடந்த கால தவறுகளை எண்ணி வருந்துவது தவறா? நிச்சயம் தவறில்லை. அது ஒரு அளவோடு இருந்தால்.

எனது அலுவலக வாழ்க்கையின் துவக்கத்தில் வேலை பார்த்த நிறுவனத்தில் சில நல்ல வாழ்க்கை முறையும் கற்று தரப்பட்டது. அங்கு சொல்லி தந்த முக்கிய விஷயங்களில் ஒன்று "Legitimize your past ". அதாவது கடந்த காலத்தில் நாம் நடந்து கொண்டவை அனைத்தும் அந்தந்த சூழல், வயது காரணமாக தான் நடந்தது. எனவே அதற்காக நம் மீது இருக்கும் வெறுப்பை களைவது ஒரு வாழ்க்கை முறையாகவே (Process) அந்த நிறுவனத்தில் செய்யப்பட்டது. இத்தகைய பழைய கால வெறுப்பு/ எண்ணங்களை "பாகேஜ் " என்று சொல்வார்கள். இத்தகைய பாகேஜ் சேர்த்து நாம் சுமக்க சுமக்க அது நமக்கு கெடுதல் செய்வதோடு, நம் முன்னேற்றமும் தடை படும். எனவே தான் இத்தகைய சுய வெறுப்பை/ பாகேஜ்ஜை களைய வேண்டும் என அங்கு சொல்லி தர பட்டது.

கீழ்க்காணும் வரிகளை ஒரு முறை வாசியுங்கள்:

" On no account brood over your errors. Take the learning alone. Rolling over the muck is not the best way of getting clean".

எத்தனை உண்மை இது! உங்கள் பழைய தவறுகளுக்காக சில நிமிடங்கள் வேண்டுமானால் உங்களை நீங்களே திட்டி கொள்ளலாம். இனி இப்படி நடக்க கூடாது என உறுதி (Resolution ) எடுத்து கொள்ளலாம். இதனால் யாராவது பாதிக்க பட்டிருந்தால் மனமார அவர்களிடம் மன்னிப்பும் கேட்கலாம். அதற்கு மேல் அந்த விஷயத்தை பற்றி வருத்தமோ கவலையோ பட கூடாது.
**
என் வீட்டுக்கருகே புதிதாக ஒரு குடும்பம் குடி வந்தது. வயதான அம்மா, அப்பா, அவர்கள் பெண், பேத்தி இவர்கள் மட்டும் இருந்தனர். அந்த சிறு குழந்தையின் தந்தை வீட்டில் இல்லை. அந்த வயதானவர் என்னிடம் அவ்வப்போது பேசுவார். ஒரு முறை ரொம்ப நேரம் மனம் விட்டு பேசினார். அப்போது தனது சொந்த கார பையனை தான் தனது பெண்ணுக்கு மணம் முடித்ததாகவும் அலுவலகத்தில் நடந்த ஒரு விபத்தில் அவர் மரணம் அடைந்ததாகவும் மிக வருத்தத்துடன் சொன்னார். " நான் தான் விடா பிடியா நின்னு இந்த கல்யாணத்தை முடிச்சேன். சொந்த காரங்க சில பேர் வேண்டாம்னு சொன்னாங்க. என்னால் தான் எல்லாம். என்னால் தான் என் பொண்ணுக்கு இந்த நிலைமை" என்று வருந்தினார்.

சில நொடிகள் மௌனத்திற்கு பிறகு நான் கேட்டேன். " சார் கடவுளாலும் முடியாத விஷயம் ஒண்ணு உண்டு. அது என்ன தெரியுமா? "

"......."

" நடந்ததை மாற்ற அவரால் கூட முடியாது"

சில நொடிகள் மௌனத்திற்கு பின் சில துளி கண்ணீருடன் என் கைகளை அவர் பிடித்து கொண்டார். அவர் முகம் முன்பை விட சற்று தெளிவாக மாறுவதை என்னால் நன்றாக உணர முடிந்தது.

நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் என பலரிடமும் அடிக்கடி நான் சொல்லும் வரிகள் இவை:

"கடவுளாலும் முடியாத விஷயம் ஒன்று உண்டு. நடந்ததை மாற்ற அவராலும் முடியாது ! "

இதனை முதல் முறை படிக்கும் போது நான் எப்படி உணர்ந்தேனோ, அதே வகை அதிர்வை இந்த வரிகளை கேட்டு அவர்கள் ஒவ்வொருவரும் உணர்வதை பல முறை கவனித்துள்ளேன்.

இந்த வரிகள் உண்மையில் தனிப்பட்ட முறையில் எனக்குப் பெரும் தெளிவை கொடுத்துள்ளது. இதனை உண்மையாக உணர்ந்த பிறகு கடந்த காலம் குறித்து கவலைப்படுவது அநேகமாக குறைந்து விட்டது. சில நேரம் நாம் முன்பு செய்த தவறுகள் புதிதாக இப்போது தான் புரிய வரும். அப்போது சில நொடிகள் மட்டும் என்னை நானே திட்டி கொண்டு, இனி இவ்வாறு செய்ய கூடாது என சொல்லி கொண்டு மீண்டு விடுவேன்.
***
சுய வெறுப்பு, நாம் செய்யும் தவறுகளை விரைவில் களையாமல் அல்லது அதனை குறித்த குற்ற உணர்ச்சியை நெடு நாள் மனதில் சுமப்பதால் வருகிறது.

உள்ளுக்குள் எப்போதோ செய்த சில தவறுகள் இன்னும் இருக்கிறது எனில் ஒன்று மட்டும் செய்யலாம். குறிப்பிட்ட நபரிடம் மன்னிப்பு கேட்டு வெளிப்படையாய் பேசுவது அல்லது அவர் உயிருடனே இல்லை அல்லது வேறு காரணத்திற்காக பேச முடியாது எனில் உங்கள் குற்ற உணர்ச்சியை களைய வேறு ஏதாவது பிரயாசித்தம் செய்து விடலாம். அநாதை இல்ல குழந்தைகளுக்கு ஒரு நாள் அன்னதானம் அல்லது யாராவது ஒரு ஏழை குழந்தைக்கு படிக்க பணம் கட்டுவது இப்படி ஏதாவது ஒன்று செய்யலாம். இங்கு நான் எந்த தவறை வேண்டுமானாலும் செய்து விட்டு பிரயாசித்தம் செய்தால் போதும் என்று சொல்ல வரவில்லை. உங்களை அறியாமல் நீங்கள் செய்த பழைய தவறுகளை மறக்க, அதற்கு பதிலாக இன்னொரு நல்ல காரியம் செய்யுங்கள் என்று தான் சொல்கிறேன்.
**
தினசரி நான் செய்யும் சிறு சுய பரிசோதனையை இங்கு பகிர்கிறேன். புத்தகங்கள் மூலம் அறிந்த ஒன்று தான். எனினும் பெரும்பாலும் இதனை மாலை நேரம் நான் செய்வது உண்டு.

அன்றன்று நாம் செய்த நல்ல காரியங்கள் செய்த சிறு தவறுகள் இது பற்றி சிந்திப்பது. பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் நாம் செய்த நல்ல செயல்கள் தான் அதிகமாக இருக்கும். இதற்காக நம்மை நாமே பாராட்டி கொள்ளலாம். இந்த குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமல்ல, எப்போதெல்லாம் நாம் சிறு நல்ல செயல் செய்கிறோமோ, அப்போதெல்லாம் நம்மை நாமே " குட்" என பாராட்டி கொள்ளலாம். நமது சுய மதிப்பு (Self esteem) வளர, இது ஒரு நல்ல வழி. இப்படி நல்ல விஷயங்களை பாராட்டிய பிறகு, அன்று செய்த தவறுகளை குறித்து யோசிக்கலாம். நிச்சயம் அலுவலகத்திலோ, வீட்டிலோ, வெளியிலோ சிற்சில தவறுகள் தினமும் செய்கிறோம். இவற்றை பற்றி சற்று யோசித்து " இனி இந்த மாதிரி தவறு செய்ய கூடாது" என சொல்லி கொள்ளல் வேண்டும். இது படிக்க சற்று Theoretic ஆக தோன்றினாலும் தினமும் செய்ய துவங்கினால் இதன் பலன்களை நன்கு உணரலாம். இவ்வாறு தவறுகள் பற்றி அன்றே யோசித்து அவற்றை "டீல்" செய்து விட்டால், பின்னர் அது உள்ளுக்குள் சுய வெறுப்பாக வளராது.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள்: நாம் எந்த ஒரு சிறு தவறும் செய்ய கூடாதேனில், ஏதும் செய்யாமல் பேசாமல் இருந்தால் தான் முடியும் (சும்மா இருப்பதுவே ஒரு பெரிய தவறு தான்!!) நிறைய விஷயங்களில் நம்மை நாமே ஈடு படுத்திக்கொள்ளும் போது சில சிறு தவறுகள் நடக்க தான் செய்யும். அதனை சரி செய்து கொண்டு மேலே ஏறி போய் கொண்டே இருக்க வேண்டியது தான்.
**

சுய வெறுப்பு எட்டி பார்க்காமல் இருக்க நாம் செய்ய வேண்டிய இன்னொரு முக்கிய விஷயம்: மனதை சும்மா விடாதிருத்தல். மனதை எப்போதும் ஏதாவது உருப்படியான (Productive) விஷயங்களில் செலுத்தி கொண்டே இருக்க வேண்டும். எல்லோருக்கும் தெரிந்த பழமொழி தான்: " சும்மா இருக்கும் மனம் சாத்தானின் இருப்பிடம் " (An Idle mind is devil's paradise). மனதை சும்மா விட்டால் அது உங்களுக்கு செமையாய் வேலை வைத்து விடும். அதனை உங்கள் வேலையாள் போல நல்ல வேலைகள் தந்து கொண்டே இருக்க வேண்டும்.

மனித மனம் ஏதாவது ஒரு சிறு நல்ல வேலை செய்து கொண்டிருந்தால் தான் தன்னை தானே மதிக்கிறதாம்!! புத்தகம் படிப்பது, டிவி பார்ப்பது எதுவாயினும் சரி.. உருப்படியான ஏதோ ஒன்றில் ஈடு படுத்தி கொண்டிருக்க வேண்டும். இவை ஏதும் செய்யாது, மனம் காட்டும், இல்லாத மாய உலகம் பக்கம் போனால் அது நம்மை ஏமாற்றி, மிரட்டி முட்டாளாக்கி விடும்.

அலுவல்/ குடும்பம்/ தனிப்பட்ட வாழ்க்கை இவை மூன்றுக்கும் தனித்தனியே நல்ல குறிக்கோள்கள் இருந்தால் மனதை டீல் செய்வது சற்று எளிதாகி விடும். இந்த மூன்று விஷயங்களுக்கான குறிக்கோள்களில் ஒன்றை மாற்றி ஒன்றை நோக்கி வேலை செய்ய சொல்லி மனதை திருப்பி விடலாம்.

தன்னை நேசிக்காதவனால் மற்றவரை நேசிக்க முடியாது! கடந்த கால சுய வெறுப்புகளிலிருந்து மீண்டு வாருங்கள். முன்னேற்றத்தின் அடுத்த சில படிகளில் நிச்சயம் ஏறி விடலாம்.

Thanks to : http://veeduthirumbal.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக