புதன், 11 மார்ச், 2009

Kitchen Tips -1

நம் முன்னோர், உணவே மருந்தாக இருக்கும் வகையில் சமையல் செய்தனர். அதனால் தான் அவர்கள் மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்ந்தனர். தனியே மருந்து என எதுவும் அவர்களுக்கு தேவைப்பட வில்லை. இங்கு, சமையலுக்கு பயன்படுத்தப்படும் சில பொருட்களும், அவற்றின் மருத்துவக் குணங்களும் கொடுக்கப் பட்டுள்ளன. உணவுப் பொருட்களின் தன்மைக்கேற்ப அவற்றை நாம் பயன்படுத்தினால், நாமும் மருத்துவர்களை நாட வேண்டியதில்லை என்பது நிச்சயம்.


பூண்டு: பூண்டு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. பூண்டிற்கு கபத்தை வெளிக்கொணரும் தன்மை உள்ளது. இது, ஜலதோஷம் மற்றும் இருமல் போன்ற பொதுவான நோய் தொற்றுகளை எதிர்த்து போராடுகிறது. நோய் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை கொண்டது பூண்டு. இது, வாய் மற்றும் பல் ஈறுகளுக்கு மிகவும் நல்லது.


தினமும் காலை வெறும் வயிற்றில் இரண்டு பல் பூண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது. அது மட்டுமின்றி, உணவிலும் சிறிது பூண்டு சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு உணவில் பூண்டு சேர்த்துக் கொள்வதால், பல் ஈறுகளில் நோய்த் தொற்று ஏற்படுவது தவிர்க்கப்படும். மேலும், பல்களில் ஏதேனும் அடர்ந்த கறைகள் படிந்திருந்தாலும், அவற்றைப் போக்குவதற்காக கடுமையாக பல் துலக்கக்கூடாது.


கேரட்: கேரட்டில் புரதச்சத்து, கொழுப்பு, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின்-பி மற்றும் இரும்பு சத்து ஆகியவை காணப்படுகிறது. கண் தொடர் பான பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க கேரட் சாப்பிடுவது நல்லது. கேரட்டை சமைத்தோ அல்லது பச்சையாகவோ சாப்பிடலாம். மேலும், கேரட்டை பச்சையாக கடித்து உண்பதால் பல் ஈறு பலப்படுகிறது. தினமும் கேரட்டை பச்சையாகச் சாப்பிட்டால், ஒருவருக்குத் தேவையான கால்சியம் சத்தை எளிதில் பெற முடியும். அது மட்டுமல்லாமல், குறைந்த எடையுடைய குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்கவும் கேரட் உதவுகிறது.


தக்காளி: தினமும் ஒரு டம்ளர் தக்காளிச் சாறு குடித்தால், உடல் நலத்திற்கு மிகவும் நல்லது; இது, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். தக்காளியில் காணப்படும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் லைக் கோபீன் போன்ற ரசாயனங் கள், உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும், புற்றுநோய் செல்கள் உருவாவதை எதிர்த்து போராடவும் உதவுகிறது. தக்காளி, வைட்டமின் ஏ, சி மற்றும் கே, பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவற்றை உடலுக்கு அளிக்கிறது.


ஒரு சாதாரண மனிதனுக்கு தினசரி தேவைப்படும் வைட்டமின்-சி சத்தில் பாதியை, ஒரு நடுத்தர அளவிலான தக்காளி சாப்பிடுவதால் கிடைக்கிறது. ஸ்ட்ரோக் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுவதையும் தக்காளி தடுக்கிறது. ஒரு நடுத்தர தக்காளியில் 20 கலோரிகள் மட்டுமே காணப்படுகிறது.நன்கு சிவந்த தக்காளிகளைப் பயன்படுத்துவதே நல்லது. அதிக சிவப்பு நிறத்திலான தக்காளியில் தான், அதிகளவில் பீட்டா கரோட்டின் மற்றும் லைக்கோபீன் காணப்படுகிறது. தக்காளியை குறைந்த அளவிலான எண்ணெயில் சமைத்து சாப்பிட்டால் அதிக நன்மைகள் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக