செவ்வாய், 21 டிசம்பர், 2010

முன்னேறி பார்க்கலாம் பகுதி - 10- உடல் நலம்

முன்னேற்றத்துக்கும் உடல் நலத்துக்கும் என்ன சம்பந்தம் என யாரேனும் புருவம் உயர்த்துகிறீர்களா? முன்னேற்ற படிக்கட்டுகளில் ஏறும் சுவாரசியத்தில், உடல் நலனை கவனிக்காமல் விட்டால் உங்களால் உங்கள் வெற்றியை முழுதும் சுவைக்க முடியாமல் போய் விடும்.

இந்த விஷயத்தை நீங்கள் இரு விதமாய் அணுகலாம். " உடல் தொந்தரவு ஏதும் இல்லையே. அப்படி ஏதும் வரும் போது பார்த்து கொள்ளலாம்; இப்போதிருந்தே இது பற்றி கவலை பட என்ன அவசியம்?" இது ஒரு அணுகுமுறை. மற்றொன்று "வருமுன் காக்கும்" அணுகுமுறை. என்னை பொறுத்த வரை இரண்டாவது நிச்சயம் நல்லது என்பேன்.

ஒரு காலத்தில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை நாற்பது வயதில் பலருக்கு எட்டி பார்க்கும். நாற்பது வயதில் இவை ஒரு முறை வந்து விட்டால் பின் வாழ் நாளின் கடைசி வரை அந்த நோய்கள் நம் உடன் பிறப்பாகி விடும். அவற்றோடு நாம் வாழ பழகி கொள்ள வேண்டியது தான். ஆனால் இன்றைய மாறிய சூழலில் முப்பதுக்கும் குறைவான வயதிலேயே கூட இத்தகைய நோய்கள் பலருக்கு வர துவங்கி விட்டது. எனவே நாற்பது வயதுக்கு பின் டயட், உடற் பயிற்சி இவற்றை பார்த்து கொள்ளலாம் என நினைத்தால் தயவு செய்து மாற்றி கொள்ளுங்கள்.

இன்றைக்கும் உங்கள் தெருவில் காலை அல்லது மாலை நேரத்தில் பலர் நடை பயிற்சி செய்வதை பார்க்கலாம். இவர்களில் பெரும்பாலானோர் நாற்பது, ஐம்பது வயதுகளில் உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு அநேகமாய் சர்க்கரை நோய் அல்லது ரத்த அழுத்தம் வந்து, மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த நடை பயிற்சியில் இருப்பார்கள். அவர்களிடம் பேசி பார்த்தால், இந்த நோய்கள் வருமுன்னே இத்தகைய பயிற்சி செய்திருந்தால் நோயே வந்திருக்காதே என்ற வருத்தம் இருப்பதை நிச்சயம் உணரலாம்.

எனது தனிப்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறேன். இந்த பதிவில் சுய புராணம் சற்று அதிகம் இருக்கலாம். காரணம் உடற் பயிற்சி விஷயத்தில் மற்றவர்களை உதாரணம் காட்டுவது எளிது. ஆனால் நாமே அதனை செயல் படுத்தினால் தான் இதனை சொல்ல தகுதி இருக்கும் என நினைக்கிறேன். சுய புராணம் என நினைப்போர் எந்த நிலையிலும் இந்த பகுதியை தவிர்க்கலாம்.

சிறு வயது முதலே நான் சற்று பூசிய உடல் வாகு தான். எப்போதுமே சற்று அதிக வெயிட் என்ற எண்ணம் என்னுள் இருந்து கொண்டே இருக்கும். இதற்காக ஏதேனும் செய்ய வேண்டும்; நடை பயிற்சி அல்லது ஓட்டம் இப்படி செய்ய வேண்டும் என அடிக்கடி நினைப்பேன். சில காலம் அவற்றில் ஈடு படுவேன். மழையின் போது சாலைகள் சரியில்லை என விட்டுவிடுவேன்.ஒரு முறை நிறுத்தினால் மறுபடி ஆரம்பிக்க ரொம்ப காலம் ஆகும்.(இது மாதிரி ஆட்கள் நாட்டில நிறைய பேர் இருக்காங்க) திருமணத்திற்கு பின் சிறிது சிறிதாக இன்னும் கூட எடை கூடி கொண்டு போனது. அதிகம் நடக்காமல் ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்க்கும் அலுவலக வேலையும் ஒரு காரணம். இது இந்த பதிவை வாசிக்கும் உங்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

ஒரு முறை புது நிறுவனத்தில் சேரும் போது ஹெல்த் செக் அப் செய்ய, சற்று கொலஸ்ட்ரால் இருப்பது தெரிந்தது. பெரிய அளவு பிரச்சனை இல்லை என மீண்டும் கண்டு கொள்ள வில்லை. அடுத்த இரண்டு வருடம் கழித்து ரத்த அழுத்தம் மிக லேசாக எட்டி பார்த்தது. டாக்டர் "மருந்து சாப்பிட வேண்டாம். சற்று பொறுத்திருந்து பார்க்கலாம்" என சொல்ல, இப்போது நான் விழித்து கொண்டேன்.

எடையை குறைத்தால், பார்டரில் இருக்கும் உயர் ரத்த அழுத்தம் குறையலாம் என கேள்விப்பட, அலுவலகத்தில் இருக்கும் ஜிம்முக்கு செல்ல ஆரம்பித்தேன்.

ஜிம் என்றால் அதுவரை வெயிட்டுகளை தூக்குவது, உடலை "கரளை கரளை" யாக ஆக்குவது என்று நினைத்தவனுக்கு ஜிம்முக்கு செல்ல ஆரம்பித்த பிறகு தான், "ஏரோபிக்ஸ்" என்று தனி வகை இருப்பது தெரிய வந்தது. ஏரோபிக்ஸ் சற்று அந்நிய வார்த்தை போல் தெரிந்தாலும் ஓடுதல், நடத்தல், சைக்கிளிங் செய்தல் போன்றவை தான் அவை. இவற்றை மட்டுமே தீவிரமாய் செய்ய ஆரம்பிக்க, முதல் மூன்று மாதங்களில் ஐந்து கிலோ எடை குறைந்தது. மிக மகிழ்ச்சி ஆகி விட்டது. சட்டை, பேன்ட் அடுத்த சிறிய சைஸ் வாங்க ஆரம்பித்தேன். அதன் பின் எடை கொஞ்சமாய் தான் குறைந்தது. எனது உயரத்திற்கு இருக்க வேண்டிய சரியான வெயிட்டுக்கு வந்து விட்டாலும், இதனை தக்க வைத்து கொள்ள தொடர்ந்து செல்வது அவசியமாகிறது. நாள் முழுதும் வேலை பார்த்து விட்டு மாலையில் பாட்டு கேட்டவாறே செய்யும் உடற் பயிற்சி நிச்சயம் உடலுக்கும் மனதுக்கும் நல்ல relaxation. நீண்ட நாள் கழித்து பார்க்கும் பலரும் எப்படி இந்த அளவு இளைத்தீர்கள் என கேட்கும் போது மிக மகிழ்ச்சியாக இருக்கும்.

இந்த இடத்தில ஒரு சிறு தகவல்: உங்கள் உயரத்தை செண்டி மீட்டரில் அளவெடுங்கள். உதாரணமாய் உங்கள் உயரம் 170 செண்டி மீட்டர் எனில், அதில் நூறை கழித்தால் உங்கள் ஐடியல் எடை ( 70 கிலோ ) வரும். இது ஒரு தோராயமான கணக்கு தான். இதை தவிர Body Mass Index என்பது போல பல விஷயங்கள் இருந்தாலும் " உயரத்தில் நூறை கழிப்பது" ஒரு தம்ப் ரூல் டெஸ்ட்.

இப்படி தொடர் உடற் பயிற்சிக்கு பின் மறுபடி உடல் பரிசோதனை செய்த போது கொலஸ்ட்ரால், உயர் ரத்தஅழுத்தம் அனைத்தும் நார்மல் ஆக இருந்தது. இந்த ரிசல்ட் பார்த்ததும் உடற் பயிற்சி மேல் காதல் இன்னும் அதிகமாகி விட்டது.

இதை படிக்கும் உங்களை போலவே நானும் ரொம்ப வருடங்களாக " எக்சர்சைஸ் செய்யணும், செய்யணும்" என நினைத்த ஆசாமி தான். இப்போது செய்ய ஆரம்பித்து அதன் பலனை முழுதும் அனுபவிக்கிறேன். இது உங்களுக்கும் சாத்தியம் தான் !!

உடற் பயிற்சியுடன் செய்ய கூடிய மற்றொரு நல்ல செயல் : யோகா மற்றும் மூச்சு பயிற்சி. இதனை கற்று தர பல நல்ல இயக்கங்கள் உள்ளன. நான் கற்றது வேதாத்திரி மகிரிஷி அவர்களின் "வாழ்க வளமுடன்" அமைப்பின் மூலம். காலையில் 20 நிமிடங்கள் இதற்கென செலவழித்தால் பல நன்மைகளை நாம் உணரலாம். தியானமும் கற்று தரபட்டலும் எனக்கு அது சரியே கை கூடவில்லை. மூச்சு பயிற்சி மற்றும் யோகா மட்டும் விடாது செய்கிறேன். சமீபத்தில் திரு. கருணாநிதி அவர்கள் வேதாத்திரி மகிரிஷி நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசும் போது தனது ஆரோக்கியத்திற்கு மூச்சு பயிற்சியும் ஒரு காரணம் என்றார்.

மூச்சு பயிற்சி நமக்கு தொடர்ந்து உடலில் இருக்கும் சில தொந்தரவுகளை மாத்திரை இன்றியே நீக்க வல்லது. எனக்கும் சில உடல் தொந்தரவுகள் மூச்சு பயிற்சியால் சரியாவதை அனுபவ பூர்வமாய் உணர்ந்தேன். மூச்சு பயிற்சியும் யோகாவும் வாழ்க வளமுடன் அமைப்பு மூலம் தான் செய்ய வேண்டுமென்பதில்லை. உங்களுக்கு விருப்பமான எந்த நிறுவனத்திலும் கற்கலாம்.

உடற் பயிற்சி செய்யாத காலத்தில் தேவையற்ற உணவு பொருட்களை தவிர்க்க முடிவதில்லை. அதே நேரம் ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டு உடற்பயிற்சி செய்து விட்டு மறுபுறம் வெயிட் போடும் நொறுக்கு தீனி உண்ணலாமா என மனம் கேள்வியெழுப்புகிறது. உண்மையில் அப்போது தான் உணவிலும் கட்டுப்பாடோடு இருக்க துவங்குகிறோம்.

சாமியார் போல சுவையுள்ள உணவு பொருட்களை முழுமையாய் தவிர்க்க வேண்டுமென்பதில்லை. எதையும் அளவோடு சாப்பிட வேண்டும். அது தான் முக்கியம்.

நாம் சாப்பிடும் உணவின் மேல் நம் பெயர் ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் என்பார்கள். பிறந்தது முதல் இறக்கும் வரை இவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என்பதை இறைவன்/ இயற்கை முதலிலேயே முடிவு செய்து விடுகிறது. சிலர் அந்த அளவை விரைவிலேயே அடைந்து விடுகின்றனர். அந்த அளவை மெதுவாக அடைய, அடைய இன்னும் அதிக நாள் சுவையுள்ள உணவுகளை உண்ணலாம். ஆயுளும் நீடிக்கும்.


உணவு பற்றி இன்னொரு முக்கிய விஷயம்: நாக்கிற்கு அதிக சுவை தரும் உணவுகள் (இனிப்புகள், நொறுக்கு தீனி போன்றவை) உடலுக்கு தீங்கே தருகின்றன. அதே நேரம் நாவிற்கு சுவை தாராத உணவுகள் பெரும்பாலும் ( பச்சை காய்கறிகள், வெந்தயம் போன்றவை) உடலுக்கு நல்லது செய்கின்றன.

உடல் நலனுக்காக எப்போதும் செய்கிற/ நீங்களும் செய்யகூடிய இன்னும் சில விஷயங்கள்:

1. பழங்கள், காய்கறிகள் நிறைய சாப்பிடுதல்.

அலுவலகம் செல்லும் நாட்களில் வீடு வந்தால் பழங்கள் சாப்பிடுவதையும், சனி, ஞாயிறு மட்டும் முறுக்கு அல்லது மிக்சர் போன்ற சமாச்சாரங்கள் அளவோடு சாப்பிடுவதையும் வழக்கமாக்கி கொள்ளலாம். பழங்கள் நிறைய சாப்பிடுவது மல சிக்கல் நீக்கம், உடலில் நல்ல ரத்தம்/ சக்தி சேருதல் போன்ற பல நல்ல பலன்கள் அளிக்கிறது. ..

2. உணவில் பூண்டு வெங்காயம் நிறைய சேர்த்து கொள்ளுதல்

பூண்டை பார்த்தால் விடுவதில்லை. பாக்கிய ராஜுக்கு முருங்கை காய் போல நமக்கு பூண்டு. பூண்டு குழம்பு, பூண்டு ரசம், பூண்டு சட்னி என பெரும்பாலும் தினம் சமையலில் இருக்கும். ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் இரண்டும் எட்டி பார்த்ததன் விளைவு. இப்போது இரண்டுமே இல்லை.

3. ஏழு அல்லது எட்டு மணி நேர தூக்கம்

விழாக்கள் அல்லது வெளியூர் செல்வது போல ஒரு சில நாட்கள் மட்டும் குறைந்தாலும், பெரும்பாலும் ஏழு அல்லது எட்டு மணி நேரம் தூங்கி விடுதல் நலம். தூக்கம் குறைந்தால் பிரச்ச்சனையாயிடும்.

4. உடலில் எந்த தொந்தரவு இருந்தாலும் டாக்டரை சந்திப்பது

சளி போன்ற சிறு விஷயங்கள் ஓகே. நாமே கூட சமாளிக்கலாம். உடல் குறித்த நம் பயங்கள் தீர்க்க வேண்டிய நபர் டாக்டர் தான். அவரிடம் பேசி விட்டால் பிரச்சனை நம்முடையதல்ல அவருடையது; அவர் சரி செய்ய வேண்டும்; நாம் ஒத்துழைக்க வேண்டும்.

5. வருடாந்திர உடல் பரிசோதனை


இது இந்த லிஸ்டில் சமீபத்தில் சேர்ந்தது. என்ன தான் இருந்தாலும் "அடிக்கடி இரவில் சிறுநீர் போகிறோமோ? சர்க்கரை நோய் இருக்குமோ? இடுப்பு பக்கம் வலிக்கிறதே? கிட்னி பிரச்சனை இருக்குமோ" போன்ற சந்தேகங்கள்/ பயங்கள் ஒரு பக்கம் இருந்து கொண்டே தான் இருக்கும். இவை முழுதாய் போக வேண்டுமானால் வருடாந்திர உடல் பரிசோதனை தான் சிறந்தது. பொதுவாக நாற்பது வயதுக்கு மேல் வருடம் ஒரு முறை உடல் பரிசோதனை எடுக்க வேண்டும் என்பார்கள். இன்றைய சூழலில் முப்பதுக்கு மேலே கூட, 1 அல்லது 2 வருடத்திற்கொரு முறை எடுக்கலாம். வேடிக்கை என்னவென்றால் உங்களில் பலரை போல நானும் " ஏதாவது நோய் என சொல்லி விட்டால் என்ன செய்வது? எப்படி எதிர் கொள்வது?" என்று தான் பயந்து சோதனை செய்யாமல் இருந்தேன்.ஆனால் இந்த சோதனை செய்த பிறகு உடல் குறித்து வந்திருக்கும் தைரியம் அசாத்தியமாய் உள்ளது. இதற்காக செய்த 1500 ரூபாய் செலவு அது தந்த தைரியத்திற்கே சரியாய் போச்சு.

**
சமீபத்தில் வந்த ஒரு எஸ். எம். எஸ் " நிறுவனத்தில் கீழ் நிலையில் வேலை செய்பவர்கள் வாக்கிங் செல்ல நினைக்கிறார்கள். மானேஜர்கள் வாக்கிங் செல்கிறார்கள். CEO-க்கள் கோல்ப் விளையாடுகிறார்கள்"

சிரிப்பு வர வைத்தாலும் இது மிக உண்மை தான். பணம் வந்து சேர்ந்த பிறகு தான் உடல் நலன் மேல் அக்கறை வர வேண்டுமென்பதில்லை. அதற்கு முன்பே அக்கறை வந்து விட்டால் நீங்கள் நினைத்தது எதையும் அடைய அதுவே பெரிய அடித்தளமாய் இருக்கும்.


சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் இவற்றின் வருகையை தவிர்க்கவும், நாளடைவில் இவை இதயத்தையும் பாதித்து ஹார்ட் அட்டாக் வராதிருக்கவும் நாம் செய்ய வேண்டியது 45 நிமிட உடற் பயிற்சி தான்.

குறிப்பாய் நாம் வசிக்கும் பகுதியிலேயே 45 நிமிடம் தினம் நடப்பது பல விதங்களில் மிக சிறந்தது. நம் ஏரியாவில் நடக்கும் விஷயங்களை தெரிந்து கொள்ளவும், பலரையும் பார்த்து புன்னகைக்கவும், அன்றைய தினத்தில் செய்ய வேண்டிய வேலைகளை பிளான் செய்யவும் இந்த 45 நிமிடங்கள் உதவும்.

ஒரு குடும்பத்தில் நடக்க கூடிய சோகங்களில் பெரியதொரு சோகம் சம்பாதிக்கும் நபரின் மரணம். அவரின் மரணம் அந்த குடும்பத்தை நிலை குலைய வைத்து விடும். என்ன தான் இன்சுரன்ஸ் பாலிசி, சேமிப்பு இருந்தாலும் முன்பு இருந்த வாழ்க்கை முறையை ( Life style ) அதன் பின் குடும்பத்தாரால் வாழ முடியாது. இதனை தவிர்க்க சற்று உடல் பயிற்சியும், உடல் குறித்த அக்கறையும் (பயமல்ல; அக்கறை ) நிச்சயம் தேவை. உங்களுக்காக இல்லா விட்டாலும் உங்கள் குடும்பத்திற்காக தினம் 45 நிமிடம் செலவிட உறுதி கொள்ளுங்கள். வாரத்தில் ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கேனும். இதனை தொடர்ந்து செய்ய முடிந்தால் நம் மேல் நமக்கே பெரிய மரியாதையும் நம்பிக்கையும் வருகிறது. முயற்சித்து தான் பாருங்களேன் !!

Thanks to : http://veeduthirumbal.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக