செவ்வாய், 14 டிசம்பர், 2010

முன்னேறி பார்க்கலாம் - 4

கோபம் என்பது ஒரு வித சக்தி. அதனை பாசிடிவாகவும் உபயோக படுத்தலாம். சில வேலைகள் விரைவாய் நடக்க மேனஜர்கள் கோப படுவார்களே.. அது போல.. ஆனால் கோபம் என்கிற சக்தி பெரும்பாலும் நெகடிவாக தான் உபயோக படுத்தபடுகிறது. கோபம் என்பது குறித்த சிந்தனையே இந்த பகுதியில்.

இதனை எழுத எனக்கு தகுதி இருக்கிறதா? நானே எத்தனை பேர் மீது கோப பட்டுள்ளேன்? எத்தனை முன் பின் தெரியாத நபர்களுடன் பொது இடத்தில் சண்டை பிடித்துள்ளேன்?




"குடிக்காதீர்கள்; சீரழிவீர்கள்" என கவிஞர் கண்ணதாசன் சொன்னால் " நீங்க யார் சொல்ல? நீங்களே குடித்தீர்களே? " என்று புறக்கணிக்கலாம்.. ஆனால் குடியின் கொடுமையை அனுபவித்த அவர் தான் அதனை சொல்ல தகுதியானவர் என்பது என் கருத்து.

வேகமாய் வண்டி ஒட்டி விபத்திற்குள்ளானவர், பிறரை அப்படி ஒட்டாதீர்கள் என்று சொன்னால், “ நான் பட்ட கஷ்டம் நீங்கள் அனுபவிக்க வேண்டாம்” என்ற அவரின் உள்ளத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நான் கோப பட்டதால் அதன் பலன்களை முழுதுமாக அனுபவித்துள்ளேன். வாழ் நாள் முழுதும் வர கூடிய சில சிறந்த உறவுகளை கோபத்தால் இழந்துள்ளேன். அவமானம், குற்ற உணர்ச்சி இப்படி கோபம் என்னென்ன செய்யுமோ எல்லாம் நடந்திருக்கிறது.

*************
கோபம் பெரும்பாலும் ஒரு மனிதனுக்கு எதனால் ஏற்படுகிறது? அந்த மனிதன் ஒரு விஷயம் இப்படி தான் நடக்க வேண்டும் என நினைக்கிறான். அதற்கு அவனை சுற்றி உள்ளவர்களும் ஒத்துழைக்க வேண்டும் என நினைக்கிறான். அப்படி அவர்கள் செய்யாத போது கோபம் வருகிறது. சுருக்கமாக சொன்னால் ஒரு மனிதன் நினைத்த படி ஒரு விஷயம் நடக்கா விடில் அவனுக்கு கோபம் வருகிறது.

யோசித்தால் இது எவ்வளவு முட்டாள் தனம் என தெரியும்., ஒரு விஷயம் இப்படி தான் நடக்க வேண்டும் என எப்படி ஒருவர் மட்டும் முடிவு செய்யலாம்? அடுத்த மனிதர் அதன்படியே நடக்க வேண்டுமா என்ன?

அடுத்து நம் மீது ஒருவர் கோபப்பட்டால் அவரிடம் திரும்ப கோபப்படுவது. நாமும் கோபப்படும் போது அவரை போல் கீழிறங்கி விடுகிறோம்... இந்த நேரம் அவரவரின் ஈகோ நன்கு விழித்து கொண்டு வேலை செய்கிறது. ஒருவரை மற்றவர் வார்த்தைகளால் கீறி கொள்கிறோம்.. அடுத்த பல நாட்களுக்கு இதனால் நிம்மதி இழக்கிறோம்.

கோபம் சில நேரம் ஒரு செயின் reaction போல சென்று கொண்டே இருக்கும். ஆனால் யாரேனும் ஒருவர் அதனை அப்படியே விழுங்க தான் வேண்டும். அது தான் உறவுகளுக்கு நல்லது.

கோபத்துடன் எழுபவன் நஷ்டத்துடன் உட்காருவான் என ஒரு பழமொழி உண்டு. நஷ்டம் என எளிமையாய் இங்கு சொன்னாலும் கோபம் எத்தனை வித நஷ்டங்களை உண்டாக்க வல்லது ... உறவுகளில் விரிசல், கோப படுபவரின் உடல் நலம், பண நஷ்டம் இப்படி பல வித நஷ்டங்களும் ஒரு சாதாரண கோபம் உண்டாக்கி விடும்.

பொதுவாக யாரிடம் நாம் கோபப்படுகிறோம்? யோசித்து பாருங்கள்.. என்றேனும் நிறுவன CEO-இடமோ, அல்லது சூப்பர்வைசர் இடமோ கோபப்பட்டுள்ளோமா? இல்லை.. ஏன் கோபம் நம்மை விட பெரியவர்களிடம் வருவது இல்லை.. அவர்கள் தவறே செய்தாலும் கூட நம்மை விட பெரியவர்களிடம் நமக்கு கோபம் வருவதில்லை.

ஆனால் குழந்தை, மனைவி/ கணவன், சாதாரண மனிதர்கள், இவர்களிடம் கோபப்பட முடிகிறது. இவர்கள் பல நேரம் நம்மை எதிர்த்து பேச போவதில்லை. அந்த கோபத்தின் வலியை அவர்களுக்குள் மௌனமாக அனுபவிக்க போகிறார்கள்..

நாம் யார் மீதெல்லாம் கோப படுகிறோமோ அவர்கள் உண்மையில் நாம் நன்றி சொல்ல வேண்டியவர்கள், அவர்கள் நமக்காக உழைப்பவர்கள், நமக்காக பல காரியம் செய்பவர்கள்; பல நேரங்களில் நீங்கள் கோப படுவதற்கு முன் கூட உங்களுக்கான ஏதோ ஒரு செயலை அவர்கள் செய்து கொண்டிருக்கலாம்..

அடுத்து பொது இடத்தில வருகிற கோபம்.. இது சில நேரம் அபாய கரமானது. சில நேரம் வெட்டு, குத்து என்ற ரீதியில் கூட சென்று முடிகிறது.

ஒரு ஹோட்டலுக்கு செல்கிறோம், அங்குள்ள செக்குரிட்டி நமது கார் அல்லது பைக்கை சற்று தள்ளி ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்த சொல்கிறார். ஏன் இங்கு நிறுத்தினால் என்ன ?" என நாம் சண்டை பிடிக்கிறோம். அவர் அதற்கு ஏதோ காரணம் சொல்கிறார். நாம் ஏற்காமல் மல்லுக்கு நிற்கிறோம். குடும்பத்துடன் வந்து விட்டு இப்படி சண்டை போடுவதால் மனைவி திட்டுகிறார். அன்று அந்த உணவை நீங்கள் மகிழ்வாய் சாப்பிட முடியாமல் போகிறது.

ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு ரூல் இருக்கும், அங்கு அதனை நிர்வகிப்பவர் தான் மாஸ்டர். அவர் தான் ஜித்தன். நாம் எவ்வளவு பெரிய ஆளாய் இருந்தாலும் அங்கு அவர் சொன்ன படி கேட்டு விட்டால் பிரச்சனை இல்லை. மேலே சொன்ன பார்கிங் உதாரணத்தில் அந்த செக்குரிட்டி சொன்ன படி நிறுத்தி விட்டு போயிருந்தால் அன்றைய தினம் மகிழ்ச்சியாய் இருந்திருக்கலாம்..

இப்படி பொது இடத்தில சாதாரண மனிதர்கள் என்றாலும் அந்தந்த இடத்தை நிர்வகிப்பவர்களுடன் சண்டை போடுவது பல பிரச்சனைகள் தரும், அவர்கள் சொன்ன படி அந்த இடத்தில கேட்டு விடுவது புத்தி சாலி தனம்.

இள ரத்தம் சில நேரம் அதிகமாய் துடிக்கும். எனவே இத்தகைய கோபங்கள் அப்போது வரும், இன்னொரு பக்கம் 40 வயதுக்கு மேல் BP போன்ற உபாதைகளால் சிலருக்கு கோபம் அதிகமாக வரும்.

கோபம் பிறருக்கு வந்து விட்டு போகட்டும். அது நமக்கு வராமல் இருப்பது நல்லது. கோபம் வெறுப்பு போன்ற எதிர் மறை உணர்ச்சிகள் (Negative emotions) ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருந்து அதிக கெடுதலே செய்யும். நீங்கள் ஒருவர் மீது கொள்ளும் வெறுப்பு உங்கள் மனதை, உடலை லேசாக அரித்து உங்களுக்கு சர்வ நிச்சயமாய் கெடுதல் செய்யும்.

அலுவலகமோ, வீடோ நம்மை சுற்றி இருக்கும் ஒவ்வொருவரின் உதவியும் ஏதோ ஒரு தருணத்தில் கட்டாயம் தேவை படும். எனவே நம்மை சுற்றி இருக்கும் அனைவரிடமும் நல்ல உறவு வைத்திருப்பது மிக அவசியமாகிறது.

நமக்கு தீங்கு செய்தவரே ஆயினும், அவரை நாம் மனதளவில் மன்னித்து விடுவது நல்லது.. அவருக்காக அல்ல.. நம் உடல் நலத்துக்காக.....

Thanks to : http://veeduthirumbal.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக